யாப்பும் அதன் உறுப்புகளும் - மயிலம் இளமுருகு

Trending

Breaking News
Loading...

யாப்பும் அதன் உறுப்புகளும் - மயிலம் இளமுருகு

யாப்பும் அதன் உறுப்புகளும் - மயிலம் இளமுருகு

 

யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள். இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

இதனுள் உறுப்பியல், செய்யுளியல் என இருவகைகள் உள்ளன. உறுப்பியலில் செய்யுள் உறுப்புகளின் இலக்கணமும், செய்யுளியலில் பா, பாவினம் ஆகிய இருவகைச் செய்யுள்களின் இலக்கணமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இது மேலும் உறுப்பியலுக்குப் புறனடையாக உள்ளவை ஒழிபியல் என்ற மூன்றாவது வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யாப்பு

சங்க நூல்களிலும் இச்சொல் கட்டுதல் என்ற அடிப்படைப் பொருளில் பரவலாக வந்துள்ளது. யாப்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவரும் அதே பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார்.

கழல் யாப்பு

யாப்பினுள் அட்டிய நீர்

யாக்க நட்பு

யானையால் யானை யாத்து அற்று

ஆயினும் செய்யுளின் கட்டுக்கோப்பு என்ற இலக்கணப்பொருளில் காண்பது அதேபோன்று பாடல்களிற் காண்பது அரிது.

பாட்டு, தூக்கு, தொடர், செய்யுள் எல்லாம் யாப்பு என்ற சொல்லின் பொருள் கூறும் பிற சொற்களாகும்.

யாப்பிலக்கண நூல்கள்

தமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம். ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இந்நூல், அதன் மூன்று அதிகாரங்களில் ஒன்றான பொருளதிகாரத்தில் யாப்பிலக்கணம் பற்றிக் கூறுகின்றது. மேலும், ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பொருளதிகாரப் பிரிவுகளில் ஒன்றே செய்யுளியல் என்னும் யாப்பிலக்கணமாகும். இதைத் தவிர, யாப்பிலக்கணம் கூறும் பல நூல்கள் காலத்துக்குக் காலம் இயற்றப்பட்டு வந்தன.

நத்தத்தனார், நல்லாதனார், அவிநயனார், பல்காயனார், கையனார், மயேச்சுரனார், பேராசிரியர், பரிமாணனார், வாய்ப்பியனார், காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார் போன்ற புலவர்கள் யாப்பிலக்கணம் செய்தனர். சங்க யாப்பு, நாலடி நாற்பது, செயன்முறை, செயிற்றியம் போன்றவையும் யாப்பிலக்கணங் கூறும் நூல்களே. ஆயினும், தொல்காப்பியம் தவிர இன்று வரை நிலைத்திருப்பவை அமிர்தசாகரர் என்பவர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரண்டு மட்டுமே.

இவ்விரண்டும் செய்யுள் இலக்கணத்தைத் தமிழில் செப்பமுற விளக்கும் யாப்பிலக்கண நூல்களாகும். இலக்கியங்களை இயற்றும்போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றது உரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியம் இயற்றப்பட்ட செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன. பழைய காலத்தில் இருந்த முக்கியமான செய்யுள் வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில் சிறப்பாக விளங்கியது. பக்தி இலக்கியமும் காப்பியங்களும் தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது. பிற்காலத்தில் சிந்து, கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும் செய்யுள்கள் இயற்றப்பட்டன. யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகளாகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

எழுத்து

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.

முதலெழுத்து, சார்பெழுத்து என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.

உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாடுபாடு. மெய் தனித்து இயங்காது.

குறில், நெடில் என்பன எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.

வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மென்மை, இடைமை பற்றியவை.

சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துகள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.

மயங்கும் எழுத்துகள், மயங்கா எழுத்துகள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துகளையும், ஒலிக்கமுடியாத எழுத்துகளையும் குறிப்பன.

மொழிமுதல் எழுத்துக்கள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை

மொழியிறுதி எழுத்துகள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.

தமிழ் எழுத்து இரண்டு வகை

1.முதல் எழுத்து 2. சார்பு எழுத்து.

1. முதல் எழுத்து

மொழிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவை முதல் எழுத்துகள் என்று கூறப்படும்.

உயிர் எழுத்துகள் குறில், நெடில் என்றும், மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் ஒலி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எழுத்துகளின் பயன்பாடு நோக்கிச் சுட்டு எழுத்து, வினா எழுத்து ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

2. சார்பு எழுத்து

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன. உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள் ஆகும்.

எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை என்று கூறுவர். எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரையறுத்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது மொழி. மொழி, சொற்களால் உருவாகிறது. சொல், எழுத்துகளின் சேர்க்கை. எழுத்தின் அடிப்படை ஒலி. மனித உடலில் இருந்து ஒலி எப்படித் தோன்றுகிறது என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் விளக்குகின்றன. மொழியின் அடிப்படை ஒலி என்பதால் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன என்பது பற்றியும் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளது. மூக்கு, உதடு, பல், நாக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால் உயிர் எழுத்துகளும், மெய் எழுத்துகளும் எவ்வாறு தோன்றுகின்றன என்று இலக்கண நூல்கள் துல்லியமாகக் கூறுகின்றன.

தமிழில் எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடிய எழுத்துகள் இவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே சொல்லுக்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள் பற்றியும் வரையறை செய்யப்பட்டுள்ளது. சொல்லுக்கு இடையில் ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற வரையறையும் தரப்பட்டுள்ளது.

யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக அமையும் உறுப்பு எழுத்து ஆகும். இங்கே எழுத்து என்பது மொழியை எழுதுவதற்குப் பயன்படும் குறியீடுகளையன்றி அவற்றினால் குறிக்கப்படும் ஒலிகளையே குறித்து நிற்கின்றது. செய்யுள்களைப் பொறுத்தவரை மொழியின் ஒலிப் பண்புகள் சிறப்புப் பெறுகின்றன.

தமிழில் எழுத்துக்கள் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் என இரு பிரிவுகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. இவற்றுள் அ முதல் ஔ வரையான 12 உயிரெழுத்துகள் அவற்றுக்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில், நெடில் என இரண்டாக வகுக்கப்படுள்ளன. க் முதல் ன் வரையான 18 மெய்யெழுத்துகளில் குறில், நெடில் என்ற வகைப்பாடு கிடையாது. மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உருவாகும் 216 உயிர்மெய் எழுத்துகள், அவற்றில் அடங்கியுள்ள உயிரெழுத்துகளின் வகையைப் பொறுத்துக் குறிலாகவோ நெடிலாகவோ அமைகின்றன.

 

எழுத்துவகை        

உயிரெழுத்துக்கள்

1.   குறில்கள்   , , , ,

2.   நெடில்கள்   , , , , , ,

மெய்யெழுத்துகள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

உயிர்மெய் எழுத்துகள்   -

1.குறில்கள்  உயிர்க்குறில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்

2.நெடில்கள் உயிர்நெடில்கள் சேர்ந்து உருவான உயிர்மெய்கள்

2. அசை

எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. அசை நேர் அசை, நிரை அசை என்று இரண்டு வகைப்படும். ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும்.

     -     குறில் எழுத்து

கல்   -     குறில் + மெய் எழுத்து

கா    -     நெடில் எழுத்து

கால்  -     நெடில் + மெய் எழுத்து

குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும் நிரை அசை ஆகும். இவற்றுக்குப் பின் மெய் எழுத்து வந்தாலும் நிரை அசை ஆகும்.

கிளி  -     இரண்டு குறில் எழுத்துகள்

மயில் -     இரண்டு குறில் + மெய் எழுத்து

புறா  -     குறில் நெடில் எழுத்துகள்

இறால்-     குறில் நெடில் +  மெய் எழுத்து

மெய் எழுத்தைத் தவிர்த்துப் பார்த்தால் நிரை அசையில் இரண்டு எழுத்துகள் இருக்கும்.

3. சீர்

சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துகள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.

நத்தார்படை ஞானன்பசு வேறின்நனை கவிழ்வாய்

மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்

பத்தாகிய தொண்டர்தொழும் பாலாவியின் கரைமேல்

செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே

மேலேயுள்ளது சீர் பிரித்து எழுதப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஆகும். இதிலுள்ள பல சீர்கள் முறையான சொற்களாக அமைந்து வராமையைக் காண்க. சீர்கள் பல சந்தர்ப்பங்களில் பொருள் விளக்கத்துக்காக அன்றி, ஓசை நயத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.

சீர் வகைகள்

செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரும்படியான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன.

அசைகள் இணைந்து வருவது சீர் ஆகும். ஒரே அசை சீராக இருப்பதும் உண்டு. இரண்டு, மூன்று, நான்கு அசைகள் சேர்ந்து சீராக அமைவதும் உண்டு. சீர்கள் பின்வருமாறு அமையும்:

சீர்களைப் பற்றிக் கூறும்போது அவற்றை எளிமையாக நினைவில் வைக்கும் பொருட்டு அவற்றுக்கு வாய்பாடு கூறப்பட்டுள்ளது. சீர் வாய்பாடுகள் பின்வருமாறு அமையும்: ஓரசைச் சீர்களில் நேர் அசைவரும் சீர் நாள் என்றும், நிரை அசை வரும் சீர் மலர் என்றும் கூறப்படும்.

1.ஓரசைச்சீர்

2.ஈரசைச்சீர்

3.மூவசைச்சீர்

4.நாலசைச்சீர்

எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு.

சீர்கள்       வேறு பெயர்கள்

ஓரசைச்சீர்  அசைச்சீர்

ஈரசைச்சீர்  இயற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்சீர்

மூவசைச்சீர்    உரிச்சீர்

நாலசைச்சீர்       பொதுச்சீர்

மேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண்க.

ஓரசைச்சீர்கள் - 2

ஓர் அசை மட்டுமே வருவது ஓர் அசைச் சீர் ஆகும்.

, கல், கா, கால்  -     நேர் அசை

கடு, கடல், பலா, வரால் -     நிரை அசை

1.நேர் நாள்  நாள்

2.நிரை      மலர் மலர்

ஈரசைச்சீர்கள் - 4

இரண்டு அசைகள் சேர்ந்து வருவது ஈரசைச் சீர்ஆகும்.

நேர் நேர் நிரை

நேர் நேர் நிரை

நிரை நிரை

ஈர் அசைச் சீர்கள் நான்கு ஆகும்.

1.நேர்-நேர்  தேமா

2.நிரை-நேர் புளிமா     

3.நிரை-நிரை      கருவிளம்  

4.நேர்-நிரை கூவிளம்   

மூவசைச்சீர்கள்- 8

மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர் ஆகும்.

1.   நேர் நேர் நேர்

2.   நிரை நேர் நேர்

3.   நேர் நிரை நேர்

4.   நிரை நிரை நேர்

5.   நேர் நேர் நிரை

6.   நிரை நேர் நிரை

7.   நேர் நிரை நிரை

8.   நிரை நிரை நிரை

நேர் அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும், நிரை அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும் ஆக மூவசைச் சீர்கள் எட்டு ஆகும்.

1.நேர்-நேர்-நேர்    தேமாங்காய்

2.நேர்-நேர்-நிரை  தேமாங்கனி

3.நிரை-நேர்-நேர்  புளிமாங்காய்     

4.நிரை-நேர்-நிரை புளிமாங்கனி     

5.நிரை-நிரை-நேர் கருவிளங்காய்   

6.நிரை-நிரை-நிரை      கருவிளங்கனி    

7.நேர்-நிரை-நேர்  கூவிளங்காய்    

8.நேர்-நிரை-நிரை கூவிளங்கனி     

நாலசைச்சீர்கள் - 16

நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர்எனப்படும்.

நேர் அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும், நிரை அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் ஆக நாலசைச் சீர்கள் பதினாறு ஆகும்.

 

1.நேர்-நேர்-நேர்-நேர்     தேமாந்தண்பூ    

2.நேர்-நேர்-நேர்-நிரை   தேமாந்தண்ணிழல்

3.நேர்-நேர்-நிரை-நேர்   தேமாநறும்பூ     

4.நேர்-நேர்-நிரை-நிரை  தேமாநறுநிழல்   

5.நிரை-நேர்-நேர்-நேர்   புளிமாந்தண்பூ    

6.நிரை-நேர்-நேர்-நிரை  புளிமாந்தண்ணிழல்     

7.நிரை-நேர்-நிரை-நேர்  புளிமாநறும்பூ    

8.நிரை-நேர்-நிரை-நிரை புளிமாநறுநிழல்  

9.நேர்-நிரை-நேர்-நேர்   கூவிளந்தண்பூ   

10நேர்-நிரை-நேர்-நிரை  கூவிளந்தண்ணிழல்    

11.நேர்-நிரை-நிரை-நேர்  கூவிளநறும்பூ    

12.நேர்-நிரை-நிரை-நிரை கூவிளநறுநிழல்  

13.நிரை-நிரை-நேர்-நேர் கருவிளந்தண்பூ  

14.நிரை-நிரை-நேர்-நிரை கருவிளந்தண்ணிழல்   

15.நிரை-நிரை-நிரை-நேர் கருவிளநறும்பூ   

16.நிரை-நிரை-நிரை-நிரை கருவிளநறுநிழல்

செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன.

4. தளை

தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.  செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும்.

இரண்டு சீர்கள் இணையும் விதம் தளை என்று கூறப்படுகிறது. தளை என்பதற்குக் கட்டு என்பது பொருள். சீர்கள் எவ்வாறு இணைந்து தளையாக வருகிறது என்பது கீழே காட்டப்படுகிறது.

 

கற்        கச   டறக் கற்   பவை கற்   றபின்

நேர்  நேர்  நிரை நிரை நேர்  நிரை நேர்  நிரை

தேமா      கருவிளம்         கூவிளம்          கூவிளம்

இந்த அடியில் நான்கு சீர்கள் உள்ளன. நான்கு சீர்களுமேஈரசைச் சீர்கள் ஆகும். கற்க என்ற சீர் நேர் அசையில் முடிகிறது. இதற்குப் பின் வரும் கசடறக் என்ற சீரில் முதல் அசை நிரை அசையாக உள்ளது. நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்துள்ளது. இதற்குப் பின் வரும் கற்பவை என்ற சீரில் முதல் அசை நேர் அசையாக உள்ளது. கற்றபின் என்ற சீரிலும் முதல்அசை நேர் அசையாக உள்ளது. இந்த அடியில் நேர் அசைக்குப்பின் நிரை அசையும், நிரை அசைக்குப் பின் நேர் அசையும் வந்து தளை கொண்டுள்ளன. முரண்பட்ட இந்தத்தளைக்கு இயற்சீர் வெண்டளை என்று பெயர் ஆகும். இந்தத்தளை வெண்பாவில் மிகுதியும் வரும்.

இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது.

குழலினி(து) யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்

என்பது ஒரு திருக்குறள். இது இரு அடிகளைக் கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த ஒரு செய்யுள். இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய அசை வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.

குழ.லினி(து) யா.ழினி.து  என்.பதம்   மக்.கள்

நிரை.நிரை  நேர்.நிரை.நேர்     நேர்.நிரை   நேர்.நேர்

மழ.லைச்.சொல்   கே.ளா      தவர் .

நிரை.நேர்.நேர்     நேர்.நேர்    நிரை

இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது ஈரசைச்சீர். நிலைச்சீரின் ஈற்றசை நிரை. வருஞ்சீரின் முதல் அசை நேர். நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும்.

இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர் வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும்.

இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். வெவ்வேறு அமைப்புகளில் ஏழுவகைத் தளைகள் உள்ளன.சீர்களுக்கு இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன.

 

அ) ஆசிரியத்தளை -2

1. நேரொன்றிய ஆசிரியத்தளை (மா முன் நேர்)

- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நேர்

- வருஞ்சீர் முதலசை - நேர்

2. நிரையொன்றிய ஆசிரியத்தளை (விளம் முன் நிரை)

- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நிரை

- வருஞ்சீர் முதலசை - நிரை

 

ஆ) வெண்டளை

3. இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விளம் முன் நேர்)

சிறப்புடை இயற்சீர் வெண்டளை

- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்

- வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.

- வருஞ்சீர் - இயற்சீர்

சிறப்பில் இயற்சீர் வெண்டளை

- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்

- வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.

- வருஞ்சீர் - வெண்சீர்

4. வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)

சிறப்புடை வெண்சீர் வெண்டளை

- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நேர்

- வருஞ்சீர் முதலசை - நேர்

- வருஞ்சீர் - வெண்சீர்

சிறப்பில் வெண்சீர் வெண்டளை

- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நேர்

- வருஞ்சீர் முதலசை - நேர்

- வருஞ்சீர் - வெண்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்

 

இ) கலித்தளை

5. கலித்தளை (காய் முன் நிரை)

சிறப்புடைக் கலித்தளை

- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நேர்

- வருஞ்சீர் முதலசை - நிரை

- வருஞ்சீர் - காய்ச்சீர் (நேர் ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)

சிறப்பில் கலித்தளை

- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நேர்

- வருஞ்சீர் முதலசை - நிரை

- வருஞ்சீர் - இயற்சீர் அல்லது கனிச்சீர் (நிரை ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்)

ஈ) வஞ்சித்தளை

6. ஒன்றிய வஞ்சித்தளை (கனி முன் நிரை)

சிறப்புடை ஒன்றிய வஞ்சித்தளை

- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நிரை

- வருஞ்சீர் முதலசை - நிரை

- வருஞ்சீர் - கனிச்சீர்

சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளை

- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நிரை

- வருஞ்சீர் முதலசை - நிரை

- வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்

7. ஒன்றாத வஞ்சித்தளை (கனி முன் நேர்)

சிறப்புடை ஒன்றாத வஞ்சித்தளை

- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நிரை

- வருஞ்சீர் முதலசை - நேர்

- வருஞ்சீர் - கனிச்சீர்

சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை

- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)

- நிலைச்சீர் ஈற்றசை - நிரை

- வருஞ்சீர் முதலசை - நேர்

- வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள்

 

5. அடி

 

அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. பல அடிகள் சேர்ந்து ஒரு செய்யுளாக வரும். அடிகளே செய்யுளை வகைப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. அடியில் வரும்சீரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிகள் பல வகைப்படும். ‘எழுத்து அசை சீர் பந்தம், அடி தொடை என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது. தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புக்களாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. எழுத்துக்கள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன.

மனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம் என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம் என்கின்றார்.

     ... ... ... ; அத்தளை

அடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு

தொடுத்துமன் சேறலின் தொடையே

என்னும் நூற்பா, அடி என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைகிறது.

சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி ஒழுக்கை அல்லது ஒலிநடையைத் (Rhythm) தளை என்றால், சீர்கள் தொடர்ந்து இயங்கும் வடிவியக்கம் (concatenated on chain movement) அடி என்று சொல்லலாம் எனவும் அடிக்கு விளக்கம் தருகின்றனர். சுருக்கமாகச் ‘சீர்கள் தம்முள் தொடர்ந்து இயங்கும் செய்யுளியக்க அலகு அடி என்று சொல்லி வைக்கலாம்.

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்"

என்பது குறள் வெண்பா. இது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி,

கற்றதனா லாய 

என்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு.

சான்று:

திரைத்த சாலிகை

நிரைத்த போல்நிறைந்(து)

இரைப்ப தேன்களே

விரைக்கொள் மாலையாய்"

இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.

மேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, குறளடி; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு.

"குறள்ஒரு பந்தம்; இருதளை சிந்தாம்;

முத்தளை அளவடி; நால்தளை நெடிலடி;

ஐந்தளை முதலா எழுதளை காறும்

வந்தவும் பிறவும் கழிநெடில்; என்ப"

இவ்வகையில் ‘சீரடி குறளடி, சிந்தடி,அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.

அடிகளின் உருவாக்கம்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா

மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது.

பொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. செய்யுள் அல்லது பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே. பாடலைச் சொல்லும் போது வரிகள் அல்லது சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும். பொதுவாக பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்:

குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.

சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.

அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.

நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது

கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.

இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.

கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.

 

6. தொடை

தொடுக்கப்படுவது தொடை எனப்படும். இரண்டு அடிகள் தொடர்ந்து வரும்போது அவற்றில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து முதலியவை ஒத்து வரும்படி இருப்பது தொடை என்று கூறப்படும். முதல் எழுத்து ஒத்து வருவது மோனை எனப்படும். இரண்டாம் எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள் -411)

 

இந்தச் செய்யுளில் முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் முதல் எழுத்து செ என்றே வந்துள்ளது. இதுவே மோனைத் தொடை எனப்படும்.

கற்க கசடறக் கற்பவை

கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்-391)

இந்தச் செய்யுளில் இரண்டு அடிகளிலும் இரண்டாம் எழுத்தாக ற் என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இதுவே எதுகை எனப்படும். இவைபோலவே வேறுபல தொடைகளும் உள்ளன.

தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.

தொல்காப்பிய விளக்கம்

தொல்காப்பியர் தொடைகள் 13708 வகைப்படும் எனக் குறிப்பிடுகிறார்.

தொடை வகைகள்

தொடைகள் பலவகைப்படுகின்றன. இவை,

1.   மோனைத் தொடை

2.   இயைபுத் தொடை

3.   எதுகைத் தொடை

4.   முரண் தொடை

5.   அளபெடைத் தொடை

6.   அந்தாதித் தொடை

7.   இரட்டைத் தொடை

8.   செந்தொடை

என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது.

தொடை விகற்பங்கள்

மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் "விகற்பங்கள்" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.

1.அடி

2.இணை

3.பொழிப்பு

4.ஒரூஉ

5.கூழை

6.மேற்கதுவாய்

7.கீழ்க்கதுவாய்

8.முற்று

மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.

 

1 Response to "யாப்பும் அதன் உறுப்புகளும் - மயிலம் இளமுருகு"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel