அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது: பாஜக தலைவர் கே.அண்ணாமலை

Trending

Breaking News
Loading...

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது: பாஜக தலைவர் கே.அண்ணாமலை

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது: பாஜக தலைவர் கே.அண்ணாமலை


அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார். அதேபோல தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
சேலத்தை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் பாஜக மாநில பொருளாளராக இருந்தார். அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு 8-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு, ஆடிட்டர் ரமேஷ் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 8 ஆண்டுகளாகியும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக தடையாணை பெறப்பட்டு உள்ளது. இந்த தடையாணையை நீக்கும் வகையில், மத்திய சட்டத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன்.
 
தடை நீக்கப்பட்டதும், வழக்கு விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் அனைத்து பொதுமக்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு விரைவாக செயல்பட்டு வருகிறது.
 
தற்போது 66 கோடி தடுப்பூசி வாங்குவதற்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 72 நாட்கள் ஆகிறது.மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி புதிய ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீதான விமர்சனத்தை 6 மாதத்திற்கு பிறகே தெரிவிக்க முடியும். அதேசமயம் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் நிச்சயம் தட்டிக் கேட்போம்.
 
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நீட் தேர்வுக்கு தடை விதிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தொடர்பாக மாறி மாறி கருத்து கூறி வருகின்றனர். நீட் தேர்வு நடைபெறாது என உறுதி கூறிய திமுக தற்போது மாறி, மாறி கூறுவது சரியல்ல. எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு யாருக்கும் எதிரானது இல்லை.நீட் தேர்வு காரணமாக, கடந்த 2020 ஆண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
மேலும் நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் இதற்கு உதவியாக இருக்கும். பாஜகவை மதவாத சக்தி என குறிப்பிடுவது சரியல்ல. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே சச்சார் கமிட்டியின் பரிந்துரையின் படி, சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களை கண்டறிந்து அந்தப் பகுதியில் அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
 
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அகில இந்தியத் தலைமை இதுகுறித்து அறிவிக்கும்.
 
தமிழகத்தில் சித்தாந்த அடிப்படையில் பாஜக-திமுக இடையில்தான் போட்டி உள்ளது.திமுக எங்களுடைய சித்தாந்தங்களுக்கு எதிராகத் தான் கருத்துக் கூறி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்தாமல் உள்ளனர். பெட்ரோல், டீசலுக்கு விலை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை அதை நிறைவேற்றவில்லை. இது நாணயமான அரசியல் இல்லை.
 
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடாகும். அணை கட்டப்பட்டால் மழை இல்லாத காலங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க இயலாத நிலை ஏற்படும். இதை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக் கோரி தில்லி சென்ற அனைத்துக் கட்சி குழுவிலும் நாங்கள் இடம் பெற்றுள்ளோம். தமிழகம் மற்றும் தமிழர் நலனில் பாஜகவை யாரும் பிரித்து பார்க்க்கூடாது என்றார்.

0 Response to "அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது: பாஜக தலைவர் கே.அண்ணாமலை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel