
தமிழகத்தில் இன்று
சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் இயற்றி குடியரசுத்
தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் மருத்துவ
படிப்புகளுக்கு மத்திய அரசால் நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த
நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக
அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில்
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முக ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற
தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்தவுடன் நீட்
தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். டெல்லி சென்று பிரதமரை
நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மத்திய அரசால் நடத்தப்படும்
நீட் தேர்வால் தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் விளிம்பு நிலை
மாணவர்கள் சிறப்பு பயிற்சி பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால்
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி
தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு மக்களிடையே நீட் தேர்வு பற்றிய
கருத்துக்களை கேட்டறிந்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் தமிழக
அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அதில், நீட் தேர்வை ரத்து செய்ய
புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே கடந்த அதிமுக
ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, அது குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஒப்புதல்
கிடைக்கவில்லை. அதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு
அளிக்கப்படவில்லை. நடப்பு ஆண்டு நீட் தேர்வு வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள
நிலையில் அடுத்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான புதிய
மசோதா கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்
என்று தகவல் வெளியாகியுள்ளது.
0 Response to "தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் – ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற திட்டம்!"
Post a Comment