"பல்லுயிர்க்கும் தாய் "
ஒரு பெண் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டு
குழந்தை ஒன்றை ஈன்றாள்தான் தாயாக முடியும்.
திருமணம் செய்யாமலும், இல்லற வாழ்வில் ஈடுபடாமலும்,
குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமலும், ஆண் பெண் வேறுபாடு இன்றி எல்லோராலும் தாயாக
முடியுமா?
முடியும் . அதுவும் எல்லா உயிர்க்கும் ( பல்லுயிர்க்கும் ) தாயாக முடியும்.
அது எப்படி சாத்தியமாகும்?
இப்பாடலில் உள்ளபடி நடந்து கொண்டால் அது சாத்தியமாகும் .
"நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே
பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன தோளாய் இவையுடையான் பல்லுயிர்க்கும்
தாய்அன்னன் என்னத் தகும். " ( ஏலாதி - 06)
மூங்கிலைப் போன்ற தோள்களை உடையவளே!
1. புலன்வழி போகாது மனக்கட்டுப்பாடு உடையவன்.
2. நானிலம் போற்றும் நற்பண்பு உடையவன்.
3. வறியோர்க்கு வாரி வழங்கும் கொடைத்தன்மை உடையவன்.
4. எந்நிலையிலும் தந்நிலை மாறாமல் இருக்கும் பொறுமை
உடையவன்.
5. வாழ்விலும் சரி, வார்த்தையிலும் சரி பொய்ம்மை
இல்லாதவன்.
6.எவ்வுயிரையும் தன்னுயிர்போல் எண்ணி, எவ்வுயிரையும்
கொல்லாதவன், ஊன் உண்ணாதவன்.
இத்தகைய பண்பு நலன்களை ஒருசேர பெற்றவன் எவனோ அவனே உலக உயிர்களுக்கு எல்லாம் தாய் போன்றவன்.
உலகில் உள்ள
பேறுகளில் பெரும்பேறு தாய்மை.
அதுவும் உலக உயிர்களுக்கு எல்லாம் தாயாக இருப்பது என்பது யாருக்கும்
கிடைத்திடாத பெரும்பேறு.
அப்பெரும்பேற்றைப் பெற்றிட நாம் முயற்சி செய்வோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 112. பல்லுயிர்க்கும் தாய் ஆ.தி.பகலன்"
Post a Comment