ஒரு ஊரில் இணை பிரியாத நண்பர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். அதில் ஒருவன் சலவைக் கடைக்காரன். இன்னொருவன் அடுப்புக்கரி வியாபாரி. இந்த இருவரது நட்பையும் பார்த்து அந்த ஊரே ஆச்சர்யம் அடைந்தது.
அத்துடன் இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசாத நாட்களே இல்லை. ஒருவனுக்குப் பணம் தேவை என்றால் அடுத்தவன் உதவி செய்வான்.
ஒரு நாள் அடுப்புக் கரி வியாபாரி, சலவைக் கடைக்காரனிடம், "நண்பா, நீ வீணாக கடைக்கு வாடகை கொடுத்து உனது பணத்தைச் செலவு செய்யாதே. எனது கடையிலேயே ஒரு அறையில் உனது தொழிலை நீ செய்யலாம் அல்லவா?" என்று யோசனை கூறினான்.
அதற்கு சலவைக் கடைக்காரன், "நண்பனே! உனது நல்ல குணத்திற்கும் எண்ணத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். ஆனால், ஒரே இடத்தில் நாம் இருவரும் தொழில் செய்வது என்பது இயலாத காரியம். அதற்குக் காரணம் நான் அழுக்கைப் போக்கி சுத்தம் செய்பவன். நீயோ அழுக்கை சேர்க்கும் தொழிலைச் செய்கிறாய்! ஆக, நீயும் நானும் ஒரே இடத்தில் இருந்தால் நமது இருவரது உழைப்பும் வீணாகும். அத்துடன் நமது இருவரது தொழிலும் சேர்ந்து பாதிக்கும். ஆகவே, இந்த விஷயத்தில் மட்டும் நம்மிடையே கூட்டுறவு வேண்டாம். நாம் என்றும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும்" என்று கூறினான்.
உடனே அந்த அடுப்புக் கரி வியாபாரி, "ஆம் உண்மை தான், உனக்கு என்னை விட முன் யோசனை அதிகம். நமது நட்பைப் போலவே இந்த வியாபர உறவும் சரிப்பட்டு வரும் என்று நினைத்து விட்டேன். ஆனால், நீ சொன்னபிறகு தான் எனக்கே புரிந்தது. நமது நட்பு வேறு, வியாபாரம் வேறு" என்பது.
நீதி : எப்போதுமே நட்பு என்பது வேறு, தொழில் என்பது வேறு.
இரு மாறுபட்ட தொழில்கள் அல்லது பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் ஆத்ம நண்பர்களாகவே
இருந்தாலும், அவர்களால்
ஒரே இடத்தில் இருக்க முடியாது.
0 Response to "நட்பும் தொழிலும் "
Post a Comment