விடைகளும் அதன் வகைகளும்

Trending

Breaking News
Loading...

விடைகளும் அதன் வகைகளும்

விடைகளும் அதன்  வகைகளும்

 



ஒன்றனைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினவுகின்றனர். இதை வினா என்கின்றனர். வினாவிற்கு ஏற்ப விடையளிப்பதுதான் மொழிநடையின் சிறப்பு. வினாக்களுக்குத் தக்கவாறு கூறப்படும் விடை எட்டு வகைப்படும்.

தேர்வு நாளை நடைபெறுமா? எனக் கேட்ட ஒருவனிடம், என் தங்கை ஏழாம் வகுப்பில் படிக்கிறாள் எனக் கூறுவது தவறு. வினாவும் அவ்வினாவிற்கு உரிய விடையும் பிழையின்றி அமைதலே முறை. இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்.

 விடை வகைகள் - எட்டு

1) சுட்டு விடை

2) மறை விடை

3) நேர்விடை

4) ஏவல் விடை

5) வினா எதிர் வினாதல் விடை

6) உற்றது உரைத்தல் விடை

7) உறுவது கூறல் விடை

8) இனமொழி விடை

 என்பன ஆகும்.

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்

உற்றது உரைத்தல் உறுவது கூறல்

இனமொழி எனும்எண் இறையுள் இறுதி

நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப. - நன்னூல் - 386

 1.சுட்டுவிடை

ஒன்றைக் கருதி அல்லது சுட்டிக்காட்டிச் சொல்லும் விடை சுட்டுவிடை எனப்படும்.

மதுரைக்கு வழி யாது?” என்று வினவினால் ‘இது என்பது போலச் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை.

‘மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது?’ என்பதற்கு ‘வண்டு விரும்பித் தேன் உண்ணும் நொச்சிப் பூ என்று விளக்கம்  கருதிக் கூறும் விடை முதலியன சுட்டுவிடை ஆகும்.

 2.மறைவிடை ( எதிர் மறுத்துக் கூறல் விடை)

மறை என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யேன் என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை, எதிர்மறைவிடை.

முருகா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாட வில்லை எனக் கூறுவது மறைவிடை எனப்படும்.

 3. நேர்விடை ( உடன்பட்டுக் கூறுதல்)

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்வேன் என்பதுபோல உடன்பட்டுக் கூறும் விடை, நேர்விடை. நேர்விடை என்பது வினாவிற்கு உடன்பட்டுக் கூறும் விடையாகும்.

அமுதா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாடினேன் எனக் கூறுவது நேர்விடை எனப்படும்.

 4.ஏவல்விடை

வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வது ஏவல்விடை எனப்படும். வினவியவரையே ஏவுவதால் ஏவல்விடை  எனப்பட்டது.

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’நீயே செய் என்று ஏவிக் கூறுவது, ஏவல்விடை.

தமிழ்ச்செல்வி , நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நீயே பாடு என்பது ஏவல்விடை எனப்படும்.

 5.வினாஎதிர்வினாதல்விடை

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யாமலிருப்பேனோ?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது, வினாஎதிர்வினாதல்விடை.

வினவப்பட்ட வினாவிற்கு விடையாக வினாவாகவே விடை அளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.

தமிழா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நான் பாடாமல் இருப்பேனா என விடையளித்துத் தான் அச்செயலைச் செய்யவிருப்பதை உறுதி செய்வது, வினா எதிர் வினாதல் விடை  எனப்படும்.

 6.உற்றதுரைத்தல்விடை

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

இது செய்வாயா?” என்று வினவிய போது, ’உடம்பு நொந்தது என்று தனக்கு உற்றதனை விடையாகக் கூறுவது, உற்றதுரைத்தல்விடை.

நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது எனத் தனக்கு நேர்ந்ததைக் கூறுவதால் இஃது, உற்றது உரைத்தல் விடை எனப்பட்டது. இஃது இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விடையளிப்பதாகும்.

 7.உறுவதுகூறல்விடை

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நிகழ உள்ளதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’கை வலிக்கும் எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது, உறுவதுகூறல்விடை.

நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும் எனத் தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவதால் இதனை, உறுவது கூறல் விடை எனப்பட்டது. இஃது எதிர்கால வினை கொண்டு முடியும்.

 8. இனமொழி விடை

ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்.

ஆடுவாயா?” என்று வினவிய போது, ’பாடுவேன் என்று ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது, இனமொழிவிடை.

‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’ என்ற கேள்விக்கு, ‘துவரம்பருப்பு இருக்கு என விடை தருதல்.

மேலே கூறப்பட்ட எண்வகை விடைகளுள் முதல் மூன்றையும் செவ்வன் இறை என்றும், ஏனைய ஐந்தையும் இறை பயப்பன என்றும் குறிப்பிடுவர். (செவ்வன் - நேரடியான, இறை - விடை; இறை பயப்பன - விடை தருவன; பயத்தல் - தருதல்)

வினாவிற்குச் சொல்லப்படும் விடை நேரடியாக அமைவது செவ்வன் இறை எனப்படும். சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை என்னும் மூன்றும் செவ்வன் இறை ஆகும்.

வினாவிற்குச் சொல்லப்படும் விடைகள் நேரடியாக அமையாமல் வேறுவகையாக அமைந்தாலும், அவையும் வினாவிற்குரிய விடைப் பொருளைத் தருதலால் இறை பயப்பன எனப்பட்டன. ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்னும் ஐந்தும் இறை பயப்பன ஆகும்.

 

0 Response to "விடைகளும் அதன் வகைகளும்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel