"தாய்மையைப் போற்றுவோம் "
நெடுங்காலமாக பிள்ளையில்லாப் பெண்ணொருத்தி முதுமைப்
பருவத்தில் ஒரு மகனைப் பெற்றாள் .
"மலடி பெற்ற மகன் " என்று ஊரார் மறைவாகப் பேசினர். அவன் காளைப்பருவம்
எய்திய போது அவர்கள் நாட்டிலே பெரிய போர் மூண்டது. தாய்நாட்டைக் காக்க போர்க்களம்
செல்ல வேண்டும் என்று சொல்லி தன் தாயிடம்
ஆசி பெற்று போர்க்களம் சென்றான். போரில் மகன் கொல்லப்பட்டான் என்ற செய்தி
வந்தது. மகன் இறந்தான் என்ற செய்தி கேட்டு அவள் கலங்கவில்லை. அவன்
எம்முறையில் இறந்திருப்பான்? என்றுதான்
அவள் கலங்கினாள். அந்த வீரத்தாயின் வரலாற்றை அறிவோம்.
" மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிர்த்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே. " ( புறநானூறு - 277)
மீனைத் தின்னும் கொக்கின் சிறகு வெளுத்திருப்பது போல்
நரைத்த கூந்தலை உடையவள். அவள் மகன் போர்க்களத்தில் யானையைக் கொன்றுவிட்டு
மாண்டான். இந்தச் செய்தியை அவள் கேள்வியுற்றாள். அவனைப் பெற்றபோது மகிழ்ந்ததை விட
மிகவும் மகிழ்ச்சி கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் மழை பொழியும்போது மூங்கில்
இலைகளின் துளியிலிருந்து சொட்டும் நீர்த்துளிகள் போல் விழுந்தன. அது ஆனந்தக்
கண்ணீர் என்பதை அடுத்தவர்க்கு உணர்த்தியது. அவள் பிறவிப்பயனைப் பெற்றதுபோல்
பேரின்பம் கொண்டாள் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
ஒரு தாய்க்கு தன் மகனை விட தாய்நாடுதான் முக்கியம் . தாய்நாட்டு மக்கள்தான் முக்கியம். அதற்காக தன் மகனையும் இழக்கத் துணிந்தவளாக இருப்பதே தாய்மையின் உச்சம். என் மகன், என் குடும்பம் என்று குறுகிய வட்டத்துக்குள் கட்டுண்டு கிடக்காமல் எல்லோரையும் தன் குடும்ப உறுப்பினர்களாக, தன் குழந்தைகளாக பார்க்கின்ற பரந்த உள்ளமே தாய்மையின் அடையாளம். அப்படிப்பட்ட பரந்த உள்ளம் கொண்டு தாய்மை விளங்குவதால்தான் நம் நாட்டையும், நம் மொழியையும் தாயோடு ஒப்பிட்டு பேசுகிறோம்.தாய்நாடு, தாய்மொழி என்று சொல்லி தாய்மையைப் பெருமைப்படுத்துகிறோம்.
"கணினியின் தந்தை " யார்?
"வரலாற்றின் தந்தை" யார்?
"உயிரியியலின் தந்தை" யார்?
என்று உலக நாடுகள் எல்லாம் ஆணாதிக்க மனப்பான்மையில்
'தந்தை' என்று சொல்லி ஆண்களைப் போற்றுகின்றன. ஆனால், நம் தமிழ்ச் சமுதாயம் மட்டுமே
எல்லாவற்றையும் தாயோடு ஒப்புமைப் படுத்தி தாய்மையைப் போற்றுகிறது.
தமிழ் நெறியில் நாள்தோறும் தாய்மைப் போற்றுவோம்.
அன்னையர் தினம்
உலக மக்களுக்கு!
ஆண்டின் எல்லா நாளுமே
அன்னையர் தினம்
தமிழ்மக்களுக்கு!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 118. தாய்மையைப் போற்றுவோம் ஆ.தி.பகலன்"
Post a Comment