ஆதி பகவன் ஆதி பகலன் எது சரி?
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. " ( குறள் - 01)
எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக்
கொண்டிருக்கின்றன. அதுபோல் , உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று
காலம் காலமாக நமக்கு கதை சொல்லப்பட்டு வருகிறது.
சங்க இலக்கியத்தில் கூட கடவுள் பற்றிய செய்தி
எதுவும் இல்லை. புறநானூறு , அகநானூறு உள்ளிட்ட எல்லா நூல்களுக்கும் ஒரு கடவுள்
வாழ்த்து பாடல் எழுதி இடைச்செருகலாக
இணைத்து இருக்கிறார்கள். தமிழர்களைப் பொறுத்தவரை இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு
மட்டுமே. உருவ வழிபாடு உள்ளிட்ட கடவுள்
வழிபாடு எல்லாமே வந்தேறிகளால் இறக்குமதி செய்யப்பட்டவையே. " தேரை இழுத்து
தெருவில் விட்ட கதை போல " இல்லாத கடவுளை எல்லாம் நம் இலக்கியத்தில்
இடைச்செருகலாய் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள் மூடர்கள் சிலர்.
" தேவர் ( திருவள்ளுவர்) குறளின் முதல் அதிகாரத்தில் ( கடவுள் வாழ்த்து) சாகாக் கல்வியைச் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் " என்கிறார் வள்ளல் பெருமான். ஆக, திருக்குறளின் முதல் அதிகாரம் " சாகாக்கல்வி" ( மரணமில்லாப் பெருவாழ்வு) பற்றியே கூறுகிறது. அதை மறைத்தே "கடவுள் வாழ்த்து " என்று கதை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த உண்மையை யாரும் உணரவில்லை. வள்ளலார் மட்டுமே உணர்ந்தார். அதைத் தக்க ஆசிரியர் மூலமாக நம்மை தெரிந்து கொள்ளுமாறு உணர்த்தினார். அவர் ஏன் தக்க ஆசிரியர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்? இங்கு எல்லோருமே உண்மைக்குப் புறம்பான உரைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மைப் பொருளை விளக்க தக்க ஆசிரியர் வேண்டும் என்கிறார். "மெய்யறிவு பெற்ற ஆசிரியரையே அவர் தக்க ஆசிரியர்" என்கிறார் வள்ளலார். பொய்யறிவு பெற்றவர்களின் பொய்யுரையை நம்பி நாம் தடம் மாறி விட்டோம்.
" முதல் கோணல் முற்றிலும் கோணல் "
என்று ஒரு பழமொழி உண்டு. அதுதான் நம் திருக்குறளிலும் நடந்துள்ளது.
" ஆதி பகலன் " என்று வள்ளுவர் எழுதியதை
" ஆதி பகவன் " என்று திரித்து விட்டார்கள்.
'பகலன் ' என்ற தமிழ்ச் சொல்லே 'பகவன் ' என்ற
வடசொல்லாக மாற்றப்பட்டு உள்ளது.
கல்வெட்டுகளிலும் , ஓலைச்சுவடிகளிலும் 'லகரம் '
வகரம் போல வந்துள்ளதை ( அதாவது ' ல ' என்பது ' வ ' என வருதல்) பல்வேறு சான்றுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளில் " பவ்வவன்
" என்று எழுதப்பட்டுள்ளதைக் கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது, " பல்லவன் " என்பதையே
"பவ்வவன் " என்று எழுதி உள்ளனர். லகர எழுத்து வகர எழுத்தாக
எழுதப்பட்டுள்ளது. இப்படி பிழையாக
இருப்பதைப் "பாடபேதம்" என்பர்.
இங்கு "பகவன் " என்பது பிழை.
" பகலன் " என்பதே சரி.
"பகலன்" என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
பகலை உடையவன் பகலன். அதாவது, ஞாயிறு. 'பகலவன் '
என்பதன் சுருக்கமே " பகலன் " என்பதாகும். இலக்கணத்தில் இடைக்குறை என்று
சொல்வர். "உள்ளம் " என்பதை " உளம் " என்று கூறுவர். அதுபோலவே
பகலவன் என்ற சொல் " பகலன் " என்றானது.
ஈற்று அடியில் வருகின்ற சீர்களை "பகலவன்
முதற்றே உலகு " என்று எழுதினால் இங்கு யாப்புப் பிழை வரும். "பகலன்
முதற்றே உலகு " என்று எழுதினால் "இயற்சீர் வெண்டளை " சரியாக
வரும். அதனால்தான் "பகலவன் "
என்ற சொல் குறுக்கம் செய்யப்பட்டு " பகலன் " என்று
எழுதப்பட்டிருக்கிறது.
பகலவன் ( பகலன்)
என்பது ஞாயிற்றை குறிக்கிறது. " பெருவெடிப்புக் கோட்பாட்டின்படி
" ஞாயிற்றில் இருந்து தோன்றியதுதான் இந்தப் புவி. இந்தப் புவிக்குத்
தாய்தந்தை ஞாயிறுதான். ஞாயிற்றின் ஒளியால்தான் இந்தப் புவியும், இந்தப் புவியில்
உள்ள உயிரினங்களும் வாழ்கின்றன. அதனால்,
இந்தப் புவிக்கு ஞாயிறுதான் உண்மையானக் கடவுள்.
தமிழில் கிடைத்த முதல் நூலான தொல்காப்பியம்
ஞாயிறு வழிபாட்டை அழகாகப் பதிவு செய்துள்ளதைக் காண்போம்.
" கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் "
( தொல்காப்பியம், புறத்திணையியல் - 85)
ஞாயிறு, நெருப்பு, திங்கள் ஆகிய இம்மூன்றையும்
வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போல எண்ணப்படும் என்பதே இதன் பொருள்.
தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் "
கடவுள் வாழ்த்து" பாடி தொடங்காமல் இயற்கையை ( திங்கள், ஞாயிறு, மழை) வாழ்த்திவிட்டுத் தொடங்குகிறது.
" ஞாயிறு போற்றுதும்,
ஞாயிறு போற்றுதும் "
என்று உண்மைக் கடவுளாக ஞாயிறைப் போற்றினார்
இளங்கோவடிகள். ஞாயிற்றுக்கென்று தனியாக கோவில் இருந்ததை "உச்சிக் கிழான்
கோட்டம் " என்று சுட்டுகிறது சிலப்பதிகாரம்.
தமிழர்கள் கொண்டாடும் ஒரே பெருவிழா " பொங்கல் விழா " அந்த
விழாவை யாருக்காகக் கொண்டாடுகிறோம்?
கதிரவனுக்குத் தானே. வேறு எந்தக் கடவுளுக்கும் இல்லையே? இதிலிருந்தே
தெரிந்து கொள்ளலாம். தமிழர் வழிபாடு
" ஞாயிறு வழிபாடு " மட்டுமே என்று.
உலகில் தோன்றிய பண்டைய நாகரிகங்களும் , அறிவார்ந்த சமூகங்களும்
"ஞாயிறு வழிபாடு " மேற்கொண்டு வாழ்ந்ததை அவர்களது இலக்கியங்களும்,
அவர்கள் கட்டியெழுப்பிய சூரியக் கோவில்களும் இன்று சான்றுகளாய் உள்ளன. உலகம்
தோன்றிய நாள்முதல் "ஞாயிறு வழிபாடு " இருந்து வருகிறது. அதனால் உலகின் முதல்
வழிபாடு " ஞாயிறு வழிபாடு " எனலாம். சூரியக் கதிரானது, ஒளிச்சிதறலுக்கு
உள்ளாகும் போது அது ஏழு விதமான நிற மாலையாகக் காட்சி அளிக்கிறது. இதனால்தான்,
சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்
சுற்றி வருவதாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தினர். உலகின் உண்மையான கடவுளான
ஞாயிற்றைப் போற்றியே வள்ளுவரும் தம் குறட்பாவைத் தொடங்கி இருக்க வேண்டும்.
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலன் முதற்றே உலகு. "
" எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக்
கொண்டிருக்கின்றன. அதுபோல, உலகம் ஞாயிற்றை
(பகலன்) அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதே உண்மையானப் பொருளாகும். இந்த
உலகில் கடவுள் என்று எதுவுமில்லை. பகலவனே இந்த உலகின் உண்மையான கடவுள் என்பதை தன்
முதல் குறளிலே அழுத்தமாக பதிவு செய்துள்ளார் திருவள்ளுவர். இந்த உண்மையை
மறைப்பதற்காகவே ' பகலன் ' என்பது 'பகவன் ' என்று மாற்றப்பட்டது. இல்லாத கடவுள்கள் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டன. ஒரு எழுத்து
மாறியதால் இங்கு எல்லாமே மாறிவிட்டது. "இயற்கை வழிபாடு " இல்லாமல்
போனது. இறை வழிபாடு எங்கும் உண்டானது.
வள்ளுவர்
சொன்ன பகலனையே "ஒளிவழிபாடாக " உணர்த்துகிறார் வள்ளல் பெருமான்.
ஒளி வழிபாட்டை வள்ளுவர் முன்மொழிந்தார்.
வள்ளலார் வழி மொழிந்தார். ஒளி வழிபாட்டை மேற்கொண்டு ஒளிதேகம் பெற்று
வாழ்பவர்களையே " நிலமிசை நீடு வாழ்வார் " என்கிறார் வள்ளுவர்.
அதாவது, மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பெற்று இவ்வுலகில் நீண்டு வாழ்வார்கள்.
வள்ளலார் அப்படித்தான் வாழ்கிறார்.
"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி
சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல." ( குறள் - 04)
யார்மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல்
எல்லோர்க்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் ஒளியை ( பகலன்) வணங்கி, அதன்
அடியொற்றி (ஒளியைப் போலவே) எல்லோர்க்கும்
நன்மை செய்பவர்க்கு எப்போதும், எவ்விடத்திலும்
துன்பம் இல்லை . துன்பத்தில் பெரிய துன்பம் மரணம்தானே. அந்த மரணமாகிய
துன்பமே அவர்களை விட்டு விலகும். மரணம் இல்லாப் பெருவாழ்வை அடைவார்கள்.
திருக்குறளின் முதல் அதிகாரம் முழுவதுமே மனித சமூகம் மரணம் இல்லாப் பெருவாழ்வு
அடையும் வழியைக் காட்டுகின்றன. மீதமுள்ள 132 அதிகாரமும் மனிதனை அதற்குப் பக்குவப்
படுத்துகின்றன. உலகப் பொதுமறையை உண்மை நெறியில் நின்று ஆராய்ந்தால் உலகிற்கு
இன்னும் பல உண்மைகள் தெரியவரும். இதைத்தான் "தக்க ஆசிரியர் மூலமாக தெரிந்து
கொள்ளுங்கள் " என்றார் வள்ளலார்.
ஞாயிறு உள்ளவரை இந்த ஞாலம் இருக்கும். இந்த ஞாலம்
உள்ளவரை ஞாயிறு வழிபாடு இருக்கும்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலன் முதற்றே உலகு " என்பதை
இனிவரும் தலைமுறைக்குத்
தவறின்றிச் சொல்லித் தருவோம்!
என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர் தி.சம்பத்
குமார். அடுத்துவரும் தலைமுறைக்கு ஆதிபகலன் என்னும் பெயரைக் கொண்டு செல்லவே என்
பெயரை ஆ.தி.பகலன் என மாற்றிக் கொண்டேன்.
ஆனத்தூர் (பிறந்த ஊர்)
திருநாவுக்கரசு (தந்தையின் பெயர்) பகலன் என்பதன் சுருக்கமே ஆ.தி.பகலன்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(அலைப்பேசி - 9965414583).
0 Response to "தமிழ் அறிவோம்! 199. ஆதி பகவன் ஆதி பகலன் எது சரி? ஆ.தி.பகலன்"
Post a Comment