வழாநிலை

Trending

Breaking News
Loading...

வழாநிலை

வழாநிலை



இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும். அவ்வாறின்றி இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். வழாநிலை ஏழுவகைப்படும். இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும்கூட சில இடங்களில் இலக்கணமுடையதைப்போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.
வழாநிலை வகைகள்
  1. திணை வழாநிலை,
  2. பால்வழாநிலை,
  3. இடவழாநிலை,
  4. காலவழாநிலை,
  5. வினாவழாநிலை,
  6. விடைவழாநிலை,
  7. மரபுவழாநிலை
என வழாநிலைகள் ஏழுவகைப்படும்.

1. திணைவழாநிலை
தமிழில் உயர்திணை, அஃறிணை என்று இரண்டு திணைகள் இருக்கின்றன. மக்கள், தேவர், நரகர் என்பவர்களைக் குறிப்பது உயர்திணை எனப்படும்.   அவை அல்லாதன அஃறிணை எனப்படும். உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைகளும் மயக்கமின்றி வருவது திணைவழாநிலை ஆகும்.  ஒரு திணைக்கு உரியதாக வரும் பெயருக்கு ஏற்றாற் போல அதன் முடிக்கும் சொல்லாக வரும் வினையும் அத்திணைக்கு உரியதாக அமைவது திணை வழாநிலையாகும்.
உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்
அதனொடு சார்த்தி னத்திணை முடிபின  [ நன்னூல் -377]
சான்று
1. கண்ணன் நல்லன்.
2. யானை கரியது.

2. பால்வழாநிலை
ஐவகைப்பாலும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் பால்வழாநிலை ஆகும். ஒரு பாலுக்குரிய எழுவாய் அந்தந்தப் பாலின் பயனிலையைக் கொண்டு முடிதல் வேண்டும்.
அவன் ஓடினான்
அவள் பாடினாள்
அறிஞர் வந்தனர்
அது தாவியது
அவை பறந்தன
இவ்வாறு தொழிலைச் செய்யும் எழுவாய்க்கு ஏற்ப வினையின் பாலும் பொருத்தமுற இருப்பதே பால் வழாநிலை எனப்படும்.
திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
மிகவினு மிழிபினு மொருமுடி பினவே..   [ நன்னூல் - 378]
சான்று
1. வளவன் இனியன்.
2. கோதை நல்லாள்.
3. புலவர்கள் வேந்தர்களைப் பாடினார்கள்.
 4. யானையின் கோடு கூரியது.
5. பறவைகள் பறந்தன.

3. இடவழாநிலை
பல மொழிகளில் உள்ளதைப் போன்றே தமிழிலும் தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.  இது பேச்சு நிகழ்வோடு தொடர்புடையது. தன்மை  என்பது பேசுபவனைக் குறிக்கிறது. முன்னிலை என்பது பேசுபவனால் விளிக்கப்படுபவனைக் குறிக்கும். படர்க்கை என்பது இவ்விருவரும் அல்லாத மற்றவர்களைக் குறிக்கின்றன.  இவை மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் இடவழாநிலை ஆகும். ஓர் இடத்திற்கு உரிய எழுவாய் அதே இடத்திற்குரிய பயனிலையைக் கொண்டு முடிதல் இடவழாநிலையாகும்.
சான்று
நான் பேசினேன்.
நீ பேசினாய்
அவன் பேசினான்
இவ்வாறு தன்மை இடத்துக்கு உரிய எழுவாய், தன்மை வினைமுற்றோடும், முன்னிலை இடத்துக்கு உரிய எழுவாய், முன்னிலை வினைமுற்றோடும், படர்க்கை இடத்துக்குரிய எழுவாய், படர்க்கை வினைமுற்றோடும் வருதல் இடவழாநிலையாகும். ஒருமை எழுவாய்க்கு ஒருமைப்பயனிலையும் பன்மை எழுவாய்க்கு பன்மைப் பயனிலையும் வருதல் வேண்டும்.
 சான்று
1. நான் சென்றேன்.
 2. நீ வந்தாய்.
3. மாணவர்கள் தமிழைப் படித்தார்கள்.

4. காலவழாநிலை
முக்காலமும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் காலவழாநிலை ஆகும். ஒரு தொடரில் மூன்று காலங்களில் எக்காலப்பெயர் இடம் பெறுகிறதோ அக்காலத்திற்குரிய பயனிலையையே கொண்டு முடிதல் வேண்டும்.
சான்று
1. நான் நேற்று வந்தேன்.
2. நீவிர் இன்று வருகின்றீர்.
3. மாணவர்கள் நாளை நாட்டை ஆள்வார்கள்.
4. நேற்று சாப்பிட்டான்
5. இப்பொழுது சாப்பிடுகிறான்
6. நாளை சாப்பிடுவான்
இவ்வாறு காலத்தைக் குறித்து வரும் சொற்களுக்கு ஏற்ப ஒவ்வொரு தொடரிலும் காலம் காட்டும் வினை இடம்பெறுவது கால வழாநிலையாகும்.

5. வினா வழாநிலை
வினாவில் இடம்பெறும் எழுவாயின் திணையும் பாலும் மாறாமல் வினாப் பயனிலை வருவதே இலக்கண நெறிக்கு ஏற்புடையதாகும். அறுவகை வினாக்களும் மயக்கமின்றி எழுதுவதும் பேசுவதும் வினாவழாநிலை ஆகும். வினாவில் இடம்பெறும் எழுவாயின் திணை, பால் ஆகியவை மாறாமல் வினாப் பயனிலை வருவதே வினாவழாநிலை ஆகும்.
சான்று
1. திருக்குறளை இயற்றியவர் யார்?
2. பருப்பு உளதோ வணிகரே?
3. அங்கே கிடப்பது கட்டையா? அல்லது
4. அங்கே கிடப்பவன் மனிதனா?

என்று கேட்கலாம். ஆயினும் இவ்வினா ஒரே தொடராக அமையவில்லை. ஒரே தொடராக அமைக்க இவ்விரண்டையும் குறிக்கும் சிறப்புச் சொல்லால் கூறவேண்டும்.
சான்று - அங்கே கிடக்கும் உரு மனிதனா? கட்டையா?
இத்தொடரில் இடம்பெற்றுள்ள ‘உரு’ என்பது மனிதன், கட்டை என்னும் இரண்டு திணைகளுக்கும் உரிய வடிவம் குறித்த சிறப்புச் சொல்லாகும்.
அதேபோல், வினாக்களில் இடம்பெறும் இருபால்களையும் குறிக்கும் சிறப்புச் சொல்லைப் பயன்படுத்தினால், வினாக்களில் பால் வழு தோன்றாது.
சான்று -   அங்கே வரும் மனிதர் ஆணா? பெண்ணா?
இத்தொடரில் இடம்பெற்றுள்ள ‘மனிதர்’ என்னும் சொல் ஆண், பெண் என்னும் இரு பாலிற்கும் உரியதாகும் என்பதால் வழு ஏற்படாது. இவ்வாறு இலக்கண நெறிக்கு ஏற்ப வினவுவது வினா வழாநிலையாகும்.
ஐயம் திணைபால் அவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருண்மேல் அன்மையும் விளம்புப  (நன்னூல் : 376

6. விடைவழாநிலை
ஒரு வினாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகக் குறிப்பாலோ ஏற்ற விடை உரைப்பது விடைவழாநிலை ஆகும்.
தம்பால் இல்லது இல்லெனின் இனனாய்
 உள்ளது கூறி மாற்றியும் உள்ளது
சுட்டியும் உரைப்பர் சொற்சுருங் குதற்கே ..[ நன்னூல் -406]
சான்று
1. திருக்குறளை இயற்றியவர் யார்? என்னும் வினாவிற்கு திருவள்ளுவர் என விடையளிப்பது.
2. பருப்பு உளதோ வணிகரே? என்னும் வினாவிற்கு பருப்பு உள்ளது, பருப்பு இல்லை, பயிறு உள்ளது போன்ற விடைகளும் விடைவழாநிலையே. இங்கு பருப்பு உள்ளதா? என்னும் வினாவிற்கு பயிறு உள்ளது என விடையளிப்பினும் அதுவும் வழாநிலையே ஆகும். அவ்விடை பருப்பு இல்லை என்னும் விடைப் பொருளை மறைமுகமாக உணர்த்தியது. இது இனமொழி விடையாகும். இவ்வகைவிடையை இலக்கணநூலார் இறைபயத்தல் என்னும் வகையில் அடக்குவர்.

7. மரபுவழாநிலை
முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது மரபு ஆகும். மரபுத்தொடர்கள் மயக்கமின்றிப் பேசுவதும் எழுதுவதும் மரரபு வழாநிலை ஆகும்.
சான்று
1. சேவல் கூவியது.
2. அம்பு எய்தான்.
3. குருவிக் கூடு
அறிஞர் ஒரு பொருளைக் கூறியவாறே கூறுவது மரபு எனப்பட்டது. அதற்குத் தக்கவாறு மொழியை வழங்குவது மரபு வழாநிலையாகும்.
சான்று
நாய் குரைத்தது
பசுவின் கன்று
எனக் கூறுவர் அறிஞர் என்பதால் அவ்வாறு வழங்குவதே மரபு வழாநிலை.
மேலும் பொருள்கள் இனமுள்ளனவும் இனமில்லாதனவும் உலகில் காணப்படுகின்றன.
சான்று - தாமரை, ஞாயிறு
தாமரை இனத்தில் வெண்மையானதும் உள்ளது, செம்மையானதும் உள்ளது. இவ்வாறு ஞாயிறு என்னும் சூரியனில் வெவ்வேறு வண்ணம் உள்ளவை இல்லை. தாமரை எனத் தனியாகச் சொன்னால் எந்தத் தாமரை என்னும் வினா எழும். அதனால் அதனைச் செந்தாமரை என்றோ வெண்டாமரை என்றோ அடைமொழியுடன் சொல்ல வேண்டும். ஞாயிறு எனத் தனியாகச் சொன்னால் எந்த ஞாயிறு என்னும் வினா எழாது. எனவே ஞாயிறு எனத் தனிச் சொல்லால் குறிப்பதே முறை. அதனால்
செந்தாமரை, வெண்டாமரை
ஞாயிறு
எனக் குறிப்பிடுவது மரபு வழாநிலை ஆகும்.
பொருள்முதல் ஆறாம் அடைசேர் மொழியினம்
உள்ளவும் இல்லவும் ஆமிரு வழக்கினும்      (நன்னூல் - 401)
இனமுள்ள அடைமொழியோடு பொருள்களைக் குறிப்பிடுவதால், அதன் இனத்தையும் அதற்கு இனமல்லாததையும் அத்தொடர், உணர்த்துவது மரபு வழாநிலையாகும்.
வெள்ளைச் சேவல் வென்றது’ என்பது இனமுள்ள அடைமொழித் தொடர். இதனால் சேவலின் இனமான பிற கோழிகள் தோற்றன என்னும் பொருள் கிடைக்கிறது. இவ்வாறு இத்தொடர் அச்சேவலின் இனத்தைப் பற்றியும் பொருள் உணர்த்துகிறது.
வெள்ளைச் சேவலின் உரிமையாளர் வென்றார் என்னும் பொருளும் அறியப்படுவதால் இனமல்லாததைப் பற்றியும் இத்தொடர் உணர்த்துகிறது.
அடைமொழி இனமல் லதும்தரும் ஆண்டுறின்   (நன்னூல் : 402)

 மயிலம் இளமுருகு
9600270331
mailamilamurugu@gmail.com




3 Responses to "வழாநிலை"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel