தமிழ் அறிவோம்! 129 " கலம்செய் கோவே! கலம்செய் கோவே! ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 129 " கலம்செய் கோவே! கலம்செய் கோவே! ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  129 " கலம்செய் கோவே! கலம்செய் கோவே!  ஆ.தி.பகலன்

  


"கலம்செய் கோவே! 
கலம்செய் கோவே! " 

ஒரு பெண் எந்த உறவை இழந்தாலும்  இன்னொருவரை உறவாக காட்ட முடியும்.  தாயோ, தந்தையோ, அண்ணனோ, தம்பியோ, மகனோ, மகளோ இப்படி எந்த உறவை இழந்தாலும் அந்த இடத்தில் இன்னொருவரை வைக்க முடியும். ஆனால் , கணவன் என்ற உறவை இழந்துவிட்டால் அதை எந்த வகையாலும் ஈடுசெய்ய முடியாது. 

" கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் "

என்கிறது சிலப்பதிகாரம். 

பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்தவுடன் " கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் " என்று சொல்லி அவன் காலடியில் விழுந்து உயிர் துறக்கிறாள் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி. 

இப்படி கணவன் இறந்தபின் மனைவியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை விளக்கும்  பல  இலக்கியச் சான்றுகள் நம்மிடையே உள்ளன.

அவற்றில் ஒன்றினை இங்குக் காண்போம். 

" கலம்செய் கோவே!  கலம்செய் கோவே!

அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

சிறுவெண் பல்லி போலத் தன்னொடு

சுரம்பல வந்த எமக்கும் அருளி,

வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி

அகலிது ஆக வனைமோ! 

நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே! " ( புறநானூறு - 256) 

"ஊருக்கெல்லாம் பிணம் புதைக்கும் ஈமத்தாழி ( முதுமக்கள் தாழி) செய்து தரும் கோவே!

வண்டிச் சக்கரத்தோடு சேர்ந்து பொருந்திய சிறு வெண்பல்லி நெடுந்தொலைவு அவ்வண்டியோடு செல்வதைப் போல , வாழ்வின் எல்லா இடர்பாடுகளிலும் என் தலைவனோடு ஒட்டி நானும் வாழ்ந்து வந்தேன்.  என் தலைவனை இட்டுப் புதைக்கும் தாழியில் என்னையும் இடவேண்டும். ஆதலால்,  அவனுக்குச் செய்யும் ஈமத்தாழியில் எனக்கும் இடம் வைத்து அகலமாகச் செய்வாயாக " என்று  குயவனை வேண்டுகிறாள் தலைவி. 

ஈருடலில் ஓர் உயிராய் வாழ்ந்த இணையரின் இல்வாழ்க்கை சிறப்பினை இதைவிட சிறப்பாக எடுத்துக் காட்டும் இலக்கியம் உலக மொழிகளில் உண்டோ? 

இன்பத்திலும், துன்பத்திலும் இணைந்து வாழ்ந்த தன் தலைவனுக்காக தன் இன்னுயிரை ஈந்தளிக்கும் தலைவியின் அன்பு பேரன்பு அன்றோ! 

இப்பாடலைப் படிக்கும்போதே நம்  கண்களில் கண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது என்றால், அந்த இணையர் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பின் ஆழம் அந்த  ஆழ்கடலின்  ஆழத்தைவிட அதிகமன்றோ!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 


0 Response to "தமிழ் அறிவோம்! 129 " கலம்செய் கோவே! கலம்செய் கோவே! ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel