உலகை வசப்படுத்திய பரிணாமமும் சார்லஸ் டார்வினும் - ஆசிரியர் – என்.மாதவன்,- நூல் அறிமுகம் - முனைவர் இரா.மோகனா

Trending

Breaking News
Loading...

உலகை வசப்படுத்திய பரிணாமமும் சார்லஸ் டார்வினும் - ஆசிரியர் – என்.மாதவன்,- நூல் அறிமுகம் - முனைவர் இரா.மோகனா

உலகை வசப்படுத்திய பரிணாமமும் சார்லஸ் டார்வினும் - ஆசிரியர் – என்.மாதவன்,- நூல் அறிமுகம் -  முனைவர் இரா.மோகனா


அறிவியல் அறிஞர்  சார்லஸ் டார்வின் வாழ்க்கையில் எதிர்கொண்ட தோல்வி,வெற்றிகளை எடுத்துச் சொல்லி இந்நூலைச் செம்மையாக படைத்துள்ளார் என்.மாதவன். பரிணாமக் கொள்கையை பலபக்கங்களில் சொல்லிய டார்வினின் கருத்துகளை ரத்தினச் சுருக்கமாக 64 பக்கங்களில் எடுத்துச் சொல்லியுள்ளார். காலவோட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரும் விரும்பி படிக்கும் வகையில் இந்நூலைத் தந்துள்ளமை பாராட்டுதற்குரியது.

ராபர்ட் டார்வின் சூசன்னாவின் மகனாகப் பிறந்த சார்லஸ் டார்வின் படிப்பை விட சேகரிப்புத் துறையிலே சிறுவயதில் இருந்தே நாட்டம் கொண்டிருந்தமை, பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்த அவர் கூறிய பொய்கள் போன்றவை இந்நூலில் கூறப்பட்டுள்ளன. தந்தையின் பாசமான அறிவுரை டார்வினின் முயற்சிக்கு முதல் வித்தாக அமைந்துள்ளது.

கல்வி குறித்து நோக்கும்போது அந்நாட்களில் பல மொழிகள் கற்றுக் கொள்வதே சிறந்த கல்வி என்ற எண்ணம் மேலோங்கி இருந்த நிலையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். கணிதம்,அறிவியலில் அவருக்கு இருந்த நாட்டம்,அவரைக் கவர்ந்த புத்தகம் ,நண்பர்கள், அவருக்கு வைத்த புனைபெயர் என தம்மால் இயன்றவரை கருத்துகள் சிதைவுபடாமால் சிறப்பாக சொல்லியுள்ளார்.

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் தந்தையின் தூண்டுதலால் மருத்துவத் துறையில் சேர்ந்த டார்வினினுக்கு விலங்கியல் , வேதியியல் துறையில் மட்டுமே ஈர்ப்பு இருந்தது. இயற்கை விஞ்ஞானத்தில் உள்ள விசாலமான அறிவு பயனுள்ள முறையில் அமைந்த நண்பர்களுடனான தொடர்பு ,ஆய்வுக் கண்ணோட்டத்தில் அவர்களுடன் பேசிக் கொண்டே ஒருநாளில் முப்பது கிலோமீட்டர் நடந்த செய்திகள் போன்றவைகளும் பதிவாகியுள்ளன.

நாட்கள் செல்ல செல்ல மகன் மருத்துவராவான் என்ற நம்பிக்கை குறைய டார்வினை கேம்பிரிட்ஜ் பல்கலையில் மத குருவிற்கான கல்வி கற்க தந்தை அனுப்பிய செய்தியும் தம் இருபத்திரெண்டாம் வயதில் இவர் இக்கல்வியை முடித்த செய்தியும் பதிவாகியுள்ளது.

டார்வினின் வாழ்க்கையில் ஹென்ஸ்லோ எவ்வாறு திருப்புமுனையாக இருந்தார் ,டார்வினின் கடற்பயணம் ,அக்காலகட்டத்தில் கடற்பயணம் மேற்கொள்வது வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் இரு ஆண்டுகளில் திரும்பி விடலாம் என்ற டார்வினின் எண்ணம் முறியடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் பயணம் நீட்டித்தமை போன்ற செய்திகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

இப்பயணத்தின் இடைஇடையே மிருகங்களின் அனைத்து விதமான மாதிரிகளை சேகரித்தமை ,அறிவுபூர்வமான அறிவியல் ஆய்வுகள் செட்விக் ,லையல் ,ஹீக்கர் போன்றோரது பாராட்டுகளால் உளம் மகிழ்ந்தமை , உயிர்களின் படைப்பு குறித்த பலதரப்பட்ட கருத்து முரண்பாடுகள் ,பயணத்தின் இறுதியில் படகோனியா பாலைவனம் ,டோராடெல்பியுகோ ,புனித ஹெலனா தீவு, கேலா போகஸ் தீவு போன்றவற்றில் இருந்த தாவர விலங்குகள் அவருக்கு தந்த படிப்பினைகள் கொஞ்சம்நஞ்சமல்ல என்று டார்வின் தன் பயணக்கட்டுரையில் கூறியுள்ளதை ஆசிரியர் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.

டார்வினின் பல்வேறு கண்டுபிடிப்பிற்கு உதவிய கேலாபோகஸ் தீவு பற்றியும் அத்தீவு மக்கள் வாழ்வதற்குரிய இடமாக இருந்ததா? அங்கிருந்த பாறைகள் தோற்றம் பற்றியும் தேவையான கருத்துகளைக் கூறியுள்ளார். மேலும் வித்தியாசமான பல்லிகள் இருந்த செய்தியும் புறக்காரணிகள் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் டார்வின் ஆராய்ந்த செய்திகளை ஆசிரியர் சிறப்பாக கூறியுள்ளார்.

அந்த நாட்களில் ஆராய்ச்சிக்குரிய செலவுகளை அரசர்களும், பிரபுக்களும் தந்தார்கள். கடற்பயணம் சென்று புதிய நாடுகளை கண்டுபிடிப்பவருக்கு ஹென்றி என்ற அரசர் உதவியுள்ளார். சார்லஸ் பாப்பேஜ் போன்ற அறிஞர்கள்,விஞ்ஞானிகள் நிறைந்த சமூகத்தில் டார்வினின் கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்திய விதம் , பிறர் கருத்திற்கு டார்வின் மதிப்பளிக்கும் தன்மை , இயற்கை தடைகள் பற்றிய மால்தாஸ்ஸின் கருத்துக்கணிப்பு , உயிரினங்களின் தோற்றம் ,மறைவு குறித்த காண்டோலின் கருத்து போன்ற செய்திகளை கூறியுள்ள மாதவனின் கருத்துக்கூர்மை பாராட்டுதற்குரியது.

மண் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ,டார்வினின் அறிவு, உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்று பார்க்காமல் எல்லோரிடமிருந்தும் டார்வின் கற்ற செய்திகள்  இந்நூலினுள் கூறப்பட்டுள்ளன. ஓசி மற்றும் ஹம்பக் என்ற சொற்கள் உருவான சூழல் ,ராயல் சொசைட்டியில் உறுப்பினரான செய்தி ,பரிணாமக் கொள்கைக்கு எதிராக தம் வெறுப்பினைத் தெரிவித்த ஓவன்  பக்லேண்டு குறித்தும், டார்வினின் இயற்கை படைப்புக் கோட்பாட்டின் மிச்சங்கள் என்ற படைப்பு குறித்தும் இளைஞர்களின் பரிணாமம் குறித்த ஆர்வம் போன்றவற்றையும் இந்நூலில் காண்கிறோம்.

கடல்சிப்பிகள் என்ற டார்வினின் ஆய்வு நூலுக்கு ராயல் கழகத்தாரால் தங்கப்பதக்கம் கிடைத்த செய்தியும் பல்வேறு சோதனைகளுக்கு இடையிலும் டார்வினின் சோர்வற்ற நிலை குறித்தும்  டார்வினின் எளிமையான நடை பாமரருக்கும் புரியும் வகையில் பரிணாமம் என்ற வார்த்தையை தவிர்த்தவிதமும் சொல்லப்பட்டுள்ளன.

உலகெங்கும் உள்ள உயிரினங்களின் பல்வேறு மாறுபாடுகள் ,உயிரினங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் ,யானை பற்றிய டார்வினின் கருத்து, குறைவாக இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் எது ? என்று வினா எழுப்பி அதற்குரிய விடையையும் கொடுத்துள்ள செய்தியும்  இந்நூலில் காணமுடிகின்றது.

புதிய இனங்களின் வரவும் ,மாறுபாடுகளின் ஒரு கூறு என்கிறார் டார்வின். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூற பலரும் கேலிசெய்தனர். எவ்வித புதுமைகளும் மக்களின் கேள்வி விமர்சனங்களுக்கு உட்பட்டே நிலைபெறுகின்றன என்பது நாள்பட்ட உண்மைகள் உள்ளன. இக்கருத்தை ஆதரித்தவர்கள் ஜேன் வில்லியம் ராபர்ட் ,ஹக்ஸிலி பல்வேறு எதிர்ப்புகளை தமக்கு வெற்றி பாதையாக மாற்றி டார்வின் எழுதிய புத்தகம் முதல் பதிப்பிலேயே இரண்டாயிரத்து நூறு புத்தகங்களும் விற்றுதீர்ந்துவிட்டன. குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் மூன்று விதமான ஒற்றுமைகள் இருப்பதை டார்வின் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் அறிவியல் கருத்துகளை உலகிற்கு தருவதற்கு டார்வின் முயற்சித்தார் என்ற செய்திகளையும் இந்நூலில் கூறியுள்ளார்.

உறவுமுறையில் திருமணம் செய்வதால் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணம் டார்வினிடம் இருந்ததை இந்நூலில் கூறியுள்ளார் ஆசிரியர். சார்லஸ் டார்வினின் பெயர் பல உயிரினங்களுக்கும் வைக்கப்பட்டுள்ளதை சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் டார்வின். இன்றும் அறிவியல் செய்திகள் சில அறிவற்றவர்களால் ஏற்றுக் கொள்ள படவில்லை என்பது அப்பட்டமான உண்மை. எது எவ்வாறாக இருந்தாலும் பல்வேறு போராட்டங்களுக்கு இறுதியில் பரிணாமக் கோட்பாடு பள்ளிகளில் இன்று அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பதை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.


நூல் பெயர்- சார்லஸ் டார்வின்

ஆசிரியர் – என்.மாதவன்

பதிப்பகம்- பாரதி புத்தகாலயம்

ஆண்டு – ஜீலை 2017

ரூபாய் – 50பக்கம்- 64

0 Response to "உலகை வசப்படுத்திய பரிணாமமும் சார்லஸ் டார்வினும் - ஆசிரியர் – என்.மாதவன்,- நூல் அறிமுகம் - முனைவர் இரா.மோகனா"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel