
ஆண்களின் உடைகள், பாக்கெட் இல்லாமல்
முழுமை அடைவதில்லை. ஆனால், பெண்களின் உடைகள் விதவிதமாக இருந்தாலும், பெரும்பாலும்
பாக்கெட் இருப்பதில்லை. இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணியை
பின்பற்றி தயாரிக்கப்படுபவை. எனவே இந்த கேள்விக்கான விடையையும் ஐரோப்பிய
வரலாற்றிலிருந்தே அறிய முடியும்.
முற்காலத்தில் ஆண்களும் பெண்களும் கையில் எடுத்துச்
செல்லும் பைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள்.
மத்திய காலகட்டத்தில்தான் (கி.பி.476-1500) எடை குறைவான
பொருட்களை வைக்கும் வகையில் சட்டைப்பைகளையும் இடுப்பு பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட
சிறு பைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
திருடர்களிடமிருந்து விலை உயர்ந்த சிறிய பொருள், நகைகளை பாதுகாப்பாக
எடுத்துச்செல்ல சட்டையின் உட்புறமாக பைகளைத் தைக்கும் வழக்கமும் தொடங்கியது. 17-ம்
நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆண்களின் கோட், பேன்ட் என்று எதுவாக
இருந்தாலும் அதில் கண்டிப்பாக பைகள் இருந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 18-ம்
நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ஆடை வடிவமைப்பிலும் ஒரு மறுமலர்ச்சி
ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் மிகவும் அழகிய வடிவமைப்புகளோடு பெண்களுக்கான
பிரத்யேக பர்ஸ்கள் பிரபலமாகின.
அதன் காரணமாகவே, பெண்கள் பர்ஸ் வைத்திருக்க தொடங்கினார்கள்.
இதனால் அவர்களின் உடைகளில் பை வைக்க தேவை ஏற்படவில்லை. ஆணாதிக்கம் மேலோங்கி
இருக்கும் இந்த சமூகத்தில், அந்தக்காலத்திலேயே இதில் ஓர் அரசியலும் இருந்ததாக
சொல்கிறார்கள்.
அதாவது, சில நாடுகளில் இருந்த கட்டுப்பாடுகளால், ஒரு பெண்
பொதுவெளியில் தனது ஆடைக்குள் எந்த பொருளையும் மறைத்து எடுத்துச் செல்லக் கூடாது.
பணம் தொடங்கி துப்பாக்கி வரைக்கும் எந்தவிதமான பொருளையும் பயன்பாட்டுக்காகவோ
பாதுகாப்புக்காகவோ வைத்துக் கொள்ள பெண்ணுக்கு உரிமையில்லை.
கண்களுக்குத் தெரியாத இந்த கட்டுப்பாடே, ஆடை வடிவமைப்பு
துறையையும் இயக்கியது. அதன் காரணமாக பெண்களின் ஆடைகளில் பாக்கெட் வைக்க முடியாமல்
போனதாக ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்தவர்கள், கூறுகிறார்கள். ஆனால்
இப்போது அப்படி அல்ல. நிலைமை மாறி வருகிறது.
0 Response to " தினம் ஒரு தகவல் ஆடைகளில் பாக்கெட் வந்தது எப்படி?"
Post a Comment