தமிழ் அறிவோம்! 117. மாமனிதர்களை உருவாக்கிய திருக்குறள் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 117. மாமனிதர்களை உருவாக்கிய திருக்குறள் ஆ.தி.பகலன்

 தமிழ் அறிவோம்! 117. மாமனிதர்களை உருவாக்கிய திருக்குறள்   ஆ.தி.பகலன்



"மனிதர்களை உருவாக்கிய திருக்குறள் " 

நம் தேசத்தந்தை "மகாத்மா " காந்தி அவர்களின் ஞான குருவாக இருந்தவர் லியோ தால்சுதாய். இவர்  உருசியா ( Russia) நாட்டைச் சேர்ந்தவர்.  " போரும் அமைதியும் " உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு " உள்ளிட்ட பல படைப்புகளை உருவாக்கி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறினார். அவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்கள் தால்சுதாயுடன் கடிதத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் . அவருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். அவரை தன் ஞான குருவாக ஏற்றுக் கொண்டு தன் ஐயங்களை எல்லாம் கடிதம் வாயிலாக கேட்டுத் தெளிவு பெற்றார்.

மகாத்மா  காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில்     இருந்தபோது , ஆங்கிலேயர்களின் அடக்குமுறையினால் மக்கள் துன்பப்படுவதைக் கண்டார். அதை எதிர்த்துப் போராட நினைத்தார். எவ்வழியில் போராடுவது என்பது பற்றி ஆலோசனை கேட்க,  தால்சுதாய் அவர்களுக்குக் கடிதம்  எழுதினார்.  அதில்  "  தன்னை துன்புறுத்துவோரை தண்டிக்காது மன்னிக்கும் குணம்பற்றி தாங்கள் கூறியிருக்கும் செய்தி,  என்னை மிகவும் கவர்ந்தது"

 ஒரு வன்முறையை எதிர்த்து நிற்க மற்றொரு வகை வன்முறையை மேற்கொள்ளாமல் அமைதியான வகையில் செயல்படலாம் என்ற கோட்பாடு எப்படி உங்களுக்கு வந்தது.  "என்று  எழுதி அனுப்பினார்.

அதைப் படித்த தால்சுதாய் " இந்தப் பெருமையும் புகழும் எனக்கு உரியதல்ல. உங்கள் நாட்டில் உள்ள ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்து " திருக்குறள் " எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுரையே சாரும்.

அவர் எழுதிய திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தேன். அந்த திருக்குறளில்  " இன்னா செய்யாமை "  என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களை படித்தேன் என்று சொல்லி அந்த அதிகாரத்தில் உள்ள ஆறு குறட்பாக்களை எடுத்துக்காட்டி யாருக்கும் இன்னா செய்யாமல் போராடினால் வெற்றி கிட்டும் " என்று கூறினார்.

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல். "

நமக்குத் துன்பம் செய்தவரைத் தண்டிக்க ஒரே வழி, அவர்தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்து விடுதல் ஆகும். ஆகவே,  வள்ளுவர் சொன்ன அறவழியில் ஆங்கிலேயரை எதிர்த்துப்  போராடுமாறு" அறிவுறுத்தினார். மேலும், திருக்குறள்  ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்  ஒன்றினை அக்கடிதத்தோடு அனுப்பி வைத்தார். நான் திருக்குறள் படித்ததால் ஞானம் பெற்று பல படைப்புகளை படைத்து உலகப் புகழ் பெற்றேன். அதுபோல நீயும் திருக்குறள் கற்று அதன்படி வாழ்ந்து உலகப்புகழ் பெறுவாயாக " என்று தன் மாணவனாகிய காந்தியை வாழ்த்தினார் தால்சுதாய். 

தன் ஞான குருவாகிய தால்சுதாய் சொன்னபடி , அன்றிலிருந்து திருக்குறளைப் படித்தார் மகாத்மா காந்தி. அதன்பின்பே காந்தி அறவழிப் ( அகிம்சை) போராட்டத்தைக் கையில் எடுத்தார்.  அறவழிப் போராட்டம் மூலமாக ஒரு நாடு விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை மாற்றி  எழுதியவர் மகாத்மா காந்தி . அதற்கு அடித்தளம் அமைத்தது திருக்குறள்தான் . 

திருக்குறளை அதன் மூலமொழியான தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆசையோடும்,  குறிக்கோளோடும்தான்  நான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். திருக்குறளைப் போல ஒழுக்க நெறிமுறைகளை மக்களுக்கு ஊட்டும் அறிவுக் களஞ்சியம் வேறெதுவும் இருக்க முடியாது. அடுத்த பிறவியில் நான்  தமிழனாகப் பிறக்க வேண்டும். தமிழனாய் பிறந்து  திருக்குறளை முழுவதும்  கற்க வேண்டும். அப்போதுதான் அதன் முழு பெருமையையும் என்னால்  அறிய முடியும் . இதுவே என் ஆசை " என்றார் மகாத்மா காந்தி.

 நாம் அனைவரும் தமிழ்மொழியைக் கற்க வேண்டும். ஆங்கிலத்தைவிட தமிழையே அனைவரும் விரும்ப வேண்டும். தமிழை மற்ற மொழிகளுக்கு எல்லாம் மேலான இடத்தில் வைக்க  வேண்டும் " என்று வேண்டுகோள் வைத்தார் மகாத்மா காந்தி. 

மகாத்மா காந்திக்கே கிடைக்காத  பெறும்பேறு நமக்குக் கிடைத்துள்ளது. ஆம், நாம் தமிழர்களாய் பிறந்துள்ளோம்.

ஆனால்,  திருக்குறளைக் கற்க மறந்துள்ளோம். 

நீங்களும்  மாமனிதராய் மாற வேண்டுமா?

திருக்குறளைப் படியுங்கள்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .


0 Response to " தமிழ் அறிவோம்! 117. மாமனிதர்களை உருவாக்கிய திருக்குறள் ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel