ஊர் என்று ஒன்று அன்று இருந்தது - கவிஞர் - தி. அமிர்த கணேசன் , நூல் அறிமுகம் - மயிலம் இளமுருகு

Trending

Breaking News
Loading...

ஊர் என்று ஒன்று அன்று இருந்தது - கவிஞர் - தி. அமிர்த கணேசன் , நூல் அறிமுகம் - மயிலம் இளமுருகு

 ஊர் என்று ஒன்று அன்று இருந்தது -  கவிஞர் - தி. அமிர்த கணேசன் , நூல் அறிமுகம் -  மயிலம் இளமுருகு

இயற்கையும் மனிதத்தையும் உரக்கப் பேசும் கவிதைகள்

கவிஞரின் கவிதை உள்ளடக்கம் பல்வேறு பொருள்களைப் பேசுவதாக உள்ளன. ஒரு நிலையில் இல்லாமல் அனைத்தையும் உள்ளன்போடு அசைபோட்டு வாசகரின் நெஞ்சில் பதியுமாறும் வாஞ்சையோடும் சொல்வதாகவே எனக்கு இக்கவிதை நூல் தோற்றமளிக்கிறது.

கிராமத்து மண் வாசனையையும் நகரத்தின் அழகையும் அள்ளி தெளித்திருக்கும் இக்கவிதை நூலிற்கு ஈரோடு தமிழன்பன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார். அவரின் மொழியில்

மண்வாசமும்

மண்மொழி வாசமும்

அகனின்

இக்குறுந்தொகுப்பில்

கமழக் கமழப்

பதிவாகியுள்ளன

என்று சிறப்பாகக் கூறி உள்ளதை நாம் பார்க்க முடிகின்றது.

கவிஞர் கவிஜி அவருக்கே உரிய பாணியில் நல்லதொரு ஆய்வுரையை அளித்துள்ளார். கவிதையின் வாசலில் நுழைய இவ்வுரை வழி அமைத்துத் தருகிறது. அவருக்கு பிடித்தமான இடங்களைக் குறிப்பிட்டு கவிதையின் ரசனையைக் கூறியுள்ளார். ஒரு சிறு மனது பறவையாகி வானாகி வெளியாகி மறுகணம் எல்லாம் நூலின் அடுத்த பக்கத்தில் படபடத்த தருணங்களை இங்கே பகிர்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் நிற்க வைத்து கேள்வி கேட்கிறது. நடக்கவிட்டு சிந்தனை செய் என்கின்றது. தவிப்புகளின் மீது கட்டப்பட்ட பாலத்தில் இக்கவிதைகள் எறும்பின் பேரார்வம் மேலோங்க நடக்கின்றன,  எனக் கவிதையின் சிறப்பினை இந்த ஆய்வுரை படிப்பவருக்கு உற்சாகம் தருவதாக இருக்கிறது.

இந்நூல்  எழுதுவதற்கான காரணத்தை ஆசிரியர் என்னுரை என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். கிராமங்கள் அழிந்து பண்புகள் கலைந்து நாகரிகங்களின்சாயல் தன்மையினை எடுத்துரைத்துள்ள  பாங்கினையும் இத்தொகுப்பில் நாம் பார்க்க முடிகின்றது. இக்கவிதை நூலைப் படிக்கின்றபோது ஏதோ கவிஞர் நம் அருகில் இருந்து நம் காதில் கவிதையைச் சொல்வதாகவே தோன்றுகின்றது. அவ்வாறாக  கவிஞர் நம் வாசகர்கருக்கு அருகில் வருவனவாக அமைந்துள்ளன. மேலும் தன் உள்ளக் கிடக்கையினைப் பின்வருமாறு கூறுகின்றார். சில ஆண்டுகளுக்கு முன் என் குடும்பத்தோடு சொந்த ஊர் சென்றிருந்தேன். என் பிஞ்சுவிரல் பிடித்து என் தந்தை சொந்த ஊரின் குளத்தில் நீராட்டியது, வெயிலோடு அவர் விளையாடி உருண்டு புரண்ட வீதிகளில் என்னை உலா அழைத்துச் சென்றபொழுதுகள் களிப்பு நிறைந்தவை. அதுபோல் என் மகனை, மகளை அழைத்துச் சென்றேன். குளமும் காணவில்லை. வீதிகளும் காணாமல் போய் இருந்தன என்கிறார். இது அவரது நெஞ்சத்தை காட்டுவதாக உள்ளது. 

இத்தொகுப்பில் மொத்தம் 24 கவிதைகள் உள்ளன. அதிகபட்சமாக 9 பக்கங்கள் கொண்டதாகவும் குறும்கவிதையாக  ஒருபக்கம் கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன. 63 பக்கங்கள் கொண்ட கவிதைகள் பல்வேறு கதைகளைப் பேசுகின்றன. அவற்றுள் என்னைக் கவர்ந்த கவிதைகள்  குறித்து இக்கட்டுரையில் குறிப்பிட உள்ளேன்.

இரக்கம், மனிதம், அன்பு

மனிதனின் பண்பினை வெளிப்படுவதாக பல கூறுகள் இருந்தாலும் அவரது அன்பு மனிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கவிதைகள் பலவற்றில் இத்தகைய பண்பினைக்  காண முடிகின்றது.  காணாமற் போன ஊர்ப்பொதுமை என்ற கவிதையில் மனிதநேயத்தின் தன்மையை உணர முடிகின்றது. மேலும் பொதுமைப்பண்பினை விளக்குவதாக பக்கம் 19 இல்

பொங்கல் குழம்பு

ஊர்க்குழம்பு என

உருவாகி இருந்தது.

 இவரின் இளமைக் காலத்தை மீட்டுணர்வு செய்கின்ற வகையில் இக்கவிதைகள் அமைந்துள்ளன.

பனங்காய்கள் வண்டிகளாகிக் கிடந்தன.

பூவரச இலைகள் நாதசுரங்களாகி இருந்தன.

கோவணங்களால் சிறைபிடிக்கப்பட்ட பிடிக்குள்

பொன் வண்டுகளும் தட்டான்களும்

புன்னகைத்துக் கிடந்தன

என்ற கவிதையில் தன் இளமைக் காலத்தை அழகாக சொல்லியுள்ளார் கவிஞர்.

 பட்டாப்பட்டி என்னும் கவிதையில் தன் இளமைகால அன்பு, சேட்டைகளையும் சொல்வதாக உள்ளது. கவிதையின் இறுதியில் இக்கவிதையின் ஆன்மா இருப்பதை உணர முடிகின்றது.

பெரிய கட்டம் போட்ட

வண்ணச் சட்டை ஒன்றையே பல நாளும்

அணிந்து வருகின்றான்

கீழ் உள்ளாடையாகப் பட்டாப்பட்டி

 வேப்பமரத்தில் பன்னீர்ப்பூக்கள்,  பூங்காவின் தளிர் இலை,  கடலில் நனையா விரல்கள், அழுக்குகளைத் தின்ற மீன்கள் கவிஞரின் மனம் இறுதியில் இதழியல் மனிதர்களின் ஏளனப்பேச்சினைக் கேள்வி கேட்பதாக  இருக்கின்றது.

 ஏக்கத்தின் துயரத்தின் மனப் பதிவுகளை அழகாக பின்வரும் கவிதை  பதிவு செய்துள்ளது.

 லே சின்னவனே

வந்திட்டியாம்ல

வா வா

வரகு அடை கருப்பட்டித்தூள் சாப்பிடுலே

லே சின்னவனே…  வந்திட்டியாம்ல

இக்கவிதைகள் சமூகநிலை கருத்துகளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மதச்சார்பின்மை

மதங்கள் பாராது, சாதி பாராது, இனம் பாராது, மொழியும் பாராது, மனிதம் மட்டுமே பார்க்கவேண்டும்.  இவற்றைப் பேசுகின்ற கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. அந்தவகையில் சில கவிதைகள் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏசய்யா திருவிழாவிற்கு

ஏகாளி வீட்டு நாற்காலியில்

பாதிரியார்களும் மஸ்தான்களும்

சிவனே என்று அமர்ந்திருந்தனர்

என்றும்

பர்த்தாக்களின் மிச்சங்களோடே என்ற  கவிதையில்

மகிழுந்தை நிமிர்த்திட்ட

நசுங்கி ரத்தம் வழிந்த தங்கள்

கைகளோடு துவா நமாஸ் செய்த

அப்துலாவும் முகம்மது இஸாரும்

 என்ற கவிதையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் உள்ள ஒற்றுமையை நமக்கு பறைசாற்றுகின்றது.

மாறிப்போன பாத்திபா பீபியும்

மெகருன்னிசாவும்

அக்ரகாரத்து அம்மாமிகளின்

அன்றைய அம்பாள்களாகியிருந்தனர்

அதே பர்த்தாக்களின் மிச்சங்களோடே

 என்ற கவிதை மதச்சார்பின்மையை  நமக்குத் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றது

நம்பிக்கை

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற கவிதை வரிகள் நம்பிக்கையைப் பேசுவதாக இருக்கின்றது. இதைப்போன்றே இக்கவிஞரின் கவிதைகள் நம்பிக்கையை  பல இடத்தில் பேசுகின்றது. இதோ வருது மே 21 என்ற கவிதையில்

எங்கும் தமிழே எவரும் தமிழரே

 சிங்கங்கள் சீறிவரும்

 நாளும் வந்ததென்று

 குங்கும நிறக்குருதியால்

 சபதமும் எடுப்போம்

 என்றும் வெல்லும் வெல்லும் என்று கவிதையிலே தன்னுடைய முயற்சியை வெளிப்படுத்தி அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்பதை இக்கவிதைகள் பேசுகின்றன. வழாமலேயே உலகம் மாயை என்றும் கூறாதே என்றும் புரட்சி என்பது வெற்றி பெற வேண்டும் என்றும் கூறுகின்றார். கவிஞர் புரட்சிக் கருத்துக்களை பல்வேறு பகுதிகளில் பாடியுள்ளதை நாம் பார்க்க முடிகின்றது. அரசியலை பேசுவதாகவும் இக்கவிதைகள் இருக்கின்றன. கைமாறு வேண்டாம் என்றும் மக்களுக்கான அரசியல் வேண்டும் என்றும் தம்பியே நீ தலைமை ஏற்க வா என்றும் நம்பிக்கை தருவதாக இக்கவிதைகள் நமக்கு எடுத்தியம்புகிறது.

 இயல்பைப் பாடும் முறை

இவருடைய  கவிதைகள் நடப்புச்சூழலை மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டுகின்றது.  கவிஞருக்குச் சொற்கள் வசியமாகி உள்ளதை கவிதையில் நாம் பார்க்கின்றோம். சென்னை வெள்ளத்தின் சூழலை கவிஞர் பாடியுள்ளார். இது கவனிக்கத்தக்கது.

வரவேண்டும் நீ என

ஒரு வரம் வேண்டினோம் அன்று

இனி வந்தால் அழிக்காத

வரம் வேண்டுகிறோம் இன்று.

தாய் நீ தான் தட்டிக்கேள்

தவறுகளை

பேய் என உறுமாறி முட்டி அழிக்காதே

 உயிர்களை

 என்று நடப்புகளைச் சொற்களின் வழி நமக்கு வெளிப்படுத்துகின்றார்.

தன்னுணர்வு கவிதைகள்

பொதுவாக கவிஞர்கள் தன்னை பாடுதல் என்பது சங்ககாலம் தொட்டு இக்காலம் வரை நடைபெற்று வருகின்றது. இத்தகைய முறையில் அமைந்த கவிதைகளை நாம் இந்த நூலிலும் பார்க்க முடிகின்றது.   பக்கம் 33 இல்

புதிய தண்ணீர் இல்லை

பழைய தண்ணீர் இல்லை

தாகமோ மாபெரும் தொல்லை

 மனைவி ஊரில் இல்லை

வியர்வை வெறுப்பு எனக்கு

பழையத் துணி பந்துகளில்

வீசும் மணத்தோடு என் தேகம்

 மனைவி ஊரில் இல்லை

எனத் தன் மனைவி இல்லாத நிலையில் தான் படும் அவஸ்தைகளையும் அன்பையும் கவிஞர் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இன்னும் எப்பயடி என்னை சிநேகிக்கிறாய் என்று தன் அன்பின் மொத்த மெய்ப்பாட்டியலைச் சொல்லியவிதம் அருமை. திருமண நாள் வாழ்த்து எவ்வளவு முக்கியம் என்பதைக் இப்பகுதியிலுள்ள கவிதைகள் பறைசாற்றுகின்றது.

இன்னும் என்ன வேண்டும்

 உன் மடியில்

என் உயிரும்

என் மடியில்

 உன் உயிரும்

 ஒரு நொடியில் மறையும் மாயமும்

தவிர

என்னவளே

 இன்று அந்த நாள்

 வாழ்த்துகள்

என்று திருமணநாள் வாழ்த்தை மிகச்சிறப்பாக கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார்.

தப்புத்தாளங்கள் என்ற கவிதையில் ஒரு நிகழ்வை கவிதையாக்கிய முயற்சி பாராட்டத்தக்கது.

நான் சொன்னேன்

அன்றியும்

 உயிரிடம்

 என் கவிதை முடியும் வரை

 காத்திரு உயிரே

 இருக்கட்டும் இவை என்னுள்ளே

 என்பதாகத் தன்னைப் பாடுவதாக கவிஞர் பலக்கவிதைகளை எழுதியுள்ளார். சாதி என்ற கதவுகள் மூட வேண்டும் என்றும் அதன் நீட்சி எப்படி விரிகின்றது என்பது இக்கவிதையில் நன்கு  வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 சாதி 

என்றொரு மூட வேண்டிய கதவு

சமவாழ்வெனும்

பூட்டுக்கான சாவி

 என்று கவிதையானது நீண்டு செல்கின்றது.

 நகரமயமாதல்

சமூகத்தில் ஏற்படும் நல்லது கெட்டது என்பதைக் கவிஞர்கள் ஊடகத்தின் வழியாக பதிவு செய்துவருகின்றனர். இதனையும் இக்கவிதைத் தொகுப்பில் நாம் பார்க்க முடிகின்றது. நகரமயமாதலின் காரணமாக தீமை நன்மை என்று பற்றி விளக்கமாக இவர் கவிதைகள் பேசுகின்ற. இது நவீன முகவரியைத் தருவதாக உள்ளது. இயற்கை அதனதன் போக்கில்  இருந்தது. நாம்தான் செயற்கைக்கு மாறி சமநிலையைக் கெடுத்துவிட்டோம்  என்பது உண்மை. இக்கருத்தை இந்நூலில் உள்ள கவிதைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.

எங்களின் நீர்ப்பரப்பைத்

தேடி வந்தோம்

வேறென்ன செய்தோம்

தடைகளை எங்கள் வழியில்

உருவாக்கியது யார்.

என்று சென்னை வெள்ள இறப்புச்செய்தியைக்  கவிஞர் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இயற்கையிலிருந்து மாறி செயற்கைக்கு மாறினால் எந்தவிதமான விளைவு ஏற்படும் என்பதை இக்கவிதை நமக்கு எடுத்தியம்புகின்றது.

முற்போக்கு

 காரண காரியம் என்று எதையும் ஏற்றுக் கொள்ளாமல் விஞ்ஞானபூர்வமாக எதனையும் அணுகுவது நல்லது. அந்தவகையில் கவிஞருடைய முற்போக்குக் கருத்தினை கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பக்கம் 69 வேருக்குத் தீனி என்ற கவிதையில் இத்தகு நிலையினைக் காணமுடிகின்றது. இக்கவிதை நேர்காணல் முறையில் வினா விடையாக அமைந்துள்ளது. வினாக்கள்

அடிமை அடையாளங்களென

 ஆர்ப்பரிப்போருக்கு நானா?

அரற்றியது மொட்டு

 இனங்காக்க இன்னுயிர்  இழந்தோரின்

 இடுகாட்டுப் பயணத்திற்கு

என மொட்டு விடை அளிப்பதாக  கவிதையின் பாடுபொருள் அமைந்துள்ளது.

 வெகுசன கவிதை

 எளிய மக்களுக்கும் புரியும்படியான கவிதைகளை இத்தொகுப்பில் நாம் பார்க்க முடிகின்றது.  பக்கம் 26 இல் பட்டாபட்டி என்ற கவிதை இதற்குச் சான்றாக உள்ளது.

மே 21

தமிழனாக இருந்தவரின் பிறந்தநாள் என்று காரியப் படகுகளில் என்ற கவிதையில் நாம் பார்க்க முடிகின்றது. இரவு, இழப்பு, சோகம் எனப் பல உணர்வுகளை இதனுள் காணமுடிகின்றது.

ஆதித்தமிழன் இனம்

 நாதியற்று நசிந்து போக

மீதியற்ற மரணம் அளித்த

 போதிமரம் போதனையாளர்களைத்

 தொலைந்த ஒரு இனத்தைத்

 தேடி வருகின்றனர்

 எனக் கவிதை முடிவடைகின்றது.

கவிதை அழகுநயம்

கவிஞர்கள்  தம் கவிதைகள் பல்வேறு அழகுகளை வைத்துப்பாடுவர். அவ்வகையில் இந்நூலில் பல்வேறு அழகுநயம் பொருந்தி வந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. கவிதைகளில் சொற்கள் அருமையாக இடம்பெற்றுள்ளன.

அடக்குமுறை ஆயுதமெல்லாம்

ஆணவ ஆட்சியாளர்களின்

நரம்பு நாண்களால்தான்

என வருவதை நாம் பார்க்க முடிகின்றது. 

பனிமழைப் போர்வையிலும்

 சூட்டின் சூத்திரத்திலும்

பசிப் பல்லவியுடன்

 உரத்த குரலில்

 ஒத்த சிந்தனையோடும்

 என்றும்

 பழைய நினைவுகளோடு

 எதையோ நுகர்ந்தவாறு

 அமர ஒரு பூ இன்றி

 ஒரு பட்டாம்பூச்சி

 என்று இக்கவிதையில் படிமம் என்ற இலக்கிய உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளதைப்  நாம் பார்க்க முடிகின்றது.

 வாழ்க்கையில் அரசியலற்ற

 மனிதர்களும்

 மனிதமும்  மாண்பும் நிரம்பிய

அரசியலும் அவ்வூரில் இருந்தது

 என்று காணாமல் போன ஊர்ப்பொதுமையை அழகாக படம்பிடித்து காட்டி உள்ளமை, கவிஞரின் புலமைக்குச் சான்று.

 வரலாறாய் போய் வாருங்கள் என்ற மக்கா என்ற கவிதை ஒற்றுமை, பலம், அங்கதம், ஏமாற்றம், வெற்றி, இயலாமை எனப் பலவற்றை பேசுகின்றது.

 ஏமாந்துபோய் நாங்கள்

 விரக்தி வீதிகளில்

 விழுந்து கிடப்போம்

மீண்டும் வந்து

 நீங்கள் எழுப்பிப் பலம் பாய்ச்ச்சிப்

போய் வாருங்கள் என்ர மக்கா

 என்ற கவிதையின்  பொருளின் தன்மையை நாம் உணர முடிகின்றது.

                        இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் மனிதத்தை, இயற்கை, முற்போக்குச் சார்ந்த கருத்தியலை, ஒற்றுமையை, உலக சமுதாயத்தை, அன்பை, நேசத்தை என்று பலவற்றை பேசுவதாக இருக்கின்றன. மனிதம் பேசும் இக்கவிதைகளை அனைவரும் படித்துச் சுவைக்கலாம். கவிஞர் மேலும் பலக் கவிதை நூல்கள் பலவற்றை எழுதி தமிழுக்கு அழகு சேர்ப்பார்  என்று நம்புவோம். சிறப்பாக எழுதிய கவிஞர் தி. அமிர்தகனேசன் அவர்களுக்கும் நன்முறையில் வெளியிட்ட ஒரு துளிக் கவிதை பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.


நூல் -  ஊர் என்று ஒன்று அன்று இருந்தது

கவிஞர் - தி. அமிர்த கணேசன்

பதிப்பகம் -  ஒரு துளிக் கவிதை

மார்ச் - 2020, பக்கம் - 80, ரூ. 100

0 Response to " ஊர் என்று ஒன்று அன்று இருந்தது - கவிஞர் - தி. அமிர்த கணேசன் , நூல் அறிமுகம் - மயிலம் இளமுருகு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel