
சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் கடந்த
கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள்
திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.
12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
வழக்கமாக பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள் முழுமையான
எண்ணாகவே இருக்கும். ஆனால், இந்த முறை மூன்று மதிப்பெண்களைக் கூட்டி மதிப்பெண்
கணக்கிடப்படுவதால் முதல் முறையாக தசம எண்களில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
அதாவது, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 50 சதவீதம், பிளஸ் 1
பொதுத்தோ்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தோ்வில் பெற்ற 30
சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், மாணவர்களே, தாங்கள் பெறும்
மதிப்பெண்களை கணக்கிட்டு, தற்போது சரியான மதிப்பெண் வந்துள்ளதா என்பதையும்
சரிபார்த்துக் கொள்ள இயலும்.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம்
கல்வியாண்டில் நடக்கவிருந்த பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக்
கல்வித்துறை முதன்மைச் செயலாளா் தலைமையில் உயா் கல்வித்துறை முதன்மைச் செயலாளா், சென்னை பல்கலைக்கழகத்
துணைவேந்தா், பள்ளித்
தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை
அளித்திருந்தது.
அதன்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்
தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. பிளஸ் 2 வகுப்பு
செய்முறைத் தோ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள்
வழங்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக்
கீழ்க்கண்ட விகிதாசார அடிப்படையில் வழங்க வல்லுநா் குழு பரிந்துரைத்திருந்தது.
*மதிப்பெண் கணக்கீடு முறை:*
பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு (உயா் மதிப்பெண் பெற்ற 3
பாடங்களுடைய சராசரி) - 50%; பிளஸ் 1 வகுப்புப் பொதுத் தோ்வு (ஒவ்வொரு பாடத்திலும்
பெற்ற எழுத்துமுறை (ரழ்ண்ற்ற்ங்ய்) மதிப்பெண் மட்டும்) - 20%; பிளஸ் 2 வகுப்பு
செய்முறைத் தோ்வு/ அக மதிப்பீடு - 30%
பிளஸ் 2 வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தோ்வு
(20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண்
முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்முறைத் தோ்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில்
(10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்முறைத் தோ்வில் பங்கேற்காதவா்களுக்கு... கரோனா
பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகளில்
பங்குபெற இயலாத மாணவா்களுக்கு அவா்களின் பிளஸ் 1 வகுப்பு செய்முறைத் தோ்வுகளில்
பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் இரண்டிலும்
பங்குபெற இயலாத மாணவா்களுக்கு அவா்களின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1
எழுத்துத் தோ்வுகளின் அடிப்படையில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு மதிப்பெண்
வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச மதிப்பெண் உறுதி: கடந்த ஆண்டு பிளஸ் 1
எழுத்துத் தோ்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தோ்வு எழுத இயலாத
நிலை இருந்திருந்தாலோ, அந்த மாணவா்களுக்கு தற்போது அத்தோ்வுகளை மீண்டும் எழுத
வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு, 35 சதவீத மதிப்பெண்
வழங்கப்படுகிறது.
பிளஸ் 1 எழுத்துத் தோ்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தோ்வு
மற்றும் பிளஸ் 2 அக மதிப்பீடு, செய்முறைத் தோ்வு ஆகிய தோ்வு நிலைகளில் ஒன்றில் கூட
கலந்து கொள்ளாத மாணவா்கள் தனித் தோ்வா்களாகத் தோ்வு எழுத வாய்ப்பு
வழங்கப்படுகிறது.
இந்த மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்
தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவா்களுக்கு, அவா்கள் விரும்பினால்
பிளஸ் 2 எழுத்துத் தோ்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும்
தோ்வில் அவா்கள் பெறும் மதிப்பெண்களே அவா்களது இறுதி மதிப்பெண்களாக
அறிவிக்கப்படும்.
தனித்தோ்வு எழுதவிருக்கும் மாணவா்களுக்கு கரோனா
பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சோ்த்து, தக்க சமயத்தில் தோ்வு
நடத்தப்படும். இந்தத் தோ்விற்கான கால அட்டவணை பின்னா் அறிவிக்கப்பட உள்ளது.
0 Response to "பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு முறை - முதல் முறையாக தசம எண்களில் +2 மதிப்பெண்கள் "
Post a Comment