வாழ்முறையின் வேகமும் குறியீடுகளும் - கவிஞர் க.சு. சங்கீதா- நூல் அறிமுகம்: மயிலம் இளமுருகு

Trending

Breaking News
Loading...

வாழ்முறையின் வேகமும் குறியீடுகளும் - கவிஞர் க.சு. சங்கீதா- நூல் அறிமுகம்: மயிலம் இளமுருகு

வாழ்முறையின் வேகமும் குறியீடுகளும் -   கவிஞர் க.சு. சங்கீதா-  நூல் அறிமுகம்:   மயிலம் இளமுருகு

 


கவிஞர். சங்கீதா அவர்கள் அரசுப் பணியில் பணியேற்று 17 ஆண்டுகளாகிறது. இவர் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றார். தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள  மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். 2017 இல் தமிழ்நாடு அரசு புதிய பாடத் திட்டத்தை  மாற்றி அமைத்தபோது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் தமிழ்ப் பாடநூல்களை ஒருங்கிணைக்கும் பணியில் இருந்தார். அதில் குறிப்பாக ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான தமிழ்ப் பாடநூல்களை உருவாக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மிகச் சிறப்பான பணியினைச் செய்துள்ளார். மிகப் பரந்துபட்ட அறிவும் அனுபவமும் பொறுமையும் மற்றவரை மதிக்கும் பண்பும் இவரிடத்தில் நாம் காணமுடிகின்றது.

இப்படிப்பட்ட இவர் அவ்வப்போது கவிதைகளை எழுதி வந்திருக்கிறார். அவற்றைத் தொகுத்து தற்போது நினைவுத்தாள்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இவர் முனைவர் பட்டத்திற்காகப் புதுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பலக் கவிதைகளைப் படித்த அனுபவம் இவருக்கு இன்னும் எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்கும் என்று சொல்லலாம். இக்கவிதைகள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

பெண்ணின் மன உளைச்சல்களையும் இரைச்சல்களையும் அடைகாத்துக் சங்கீதம் ஆக்கி வெற்றி பெற்று இருக்கிறார் கவிஞர் சங்கீதா. இத் தொகுப்பில் காதலின் அகத்தைக் காணலாம். அம்மாவின் ஆனந்தக் களிப்பைக் கண்ணுறலாம். மகளின் உருக்கத்தைக் கண்டு உருகலாம். தோழியின் ஆறுதலைக் காணலாம். அலுவலகம் செல்லும் பெண்ணின் அல்லல் கண்டு ஆதங்கப்படலாம். ஆதித்தாயின் ஆளுமையையும் நவீனப் பெண் வீழ்த்தப்பட்ட வஞ்சகத்தையும் காணலாம் என்று இந்நூலை வெளியிட்டுள்ள தருண்கவின் பதிப்பகத்தார் இந்நூல் குறித்து சிறப்பாக பதிவு செய்துள்ளனர்.

இந்நூலுக்குப் பேராசிரியர் மு. சுதந்திரமுத்து அவர்கள் அணிந்துரையாக தன் கருத்தை வழங்கியுள்ளார். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள கவிதை அனுபவத்தை மிகச்சிறப்பாக தனக்கே உரிய வகையில் நல்ல மதிப்புரை போன்று வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருடைய வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இவருடைய கவிதைகள் நேற்றைய இவரிடம் உருவாகி இன்றைய இவராக விரிந்து செல்லும் நிலையிலானவை. இப்படைப்புகள் சமூக கால தத்துவ அடையாளங்களுக்கு உட்படாதவை. இசங்கள் சுவடேதுமின்றி இவரது நுண் உணர்வுகளே கவிதைகள் ஆகியிருக்கின்றன. இப்படைப்புகளில் கருக்களக்குறுகல் என்பது இல்லை. வேறுபட்ட கருக்களைக் கொண்டு கவிதைப் பின்னல்களை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். உணர்வில் உறைக்காதவற்றை எழுதுவதில்லை இவர். கவித்துவமான இருப்பு இவரிடம் நிறைய இருந்தும் வெளியீடு தேவையில்லை என  விட்டவை அதிகம் என்று தோன்றுகின்றது. மேலும் இவரது பக்குவப்பட்ட வாழ்முறையே முதிர்ந்த மனத்தின் இயல்பே கவித்துவத்தின் வழிபட்டதாக இருக்கிறது. அழகியல் சார்ந்ததாக இருக்கிறது. சொந்த அனுபவங்களின் அழுத்தங்களுக்கும் வாசிப்பு அனுபவங்களுக்கும் இடையிலான ஊசலாட்டத்தைப் படைப்புகளில் காண முடிகிறது. கவிதை புரிந்து கொள்வதற்கு அல்ல.  உணர்ந்து கொள்வதற்கு என்பது இவர் கவிமுறை. தேடலும் நாடலும் ஏங்கலும் சாடலும் நியாயம் கூறலும் இவர் கவிதைகளின் அடையாளங்கள்.

இக்கவிதை நூலில் என்ன பாடுபொருள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்வருமாறு கூறியுள்ளார். பெண், குடும்பம், அலுவலகம், இயற்கை, மெய்யுணர்வு என்று தான் திளைத்ததும் உளைந்ததுமான அக்கறைகள் இவர் கவிதைகளில் மையப்பட்டிருக்கின்றன. கவிஞர் சங்கீதா பெண்ணியவாதி எனப் பெயர் வாங்கியவர் இல்லை. பெண்ணியவாதங்களை விளக்கும் மாதிரிக் கவிதைகள் எவற்றையும் எழுதியதில்லை. பெண் எதிர்கொள்கிற எதார்த்த நிலையில் தான் உணர்ந்ததை நம் சுரணையில்  உறைக்கச்செய்யும் கவிதைகளைப் படைத்துள்ளார். பெண்ணிய அரசியலோ அழகியலோ இவற்றில் குறிக்கிடவில்லை. சமூகத்தில் நாம் வளர்க்கும் அனுபவிக்கும் பார்க்கும் பெண் நிலைமைகளை அப்படியே முன்வைக்கிறார் என்று பெண் குறித்த கவிதைகள் வந்துள்ள செய்தியை நன்றாக  பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

காற்று, வான், நீர், நெருப்பு. நிலம் ஆகிய ஐம்பூதத்து இயற்கை ஆற்றலாகப் பெண்ணைப் படைத்துக் காட்டுகிறார் கவிஞர். பெண் பற்றி எழுதும் இடங்களில் அவளை இப்பேராற்றல்களின் வடிவமாகவே காட்டுகிறார். ஐம்பூதமானவள்,  எல்லாம் நீ, இயற்கையே எனக்கு ஒரு வரம் வேண்டும், நெருப்பு நீ ஆகிய கவிதைகள் மட்டுமின்றி உயிர் பிழைக்கும் உயிர் கவிதைகளிலும் பெண்ணை இவ்வாற்றல்களின் வடிவமாகவே காட்டுகிறார். மேலும் பக்கம் பதினொன்றில் பேராசிரியர் பின்வருமாறு கூறுகின்றார். புதைக்கப்பட்ட உடலின் ஒரு கை பூமிக்கு வெளியே நீண்டு இருக்க அதை பற்றிய ஆய்வு நடக்கிறது. சமையல் தழும்புகள், வெடிப்புகள், அழிந்த ரேகைகள்,  உடைந்த நகங்கள் எனக் காணப்பட்ட அடையாளங்கள் பெண்ணின் கை என அடையாளம் காட்டுகின்றன. இக்கவிதைகளில் உணர்வுகளை அழுத்திச் சொல்ல வேண்டிய நிலையில் பெண்கள் வாழ்வதும் சாவதும் பதிவு பெறுகின்றன. மேலும் இக்கவிதையில் இன்னொரு சிறப்பாக குடும்பம் பற்றி நிறைய செய்திகளைக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். குடும்பம், சமூக உலகத்தின் தொடக்கம், வளர்ச்சி எல்லாவற்றையும் எதிரொலிக்கும் அதிசயக் கண்ணாடி. மனித இனத்தின் பண்பு, மாண்பு ஆகியவற்றின் தொட்டில் குடும்பம். தவிர்க்க முடியாத குடும்பம் பெண்ணுக்கு கூடா? கூண்டா? என்பது புரியாத புதிர். அன்பின் புதிர். கவிஞர் தம் குழந்தைகள், அம்மா, அக்கா, அப்பா, சொந்தம் என்று தன்னுடைய சிலக் கவிதைகளில் பேசுகிறார். இந்த உறவுகள் அனைவருக்குமான உறவுக் குறியீடுகளாக சொல்லப்பட்டுள்ளன.

அடுத்ததாக அலுவலகம் பற்றிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அதிகாரத்தின் அடக்குமுறையும் அதற்குத் தூண்டுதலாக இருக்கும் பணியாளர்களின் மந்தைத்தனமும் மாற்றப்பட வேண்டியவை என்பதை இக்கவிதைகள் வலியுணர்த்துகின்றன. போலிகளை அம்பலமாக்குகிற  ஆவேசம் கவித்துவத்தின் இயல்பு. இந்த எதிர்ப்புபியல்பு அலுவலகக் கூட்டம், மூளையைத் தொலைத்தவர்கள், கடல்வாழ் திமிங்கிலம் குளத்திலா ஆகிய கவிதைகளில் வெளிப்படுகிறது. மதிப்பீட்டு அளவில் மனிதநேயம் சார்ந்ததாக உருவெடுத்து இருக்கவேண்டிய அலுவலகம் என்ற அமைப்பு கற்பனையை மிஞ்சும் அடக்குமுறை கூடமாக ஆகிவிட்ட மலினமானநிலையை கவிதைகள் உணர்த்துகின்றன.

குழந்தையை வீட்டில் விட்டு வெளியே நெருக்கடியான பேருந்தில் பயணம்செய்து விழிபிதுங்கும் வேளையிலும் தனது பிஞ்சுக் குழந்தையின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து செல்லும் பணிப்பெண்ணின் நிலையை வீட்டை சுமப்பவள் என்ற கவிதை அழகாக காட்டுகிறது என்று இன்பராஜ் அவர்கள் நூல் குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்தக் கவிதைத் தொகுப்பில் அறச்சீற்றம் இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இந்நூல் குறித்து பின்வருமாறு நாம் அறியலாம். இந்நூலில் 35 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மிகச்சிறிய கவிதைகளும் உள்ளன. மிகநீண்ட கவிதைகளும் உள்ளன. இவை அனைத்துமே கவிஞரின் ஆழ்மனத்தில் இருந்தும் அனுபவத்தில் இருந்தும் பிறந்து இருப்பதாகவே நமக்குத் தோன்றுகின்றன. சொற்களின் பயன்பாடு மிகச் சிறப்பாகவே உள்ளது. அதே போன்று கவிதைக்குரிய இலக்கணம் என்று சொல்லப்படுகின்ற உவமை, உருவகம், படிமம், குறியீடு என்பன ஆங்காங்கே அமைந்துள்ளதை நாம் பார்க்க முடிகின்றது. இது கவிதைக்கு மேலும் அழகு தருவதாகவும் இருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளைத் தலைப்புகளின் வழியாகவும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பெண்

பெண் என்று பார்க்கின்றபோது பெண்ணுக்காக பெண் உரிமை குறித்து பேசுகின்ற கவிதைகள் இங்கே இடம்பெற்றுள்ளன. பெண் என்பவள் விசாலமான அறிவையும் கொண்டு வரம்புகளை உணர்ந்தவளாகவும் இருக்கின்றாள்.  அதேசமயம் அவளுக்கான உரிமை என்ன என்பதை உணர்ந்து செயல்படலாம் என்ற கருத்தை இந்தக் கவிதையில் நாம் பார்க்க முடிகின்றது. குறிப்பாக

நீ படிக்கும்

புத்தகத்திற்குள்ளோ

நீ இயக்கும்

கணினிக்குள்ளோ

நீ இயங்கும்

கடிகாரத்திற்குள்ளோ

பெண் என்னும்

தடுப்பைப் போட்டு

வர விடாமல் தடுக்கிறாய்

என்னை ….

உனக்குப் பிடித்த

வடிவங்களுக்குள்

அனுமதியின்றி

என்னைப் பொருத்தினாலும்

உன்னிடமிருந்து

தள்ளியே வைத்தாலும்

எந்த உருவமும்

மாறும் அமீபா போலவும்

ஏற்கும் பாத்திர

வடிவம் பெறும் நீர் போலவும்

எல்லா வடிவமும்

ஏற்கும் மண் போலவும்

அண்டசராசரம் எங்கும்

காலங்காலமாய்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்

உன் வடிவத்திலும்

என்ற கவிதை பெண் அனைத்துமாகி நிற்கிறாள் என்பதை உணர்த்துகின்றது.

வீட்டைச் சுமப்பவள் என்ற கவிதையிலும்

நிற்க இடமற்ற நெரிசலிலும்

பையின் பளுவைவிட

செய்ய வேண்டிய செலவுகளும்

அளிக்க வேண்டிய பாக்கிகளும்

என்ற நிதர்சன வாழ்க்கையை இந்தக் கவிதையில் கவிஞர் பேசியுள்ளார். கூட்டைச் சுமக்கும் நத்தையைவிட

வீட்டைச் சுமப்பது பாரமா

எண்ணச் சிறைக்குள்

எழுந்த கேள்வியோடு

ஏனோ நினைவுக்கு வந்தது

என் தமிழ் ஆசிரியை

என்று அந்தக் கவிதையின் பாடுபொருளை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. பக்கம் 84 இல் ஒற்றைக்கை என்ற கவிதையில் பெண் பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

அண்டியோரையெல்லாம்

அரவணைத்த அக்கை

ஆதரிப்போர் எவரும் இன்றி

ஆழ புதைந்துவிட்டது என்று சொல்கின்ற அந்தக் கவிதையில் குறியீட்டுத் தன்மை இருப்பதை நாம் உணரலாம். ஐம்பூதங்கள் என்ற கவிதையில் ஐந்து பூதமாகவும் பெண் இருக்கிறாள் என்ற செய்தியைக் கவிஞர் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

எனக்கே வேண்டுமென

வாய் திறந்து வாங்கிக்கொண்டது

வையகமே வாழ்கவென

அன்பால் ஆனவள்

ஆசையுடன் ஒன்றினாள்

நிலமானாள் நிம்மதியாய்

என்று அக்கவிதை இடம் பெற்றுள்ளதை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

உறவு

உறவு என்ற தலைப்பில் அமைந்த கவிதைகளும் குறிப்பிடத்தக்கன. பக்கம் 72 இல் தனது சொந்தம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து விரிவாக பேசிய கவிஞர் இறுதியில்

இப்படித்தான்

இல்லாததை விசாரித்து

இன்னின்னவாறு பேசி

இருந்து கொண்டுதானிருக்கிறது

என்னைச் சூழ்ந்த

என் சொந்தம் என்று குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

இந்த நூலின் தலைப்பான நினைவுத்தாள்கள் என்ற கவிதை குறிப்பிடத்தக்கது. அப்பாவின் மீது கொண்ட அன்பையும் நேசத்தையும் நெருக்கத்தையும் நாம் உணர்ந்து கொள்கின்ற வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

பேரனுடன் சேர்ந்து

மறைவாக இனிப்பு உண்ட

கள்ளத்தனமும்

அம்மாவுக்காக என்று கூறி

பலகாரம் வாங்கிய கபடத்தனும்

ஊருக்கு என்றே கூடுதலாய்

எடுத்து வைத்த வெகுளித்தனமும்

மூளைக்குள் உறைந்துள்ளது

நறுமணமாய்

என்ற அந்தச் சொற்கள் நினைவுகளை மீட்டெடுப்பது அவருக்கு இதமானதாக இருப்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம்.

பிடிவாதத்திற்குப் பிடித்தமானவள் என்ற கவிதையில் எல்லாம் மிகச்சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. அந்தக் குட்டி இளவரசி எப்படி இருக்கின்றார் என்பதை சொல்லும்போது நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். ஏன்? எப்படி?

எதற்கு? எங்கே?

கேள்விகளின் பின்னால்

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும்

எங்கள் வீட்டுக் குட்டி இளவரசி

ஆம்

இப்போதும் எப்போதும் முப்போதும்

இவள்

எங்கள் வீட்டுக் குட்டி இளவரசி

என்று முடித்துள்ள பாங்கு கவனிக்கத்தக்கது. புகுந்த வீடு போன தமக்கைக்கு என்ற கவிதையில் அறிவுரையைச் சொல்கின்ற தன்மையை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

எதற்காக???

அடிக்கடி இல்லாவிட்டாலும்

எப்போதாவது

பழைய சூழலை

மீட்டு வருவாய் என்ற

எதிர்பார்ப்பில் தான்!!

என்று கவிதை முடிந்துள்ளது.

அனுபவம்

கவிஞரின் அனுபவமாக சிலக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அப்படி பார்க்கின்றபோது சுழல் வட்டங்கள் என்ற கவிதை குறிப்பிடத்தக்கது. கலைத் தன்மை கொண்டதாக இக்கவிதை இருக்கின்றது.

எவ்வளவோ விளக்கங்கள்

எத்தனையோ ஒப்பீடுகள்

ஏற்கவில்லை ஏரிதான்

ஏக மகிழ்வோடு

இழுத்தது என்னையும்

என்று வருகின்ற கவிச்சூழலை நாம் உணர்ந்து கொள்கின்றோம். சேட்டைகளையும் ரசிக்கும் தன்மையை என் வீரபாகு என்ற கவிதை குறிப்பிடுகின்றது. வீரபாகுவின் எல்லா செயல்பாட்டையும் சொல்லி கவிதை தரும் இன்பத்தை நாம் அறிந்து கொள்கின்றோம்.

அரும்பு சிரிப்பிலும்

மழலை மொழியிலும்

பிஞ்சு தொடுதலும்

பார்க்கும் எவருடனும்

நட்பு பாராட்டும்

அறிவு வீரபாகு

என்று வருகின்ற முறையும் அந்த வீரபாகு எப்படி எல்லாம் இருக்கிறார் என்பதைச் சின்ன வீரபாகு, குட்டி வீரபாகு, துணிவு வீரபாகு, அழகு வீரபாகு, இம்சை வீரபாகு, செப்பு வீரபாகு, அன்பு வீரபாகு, என் செல்ல வீரபாகு என்று கவிதை முடிந்துள்ளதை நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

நீ! நீ! நீ! என்ற இந்தக் கவிதையில்

ஏய் எப்போதாவது

என்னை நினைத்தாயா?

இயல்பாக கேட்டுவிட்டு

கண்சிமிட்டி நகர்ந்தாய்

பதில் பெறுவதற்குள்! என்று அந்தக் கவிதை வருகின்ற முறையையும் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டுவிட்டு பின்பு பதில்களாகவும் என் அன்பு அனுபவங்களை இன்னும் கேட்டுவிட்டு போ என்று சொல்கின்ற முறையை நாம் உள்வாங்கி கொள்கின்றோம். வாழ்க்கை என்பது கசப்பானதாக இருக்கின்ற இந்த இயல்பைக் கவிஞர் கசப்பு என்ற கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாகப்

பிடித்தும் பிடிக்காமல்

மறுத்தும் விலகாமல்

வாழ்க்கை என்ற கவிதை முடிகின்றது.

அறிவுரை

அறிவுரைகள் சொல்கின்ற பாணியில் சிலக் கவிதைகள் இருக்கின்றன. புகழ்ச்சிக்கு மயங்காதே

இகழ்சிக்குத் துவளாதே

நினை! நினை!

நல்லதை நினை!

இலக்கு நோக்கி

இறகை விரி!

வானம் உனது!

தென்படும்

வழி எல்லாம் உனது!

உன்னை

உலகுக்கு உணர்த்து!

நல்லதாய் உண்மையாய்!

என்று எல்லாம் நீ என்ற கவிதை குறிப்பிடுகின்றது. மேலும் இரசி என்ற கவிதையில் எதை எதையெல்லாம் நாம் ரசிக்க வேண்டும் என்ற கருத்தைக் கவிதை உணர்த்தி செல்கின்றது.

வேறு வழி இல்லை பெண்ணே

இரசிக்கத்தான் உலகம்

ஆதலின் இரசி

அனைத்தையும் இரசி

என்று இரசனையை மிகச்சிறப்பாக இக்கவிதை பதிவு செய்துள்ளது. உயிரோடு என்ற கவிதையில் உயிர்வாழ்தல் கடினமானது என்பதை விளக்குகின்றார்.

உண்மை முகம்

ஒளிந்து போய்

இன்னும் இருக்கிறேன்

உயிரோடு!

என்பது கவனிக்கத்தக்கது.

வலிமை - உறுதி

பெண் என்பவள் வலிமையாகவும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்ற தலைப்பில் சிலக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. உணர்வாய் என்ற கவிதையில்

கற்களில் படிந்து கிடக்கும்

கால் இடறி

சிந்திய இரத்தமாவது

என் தேடலைச் சொல்லாதா உனக்கு?

இதை எண்ணித்தான்

குத்தும் கற்களுக்காய்

வலித்துப் பதறி

குனிவதில்லை இப்போதெல்லாம்!

என்ற கவிதை வலிமையைத் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் நெருப்பு நீ  என்ற கவிதையில்

கனன்று கனன்று

உள் உறை தீயாய்

உறைந்து நிற்கிறாய்!

அறியாது உன்னைத்

தொடும் எதையும்

உன்னைப்போல் ஆக்குகிறாய்

சாம்பலாய்! என்று நெருப்பு என்பது குறியீடாக சொல்லப்பட்டுள்ளது.     

ஆதித்தாய் என்ற கவிதையிலும் வலிமையைப் பெண்ணின் வரலாற்றைக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பெண் உலகத்தை மிகச்சிறப்பான வார்த்தைகளுக்குள் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். இயல்பைப் போதிப்பதாய் இக்கவிதை அமைந்துள்ளது.

ஆறுகளாய் உன் நரம்புகள்

உலவும் காற்றாய் உன் மூச்சு

பெய்யும் மழையாய் உன் கருணை

பச்சை மரங்களாய் உன் உழைப்பு

உயர்ந்த மலைகளாய் உன் கம்பீரம்

பரந்த பீடபூமியாய் உன் மேனி

பூமியைப் பார்க்கும் போதெல்லாம்

புதைந்துள்ள நீயே புலப்படுகிறாய்

என்று படிமம் சார்ந்ததாகவும் இக்கவிதை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கை

இயற்கையைக் குறித்தும் கவிஞர் பாடியுள்ளார். இயற்கையே எனக்கு ஒரு வரம் வேண்டும் என்ற கவிதை வினா கேட்கின்ற முறையில் அமைந்துள்ளது. குறவஞ்சி இலக்கியத்தில் முதலில் அந்தக் குறி சொல்கின்ற பெண்ணைக் குறிப்பிட்டு அவளை வாழ்த்தி அவளுக்குத் தேவையானவற்றை எல்லாம் கொடுத்து பின்பு தனக்கு ஒரு வரம் வேண்டும் என்பதாக அமையும். அதைப் போன்று இந்தக் கவிதை அமைந்துள்ளதை நாம் பார்க்க முடிகின்றது. பெண்ணைக் குறித்து சொல்கின்ற போது

மழையா? நிலமா?

கல்லா? மண்ணா?

எங்கும் ஓடி

எழிலாய் ஆகும்

நீராய் நெகிழ

இயற்கையே

எனக்கு ஒரு வரம் வேண்டும்

என்று குறிப்பிட்டுள்ள விதம் சிறப்பாக உள்ளது. மேலும் நிலாக் காவியம் என்ற  கவிதையில் நிலா குறித்து பாடியுள்ள திறத்தை நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நிலா நிலா ஓடி வா என்ற அந்த பாடலடிகள் இடம் பெற்றுள்ளன. இமைக்கும் நேரத்தில்

கைக்கெட்டாத தூரத்தே

வானத்தில்

விழுந்து நிலை பெற்றாள்

இன்று வரையிலும்

அப்படித்தான்!

என்று வரும் கவிதை  இயற்கையான நிலாவைக் குறியீடாக வெளிப்படுத்துகின்றது. நிலாப்பெண்ணாள் குறித்தும் கவனிக்கும்படி கவிதை அமைந்துள்ளது.

அலுவலகம்

அலுவலகம் சார்ந்த கவிதையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அலுவலகக் கூட்டம் எப்படி நடக்கின்றது. அங்கு நடைபெறுகின்ற சூழலையும் இந்தக் கவிதை நமக்கு உணர்த்துகின்றது. இயலாத நம் கோழைத்தனம், நரித்தனம், ஒட்டுண்ணித்தனம், கையாலாகாத்தனம், குள்ளநரித்தனம், அரக்கத்தனம், தற்பெருமைத்தனம் என ஒவ்வொன்றையும் அவர் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் மூளையைத் தொலைத்தவர்கள் என்ற கவிதை குறியீட்டுத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. யார் மூளையைத் தொலைத்தவர்கள், அதனால் ஏற்பட்ட சிக்கல், மூளையைத் தொலைத்தவர் பெற்ற அவமானங்கள், அவருடைய பார்வையும், மற்றவர்களின் பார்வையையும் இந்தக் கவிதை நமக்கு உணர்த்தி செல்கின்றது.

அவர்கள் மூளைகள் மட்டும்

அவர்கள் கண்ணில் படாமலே

இன்னும் ஒளிந்து கொண்டிருக்கின்றன

என்று வருகின்ற அக்கவிதை அதன் ஆன்மாவைக் காட்டுவதாக இருக்கின்றது. கடல்வாழ் திமிங்கலம் குளத்திலா என்ற கவிதையும் இத்தகைய சூழலை நமக்கு உணர்த்துகின்றது.

திணித்துத் திணறித் தள்ளினாலும்

திமிங்கலத்தைத் தள்ள முடியவில்லை-அது

பொடியன்களின் பொல்லாப்புகளைப்

புறக்கணித்து கடலோடு விளையாடியது.

என்று வருகின்ற அந்தச் சூழலையும் குறைகளையும் நிறைகளையும் காலங்காலமாய் பார்த்துக்கொண்டிருக்கும் கடலும் கண்டும் காணாததுபோல் கைத்தட்டி ஆர்ப்பரித்து அமைதியாய் இருந்தது என்பது குறியீட்டுத் தன்மை கொண்டதாக இருப்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம்.

புத்தகம்

புத்தகம் குறித்தும் கவிஞர் பாடியுள்ளார். கவிஞரின் நூலகத்தில் படிக்கப்படாத புத்தகங்கள் இருப்பதாகவும் அந்தப் புத்தகங்கள் படி என்று கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உரையாடல் தன்மை கொண்டதாக  இக்கவிதை இருக்கின்றது. புத்தகங்கள் யாருக்கேனும் பயன்படும்படியாக செய்துவிடு என்று கூறியுள்ள பாங்கும் கவனிக்கத்தக்கது. இறுதியாக அந்தப் புத்தகம் தனக்குத்தானே எழுதிக் கொண்டது

சொல்லடி சிவசக்தி

சுடர்மிகும் அறிவுடன்

என்னை ஏன் படைத்தாய்

என்று கேள்வி கேட்பதாக இது அமைந்துள்ளது. தமிழ்ப் பாடம் நடத்துகின்ற ஆசிரியர் தமிழ்மொழி குறித்தும் இறுதியில் ஒரு கவிதையை அமைத்துள்ளார். கவிதையின் தலைப்பு நற்றமிழே என் பொற்றமிழே என்பதாகும். இது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது. அழகான கவிதையாக இக்கவிதை நமக்கு தோற்றம் அளிக்கிறது. தமிழின் வரலாற்றையும் தமிழின் பெருமையையும் தமிழிலக்கியத்தின் வகைகளையும் குறிப்பிடுவதாக இக்கவிதை அமைந்துள்ளது.

தத்துவத்தைச் சொல்கின்ற கவிதையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஏற்கும் பாத்திர

வடிவம் பெறும் நீர் போலவும்

எல்லா வடிவமும்

ஏற்கும் மண் போலவும்

அண்டசராசரம் எங்கும்

காலங்காலமாய்

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்

உன் வடிவத்திலும்

என்ற கவிதை தத்துவக் கருத்தைப் போதிக்கின்றதாக இருக்கின்றது. கொரனோவைப் பாடுபொருளாகக் கொண்ட ஒரு கவிதை உள்ளது. அப்பம்மாவின் கடவுள் என்பது அந்தக் கவிதையின் தலைப்பு.

ஊரெல்லாம் ஊரடங்காம்

கடவுளைப் பார்க்கணும்

கோயில் எப்பம்மா திறக்கும்?

அங்கலாய்த்த அப்பம்மா

தெரிந்திருக்க நியாயமில்லை!

தரையெல்லாம் சோற்றை மொழுகி

பாத்திரங்களை உருட்டி

விளையாட்டுச் சாமான்களை வீசியெறிந்து

களைத்துப்போய் தூளியில் தூங்குவதும்

கடவுள்தான் என்பதை

நாம்தான் கடவுள் என்பதை உணராத அந்தச் சூழலை அவர் கேள்வி கேட்பதாக இக்கவிதை அமைந்துள்ளது. இயல்பைக் குறித்து பேசுகின்ற கவிதைகளும் இதில் உள்ளன. குறிப்பாக எத்தனை பேர் பாராட்டினாலும் எதிர்பார்த்த ஒருவரின் பாராட்டுகளுக்கு ஏங்கும் சூழலை

மந்தை நிறைந்த ஆடுகளிலும்

தொலைந்து போன ஒரு ஆட்டுக்குட்டிக்காய்

தொடரும் தேடல்

என்ற வருகின்ற இல்லாமையின் ஈர்ப்பு என்ற கவிதை குறிப்பிடத்தக்கது. கவிதையின் மொழியைப் படிக்கின்றபோது சிலக் கவிஞர்களின் சாயலை இத்தொகுப்பில் உணர முடிகின்றது. அப்படி பார்க்கின்றபோது வைரமுத்துவின் சாயலையும் சிற்பியின் சாயலையும் நாம் உணர்கின்றோம். தண்ணீர்த்தேசத்தில் வருகின்ற அந்தக் கவிதை போன்று பக்கம் 36 அமைந்துள்ளது. அதைப்போன்று சிற்பியின் கவிதைகளையும் நாம் அறிகின்றோம்.

வைராக்கியமும் நீ

ஆவேசமும் நீ

புயல் நீ தென்றல் நீ

கொடும் தீ நீ தண்ணீர் நீ

வானம் நீ மேகம் நீ

பூமி நீ பொறுமை நீ

பூகம்பம் நீ பிரளயம் நீ

எனும் பாரதியின் வசன கவிதையின் போக்கினையும் மேற்சொன்ன அடிகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த நூலில் ஆங்காங்கே கவிதைக்கு இலக்கணமான உவமை, உருவகங்கள் போன்றவை மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளன. அதைப்போன்று முரண் என்று வருகின்ற அந்த பாங்கினையும் புரிந்து கொள்கின்றோம். பழமொழிகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. அழகு என்ற கவிதையில் அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற அந்தப் பொருளில் வந்துள்ளதை உணர்கின்றோம். ஆக இந்த நூல் கவிஞரின் முதல் நூல் போன்று அல்லாது அனுபவம் வாய்ந்த அளவில் பலச் சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. இந்நூலின் அட்டைப்படமும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆகச்சிறந்த கவிதைகளை எழுதிய கவிஞர் சங்கீதா மேலும் தம் எழுத்துகளால் தமிழ் இலக்கிய உலகிற்கு அணி சேர்ப்பார் என்று நாம் நம்புவோம். விரைவில் இன்னொரு கவிதைத் தொகுப்பையும் அவர் வெளியிட வாழ்த்துகிறோம். இந்நூலை வெளியிட்டு உள்ள தருண்கவின் பதிப்பகத்தாருக்கும் கவிஞருக்கும் வாழ்த்துக்கள்.

 நூல் - நினைவுத்தாள்கள்

கவிஞர்  சங்கீதா

முதல் பதிப்பு - டிசம்பர் 2020

தருண் கவின் பதிப்பகம்சென்னை

பக்கங்கள் - 96, விலை - 80

 மயிலம் இளமுருகு

கைப்பேசி – 9600270331

mailamilamurugu@gmail.com                                                                                                                                           



0 Response to "வாழ்முறையின் வேகமும் குறியீடுகளும் - கவிஞர் க.சு. சங்கீதா- நூல் அறிமுகம்: மயிலம் இளமுருகு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel