"கல்வி அழகே அழகு "
இன்றைய தலைமுறையினர் தங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீதிக்கு வீதி " அழகு நிலையங்களின் " எண்ணிக்கை புற்றீசல் போல அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தங்கள் அழகை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, தங்கள் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வதிலும் , கல்வி கற்பதிலும் காட்டினால் அவர்கள் வாழ்வும் நன்றாக இருக்கும். இந்த வையமும் நன்றாக இருக்கும். மனிதனுக்கு எது உண்மையான அழகு? என்பதை விளக்கும் இரு பாடல்களை இங்கு காண்போம்.
"இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு. " ( ஏலாதி - 74)
இடையின் அழகோ, தோளின் அழகோ, ஈடு இல்லாத மேனி அழகோ, நடை அழகோ, நாணத்தினால்
ஏற்படும் அழகோ, நாணத்தின் பக்கத்தே
தோன்றும் கழுத்தின் அழகோ உண்மையான அழகு
ஆகா.
எண்ணையும், எழுத்தையும் முறையாகக் கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் கல்வியினால் வரும் அழகே உண்மையான அழகு.
" கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம்
வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார். " ( நீதிநெறி விளக்கம் - 12)
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
"கல்வியால் வரும்
அழகே உண்மையான அழகு "
"எப்போதும் அழகாக இருக்க வேண்டும். எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் " என்று நீங்கள் விரும்பினால் எப்போதும் கற்றுக் கொண்டே இருங்கள். உங்களை மட்டுமல்ல , உங்கள் வாழ்க்கையையும் அழகாக்குவது கல்வி மட்டுமே!
அட்சய திருதியை
:
தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம்
வாங்கினால்தான் அது மென்மேலும் பெருகும் என்பதில்லை. என்ன
வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்பதுதான் நம்பிக்கை. ஆதலால், உங்களால் முடிந்த அளவுக்கு புத்தகம் வாங்குங்கள்.
புத்தகத்தால் அறிவு பெருகும். அறிவால் அனைத்து செல்வமும் பெருகும்.
எல்லோரும் புத்தகக்கடையை நோக்கி படையெடுங்கள்!
புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!
புதிய பல சாதனைகள் படையுங்கள்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம் 116. கல்வி அழகே அழகு ஆ.தி.பகலன்"
Post a Comment