சோழநாட்டில் செங்காட்டங்குடியில் அரசாங்க சேனாதிபதியாக பணிபுரியும் ஆமாத்தியர் குலத்தில் பிறந்தவரே சிறுதொண்டர் . இவருடைய மற்றொரு பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். திருங்செங்கோட்டில் பிறந்து இறையருள் பெற்ற சிறுதொண்டரின் வாழ்நெறியை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. சிவத்தை அறிந்து கொள்ள விரும்பகிறவர்கள் அவரின் அடியார்களின் பெருமையை உணரவேண்டும் என்பதை
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
என்ற அடிகளின் வழியாக அறிய முடிகிறது.
சிறுத்தொண்டர் பெயர்க்காரணம்
சிவனின் அடியவருக்கு விருப்பமுடன் செய்கின்ற வழிபாட்டு முறைகளால் அடியவர்களின் முன்பு தன்னைச் சிறியவனாக கருதி வாழ்க்கை நடத்தி வந்ததால் சிறுத்தொண்டர் என்ற பெயருடன் அனைவராலும் அழைக்கப்பட்டார்.
நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர் முன்புமிகச் சிறியராய் அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் என திகழ்ந்தார் அவனியின்மேல்”
என்ற பாடல் சான்றாகிறது.
‘செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்’
’இல்லை என்று கூறாமல் பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்’
போன்ற வரிகள் இவர்தம் பெருமையை எடுத்துரைக்கின்றது.
பிறப்பு
நீர்வளமும் நிலவளமும் நிறைந்த திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கோவிலுக்குக் கணபதீச்சுரம் என்று பெயர். அந்நகரில் மாமாத்திரர் குலத்தில் பரஞ்சோதியார் என்னும் பெயருடைய சிறுத்தொண்டர் பிறந்தார். இவர் பல்லவ மன்னனிடம் படைத்தலைவனாகப் பணியாற்றினார். போர்க்கலையும் வீரமும் கொண்டிருந்த சிறுத்தொண்டரால் மன்னனுக்கு மாபெரும் வெற்றிகள் கிடைத்தன. இவ்வாறு வீரமிக்கவராய் வாழ்ந்த பரஞ்சோதியார் சிவ நாமத்தைத் தினமும் கூறி பக்திமிக்கவராகவும் திகழ்ந்தார்.
சிவனடியார்களை உபசரித்து அன்பின் மிகுதியால் தன்னைச் சிறியவனாக கருதி அடக்க ஒடுக்கத்துடன் சிவத்தொண்டு புரிந்து வந்தார். ஒருமுறை பெரும்படைகளைத் திரட்டிக்கொண்டு போரிட்டு வாதாபியை வென்றார். பரஞ்சோதியின் வீரத்தைப் பார்த்த பல்லவன் மகிழ்ச்சி கொண்டான். விருதுகள் பலவழங்கி புகழ்ந்தான். ஒருநாள் அமைச்சர்கள் பரஞ்சோதியார் இறைவன் மீது கொண்ட பக்தியாலேயே பகைவர்களை வென்று தன்புகழை நிலைநாட்டினார்
என்றனர். அமைச்சர்கள் கூறிய இச்செய்தியைக் கேட்டு மன்னன் வியப்படைந்தான். பரஞ்சோதியாரின் பக்தியை நினைத்து மகிந்த அதேவேளையில் தான் கடவுளுக்கு ஏதோ தவறு செய்து விட்டதாக எண்ணி வருந்தினான். சிறுத்தொண்டரை அழைத்து எனக்காக நீங்கள் போருக்குச் சென்று பல இன்னல்களை அடைந்தீர்கள் இனிமேல் இறைவனுக்குத் தொண்டினைச் செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று கூறினான். நடப்பது அனைத்தும் இறைவனுடைய அருட்செயல் என்று மனதில் நினைத்தான். பரஞ்சோதியாருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து அரச மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தான்.
இல்லறவாழ்வு
பல்லவ மன்னனிடமிருந்து பெற்ற பொன்னையும் பொருளையும் கொண்டு பரஞ்சோதியார் ஆலயத்திருப்பணிக்கும் அடியார்களுக்குத் தொண்டு செய்வதற்கும் செலவு செய்தார். சிறிது காலம் கழித்து நல்ல குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நங்கையாரும் பரஞ்சோதியாரைப் போலவே இறைவனிடத்தும் அவர்களின் அடியவர்களிடத்தும் அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். சிறந்த முறையில் இல்லறம் நடத்தியதின் பயனாக இறையருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு சீராளன் எனப் பெயர் சூட்டினர்.
இல்லறத்தை முறைப்படி நடத்திய இருவரும் தொண்டர்களை அன்போடு வரவேற்று விருந்தினருக்கு உணவளித்து அவர்கள் உண்டதன் பின்பே தாங்கள் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இவர்களுடைய பெருமையை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் ஒருநாள் சிவனடியாராக வேடமிட்டு பரஞ்சோதியாரின் வீட்டிற்கு வர
எண்ணினார். சீராளன் பள்ளிக்குச் சென்றிருந்தான். பெற்றோர்கள் விருந்தினை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றிருந்தனர். காலம் கடந்தும் யாரும் வராததால் பரஞ்சோதியார் விருந்தினரைத் தேடி வெளியில் சென்றார். அந்த சமயம் சிவநாமத்தைச் செபித்துக்கொண்டு பைரவ சன்னியாசியாக சிவபெருமான் வந்தார்.
பக்திநெறி
பரஞ்சோதியின் வீட்டு வாசலில் நின்று சிவனடியாருக்கு உணவு தரும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டார். அடியவரின் குரல் கேட்டவுடன் பணிப்பெண் ஓடிவந்து பணிவோடு அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தாள். சிவபெருமானோ பெண்கள் தனித்து இருக்கின்ற இடத்தில் நான் தங்க மாட்டேன் என்று கூறினார். அதைக்கேட்ட நங்கை வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்து கணவர் இப்போதுதான் அடியவரைத் தேடிச் சென்றுள்ளார். விரைவில் வந்துவிடுவார். அதுவரைத் தாங்கள் வீட்டிற்குள் வந்து அமரவும் எனக் கூறினார். நங்கையாரின் வார்த்தையைப் பைரவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வடபகுதியிலிருந்து நான் வந்தது தொண்டரைப் பார்ப்பதற்காகவே அவரில்லாமல் வீட்டிற்குள் வரமாட்டேன்.
அருகிலுள்ள கோயிலின் ஆத்திமரத்திற்கு அடியில் காத்திருக்கிறேன் தொண்டர் வந்தவுடன் அடையாளங்களைக் கூறி என்னிடம் அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார் . தொண்டரின் மனைவியோ மனவேதனையோடு உள்ளேச் சென்றார். பைரவர் சென்ற சிறிது நேரத்திற்குள் சிவனடியார்கள் யாரும் காணவில்லை என்று வருத்தத்தோடு வீட்டிற்குள் நுழைந்தார் சிறுத்தொண்டர். கணவனின் கவலையைத் தீர்க்கும் வகையில் பைரவரின் அடையாளங்களைக் கூறி கோயிலுக்கு அனுப்பி வைத்தார். தொண்டரோ மனமகிழ்ந்து காலம் கடத்தாமல் கோயிலுக்குச் சென்றார்.
ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த துறவியை வணங்கி நின்றார். தொண்டரைப் பார்த்த பைரவர் நீங்கள்தான் சிறுத்தொண்டரா என்று கேட்டார். தொண்டரும் முகமலர்ச்சியோடு ஆம் என்று ஒப்புக்கொண்டு இந்த ஏழையின் வீட்டிற்கு வந்து உணவுண்டு அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனே பைரவர் எனக்குத் தேவையான உணவை உங்களால் தரமுடியாது என்று கூறினார். சிறுத்தொண்டரோ நீங்கள் கூறுகின்றபடி உணவு செய்து உங்களை மகிழ்விப்போம் என்றார். பைரவரோ நான் ஆறுமாதத்திற்கு ஒருமுறை தான் உண்பேன். பசுவை வதைத்து உண்பதே என் வழக்கம். பசுவின் மாமிசத்தைச் சமைத்து எனக்கு உண்டு தரமுடியுமா என்றார். இதைக்கேட்டவுடன் தொண்டர் மிகவும் மகிழ்ந்து என்னிடம் மூன்று ஆநிரைகள் உள்ளன அதைப்பக்குவமாக சமைத்து உங்களுக்கு உணவளிக்கிறேன் என்றார்.
பைரவரோ சிரித்துக்கொண்டே நீ நினைப்பது போல் நான் விலங்கைப்பற்றி கூறவில்லை. ஐந்து வயது நிரம்பிய குடும்பத்திற்கு ஒரே ஆண்மகனாக இருக்கும் பிள்ளையை உடலில் எந்தவித காயமும் இல்லாமல் பக்குவமாக கறி சமைத்து எனக்குத் தரவேண்டும். குழந்தையின் உடலைத் தாய் பிடிக்க தந்தையார் அரிந்து அதனைச் சமைக்க வேண்டும் . அப்போது வீட்டில் இருப்பவர்கள் யாரும் வருந்தக்கூடாது. தொண்டரும் உங்கள் ஆணை இதுவாக இருந்தால் அப்படியே உணவு தருகிறோம் என்றார். பைரவரோ உணவு முடிந்ததன் பின் என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
தொண்டர் வீட்டிற்கு வேகமாக வந்தார். நங்கையிடம் நடந்ததைக் கூறினார். மனைவியும் மறுவார்த்தைப் பேசாமல் வீட்டிற்கு ஒரே குழந்தையை எங்கே சென்று தேடுவோம் என்றார். தொண்டரோ சிறிதும் தயக்கமின்றி நம் குழந்தையையே அழைப்போம் என்றார். மனைவியும் மறுமொழி கூறவில்லை. கல்வி கற்க சென்றிருந்த மகனை அழைத்து வாருங்கள் என்று கூறியவுடன் தொண்டரும் மகிழ்ச்சியாக அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த மகனை முத்தமிட்டு உள்ளே அழைத்துச் சென்றார் நங்கை.
ஒன்றுபட்ட மனமுடைய கணவனும் மனைவியும் தெய்வத்தன்மை பொருந்திய சீராளனை பால், தேன், பச்சைக்காய்கறிகளோடு சேர்த்து பக்குவமாக சமைத்தனர். தொண்டர் பைரவரை அழைத்துவர ஆத்தி மரத்தடிக்குச் சென்றார். நங்கையும் பணிப்பெண்ணும் வீட்டைத் தீபமேற்றி கோமிய நீரால் மெழுகி கோலமிட்டு பூக்களால் அலங்காரம் செய்தனர். முத்து மாலைகளும் தோரணங்களும் வீட்டை மேலும் அழகுபடுத்தின. தொண்டர் பைரவரை அழைத்துக்கொண்டு தம் வீட்டிற்கு வந்தார். பைரவரை வரவேற்று உபசரிக்க ஆவலோடு நின்றுகொண்டிருந்த நங்கையார் அவர் பாதங்களைக் கழுவி மலரால் பூஜித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
மலர்பரப்பட்ட இருக்கையில் பைரவர் அமர்ந்தார். மலரால் அவரை அர்சித்து தீபம் காட்டி பாதபூசை செய்தனர். தொண்டரோ அவரை உணவு உண்ண அழைக்க எல்லா உணவுகளையும் ஒருங்கே படைக்க வேண்டும் என்றார். நங்கையோ எல்லாவற்றையும் கறி சமைத்து விட்டோம் தலைக்கறி அமுதுக்கு உதவாது அதனால் சமைக்கவில்லை என்றார். இறைவனோ அதையும் நாம் உண்போம் என்றார். பணிப்பெண்ணோ தலையையும் பக்குவமாக சமைத்து வைத்துள்ளேன்என்று கொண்டுவந்து வைத்தார். உணவு உண்ணலாம் என்று தொண்டர் உண்ண ஆயத்தமானார். அதைப்பார்த்தவுடனே பைரவர் கோபம் கொண்டு ஆறுமாதமாக நான் சாப்பிடவில்லை தினமும் சாப்பிடுகிற உனக்குப் பசி அதிகமாகிவிட்டதா? உன்னோடு அமர்ந்து உணவு உண்ணமாட்டேன் உன் மகனை வரச்சொல் என்றார். பைரவரின் சொல்லைக்கேட்டு “ இடியேறுண்ட நாகம் போல்” நடுங்கினார். அவன் இப்போது நமக்கு உதவான் என்றார். பைரவரோ அவன் வந்தால்தான் நான் உண்பேன் என்றார்.
தொண்டரோ மனதில் வருத்தத்தோடு வீட்டு வாசலில் நின்று கலங்கினார். சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டு சீராளா வருக என்று அழைத்தார். நங்கையாரும் கண்ணே மணியே சீராளா நீ வருவாயாக சிவனடியார் உணவு உண்ண உன்னை அழைக்கிறார் வா மகனே என்று விரைவாக அழைத்தார். அப்போது இறைவனின் திருவருளால் பள்ளிச் சென்று திரும்பிய குழந்தையைப் போல சீராளன் ஓடிவந்தான். பெற்றோர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். நங்கையோ மகனை வாரியெடுத்து அனைத்து உச்சியில் முத்தமிட்டாள். தொண்டரோ குழந்தையை வாங்கி கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தார். அங்கு பைரவரைக் காணோம். பாத்திரத்திலும் உணவு இல்லை. வீடு முழுவதும் ஒரே வெளிச்சமாக இருந்தது.
வீடுபேறு
கைலாயத்திலே ஆனந்தக் கூத்தாடும் மாதொருபாகன் மலைமகளுடன் அவர்களுக்குக் காட்சி தந்தார். தேவர்களும் முனிவர்களும் பூதகணங்களும் விஞ்சையர்களும் சூழவந்து வேதகாணம் எழுப்பினர். தொண்டரும் நங்கையும் சீராளனும் பணிப்பெண்ணும் சிவநாமத்தை ஓதினர். நிலத்திலும் விழுந்து வணங்கினர். கண்ணீர் சொரிந்தனர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அன்பே சிவம் என்று சொல்லி தன் குழந்தையையே அடியவரின் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து விருந்து செய்த தொண்டருக்கும் நங்கைக்கும் சீராளனுக்கும் பணிப்பெண்ணிற்கும் யாருக்கும் கிடைக்காத வீடுபேற்றை அளித்தார்.
ஊறு இல்லாத தனிப்புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுதூட்ட
பேறுபெற்றார் சேவடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள்
வேறுகழறிற்று அறிவார் தம் பெருமை தொழுது விளம்புவாம்”.
சிறுத்தொண்டருக்கு கழறிற்றறிவார் என்ற பெயர் இருப்பதையும் மேற்கண்ட பாடல் விளக்குகிறது. திருச்செங்கோட்டிலே பிறந்து சைவத்தொண்டு புரிந்த சிறுத்தொண்டரின் சிறப்பை இக்கட்டுரை விளக்கியுள்ளது.
0 Response to " திருச்செங்கோடு அடியார் சிறுத்தொண்டர் - கட்டுரை - முனைவர் இரா.மோகனா"
Post a Comment