சீனப்பெண்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பேசும் நாவல் - சின்ரன், மொழிபெயர்ப்பு - ஜி.விஜயபத்மா - நூல் அறிமுகம் இரா. மோகனா,


அறிவுப்பசியால்
முயன்று கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு மொழி பிரச்சனை ஒரு தடையாக இருக்கக்
கூடாது எனும் நோக்கத்தினை மொழிபெயர்ப்பு கொண்டுள்ளது. மொழியின் தேவை எந்த அளவிற்கு
முக்கியத்துவம் பெற்றதோ அந்த அளவிற்கு மொழிபெயர்ப்பின் தேவை முக்கியத்துவம் உடையது.
ஒரு மொழிபெயர்ப்பு அறிஞர்களுக்கு மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும் புரிய
கூடியதாய் இருக்க வேண்டும் மூல படைப்பைப் போன்று மொழிபெயர்ப்பு எளிமையாக அமைதல்
வேண்டும். அவ்வகையில் சீனப் பெண்கள் எனும் நூல் சின்ரன் அவர்களால் சீன மொழியில்
எழுதப்பட்டது. இந்நூலில் மூல நூலாசிரியர் 1989 - 1997 வரை சீனாவின் பிரபல
வானொலி தொகுப்பாளர். இவர்தம் நிகழ்ச்சியின் மூலம் பெற்ற அனுபவங்களையும் சந்தித்த
பெண்களின் உண்மை வாக்குமூலங்களையும் மனக்குமுறலையும் ஆதாரத்துடன் தைரியமாக
இந்நூலில் வெளியிட்டுள்ளார். அனைத்து தரப்பு பெண்களையும் நேரிடையாக சந்தித்து
பேட்டி கண்டு உண்மை சம்பவங்களின் தொகுப்பாக இந்நூலை உருவாக்கியுள்ளார்.
இப்புத்தகம் எஸ்தர் என்பவரால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டது.
ஆங்கில நூலை
சிறிதும் பெயர்ப்பு நூல் என்று தெரியாத வகையில் ஜி. விஜயபத்மா தமிழில்
மொழிபெயர்த்த தன்மை பாராட்டுதற்குரியது. இவர் ஆங்கில தொலைக்காட்சி பிபிசியில்
சிறப்பு தேர்தல் செய்தியாளராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு மருத்துவமனையில்
நிர்வாக செயலாளர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆனந்த
விகடன், குமுதம், குங்குமம்
போன்ற வெகுஜன பத்திரிகையில் பகுதிநேர நிருபராக பணியாற்றினார். சிறப்பு குழந்தைகள்
பற்றிய ஆவணப் படங்களை இயக்கி பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
சீனாவின் அரசியல் மாற்றம்
பெண்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறைகள், ஆண்
குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமைகள், ஓரினச்சேர்க்கை,
சீன சமூகத்திலும் கலாச்சாரத்திலும் பாலியலின் பங்கு குறித்தும்
சின்ரன் பதிவு செய்துள்ள உண்மை சம்பவங்களை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
பெண்மை
பெண்ணின் வலிகளை ஓர்
ஆண் கூறுதல் ‘இலைமறை காய் போல’ பெண் கூறுதல்
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ எனக்
கொள்ளலாம். பெண் தன் மனக்குமுறல்களைக் கூறுவதற்கு வழியின்றி தமக்குள்ளேயே அடக்கி
வைத்திருந்த காலத்தில் வானொலி தொகுப்பாளினி சின்ரன் பெண்களின் ஆழ் மனத்
துன்பங்களைத் தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தினார். சீனாவில் பல
நிலைகளிலும் வசிக்கும் பெண்கள் நாம் கற்பனை செய்தும் பார்க்க இயலாத தங்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளை மனம்விட்டு பேசியுள்ளனர். அவர்களிடமிருந்து
பதிவுசெய்யப்பட்ட கருத்துகள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன.
1.கட்டாய திருமணம், 2. பாலியல் வன்புணர்வு, 3.
பண்டமாற்று பொருளாக பெண், 4. அரசியல்
சூறையாட்டம், 5. ஓரினச்சேர்க்கை எனும் தலைப்புகளில் வழி
அணுகலாம.;
கட்டாயத் திருமணம்
அறுபது வயது கிழவன் 12 வயது பெண்ணின் கைகளை இரும்புச் சங்கிலிகளால் கட்டி கட்டாய திருமணம்
செய்து கொள்ள ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறான். பின் மக்கள், கிராம காவல் அதிகாரி வந்து கேட்கவே முதலில் அவளை அனுப்ப மாட்டேன் என்று
திமிராக கூறி பின், அவளைப் பிரிந்து என்னால் இருக்க
இயலாது என்று அழுதான். இந்நிகழ்வில் பார்வையாளரான சீனமக்கள் பாவப்பட்ட பெண்ணிற்காகப் பேசாமல் கிழவன் பாவம்
என அனுதாப படுகிறார்கள். சீன சமூகத்தில் பெண்களைக் குறித்த மதிப்பீடு எவ்வாறு
உள்ளது என்பதை இதன்வழி அறியலாம். ஆசிரியரும் இச்செய்தியைப் பின்வருமாறு இரண்டு
தலைமுறைகளாக சீனத்து மக்கள் தங்களது இயற்கையான பாலியல் உணர்வின் விஷயங்களில் ஒரு
குழப்பத்துடனே வாழ்ந்து வந்திருக்கின்றனர் அதுவும் குறிப்பாக பெண்களுக்குப்
பாலியல் குறித்த விழிப்புணர்வு அறவே மறுக்கப்பட்டது என பதிவு செய்துள்ளார்.
திருமணம்
செய்துகொள்ள இதுபோன்ற வழிகளையும் சீன மக்கள் கையாளுகின்றனா; என பின்வரும் செய்தியைப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். அரசு வளாகத்தின்
தலைமை அதிகாரி தன் முன் கொண்டுவரப்பட்ட பெண்ணை, மேலும் கீழும்
பார்த்துவிட்டு ‘இன்று முதல் நீ என் அந்தரங்க உதவியாளர் இனி நீ நிறைய படிக்க
வேண்டும்’. உன்னை
கட்சிக்காக வேலை செய்ய தயார்செய்து கொள்ளவேண்டும், என்று
கூறிவிட்டு ஒருவரை அழைத்து அந்த பெண்ணிற்கு ஒரு அறையைக் காட்டச் சொன்னார். சொகுசான
அந்த அறையில் மெத்தையில் படுத்தவுடன் நான் உறங்கி விட்டேன். சிறிது நேரம் கழித்து
என் மீது நடத்தப்பட்ட வன்முறையை எதிர்க்கும் பொருட்டு முயற்சித்தேன். அதற்கு அந்த
அதிகாரி பக்கத்தில் இருக்கின்ற உன் தோழர்களின் தூக்கத்தைக் கெடுக்காதே என்று
மிரட்டினான் அவனது முரட்டுத்தனமான உடலுக்கு முன் என் எதிர்ப்பு எடுபடாமல்
இரையாகினேன்.
மறுநாள் கட்சி
மேலிடம் இரவு உன் திருமண விருந்து கலந்து கொள்ளவும். இன்றிலிருந்து இவர்தான் உன்
கணவர் என்றது. புரட்சி பேசும் கட்சியில் பெண்ணின் உணர்வுகளுக்கு முன்னுரிமை
கிடையாது. என்னை புணர்ந்து பார்த்து, பிடித்துவிட்டால் காலம்
முழுக்க அந்த ராணுவத் தலைவர் என்னை அனுபவிக்க உடன்படவேண்டும். தினமும் என்
கணவருடன் விருப்பமில்லாமல் வேசி போல் கடமைக்கு வாழ்ந்தேன். என் கணவருக்கு அவரது
கட்சிதான் எல்லாம். பெண் என்பவள் அவரது காம இச்சையைத் தணிப்பவள் அவ்வளவுதான்.
அந்தப் பெண் கூறிய மனக்குமுறலைத் தன் வானொலியில் ஒளிபரப்ப சின்ரன் முயற்சித்த
பொழுது அங்கிருந்த அதிகாரி அதனை மறுத்து விட்டார். என்னே! ஒரு ஆணாதிக்க சாடல்.
பாலியல் வன்புணர்வு
மனித குணமற்ற
மிருகங்களின் காம இச்சைக்குத் தன் மகள் முதற்கொண்டு சிறப்பு குழந்தைகள்
நிலநடுக்கத்தில் சிக்கிய பெண் என வயது வித்தியாசமின்றி இரையாக்கிய செய்திகளைப்
பதிவு செய்துள்ளார் சின்ரன். தந்தையே, ‘உன் அம்மாவிற்கு
வயதாகிவிட்டது. அவள் உடல் வாடி வதங்கி போய் விட்டது. அதனால் என் ஆசை நாயகி நீதான்’. (பக்கம் 33) தந்தையே மகளை நாசம் செய்த
செய்தி மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்த
அருவருக்கத்தக்க செயலைத் தன் தாயிடம் அந்த பெண் கூறியவுடன் அப்பா சொல்படி கேள்
அவரை மீறி எதுவும் செய்ய முடியாது என்கிற வார்த்தை புண்பட்ட மனதை ரத்தக்களறி ஆக்கிவிட்டது.
இக்கொடுமையை உணர்ந்த அந்த பெண் கூறும் வார்த்தைகள் அம்பை விட கொடுமையாக இருந்தது.
‘என் பெண்மையின் முதல் அனுபவம் என் அப்பாதான்’ (பக்கம் 28) என்று சொல்கிறாள்.
தந்தையைக் கண்டாலே
உடல் கூசி நடுங்கி தன் உடல் நலம் பெறக்கூடாது. மருத்துவமனையிலேயே சிகிச்சை
பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டுக்குப் போக கூடாது என்று எண்ணும் மகளின்
மனவேதனை சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. நிலநடுக்கக் காலத்தில் காப்பாற்ற
வேண்டியவர்கள் இரக்க குணம் சிறிதும் இன்றி 16 வயது பெண்ணைப் பலர்
சேர்ந்து சீரழித்துள்ளனர் அதனால்மனம் உடைந்த அந்தப்பெண் தன் தாய், தந்தையருக்குக் கடிதம் எழுதுகிறாள்.
‘அன்புள்ள அம்மா அப்பாவிற்கு என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் இயல்பாக
வாழ முடியும் என்று தோன்றவில்லை. மீண்டும் மீண்டும் அந்த மனிதர்கள் என் மீது
நிகழ்த்திய வன்முறையும் அந்த சம்பவமுமே நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் அந்த
நினைவுகளைச் சுமந்து வாழ்வது பாலியல் வன்முறையை விடகொடுமையாக உள்ளது. என் உடலை நான் பார்க்கவே எனக்கு
அருவருப்பாக இருக்கிறது. இந்த மனநிலையில் இருந்து எப்படி என்னால் வெளிவர முடியும்
என்று தெரியவில்லை. நீங்கள் இருவரும் அந்தத் துன்பத்திலிருந்து என்னைக் காப்பாற்ற
முடியாது. எனவே நான் போகிறேன்’. என்று இறக்கும் போது ஒரு கடிதம் எழுதிவிட்டு இறந்துவிட்டாள். பெண்ணை
வெறும் உடலாக போதை பொருளாக நோக்கும்போக்கும்
பதிவாகியுள்ளது.
பண்டமாற்று பொருள்பெண்
நவீன சீனாவில்
முற்றிலுமாக ஒதுங்கி நிற்கும் மலையே கத்தும் மலை. இம்மலையில் வசிக்கும் பெண்கள்
முற்றிலும் ஆண்களின் பயன்பாட்டுப்பொருளாகவே மதிக்கப்படுகின்றனர். இவர்கள் நல்ல
இனப்பெருக்க கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றனர். இரண்டு அல்லது மூன்று பெண்
குழந்தைகளைக் கொடுத்துவிட்டு பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு பெண்ணைப் பண்டமாற்று
முறையில் திருமணம் செய்து கொள்ள இங்கு எந்த ஆணும் தயக்கம் காட்டுவது இல்லை.
பக்கத்து கிராமத்திலிருந்து பெண்களைப் பண்டமாற்று முறையில் திருமணம் செய்து
கொள்வதும் இங்கு உள்ள அவர்களின் மனைவிகளை பக்கத்து கிராமத்தில் கேட்டால்
கொடுத்துவிடுவது அவர்கள் மனைவியை இவர்கள் அழைத்து வந்து வாழ்க்கை நடத்துவதும்
இங்கு நடைமுறை வழக்கமாகவே உள்ளது.
பெரும்பாலான பெண்கள்
பக்கத்து கிராமத்திலிருந்து இங்கே வாழ்ந்து பிள்ளை பெறுவதற்காக வந்தவர்கள்தான்.
அதேபோல் பக்கத்து ஊரிலிருந்து வந்து, இவர்களின் பெண்
குழந்தைகளைக் கேட்டால் இல்லை என்று சொல்ல இயலாது. பெண் பிள்ளைகளை வாங்குபவர். கிழவராக
இருந்தாலும் இந்த தாய்களுக்கு மறுப்பு சொல்ல உரிமை கிடையாது. எந்த சுதந்திரமும்
கிடையாது. நாகரிக உலகில் எங்குமே நடக்காத வழக்கமாக இங்கு ஒரு பெண்ணை ஏழு எட்டு
ஆண்கள் கூட பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும்
என்று இவர்கள் கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இவ்வாறு சீனப் பெண்களின் சீர் கெட்ட
நிலையை மிக அழகாக தம் நூலில் பதிவு செய்துள்ளார் சின்ரன்.
அரசியல் சூறையாட்டம்
சிவப்பு
காவலர்களுக்கு வானளாவிய அதிகாரம் இருந்தது. அவர்கள் எந்த வீட்டிலும் நுழையலாம்.
யாரை வேண்டுமானாலும் சிறை பிடிக்கலாம் என்ற சட்டம் இருந்தது. அதன்படி சிலின் என்ற
பெண்ணைச் சிறைபிடித்து விவசாயி ஒருவனிடம் ஒப்படைக்கின்றனர். அவனும் ‘முதலாளித்துவ
நாயே நீ அழிக்கப்பட வேண்டியவள்’ என்று கூறி
அவளைக் காலை முதல் மாலை வரை மிருகத்தனமாக பாலியல் வன்முறை செய்கிறான். அதனால்
அவளுடைய பிறப்புறுப்பு, மார்பகங்கள், வயிறு என எல்லா இடங்களிலும் ரத்தம் உறைந்து போயுள்ளது. அந்தப் பெண் ஓர்
சிறப்பு குழந்தையாகவும் இருந்தாள். மேலும் இச்சம்பவத்தால் அவள் பேசும் சக்தியையும்
இழந்துவிட்டாள். எந்தப் பெண்ணுக்கும் இப்படி ஒரு கொடுமையான வாழ்வு அமையக் கூடாது
என்பதையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
சீனாவின்
சீர்திருத்த புரட்சிக் காலத்தில் யாரெல்லாம் பணக்காரரோ, படித்தவரோ, தொழில்நுட்ப வல்லுநர்களும்
அரசாங்கத்திற்கு எதிரானவர்கள். உளவாளிகளாக முத்திரை குத்தப்பட்டனர். இப்படிப்பட்டவர்களின்
குழந்தைகளே புரட்சிக்காரர்களால் சீரழிக்கப்படுகின்றனர். இந்தியாவில் எவ்வாறு
சாதியை மையமாக வைத்து பெண்களைச் சீரழிக்கின்றனரோ அதற்கு மாறாக சீனாவில் நல்ல
நிலைகளில் உள்ளவர்களின் குழந்தைகள் சீரழிக்கப்படுகின்றனர்.
ஹீவாவின் தந்தை சிறை
பிடிக்கப்பட்ட பின் அவள் தாய், அக்கா இருவரும்
புரட்சிப்படையினரால் கவரப்பட்டு சீரழிக்கப்பட்டனர். தினமும் இந்நிலை தொடர்ந்தது.
பருவமடையாத ஹீவாவையும் புரட்சிக்காரன் அழைத்துச்சென்று, பலர்
முன்னிலையில் அவளை நிறுத்த பூப்போன்ற அக்குழந்தை கசக்கி, நசுக்கி
தூர எறியப்பட்டாள். இவ்வன்புணர்வைப் பற்றி சின்ரனிடம் ஹீவா கூறும்போது, ‘என்னுடைய வயது சரியாக பருவமடையும் வயது. நான் குழந்தை என்பதிலிருந்து
அடுத்த பரிமாணத்திற்குள் செல்லும்
துவக்கம் அது. எனக்கு இயற்கையாக நடக்காமல் 10 பேர் கூடி
என்னைப் பருவமடைய வைத்து என் துன்பத்தை அவர்கள் கொண்டாடினார்கள். அதுதான்
புரட்சிப் படையின் முதல் பணி என்றும் கூறினர்.
இந்த வகுப்பை தான்
என் அம்மாவிற்கும் எடுத்திருக்கிறார்கள் அப்பாவிற்காக அவள் குழந்தைகளைக் கூட
கவனிக்க முடியாமல் இந்த வேட்டை நாய்களுக்குப் பலியாகி இருக்கிறாள். அதன்பின் என்
அக்கா இப்போது நான். என்று கண்களில் நீர் மல்க கூறினாள். அக்காவுக்கு நடந்த
துன்பம் எனக்கும் நடந்ததை அறிந்த உடன் என்
அம்மா தூக்கில் தொங்கினார். ஹீவாவின் மனவுணர்வை மிக அழகாகப்பதிவுசெய்துள்ளார் ஆசிரியர்;.
ஓரினச்சேர்க்கை
சீனாவில் அதிக
அளவில் ஓரினச் சேர்க்கை நடைபெறுகிறது. தன் தந்தையால் தஹோன் ஆண் போல
வளர்க்கப்பட்டாள். தனக்கு 14 வயதாகும் போது சில
காமுகர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது முதல் ஆண்கள் மேல் வெறுப்பு வந்தது.
அப்பா வேலை நிமித்தமாக வெளியூர் சென்றார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன்னுடன்
படிக்கும் பெண்ணைத் தனக்குத் துணையாக வந்து தங்கும்படிக் கூறி ஓரினச்சேர்க்கைக்கு
அவளை உடன் படுத்தினாள். அது முதற்கொண்டு பலருடன்
இவ்வாறு நடந்து கொண்டாள். சின்ரனிடம்
தம் குறையைக் கூறியபின்; அவள் வழங்கிய அறிவுரையால்
மனமாற்றமடைந்தாள் தஹோன் என்பதையும் பதிவு செய்துள்ளார்.
காதல் என்ற போர்வையில் எத்தனையோ பெண்கள் சீரழிந்த
செய்தியும் பணத்தைத் தந்து காதலைக் கைவிட்ட செய்தியும்; காதலனுக்காக 45 வருடங்கள் காத்திருந்து ஒரு
நாள் தன் காதலனை குடும்பத்துடன் பார்த்து மனம் நொந்த பெண்ணின் செய்தியும் இந்நூலில்
இடம்பெற்றுள்ளன.
மூடநம்பிக்கை என்ற
போர்வை கொண்டு பெண்களை மழுங்கடித்த செய்தியையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
சீனாவில் குழந்தை பெறாத பெண்கள் பிறந்த குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்குச்
சென்றால் குழந்தைக்குத் துரதிஷ்டம் பற்றிக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆண்
குழந்தையை பெற்றெடுக்கும் பெண் குற்றமற்றவள் என்ற நம்பிக்கை உள்ளது.
பெண்கள் பருவம் அடைந்தவுடன் கற்றாழை இலை போல்
இருக்கும் இலைகளை வயது முதிர்ந்த பெண்கள் அவர்களுக்குத் தருவார்கள். அந்த இலைகளை
ஒரே அளவாக நறுக்கி அதில் குத்தூசி கொண்டு துளையிடுகின்றனர். அதனை மாதவிலக்கின்
போது பயன்படுத்துகின்றனர். அவள் காலம் முடியும் வரை அந்த பத்து இலைகளை மட்டுமே
அவள் உபயோகிக்கவேண்டும். அவள் இறந்த உடன் அவள் உடலை கொளுத்தும்போது அந்த இலைகளை
நெருப்பில் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்ற செய்தியையும் பதிவு செய்துள்ளார்.
பெண் குழந்தைகள்
உடல் அளவில் வளர்ச்சி அடைந்ததும் மிக எளிதாக வன்புணர்வுக்கு ஆளாவதும், பாலியல் மிருக இச்சைக்கான வலையில் எளிதில் சிக்கிக் கொள்வதுமாக சீனாவின் பெண்கள் வாழ்வே உருக்குலைந்து போனது.
ஹாங்க் சூ என்ற பெண் ஈயின் தொடு உணர்ச்சியில் மகிழ்ந்து போகிறாள். அவள் வாழ்வில்
கிடைத்த சிலாகிக்க கூடிய உணர்வு அது மட்டும் தான். ஹீவாவின் வாழ்வைச் சீன
பண்பாட்டுப் புரட்சி வன்புணர்வு செய்தது. தலைவரின் மனைவியோ நல்ல கணவனுக்கு
வாழ்க்கை படாமல் அரசியல் கட்சியை மறந்து வேதனைப்படுகிறாள். 40 வயதாகியும் சிலின் இன்னும் தான் வளர்த்த பெண் என்பதை உணரவில்லை.
வளரும்போதே அவள் பெண்மை நசுக்கப்பட்டது.
இதில்
தவறிழைத்தவர்கள் சம்பந்தப்பட்ட பெண்களின் நம்பிக்கைக்குரிய ஆசிரியர்கள், அவர்களின் நண்பர்கள், சில சம்பவங்களில்
அவர்களின் சொந்த அப்பா, அண்ணன்கள் இவர்களெல்லாம்
தங்களுக்குள் எழுந்த பாலியல் இச்சையை அடக்க முடியாமல், ஒரு
பெண் உடல் வேண்டும் அது யார் என்றாலும் பரவாயில்லை என்று சுயநலமாக தன் உடல்வெறி
தணிந்தால் போதும் என்ற மனநிலையில் கொடூரமாக பெண்ணை வன்புணர்வு செய்தார்கள். ஒரே
மாதிரியான கொடூர மனநிலை கொண்ட ஆண்களின் வன்புணர்வு கதைகளை மட்டுமே இந்நூல் மிகச்
செம்மையாக எடுத்தியம்பி உள்ளது.
சீன பண்பாட்டுப்
புரட்சியில் பாதிக்கப்பட்ட ஹீவா மற்றும் ஏனைய பெண்களின் வாழ்வில்
கொண்டாட்டத்தையும் இளமையையும் திரும்பக் கொண்டுவர இயலாது. அவர்கள் இறக்கும்
வரையிலும் இருளில் நடந்த பாலியல் வன்கொடுமையின் அடையாளங்களான நினைவுகளைக் கசப்பான
சம்பவங்களைச் சுமந்தே தீரும் கொடுமையை அனுபவித்தே ஆக வேண்டும்.
சீனாவைப் பொறுத்தவரை
நடுத்தர வயது பெண்களுக்கு அனுபவிக்க இளமை என்ற ஒன்று இல்லாமலே போனது. இது
‘சீனாவின் சாபம்’ என்று
ஆசிரியர் பதிவு செய்கிறார். இத்தனை வருடங்களில் தான் சந்தித்த அத்தனைப் பெண்களுள்
கத்தும் மலையின் பெண்கள் மட்டும்தான் கவலையில்லாமல் தங்கள் அன்றாட வாழ்வை மிகவும்
அற்புதமாக கொண்டாடி வாழ்கிறார்கள் என்றும் பதிவுசெய்துள்ளார். அவர்கள் அவர்களுக்கு
இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பாலியல் சுதந்திரமோ தேர்வோ இல்லையே
என்று கவலை கொள்வதில்லை. அதைவிட பல கணவர்கள் ஒன்றாகக் கூடி ஒரே பெண்ணைப் புணர்வதை
அந்த வலியை அவள் தனது பெண்மையின் வெற்றியாக கருதுகிறாள். நாம் தான் குழப்பங்களைச்
சுமந்து தேவையில்லாமல் நம்மைக் குழப்பிக்கொண்டு அமைதியை இழந்து தவிக்கிறோம்
என்பதையும் நூலின் இறுதியில் சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
சீனப்பெண்களைப் பற்றிய சொல்லப்படாத கதைகளை நாம் அறிய இந்நூல் நல்ல கருவியாக
உள்ளதில் எள்ளளவும் ஐயமில்லை.
நூல் – சீனப்பெண்கள்,
ஆசிரியர் – சின்ரன்,
மொழிபெயர்ப்பு – ஜி.விஜயபத்மா,
பதிப்பகம் – எதிர் வெளியீடு, ரூ.350
0 Response to "சீனப்பெண்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பேசும் நாவல் - சின்ரன், மொழிபெயர்ப்பு - ஜி.விஜயபத்மா - நூல் அறிமுகம் இரா. மோகனா,"
Post a Comment