கனவு துளிர்த்த கதை - இரா. ராமமூர்த்தி, நூல் அறிமுகம்- மரபும் புதுமையும்- மயிலம் இளமுருகு

Trending

Breaking News
Loading...

கனவு துளிர்த்த கதை - இரா. ராமமூர்த்தி, நூல் அறிமுகம்- மரபும் புதுமையும்- மயிலம் இளமுருகு

கனவு துளிர்த்த கதை  -  இரா. ராமமூர்த்தி, நூல் அறிமுகம்-  மரபும் புதுமையும்- மயிலம் இளமுருகுசிறுகதை என்பது தமது எண்ணத்தினைக் கொள்கையினைக் தகவலினை விவரணைகளினை அது அதற்குமான பொத்தாம் பொதுவானதாகவோ அல்லது ஆகச்சிறந்த படைப்பாகவே வெளிவர மொழி என்ற ஒன்றின் ஊடாக தொழிற்படும் ஒரு சாதனதளம்.  சிறுகதை என்பதனோடு வெளியில் நின்று இயங்குகின்றபோது பல்வேறு கருத்து பரிமாத்தை எடுத்தியம்புவதாய் அவை இருத்தல் வேண்டும்.  படைப்புகள் அகவயமான நோக்கிலும் புறவயமான நோக்கிலும் எழுதப்படுகின்றன.

னவு துளிர்த்த கதை” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இருவிதமான போக்கு அடங்கியிருக்கின்றன.  இத்தொகுதியில் பொழுதுபோக்கிற்கான கதையும் உள்ளது. அதே சமயம் சமூகம் சார்ந்த தன் நிலைப்பாட்டு செய்தியினைச் சொல்லுகின்ற பார்வையினையும் நாம் காண முடிகின்றது.  இத்தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு குறு நாவலும் அடங்கியுள்ளன.

 இத்தொகுப்பில் வாய்ப்பேச்சு தவிர்த்த ஏனைய படைப்புகளில் கிராமத்து மணம் கமழ்வதை அறியமுடிகின்றது. இக்கதைகளைப் படித்து முடித்ததை வைத்து நினைக்கின்றபோது ஒரு சில சிறுகதைகளைத் தவிர மற்றவைகள், இவர் எழுதி இருபது இருபத்தைந்து வருட காலங்கள் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இன்றைய சிறுகதை போக்கும்முறைகளையும் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளினையும் நோக்குகின்றபோது கால இடைவெளி உள்ளது என்பது எண்ணத்தக்கது.

ஆகப்பொதுவான நோக்கில் எண்ணுகின்றபோது பலச் சிறப்புகளை இதனுள் காணமுடியும். ஆசிரியர் வட்டார பேச்சு வழக்கினை அழகாக பயன்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக வெள்ளாமை, பாக்கலாம், உன்ன மாரி,  கெராக்கி, புட்டுக்கூட, மல்லாட்டை,  அச்சம் காட்றியே என்பவை இதற்குச் சான்றுகளாகும்.  விழி. பா. இதயவேந்தன் சொல்கின்றமாதிரி எல்லாக் கதைகளின் ஊடாக தலித் மக்களின் வாழ்வாதாரம், வாழும்முறை, பழக்கவழக்கங்களைக் கொண்டதாகவே உள்ளன. கதாபாத்திரத்திலும்சரி களத்திலும்சரி தலித் மக்கள்  இடம்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்து மக்களின் பண்பாடு,  பழக்கவழக்கம் போன்றவற்றினைப் பலக் கதைகள் காட்டுகின்றன.

 வாத்து என்னும் கதையில் மேய்ப்பானுக்கும் சமூகத்திற்குள்ளான நிலை விளக்கப்பட்டுள்ளது.  இக்கதை முழுவதும் பேச்சு வழக்கிலேயே அமைந்துள்ளது. இப்படியான எழுத்துமுறை  தொடக்கநிலை வாசகருக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.  சற்று பேச்சு வழக்குச் சொற்களை ஆசிரியர் குறைத்திருக்கலாம். திருப்பதி சட்டை என்னும் கதையில் ஆண்டைகளின் செயல்பாடு உரைக்கப்பட்டுள்ளன. நாற்றுகளில் ஒரு சிறுவனின் எண்ண சிதறல்கள் வீட்டுமுதலாளியால் முறியடிக்கப்படுவது  சொல்லப்பட்டுள்ளடது.

னவு துளிர்த்த கதை என்னும் கதையில் தாத்தா கண்ட கனவு பாதியிலேயே நின்றுபோன தோரணையில் முடிகிறது. ஒரு மனிதன் சோகப்படுகிறான் என்பதனுள் சாதி பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனிதகாயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வர்ணம் என்னும் கதையில் மாற்றத்தை விரும்பாத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் ஒரு கட்டுத்திட்டம்  இருந்தது அதுவும் பூட்டுது போலன்னும் வம்பளப்புகள் நினைக்கத்தக்கது.  சோதியில் முனியனின் இறுதிசெயல் கதையின் உயிர்நாடியாக உள்ளது.

 நியாயம் என்பது கிராமப்புற பஞ்சாயத்தினை தார்மீகப்படுத்துகின்றது. கண்ணாலம் என் சிறுகதை சமூக அவலத்தைப் புடம்போடுகின்றது. மேற்கிலிருந்து ஒரு பயணம்  என்பதில் ஆண்டையின் மகன் செய்யும் பாலியல் இம்சைகளைப் பிரக்ஞையுடன் பகர்கின்றது. வாய்ப்பேச்சு இக்கதை பின்னோக்கு உத்தியில் படைக்கப்பட்டுள்ளது. கதைக்கரு விஷயத்தில்  ஆசிரியர் ஜெயகாந்தனை நினைவுபடுத்துகின்றார்.  வெற்றிகள் என்னும் கதை நடப்புச் செய்திகளை நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லி இருக்கின்றது.

 லி என்னும் குறுநாவல் கூத்துக்கலைஞர்களின் வாழும்முறை, அதிகாரம் சார்ந்த சமூகம், கலைஞர்களின் லஜ்ஜைகள் எதிர்பார்ப்புகள் போன்றன சூன்யமாக்கப்படுவது காட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இத்தொகுப்பில் உள்ளவற்றை
·         வரதட்சணைக்கு எதிரான பார்வை
·         ஆண்டைகளுக்கு எதிரான செயல்
·   தலித் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்முறை     சொல்லப்பட்டுள்ளன.
·         அதிகாரப் போக்கு மறைய நாம் என்ன செய்யவேண்டும்
·         பழமைவாத போக்கினை ஆதரித்தல்
·         சமூக மாற்றத்தினை விரும்புதல் கண்ணாலம், சேதி என்ற சிறுகதைகள்
·         ஆண்டைகளின் பிள்ளைகள் செய்யும் அத்துமீறிய செயல்கள்
·         கிராமத்து சொற்கள், நடைமுறை வாழ்க்கைமுறை
 என்பன இக்கதைகளில் வீசுவதைக் காண முடிகின்றது.

 மஞ்சத்தண்ணி சுற்றுதல், கூத்தாடும் கொட்டகை போன்றன குறிப்பிடத்தக்கது. நூலில் சில இடத்தில் எழுத்துப் பிழைகளும் உள்ளன. மேலும் பழமைவாதப் போக்கினை நிலைநிறுத்துதல் போன்றனவற்றைத் தவிர்த்திருக்கலாம். இவர் பள்ளி ஆசிரியராக இருந்த காரணத்தால் இவரது படைப்பில் ஆசிரியர் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள. மு. வ அவர்கள் தன்னுடைய படைப்பில் பேராசிரியர்களைக் கதாபாத்திரமாக அமைத்திருப்பார் அதைப்போன்றே வருடைய சிறுகதை படைப்பில் ஆசிரியர்கள் உலாவுகின்றனர்.

 கனவு துளிர்த்த கதை எனும் கதையில் எஸ். டி ஐயாவும்  திருப்பதி சட்டையிலும் ஆசிரியரைக் காணலாம்.  அதேசமயம் நாற்று என்னும் சிறுகதை முற்றிலும் பள்ளி ஆசிரியர்களைப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.  ஒரு மனிதன் சோகப்படுகிறான் எனும் கதையில் நான்தாங்க வாத்தியார் வூட்டு மணி என்று கூறுவதிலிருந்து அவருடைய பணிசார்ந்த அனுபவப் பதிவுகள் பகிர்தலாக இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. மொத்தத்தில் இத்தொகுப்பு கிராம மக்களின் வாழ்வுமுறை, நிலைப்பாடு, சமூகம், அவர்களின் சிறப்புகள்,  அபிலாசைகள் போன்றவற்றைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆசிரியர்  இன்னும் அதிகமான கதைகளை எழுதி எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். நூலை வெளியிட்ட  நடராஜ் பப்ளிகேஷன்ஸ் ஆசிரியர்   இரா. ராமமூர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

னவு துளிர்த்த கதை
இரா. ராமமூர்த்தி
நடராஜ் பப்ளிகேஷன்ஸ், சென்னை,
 முதல் பதிப்பு- 2006, விலை 120


Mobile - 9600270331

0 Response to "கனவு துளிர்த்த கதை - இரா. ராமமூர்த்தி, நூல் அறிமுகம்- மரபும் புதுமையும்- மயிலம் இளமுருகு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel