"எது எதனால் கெடும் "
ஒரு சமுதாயத்தின் பழமையான சிந்தனையாகவும், அறிவுச் சொத்தாகவும்
இருப்பது " பழமொழிகள்" .
இவை பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி இலக்கியமாகவே உள்ளது. பழந்தமிழர்களின் அறிவுக் கூர்மையைப்
பறைசாற்றும் பழமொழி ஒன்றினை இங்கு காண்போம்.
" இட்டுக் கெட்டது காது
இடாமல் கெட்டது கண்
கேட்டுக் கெட்டது குடி
கேளாது கெட்டது கடன்
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிர்
உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது
உறவு "
1. குச்சியை எப்போதும் காதில் ( இட்டு) விட்டு குடைவதால் காது கெடும்.
2. " கண்ணுக்கு மை அழகு " என்பார்கள். கண்ணுக்கு மை தீட்டாமல் (இடாமல்) இருந்தால்
கண்ணின் அழகு கெடும்.
3. மற்றவர்கள் கூறும் கோள் ( மூட்டி) சொல்லும் சொற்களைக் காது கொடுத்துக் கேட்டு குடும்பம் நடத்தினால் அந்த குடும்பம்
கெடும்.
4. நாம் கொடுத்தக் கடனை உரிய நேரத்தில் கேட்க வேண்டும்.
அப்படி கேட்காமல் இருந்தால் அந்தக் கடன் திரும்பி வராமல் அழியும் ( கெடும்) .
5. நம் குழந்தையாயிற்றே என்று பாவம் பார்த்து,
குழந்தைகள் தவறு செய்யும் போதெல்லாம் கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருந்தால் ,
அந்தக் குழந்தைகள் கடைசிவரை திருந்தாமல்
கெட்டுப் போவார்கள்.
6. நாம் பயிர் வைத்துள்ள விளைநிலத்தை அடிக்கடி சென்று
பார்வையிட வேண்டும். பயிரை ஆடு, மாடு மேய்கிறதா? பயிர் விளைவதற்கான நீர்
இருக்கிறதா? பயிரைப் பூச்சி அடித்திருக்கிறதா?
என்பதை அடிக்கடி போய் பார்க்க வேண்டும். இல்லையேல், அந்தப் பயிர் கெடும்.
7. அடிக்கடி உண்டாலும், அளவுக்கு மீறி உண்டாலும் வயிறு
கெடும்.
8. உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது
அவர்கள் தரும் விருந்தோம்பலை நாம் ஏற்க வேண்டும். அப்படி நாம் உண்ணவில்லை என்றால்,
அவர்கள் நம்மீது சினம் கொள்வர். அதனால், அந்த உறவினர் நட்பு கெடும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 113. " எது எதனால் கெடும் ஆ.தி.பகலன் "
Post a Comment