கல்வியைத் தேடி - லெ. ஜவகர்நேசன், தமிழில் - கமலாலயன், நூல் அறிமுகம் - மயிலம் இளமுருகு

Trending

Breaking News
Loading...

கல்வியைத் தேடி - லெ. ஜவகர்நேசன், தமிழில் - கமலாலயன், நூல் அறிமுகம் - மயிலம் இளமுருகு

கல்வியைத் தேடி - லெ. ஜவகர்நேசன்,  தமிழில் - கமலாலயன், நூல் அறிமுகம் - மயிலம் இளமுருகு
 

கல்வியைத் தேடி -  தேசியவாதக் கல்வி - எதிர் - சமுதாய உந்துவிசைக் கல்வி.  தேசியக் கல்வி கொள்கை 2020 ஓர் எதிர்வினை என்ற நூலை பேராசிரியர் லெ. ஜவகர்நேசன் என்பவர் தனக்கே உரிய ஆய்வுக் கண்ணோட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் நம் கல்விச் சமூகத்திற்குக் கொடுத்துள்ளார். இது இவரது ஆகச்சிறந்த பங்களிப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. பல்வேறு கோணங்களில் தேசியவாதக் கல்வி என்ற கோட்பாட்டை மிகச்சிறப்பாக தன் எழுத்தின் ஊடாக விளக்கமாக கூறியிருக்கின்றார். இந்தக் கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பதையும் பல்வேறு நாடுகளில் உள்ள முறைகளையும் இந்தியச் சமூகத்தில் எப்படி கொண்டுவரப்பட்டது என்ற முறைமையையும் மிகச் சிறப்பாக ஆய்வின் வழியாக கூறியுள்ளார்.

இந்நூலைத் தமிழில் கமலாலயன் மொழிபெயர்த்துள்ளார். இவர் ஏற்கெனவே பல்வேறு இலக்கிய நூல்களின் வழியாக படைப்பாளராகவும் தன்னுடைய மொழிபெயர்ப்புத்திறனின் வழியாக மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்படுகின்றார்.  இந்நூலின் மூலமாக தன்னுடைய மொழிபெயர்ப்புத்திறனை மேலும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ஒரு மொழிபெயர்ப்பு நூலைப் படிக்கிறோம் என்ற சந்தேகம்  ஏற்படாத வகையில் இவரது மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. மிக விரிவான விளக்கங்களோடு அதன் அர்த்தங்களும் தரப்பட்டுள்ளன. முக்கியமான ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ் கலைச் சொற்களை மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். இத்தகைய ஒரு நூலைக் கல்விச் சமூகத்திற்குக் குறித்த நேரத்தில் எப்போதும் போலவே பாரதி புத்தகாலயம்  பதிப்பித்து தன்னுடைய பணியை மிகச்சிறப்பாக செய்துள்ளது.

இந்நூல் 14 அத்தியாயமாக பிரித்து சொல்லப்பட்டுள்ளது. இந்நூலிற்குப் பதிப்புரை மிகச் சிறப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. முன்னுரையில் ஆசிரியர் இந்த நூல் எழுதுவதற்கானக் காரணத்தையும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ள முக்கிய கருத்துகளையும் தன்னுடைய எழுத்தின் வழியாக எடுத்துக் கூறியுள்ளார். அனைவருக்குமான கல்வியாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் அது தேசிய கல்விக் கொள்கை, தேசியவாதக் கொள்கையாக இருப்பதை கேள்விக்குட்படுத்தி மிகச்சிறப்பான ஒரு ஆய்வு நூலை கொடுத்துள்ள விதத்தை இந்த முன்னுரையில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

மனிதகுல மேம்பாட்டில் மனித அனுபவமும் காரண காரியத் தேடலும் அறிவியல்பூர்வமான வகிபாகம் எடுத்ததிலிருந்து மனித நாகரிகத்தின் பொருண்மைப் பிரச்சனையாக கல்வி என்பதைப் பற்றிய சிந்தனை இருந்து வருகிறது என்று தன்னுடைய முன்னுரையில் இவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கல்விக் கொள்கையானது பின்வருமாறு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தீர்வு காண்பதற்கு ஒருபோதும் இயலாத நிலையிலேயே இருப்பதோடு அதனுடைய தேவைகளை அறிவியல்பூர்வமாக நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் இயலாததாகவே இருக்கும், இந்தக் கொள்கையை தான் அடைய வேண்டும் என்று விரும்புகின்ற தேசியவாத அடையாளத்துக்கே கூட மிக அபாயகரமானதாகவும் அமையக் கூடியது. அதோடுகூட வளமார்ந்த பாதையிலிருந்து தனிச் சிறப்பான முறையில் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியையே நிலைகுலைய  செய்வதாகவும் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒற்றைத்தன்மையைச் சுற்றியே உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுவது கவனிக்கத்தக்கது.

ஒரு கொள்கை என்று போற்றப்படுவது அத்தியாவசியமான மூலக்கூறுகளோ அவற்றைக் கலவையாக்கும் இழைநாரோ இல்லாதது இந்த வரைவு. இது பலவீனமான கல்வி செயல்பாட்டின் விளைவாக ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளால் நாட்டையும் சமூகத்தையும் அழுத்தும். தீவிரமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி மௌனம் சாதிக்கிறது. சமுதாயக் கல்வி முறை என்பது வேறொன்றுமில்லை தனிநபர்கள் மற்றும் வெவ்வேறு சமூக அலகுகள் நடுவே ஒரு சமுதாயம் தன்னுடைய அறிவுச்செல்வம், அனுபவம், பிரச்சனைகள், கடினமான ஆபத்துக்கள் ஆகிவற்றைப் பரஸ்பரம் செய்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் கையகப்படுத்தி கொள்ளும் வழிமுறைகள் பொறியமைவுகள் ஆகியவற்றின் தொகுதிதான் என்று கூறுகின்ற இவரது கருத்து சிந்திக்கத்தக்கது. கல்வி தன்னுடைய இந்த அடிப்படையான பணியைச் செய்வதில் இருந்து தடை செய்வதாக இருக்கிறது. இந்த அறிவுச் செல்வத்தை எவ்வித பாகுபாடும் இன்றி சமுதாயத்தின் எல்லா பிரிவுகளுக்கும் வாழ்க்கையின் எல்லா பிரிவு மக்களுக்கும் இடையே ஒரே சீராக பகிர்ந்து கொள்வதையும் தடை செய்வதாகவே இருக்கிறது.

மேலும் கொள்கை 2019 ம்  மேற்கூறப்பட்ட போலி கல்வியிலேயே புகலிடம் தேடி அடைந்து இருப்பதைக் காணும்போது நான் மிகவும் துயரடைந்து  இருக்கிறேன். அனேகமாக கல்வியின் எல்லா அம்சங்களுக்கும் ஒரு பெரும் தொகுதியான பரிந்துரைகளை இந்தியச் சூழலுக்கு எந்த வகையிலேனும் பொருந்தக் கூடிய எந்த ஒரு பொருத்தப்பாட்டையும் இணைக்காமல் இக்கொள்கை முன்வைத்திருக்கிறது எனும் முக்கியமான கோட்பாட்டை வைத்துக்கொண்டு மிகச் செறிவான நூலைச் சமூகத்திற்குக் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

பதிப்புரையில் வரும் கூற்று மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. இக்கொள்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியே ஆராய்ந்து பதினான்கு அத்தியாயங்களில் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து அலசி இருக்கிறார் பேராசிரியர்  ஜவகர்நேசன் அவர்கள். புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாடு கடந்த காலத்தில் பெற்றிருக்கும் அனைத்து உரிமைகளையும் முன்னேற்றங்களையும் துடைத்தெறிந்து நடுவணரசின் ஒற்றை ஆதிக்கத்தின் கீழ் அழுத்தப் போகும் கொள்கை இது. தமிழ்நாடு மட்டும் அன்று. அனைத்து மாநிலங்களின் நிலையும் அதே தான் என்பதை ஒரு ஆராய்ச்சி பார்வையில் உலக நாடுகள் அனைத்துடனும் அவற்றின் கல்வி முறைகளுடனும் சட்டங்கள், பணிகள், வணிகச்சேவை ஒப்பந்தங்கள் போன்ற பம்மாத்து வேலைகளுடனும் ஒப்பிட்டு நிறுவியிருக்கிறார் பேராசிரியர்.

இந்நூலின் முதல் அத்தியாயம் தேசியவாதக் கல்வியா அல்லது சமுதாய உந்துவிசைக் கல்வியா என்ற தலைப்பில் அமைந்துள்ளது. இதில் இந்திய மையவாத கல்வி, தேசியவாதக் கல்வியும் தேசிய அரசும், பொதுத்தன்மை 1, 2, 3, தேசியவாதக் கல்வியும் ஒற்றை அடையாளமும், தேசியவாதக் கல்வி / எதிர் / சமுதாய உந்துவிசைக் கல்வி, ஜனநாயகம் நாட்டை கட்டியெழுப்புதல் கல்வி, ஜனநாயகம், சமுதாயம், கல்வி, இந்திய வகை மாதிரி, விமர்சன கற்றலியல் - இந்திய சமூகக் கட்டமைப்புக்கான கல்வித்துவம், சமுதாய உந்துவிசை கல்வியும் கற்பித்தலின் பாடப் பொருண்மைகளும், பொருளாதாரமும் தேசிய வளர்ச்சியும், சமுதாய உந்துவிசைக் கல்வியின் வகிபாகம், உள்நாட்டு அறிவு / உலகளாவிய அறிவு, சமுதாய உந்துவிசைக் கல்வியும் பொருளாதாரமும், சமுதாய உந்துவிசைக் கல்வியும் தேசியக் கல்விக் கொள்கை 2019 என்ற பல்வேறு தலைப்புகளின் வழியாக இந்த அத்தியாயத்தின் கருத்துகளை ஆசிரியர் தனக்கே உரிய பாணியில் விரிவாக விளக்கமாக எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வி தோன்றிய சூழலும் கல்வியின் முக்கியத்துவத்தையும் இந்த நூலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேசிய கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையாக இருக்கின்றதா அல்லது தேசியவாதக் கல்விக் கொள்கையாக  இருக்கின்றதா என்ற கருத்தை முன்வைத்து பல்வேறு கருத்துகளை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இது தேசியவாத மையக் கல்வி அரசு விவகாரங்களில் தலையிட மதிப்பவர்கள் சமுதாயத்தின் விவகாரங்களில் தலைமையிடம் ஆகிய இரு தரப்பினரின் விருப்பங்களை மட்டுமே பிரதிபலிக்கும் கல்வி. இவ்வாறு இருக்கின்ற சூழலால் இதை நான் தேசியவாதக் கல்வி என்று அழைப்பேன் என்று இதற்கு எதிராக இப்போது நாட்டுக்கு தேவைப்படுகிறது சமுதாய உந்துவிசைக் கல்விதான் பின்வரும் அத்தியாயங்களில் விவாதிக்கப்படும் என்று கூறிய கருத்தை முன் மொழிந்துள்ளார் ஆசிரியர்.

ஒரு பாசிஸ்ட் தேசிய அரசின் உருவாக்கத்தில் கல்வி எப்படி ஒரு அடிப்படையான முக்கியமான ஒரு வகிபாகத்தைப் பங்களிக்கிறது என்பதை மேற்கண்ட இரண்டு சமகாலத்திய வரலாற்று ஆதாரங்களின் மூலம் ஆழமாகப் பரிசீலனை செய்யும் ஒருவர் தேசிய அரசுக் கொள்கை என்பது எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர். பல்வேறு நாட்டில் நிலவுகின்ற கல்விக் கொள்கையையும் பல நூல்களையும் படித்து ஆராய்ந்து மிகச்சிறந்த முறையில் எழுதியுள்ளார் ஆசிரியர். கல்வி ஆவணமாக இந்நூலை ஆசிரியர் சமுதாயத்துக்குக் கொடுத்துள்ளார்.

 ஒரே நாடு- ஒரே அடையாளம்- ஒரே பண்பாடு- ஒரே மொழி என்ற தனது குறிக்கோளை யாருடைய உணர்வுகளையும் பொருட்படுத்தாமல் தான் அடித்த மூப்பாக பிறர்மீது திணித்து கடைசியில் அதை அடைவதையே இலக்காகக் கொண்டிருக்கிறது என்று கல்விக் கொள்கையை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும் நாட்டுக்கு இப்போது அவசரத் தேவை என்பது விடுதலை செய்விக்கும் கல்வி அமைப்புதான். இளம் கற்கும் மனங்களை மிகமிகப்பரந்த அளவில் சாத்தியமான கற்றல் சட்டத்தின் மூலமாக நமது சொந்த அவதானிப்பின் வழியே பெற்ற அறிவுச்செல்வத்துடன் வெளிவரவும், தொடர்புடைய கடந்தகால, நிகழ்கால விஷயங்கள் தொடர்பாக விமர்சனபூர்வமாக ஆராயவும் விடுதலை செய்யும் கல்வி அமைப்புதான் முக்கியமானது என்பதை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி தன்னுடைய உண்மையான பணியை எவ்வித இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படும்பட்சத்தில் உலகளாவிய தன்மையிலும் உள்நாடு சார்ந்த விதத்திலும் ஆக இரண்டு வகையான இயல்பிலும் கருத்தாக்கங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கவும் மீளுருவாக்கம் செய்ய நிச்சயம் உதவும் என்பது உண்மையே. அந்தவகையில் சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, அறிவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக தங்களைத் தாங்களே சமுதாயங்கள் மாற்றி அமைத்துக் கொள்வதற்கும் கல்வி உதவியாக அமையும். எவ்வாறாயினும் சமுதாயத்தால் உந்தப்படும் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று சமுதாய உந்துவிசைக் கல்விக்கான தேவையை ஆசிரியர் பக்கம் 84 ல் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாயம் இரண்டில் கலைதிட்டம் கற்றலியல் பள்ளிக்கல்வியில் அமைப்புமுறை என்ற தலைப்பில் பல்வேறு தலைப்புகளில் வழியாக ஆசிரியர் பள்ளிகளில் எப்படி கல்விமுறை அமைந்துள்ளது என்பதைக் கூறியுள்ளார்.  இந்தக் கல்விக் கொள்கை எத்தனை மாற்றங்களைக் முன்மொழிகிறது. 5+3+3+4 என்ற முறையையும் அடுத்த கல்வித்திட்டம் தயாரிப்பு நிலை, நடுநிலை, இடைநிலை என்று இப்போதுள்ள சூழ்நிலையை இந்தத் தலைப்பின்வழி நாம் அறிகின்றோம். முன்பருவ குழந்தைப் பராமரிப்பும் கல்வியும்,  மரபார்ந்த இந்தியக் கல்விமுறையும் கற்றல் வாய்ப்புகளை ஜனநாயகமயப்படுத்தலும், பள்ளிக் கல்வி அமைப்பு, மரபார்ந்த பள்ளிகளும் பன்முகப்பட்ட கற்றல் கிளைப்பாதைகளும், தாய்மொழி வழிக்கல்வியும் பன்மொழிகள்வாதமும், இந்தியமய கலைத்திட்டம், இந்தியமயவாத தேசியப் பாடப்புத்தகங்கள், கற்றல் மதிப்பீடுகள், கல்லூரி பல்கலைகழக நுழைவுத் தேர்வு, பள்ளிகளில் தொழிற்கல்வி, தொழிற்கல்வி வாரிசு அடிப்படையிலான கல்வி,  இந்தியாவில் ஒரு இணையான பள்ளிக்கல்வி - இரட்டைத் தொழிற்பயிற்சி பள்ளிக் கல்வி எனப் பல்வேறு தலைப்புகளின் வழியாக ஆசிரியர் தன்னுடைய கருத்தை முன் மொழிந்துள்ளார்.

பன்மொழிக் கொள்கை குழந்தைகளின் மேம்பாட்டில் ஒரு வரவேற்கத்தக்க சிந்தனையாக இருக்கும் அதேவேளையில் வெவ்வேறுபட்ட மொழிகளில் கற்றல் தேர்வைப் பொருத்தவரை அவர்களுடைய விருப்பத்துக்கே விடப்பட வேண்டும். அது திணிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. குழந்தையின் பேச்சுமொழியில் இருந்துதான் எழுத்தறிவு தொடங்குவது என்ற காரணத்தினால் முன்பருவ குழந்தைமைக் கல்வியில் பன்மொழிக் கொள்கை வலுக்கட்டாயமாக திணிக்கப்படும்போது கற்போருக்கு அது ஒரு சுமையாக மாறி விடுகிறது. வீட்டு மொழிக்கும் அறிவின் மூலவளங்கள் நிரம்பிய அயல் மொழிகளுக்கும் இடையே நிலவுகின்ற இடைவெளியை இட்டு நிரப்புவதற்கான ஒரு மூலவளமாக பன்மொழிகள் வாதம் பயன்படுத்த வேண்டியது அவசியம். எவ்வாறாயினும் பள்ளிக்கல்வியின் உயர்நிலை வகுப்புகள் முழுமையும் தாய்மொழியிலேயே அல்லது ஏனைய தேசிய மொழிகளிலேயே படித்துத் தேர வேண்டுமென விரும்புகிறவர்கள் இதுகுறித்து எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டும் எனக் கற்பிக்க வேண்டியது இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடத்திட்டம், இந்திய மணம் கமழ, அதேசமயம் மண்டல / வட்டார / உள்ளூர் மனமும் பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்திருக்க வேண்டியதன் தேவை பற்றிக் கொள்கை ஆவணம் நெடுக எல்லா இடங்களிலும் வாதித்து இருக்கிறது. ஆனால் இப்போதிருக்கும் நிலையில் பாடத்திட்ட உருவாக்க பணிப் பொறுப்பு மாநிலங்களுக்கு கைமாற்றி தரப்படாமல் மேற்கண்ட பணியைச் செயற்திறன்மிக்க விதத்தில் எப்படி நிறைவேற்ற முடியும். மரபார்ந்த விதத்திலும் பண்பாட்டு ரீதியாகவும் பண்பட்ட சமூகங்களின் மீது தேசியவாதக் கல்வி என்று அழைக்கப்படுவதை வலியத் திணிப்பதற்கான மற்றொரு வழியே இது என்று தனக்குத் தெரிந்த ஒரு புரிதலை ஆசிரியர் உள்வாங்கி நூலில் பதிவு செய்துள்ளார்.

ஒரு பொது நுழைவுத்தேர்வு என்பது மிக அதிகபட்சம் பன்முகப்பட்டதாக உள்ள கல்வியியல் சுற்றுச்சூழலில் அப்படி ஒன்றும் மோசமான யோசனை அல்ல. காரணம், கல்விமுறை அமைப்புகளும், பள்ளி மாணவர்களின் நுழைவுத் தேர்வுகளும், வெளியேற்ற வெளிப்பாடுகளும் நாட்டின் வெவ்வேறுபட்ட பகுதிகளில் வெவ்வேறு விதமாக தற்போதைய நடப்பு நிலை சித்திரத்தை போன்றே இருப்பதுதான். தேசிய அளவில் தரநிர்ணயப்படுத்தப்பட்ட பொதுப்பாடத்திட்டம், கல்விமுறை அமைப்பு, மதிப்பீட்டுமுறை, அமைப்பு ஆகியவற்றை கூறுகிற கொள்கை ஏன்? பொது நுழைவுத்தேர்வை திணிக்க வேண்டும்? என்ற மிகச் சிறந்த ஒரு கேள்வியை இந்நூல் பதிவு செய்கிறது.

பள்ளிக்கல்வி, தொழிற்கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளில் வழியாக இந்த அத்தியாயத்தில் நாம் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றது. இரட்டைத் தொழிற்பயிற்சி பள்ளிக்கல்வி முறை என்பது இன்றைய உலகில் கிடைக்கக் கூடிய எல்லா தொழிற்பயிற்சி கல்வி முறைகளிலும் சிறப்பானதாகும். வாரிசு அடிப்படையில் அமைந்த தொழில்கல்வி என்ற விருப்பத் தேர்வுகளை முன் வைக்கக் கூடாது என்பதே அந்த நிபந்தனை என நிறைவு செய்யலாம் என அத்தியாயம்-2 நிறைவு செய்கின்றது.

மூன்றாவது அத்தியாயத்தில் பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் என்ற தலைப்பில் ஆசிரியர் குறித்த பலக் கருத்துகளை எடுத்துச் சொல்லியுள்ளார். ஆசிரியர்கள் பணி நியமனம், ஆசிரியர்களாக வருவதற்குரிய கல்வித்தகுதிகள், அவருடைய தொழில் முன்னேற்ற காலச்சுழற்சி உள்பட ஆசிரியர் பணிகள் தொடர்பான விவகாரங்களில் சற்று ஏறக்குறைய பின்லாந்து வகை மாதிரியையே கொள்கை- 2019 பிரதிபலித்து இருக்கிறது. பின்லாந்து வகை மாதிரி மிகவும் நுண் அலகில் செம்மைப்படுத்தப்பட்ட நல்லதொரு முன்மாதிரியும் ஆகும். எனினும் இந்தியா போன்ற வேறு ஒரு மக்கள் சமூகம் குறித்து அதுவும் சம அளவுக்கு அறியாமையுடன்தான் இருக்கிறது. பின்லாந்து ஆசிரியர்கள் இந்தியாவைப் போல ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. இங்கு ஆசிரியர் தகுதித் தேர்வு, மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி கல்லூரி படிப்பை முடித்த பிறகு நடத்தப்படுகிறது. பின்லாந்தில் மெட்ரிகுலேஷன் தேர்விலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்விலும் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆசிரியர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன் பணியில் நியமனம் செய்கின்றனர். ஆக இந்தியாவில் நடைமுறையில் உள்ள முரண்பாட்டை ஆசிரியர் முன்வைக்கின்றார். 

2019 கல்விக்கொள்கையை மிக விரிவாக பலமுறை படித்து, தன்னுடைய சீரிய சிந்தனைகளைக் கூறி விவாதத்திற்கு உட்படுத்தி உள்ளதை இதனைப்  படிக்கின்றபோது நாம் அறிய முடிகின்றது. நடைமுறைப்படுத்துவதில் கல்விமுறையினுள் விரும்பத்தகாத அடிப்படைவாதி அல்லது மேட்டுக்குடி அறிவாளிகளின் ஊடுருவல்களுக்கே இது வழிவகுக்கக் கூடியதாக அமையும். கல்வியின் இந்த அம்சத்தை கையாள்வதற்குக் கல்வித் தகுதி பெற்ற நிபுணர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று கொள்கை வரம்பு கட்ட வேண்டியது கட்டாயமாகும். அதற்குக் கல்வித் தகுதி பெற்ற நிபுணர்கள் யார் என்று வரையறுத்து பதிவு செய்ய வேண்டும் என்பது கவனத்திற்குரியது.

நான்காவது அத்தியாயத்தில் சமச்சீரான உள்ளிணைத்துக் கொள்ளும் கல்வி என்ற தலைப்பில் கல்விசார் சமத்துவம், மாணவர்களின் தரவுத்தளங்களுடைய பராமரிப்பு எனப் பல்வேறு கருத்தாக்கங்களை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. பள்ளி ஆளுகையும் - தலைமைத்துவமும் என்ற ஐந்தாவது அத்தியாயத்தில் பள்ளி வளாகங்களின் மூலம் ஆளுகை, என்பதில் பள்ளி வளாகம் என அழைக்கப்படும் ஓர் அமைப்பு ரீதியான, நிர்வாகம் சார்ந்த அலகு ஒன்றை மிகுந்த ஆர்வவெறியுடன் கொள்கை (அத்தியாயம் 7) முன்மொழிந்துள்ளது  எனவும் அதற்கான விளக்கமாக பலத் தரவுகளையும் இப்பகுதியில் நாம் காண முடிகின்றது. பள்ளிகள் சிறியவையாதல் பிரச்சனையும் அவை ஏன் சிறியவை ஆகிகின்றன என்பதுவும் தீர்வு எனப் பல்வேறு கருத்துகளை இப்பகுதியில் நாம் அறிகின்றோம்.

அத்தியாயம் ஆறில் பள்ளிக் கல்வியின் ஒழுங்காற்று முறைப்படுத்தலும் சான்றளித்தலும் என்ற தலைப்பில் கலைத்திட்ட  மேம்பாடு -  ஒரு சர்வதேச ஒப்பீடு, கலைத்திட்ட  மேம்பாடும், ஒழுங்காற்று முறைப் பொறியமைப்பும்,   தேசிய கலைத்திட்ட வாரியங்களும், தேசிய ரீதியில் நிதி அளிக்கப்படும் பள்ளிகளும் என்ற தலைப்பில் மத்திய அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளின் மூலம் பள்ளிகள் மீது செல்வாக்குச் செலுத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் எல்லா காலங்களிலும் முயன்று கொண்டிருக்கிறது என்பது நீண்டகாலமாக அறியப்பட்ட உண்மை என்று கருத்தை அறிகின்றோம்.

இந்தப் பாடத்திட்டத்தில் இருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படுவது ஏன்  என்று ஆசிரியர் கேள்வி கேட்கின்றார். மதிப்பீட்டு வாரியங்கள் பள்ளிகளின் தரச் சான்றளித்தல் நடைமுறை, கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் என பலத் தலைப்புகள் வழியாக ஆசிரியர் தன் கருத்தை முன் மொழிந்துள்ளார்.

அத்தியாயம் ஏழில் உயர்கல்வியை உருமாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்பில் மிகச்சிறந்த விமர்சன கருத்துகளை ஆசிரியர் கூறியுள்ளார். நான்காவது தொழிற்புரட்சியும் தொலைநோக்குப் பார்வையும், விரும்பத்தக்க தொலைநோக்குப் பார்வை, உயர்கல்வி நிலையங்கள் - நடப்பு நிலை போக்கு என்று இத்தகு தலைப்பின் வழியாக ஆசிரியர் பல்வேறு கருத்துகளைக் கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது. பணியாளர்கள் தொகுதியின் நடுவே பொறுப்பு ஏற்றுக் கொள்ளலும், பதில் சொல்ல கடமைப்பட்ட உணர்வும் நிலவுமாறு செய்து தொடர்புடைய மட்டங்களில் அவற்றுக்குரிய நியாயமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் மேலாண்மை கட்டமைப்பு ஒன்று நிர்வாக சீர்திருத்தத்தின்  பிரதான முன்னெடுப்பதாக கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறுகின்ற கருத்து வரவேற்கத்தக்கது.

அத்தியாயம் எட்டில் உயர்கல்வி நிறுவனங்களை மீள்கட்டமைத்தல் என்ற தலைப்பு அமைந்துள்ளது. இந்திய உயர் கல்வி நிலையங்களின் வகைப்படுத்தல், இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற உயர்கல்வி நிறுவன கட்டமைப்பு அதன் வழியாக மிகச் சிறந்த கருத்தை இப்பகுதியில் நாம் அறிகின்றோம். நடப்பு நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லா உயர்கல்வி நிலையங்களுமே அவற்றின் ஆர்வங்கள் தேவைகளின் அடிப்படையில் மேற்கண்ட மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றாக 2030 ஆம் ஆண்டுவாக்கில் ஆகிவிடுவதற்கு ஏற்ற வகையில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதேபோல மிகப்பெரிய பன்முக பாடப்பிரிவுகள் கொண்ட பல்கலைக்கழக பிரிவுக்குரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் பிரிவின் கீழ் பல்கலைக்கழகமாக ஆவதற்கான உள்ளார்ந்த தகுதித் திறன்கள் உடையனவாக அமைந்த கல்லூரிகளை வரவேற்று அங்கீகரிக்க வேண்டும் என்று  தன் கருத்தின் நிலைப்பாட்டை விளக்கமாக  பக்கம் 277 இல் கூறியுள்ளார்.

அத்தியாயம் ஒன்பதில் தாராளமயக் கல்வி குறித்து தாராளமயக் மையக் கல்வி - இந்தியாவுக்கு இயற்பண்பு கருத்தியல் மற்றும் அறிவுசார் கருத்தியல் பொருத்தப்பாடு, தாராளமயக் கல்வியில் கல்விமுறை, பண்பாடு, கலைத்திட்டம், பண்பாடும் கலைத்திட்டமும், கற்பித்தலும் கலைத்திட்டமும், தாராளமய கல்வியும் தொழிற்கல்வியும், தாராளமயக் கல்வியும் ஆராய்ச்சியும் எனப் பல்வேறு தலைப்புகள் அமைந்துள்ளன. சாதிய அமைப்பு மற்றும் நீரிழிவு, புற்றுநோய் அல்லது ஏனைய பிற தொற்றுநோய்கள் போன்ற நலவாழ்வு பிரச்சனைகள் உள்ளிட்ட நீண்ட நெடுங்காலமாக நீடித்து வரும் மனிதகுலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய வெளிப்பாடுகளை உருவாக்கக் கூடிய விதத்தில் ஆராய்ச்சியைச் சாத்தியப்படுத்தும். அற விழுமிய முறையியல் பூர்வமான ஆராய்ச்சி அணுகுமுறைகளை மட்டுமே அனுமதிப்பதின் மூலம் அவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சிப் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட முடியும் என்றும் இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது.  மேலும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை அச்சம் எதுவுமின்றி வெளிப்படுத்தும்போது அதற்காக அவர்களின் மீது விரும்பத்தகாத அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள், தடைகள் அல்லது உடல்ரீதியாக ஏதேனும் சவால்கள் தொடுக்கப்படுமானால் அவற்றிலிருந்து ஆராய்ச்சியாளர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையானச் சட்டங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உரிய சட்ட முன்வரைவுகளைக்  கொண்டு நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்ற கருத்து குறிப்பிடத்தக்கது.

அத்தியாயம் பத்தில் உயர்கல்வியின் சர்வதேச மயமாக்கம், என்ற தலைப்பில்  சர்வதேச மயமாக்கம் பற்றி கொள்கை 2019, உயர்கல்வியின் சர்வதேச மயமாக்கம் - பிரச்சனைகளும் தீர்வுகளும், உலக வர்த்தக அமைப்பு - சேவைத் துறைகளில் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தமும் இந்தியாவின் கல்வி சீர்திருத்தமும் போன்ற தலைப்புகளில் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் சொல்லப்பட்டுள்ளன. தாராளமயமாக்க செயல்முறையின் அதிவிரைவுத் தன்மை உச்சநிலையில் இருப்பதால் இந்தியாவின் கல்வித்துறையே முற்றிலும் தனியார்மயமாக்கப்பட போகும் ஒரு நாள், வெகு தொலைவில் இல்லை. வெளிநாட்டு, உள்நாட்டு தனியார் கல்வி வியாபாரிகள் இரு தரப்பினரும் இந்தியக் கல்வித் துறையின் பாதுகாவலர்களாக வெகு விரைவில் மாறி விடப் போகின்றனர். ஆகவே காட் ஒப்பந்த அமைப்பில் சந்தை அணுகல் வாய்ப்புகளைக் கல்வித்துறையில் தான் வழங்குவதற்காக ஏற்கனவே இந்திய அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதியைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட வேண்டும். அதற்குப் பதிலாக இந்தியாவில் பொதுக்கல்வியை நடைமுறைப்படுத்தி முன்னெடுப்பதற்கான வலிமை நிறைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும் என்று கூறி இருப்பதன் மூலமாக அவரது கல்விச் சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது (பக்கம்- 331.)

அத்தியாயம் பதினொன்றில் உயர்கல்வியின் ஆசிரியர்கள் என்ற தலைப்பில் ஆசிரியர்கள்  பணிகளுக்கு நியமனங்கள் தன்னாட்சி, பணிகளுக்கு ஆளெடுத்தல் - சமுதாய பேராசிரியம் / எதிர் / அறிவியல் அறிஞர் பேராசிரியம்,  தலைமைப் பொறுப்புகளுக்கு ஆள் எடுத்தல், பேராசிரியர்களின் மேலாண்மையும், நிரந்தரப் பணிக்கால பின்தொடர் வேலைவாய்ப்பும், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்குக் கல்வியியல் சார்ந்த கட்டாயமான படிப்புகள், உயர் கல்வி ஆசிரியர் சமூகத்தை நிறுவன மயமாக்குதல் எனப் பல தலைப்புகளின் வழியாக உயர்கல்விக்கானத் தனது கருத்துகளை ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் ஒரு துணைவேந்தர் என்பவர் அடிப்படையில் அறிவார்ந்த கல்விப்புலத் தலைவர். ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு மூல உத்திகளை வகுப்புதற்குத்  தேவையான எல்லா மூல வளங்களையும் நிறுவுவதற்கு, தனது இலட்சியத்தை வென்று எடுக்கும் பயணத்தில் எல்லாரையும் தன்னோடு இணையாகவும், கூட்டாகவும் அழைத்துக்கொண்டு போவதற்கான முழுத்திறன் படைத்தவராக அவர் இருந்தாக வேண்டும் என்ற கருத்தை பக்கம் 346 இல் வழி உணர்ந்து கொள்கிறோம். இதன் வழியாக துணைவேந்தரின் பொறுப்புகளையும் இந்தியாவில் செயல்படும் விதத்தையும் ஆசிரியர் முன்வைத்துள்ளார்.

கல்விசார் கொள்கைகள், சட்டதிட்டங்கள், ஒழுங்காற்று முறை விதிகளை உருவாக்குவது உள்ளிட்ட கல்வியின் எல்லா விவகாரங்களிலும் பங்கேற்பதற்குரிய ஒரு வரையறுக்கப்பட்ட நிலையுடைய சட்டரீதியாக அதிகார வலிமை அளிக்கப்பட்ட ஓர் இந்தியப் பல்கலைக்கழக பேராசிரியர்களின் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான விதியினைக் கொள்கை பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சமர்பிப்பதற்கு நான் விரும்புகிறேன். எந்த அம்சத்திற்கு வலுவூட்டும் வகையில் நாடாளுமன்ற மேலவையில் ஐஏயுபி. அமைப்பிற்கென மாநிலங்களவை (ராஜ்யசபா எம்.பி) ஒரு பிரதிநிதித்துவம் பெறக்கூடிய வகையில் ஒரு சிறப்பு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று தன் கருத்தை பக்கம் 356 இல் ஆசிரியர் கூறியுள்ளார்.

அத்தியாயம் பன்னிரண்டில் தொழிற்கல்வி என்ற தலைப்பில், தொழிற்கல்வி சார்ந்த திட்டங்கள், பேராசிரியர் மேம்பாடும் கற்பித்தல் உன்னதத் திறனும், தொழில்சார் கல்வித் திட்டங்களில் ஆளுகை, ஒழுங்காற்று முறை மற்றும் சான்றளித்தல், மருத்துவக் கல்வியின் ஆளுகையும் ஒழுங்காற்று முறைப்படுத்தலும், தொழிற்கல்விக்கான கல்விக்கட்டணம், தொழிற்கல்வி முன்னோக்கிய பாதை, தொழில்ரீதியான உன்னதத் திறனுக்கு பன்முகத்தன்மையும், உள்ளிணைப்புத் தன்மையும், தொழிற்கல்வியும் இளைஞர் மேம்பாட்டு வளர்ச்சியும், தேவைப்படும் சீர்திருத்தங்கள், இளைஞர் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தொழிற்கல்வி விடுவிக்கும் கல்வி வாழ்வாதாரங்கள் எனப் பல்வேறு தலைப்புகளின் வழியாக கல்விக் கொள்கை குறித்த மிகச் சிறந்த பதிவுகளை ஆசிரியர் கூறியிருக்கின்றார்.

நம்முடைய குழந்தைகள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுபவர்களாகவும் கண்ணியமான வாழ்வாதாரங்களைப் பெற முடிந்தவர்களாகவும் விளங்க வேண்டுமென நாடு உண்மையிலேயே விரும்புகிறது எனில் பின் சரியான  கல்விமுறையில் ஒன்று மட்டுமே ஒரே ஒரு வழியாக அமையும். அதிலும் குறிப்பாக படிநிலை வரிசையில் பிளவுபடுத்தப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் குறிப்பாக விடுதலைச் செய்விக்கக்கூடிய சமுதாய உந்துவிசைக் கல்வி முறை ஒன்று மட்டுமே அந்த ஒற்றை வழியாக இருக்கும் என்று 403 ஆம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாயம் பதின்மூன்றில் உயர்கல்வியில் ஆளுகை, தலைமைப் பண்பு, ஒழுங்காற்று முறை அமைப்பு என்பதில், அறிமுகம், உயர்கல்வி நிலையங்களின் ஆளுகை மற்றும் ஒழுங்காற்று முறை பற்றிய கொள்கை 2019, ஒழுங்காற்று முறை அமைப்பு, தரச்சான்றளித்தல், ஏனைய ஒழுங்காற்று முறைகள், உயர்கல்வி நிலையங்களின் ஆளுகை,  இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப உயர் கல்வி நிலையங்களை ஒழுங்காற்று முறைப்படுத்தல், புதிய தாராளமய சந்தையும் மாணவர் கட்டணமும், சான்றளித்தல், தர வரிசைப்படுத்துதல், ஆராய்ச்சியும் மேம்பட்ட  வளர்ச்சியும் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துகளை இந்நூலில் பக்கம் 468 ல் தந்துள்ளார் ஆசிரியர்.

ஆராய்ச்சி செயல்முறை, நிதி மானிய மேலாண்மை இரண்டையும் நாடு தழுவிய முறையில் நெறிப்படுத்தும் பொருட்டு ஒரு நல்ல சட்டக வரையறையை கொள்கையின் பரிந்துரைகள் கூட்டாக வெளிப்படுத்தியுள்ளன. தர நிர்ணயபடுத்தப்பட்ட சட்ட நடைமுறைகளின் தொகுதியுடன் இவை வந்திருக்கின்றன. நாடு தழுவியமையும் இத்தகைய முன்னெடுப்புகள் முற்றிலும் புதியன அல்ல பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருபவைதான் என்று கருத்தை ஆசிரியர் கூறியுள்ளார்.

ஆராய்ச்சி உன்னதத் திறனும் அதன் வெளிப்பாட்டு அடையும் மேற்கண்ட விதங்களில் வழிமுறையில் மதிப்பீடு செய்யப்படுமானால் அதன் அடிப்படையில் உயர்கல்வி நிலையங்களுக்கு மானியங்களும் நிதி நல்கைகளும் விடுவிக்கப்படுமானால் சமுதாயம், நாடு இரண்டும் எத்தகைய வளர்ச்சி அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதோ அந்த வழியில் நிச்சயமாக அது ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நூலின் கடைசி அத்தியாயமான 14-ஆவது அத்தியாயத்தில் இந்தியாவில் தனியார் கல்வி என்ற தலைப்பில் கூறப்பட்ட கருத்துகள் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் கல்வி என்பது அரசின் கரங்களில் இருந்து படிப்படியாக விடுபட்டு விலகிப்போய் இருக்கிறது. இது படுமோசமான ஒரு சூழ்நிலையைக் குறிப்பதாக உள்ளது. உயர்கல்வி, இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை இது ஒரு தனியார் விவகாரம் ஆகிவிட்டது. வெகுவிரைவில் தொடக்கக் கல்வியும் உயர்நிலைப் பள்ளிக்கல்வியும் மேற்கண்ட சவுகரியமான வழியைப் பின்பற்றும் என்று தொடங்கி இறுதியில் சமுதாயத்தின் சுய கற்றல் / கற்பித்தல் திறனும் கூட பெரும் முன்னேற்றம் அடையும். தொடர் விளைவாக கல்வி இதுவரை போதுமான அளவுக்கு எந்தெந்த துறைகளில்/ பிரச்சனைகளில் எவ்விதத்திலும் பங்களித்து விடவில்லை என்று மரபுவழிப்பட்ட கவலைகள் கருதுகின்றன என  அறியவேண்டும். அவற்றுக்கு மாற்றாக மேற்கூறப்பட்ட சீர்திருத்தங்களின் விளைவாக நாடு உருவாக்கக் கூடிய தாக்கம், நெடுந்தூர நீண்ட காலப் போக்கில் எட்டக் கூடிய விளைவை இந்த வட்டாரத்தில் பின்வரும் துறைகளில் உருவாக்கும். வாழ்வாதாரங்கள், வேலைகளுக்குத் தயார்நிலை, சமூக ஒத்திசைவு, ஒட்டுமொத்த மானுட உள்ளுறையாற்றல் மேம்பாடு, நாகரீகமயமாதல், வேலைவாய்ப்பு, தொழில் முனைப்புகள், பொருளாதார மேம்பாடு, வேறுபாடு போன்ற பிரச்சனைகளில் பாரதூர விளைவுகளை உண்டாக்கும் எனத் தனியார் கல்வி குறித்து ஆகச் சிறந்த கருத்துகளை விவாதத்திற்குட்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

இந்தப் பகுதியில் தனியார் பள்ளிகளில் ஒழுங்காற்று முறை அமைப்பு, தனியார் பள்ளிகளின் கற்றல் அடைவுகள் சார்ந்த வெளிப்பாடுகள், தனியார் பள்ளி ஆளுகை, கட்டணம், நிதியியல் முறைகேடுகள், தனியார் உயர்கல்வி விவகாரங்களின் நிலைமை, தனியார் உயர்கல்வியில் பாடப்பிரிவு பாரபட்சம், தனியார் உயர்கல்வி நிலையங்களில் ஆளுகையும் ஒழுங்காற்று முறையும் என்ற தலைப்புகளின் வழியாக ஆசிரியரின் உள்ளார்ந்த திறனையும் சமூகத்திற்குத் தான் செய்யவேண்டிய பங்களிப்பினையும் எழுதியுள்ளமையை நாம் உணர்ந்து கொள்கிறோம். இவரது சிந்தனைகள் தேசியவாதக் கல்விக்கொள்கை எப்படி அமைந்துள்ளது, அது தேசிய கொள்கையாக அமைந்துள்ளதா என்பது குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை ஆகச்சிறந்த சிந்தனைகளாக நமக்கு தோற்றமளிக்கின்றன. இந்நூல் சமூகத்தில் ஒரு மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது, ஏற்படுத்தும் என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்நூல் எழுதுவதற்கு துணைநின்ற நூல்களின் விவரங்களைப் பக்கம் 541 முதல் 553 வரையும்,  நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சுருக்க விளக்கங்கள் பக்கம் 544 முதல் 559 வரையும் கொடுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறந்த ஒரு நூலை லெ. ஜவகர்நேசன் அவர்கள் இச்சமூகத்திற்குக் கொடுத்துள்ளார். இதனைத் தமிழில் கொடுத்த கமலாலயன் அவர்களின் எழுத்தாற்றல் சிறப்பாக அமைந்துள்ளது. இதைப்போல் சமூகத்திற்குப் பல நூல்களை இவர்கள் வழங்குவார்கள் என்று நாம் அவர்களை வாழ்த்துவோம். இந்நூலைச் சிறப்பாக பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள்.


நூல் - கல்வியைத் தேடி,

ஆசிரியர் - லெ. ஜவகர்நேசன்,

தமிழில் - கமலாலயன்,

பதிப்பகம் - பாரதி புத்தகாலயம்,

ஆகஸ்ட் 2020, ரூ.490, பக்கம் - 560.

0 Response to "கல்வியைத் தேடி - லெ. ஜவகர்நேசன், தமிழில் - கமலாலயன், நூல் அறிமுகம் - மயிலம் இளமுருகு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel