"தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை "
பள்ளி இறுதி வகுப்பை முடித்த இளைஞன் ஒருவன் தன் தந்தையிடம் சென்று, " அப்பா! நான் கல்லூரி சென்று படிக்கப் போகிறேன். என்ன பாடம் எடுத்து படிக்க வேண்டும்? என்று கேட்டான்.
அதற்கு அவன் தந்தை, நீ சமற்கிருதம் ( வடமொழி) படித்தால் விண்ணுலகில் ( சொர்க்கம்) நன்றாக இருக்கலாம். ஆங்கிலம் படித்தால் நீ இந்த மண்ணுலகில் நன்றாக இருக்கலாம். ஆகையால், நீ இந்த இரண்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றைப் படி " என்றார்.
இதைக் கேட்டவுடன் அந்த இளைஞன், " அப்பா! நான் தமிழ் படிக்கிறேன் " என்றான்.
"நான் உன்னை சமற்கிருதமோ , ஆங்கிலமோதான் படிக்கச் சொன்னேன். நீ ஏன் தமிழ் படிக்கப் போகிறேன் என்கிறாய்? என்று கேட்டார்.
"அப்பா! நான் சமற்கிருதம் படித்தால் விண்ணுலகில் நன்றாக இருப்பேன். ஆங்கிலம் படித்தால் மண்ணுலகில் நன்றாக இருப்பேன். ஆனால், தமிழ் படித்தால் விண்ணுலகிலும் நன்றாக இருப்பேன். மண்ணுலகிலும் நன்றாக இருப்பேன் . அதனால், நான் தமிழ் படிக்கிறேன் " என்றான் அந்த இளைஞன்.
தந்தையின் விருப்பத்தையும் மீறி அவன் தமிழ் படித்ததால் அவன்
வாழ்க்கை நிலை மட்டுமல்ல, அவனால் தமிழின்
நிலையும் உயர்ந்தது.
எத்தனையோ பேருக்கு அடையாளம் கொடுத்தது தமிழ்மொழி. அந்தத் தமிழுக்கே அடையாளத்தைக் கொடுத்தவன் அந்த இளைஞன் என்றால் அது மிகையல்ல .
அந்த இளைஞன் யாரென்று தெரியுமா?
"தமிழ்த்தாத்தா" என்று தமிழுலகம் போற்றிய உ.வே.சா. தான் .
"தமிழ்தான் எனக்குச் செல்வம். அதுதான் என் அறிவுப்பசிக்கு உணவு " என்று சொல்லி தமிழோடு வாழ்ந்தவர். தமிழுக்காக வாழ்ந்தவர்தான் உ.வே.சா. அவர்கள்.
" தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை .
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ". என்று பாடினார் பாரதிதாசன் .
ஆம். தமிழ் படித்தவர்களுக்கும், தமிழுக்குத் தொண்டு செய்பவர்களுக்கும் இறப்பு ஒருபோதும் வருவதில்லை. அவர்கள் மண்ணில் வாழாமல் போகலாம். மற்றவர்கள் மனதில் எப்போதும் வாழ்வார்கள்.
இந்த உலகில் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக
மட்டுமல்ல. இந்த உலகமே நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் தமிழ் படிப்போம்.
தமிழ் படிப்போம்!
தமிழுக்குத் தொண்டு செய்வோம்!
தமிழ்போல் தன்னிகரற்ற புகழோடு வாழ்வோம்! .
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 114. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை ஆ.தி.பகலன்"
Post a Comment