தமிழ் அறிவோம்! 200. தமிழ்ப் பெருங்கடல் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 200. தமிழ்ப் பெருங்கடல் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 200. தமிழ்ப் பெருங்கடல்  ஆ.தி.பகலன்

   


"தமிழ்ப் பெருங்கடல் "
 

தமிழ் ஒரு பெருங்கடல்தான். அதில் சிறிதும் ஐயமில்லை. மிகுதியான இலக்கண , இலக்கிய நூல்களைக் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. அதனால், தமிழ் ஒரு பெருங்கடல்தான். நாம் ஆராய்ந்து பார்க்கப் போகும் செய்தி அதுவன்று. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள கடல்களைப் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம். 

மூவேந்தர்கள் ஆட்சி செய்த பண்டைய தமிழகம் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டது.  அந்த மூன்று கடலுக்கும் தமிழிலேயே பெயர் சூட்டினார்கள் தமிழர்கள். 

1.குணக்கடல். 

தமிழகத்தின் கிழக்குத் திசையில் உள்ள கடலுக்குக் "குணக்கடல் " என்று பெயரிட்டனர். குணக்கு என்பது கிழக்குத் திசையைக் குறிக்கும். அதனால் கிழக்கில் உள்ள கடலுக்குக் 'குணக்கடல் ' என்று பெயரிட்டனர். சோழர்கள் தங்கள் கடற்படையால் இக்கடலை மேலாண்மை  செய்ததால் இக்கடலுக்குச் "சோழ மண்டல ஏரி" என்று சிறப்புப் பெயர் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தமிழகக் கடற்கரைக்கு " சோழ மண்டலக் கடற்கரை " என்ற பெயரும் ஏற்பட்டது. வங்காளிகள் இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த காரணத்தினால், இந்திய விடுதலைக்குப் பின் தங்கள் தாய் மொழியின் பெயரால் " வங்காள விரிகுடா " என்று பெயர் மாற்றம் செய்தனர். 

2.குடக்கடல். 

தமிழகத்தின் மேற்குத் திசையில் உள்ள கடலுக்குக் "குடக்கடல் " என்று பெயரிட்டனர். குடக்கு என்பது மேற்குத் திசையைக் குறிக்கும். அதனால் மேற்குத் திசையில் இருந்த கடலுக்கு " குடக்கடல் " என்று பெயரிட்டனர். அரேபியர்கள் நெடுங்காலமாக அக்கடல் வழியே தமிழர்களுடன் வாணிகம் செய்து வந்தனர். குடக்கடல் மீது அரேபியர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்திய காரணத்தினால், அவர்கள் தங்கள் தாய்மொழியின் பெயரால் " அரபிக்கடல் " என்று பெயர் மாற்றம் செய்தனர். 

3.குமரிக்கடல். 

தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கடலில்தான் "குமரிக்கண்டம் " இருந்தது. பாவாணர் கூற்றுப்படி " குமரிக்கண்டமே மாந்தன் தோன்றிய இடம். தமிழரே மூத்தகுடி . தமிழே மூத்த மொழி. அப்படிப்பட்ட குமரிக்கண்டம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோளினால் அழிந்தது. அந்தக் குமரிக்கண்டத்தின் நினைவாகவே தெற்கே உள்ள கடலுக்கு "குமரிக்கடல் " என்று பெயர் சூட்டினர். 

 ஆனால் நம் நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் இந்திய நாட்டை அடையும் கடற்பரப்பு என்பதால்,  குமரிக்கடலுக்கு " இந்தியப் பெருங்கடல் " என்று பெயரிட்டனர். இந்திய நாட்டிற்கென்று புதிய வரைபடத்தை உருவாக்கினர். அதில்  இந்தியாவைச் சுற்றியுள்ள மூன்று கடலுக்குமே புதிதாகச் சூட்டப்பட்ட பெயர்களையே சூட்டினர். அப்பெயர்களே இந்திய வரைபடத்தில் இன்று வரை உள்ளன. தமிழர்கள் சூட்டிய (குணக்கடல், குடக்கடல் , குமரிக்கடல்) பெயர்கள் எல்லாம் காணாமல் போயின. 

கடல்கோளினால் குமரிக்கண்டத்தை இழந்தோம். கயவர்களினால் நம் அடையாளத்தை இழந்தோம். இனி நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. நம் தாய்மொழியாம் தமிழைத் தவிர. 

" செந்தமிழே உயிரே நறுந்தேனே

செயலினை மூச்சினை உனக்களித் தேனே

நைந்தாய் எனில்நைந்து போகுமென் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே " 

பாவேந்தர் பாடிய இப்பாடலை உற்று நோக்குங்கள். "செம்மையான தமிழே,  என் உயிரே, இனிமையான தேனே உன் வளர்ச்சிக்காக என் செயலையும், மூச்சையும் உனக்கு அளித்தேன். அளிக்கிறேன். அளிப்பேன். 

தமிழே நீ அழிந்தால்  (நைந்தாய் எனில் ) என் வாழ்வும் அழிந்து ( நைந்து) போகும். நீ நல்ல நிலையில் ( நன்னிலை)  இருக்கும்வரை  , நானும் நல்ல நிலையில்தான் இருப்பேன் " என்கிறார் பாவேந்தர்.  எவ்வளவு பெரிய ஆழமானக் கருத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறார். 

"தமிழ் வாழ்ந்தால்தான் தமிழன் வாழ்வான். தமிழ் வீழ்ந்தால் தமிழன் வீழ்வான்." இந்த உண்மையை இனியாவது நாம் உணர வேண்டும். விழியை இமை காப்பது போல, நம் மொழியை நாம் காக்க வேண்டும். 

" தமிழால்

எல்லாம் முடியும்.

ஆனால்

தமிழனால்தான் ஒன்றும் முடியாது!

தமிழ் செய்த

ஒரே ஒரு தவறு ,

அது

தமிழனுக்குத் தாய்மொழியானதுதான்! 

ஈரோடு தமிழன்பன் இந்தக் கவிதையை நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது படித்தேன்.  அந்த நொடியே என்னுள் தமிழ்ப்பற்று வேரூன்றியது. உலகப்பற்று ஒழிந்தது. தமிழே என் உலகம் ஆனது. நம்மை வாழ வைத்த தமிழை நாம் வாழ வைக்க வேண்டுமே என்ற சிந்தனை தோன்றியது. 

இங்கிலாந்து என்பது ஒரு குட்டி நாடு. அவர்கள் மொழி ஆங்கிலம். அறுநூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த மொழி இனம் காணப்பட்டது. இன்று உலகமே பேசும் மொழியாக இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உலகின் முதன்மொழி தமிழ்மொழி. இன்று தமிழனே பேசத் தயங்குகிற, படிக்கத் தயங்குகிற மொழியாக இருக்கிறது தமிழ்மொழி. 

காரணம் என்ன?

ஈரோடு தமிழன்பன் சொன்னதுபோல அது தமிழனுக்குத் தாய்மொழி ஆனதுதான். தமிழ்மொழி  மட்டும் இங்கிலாந்து நாட்டில் தோன்றி, ஆங்கிலேயனுக்குத் தாய்மொழியாய் இருந்திருந்தால் இன்று உலகையே ஆட்சி செய்திருக்கும்.

கையில் அட்டகத்தி வைத்துக் கொண்டு ஆயிரம் பேரை வீழ்த்தியவனிடம் உண்மையான கத்தியைக் கொடுத்தால் எப்படி இருந்திருக்குமோ ? அப்படி இருந்திருக்கும் ஆங்கிலேயன் கையில் தமிழ் கிடைத்திருந்தால். ஒரே நாடு, ஒரே மொழி என்பதுபோல,  ஒரே உலகம், ஒரே மொழி என்ற நிலையைக் கொண்டு வந்திருப்பான். தமிழை உலக மொழி ஆக்கியிருப்பான். 

ஏதோ ஈழத்தமிழர்கள் இருப்பதால் தமிழ் தன் ஈரக்குலையைப் பிடித்துக் கொண்டு இன்னும் உயிரோடு இருக்கிறது. இல்லையேல் இங்குள்ள தமிழர்கள் தமிழை உயிரோடு புதைத்திருப்பார்கள். 

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த நம் முன்னோர்கள் தங்கள் தமிழ்ப்பற்றை இந்தியை எதிர்ப்பதில் காட்டினார்கள்.

இந்த நூற்றாண்டில் வாழ்கின்ற  நாம்,

  நம் தமிழ்ப்பற்றை

" இந்தியப் பெருங்கடலை " ,எதிர்ப்பதில் காட்டுவோம்.

" மனித நாகரிகத் தொட்டில் " என்று அழைக்கப்படுவது " குமரிக்கண்டம் " அங்கு தோன்றிய உலகின் முதல்மொழி தமிழ் மொழி.  அந்தத் தமிழ்மொழியின் பெருமையை நிலைநாட்ட தமிழ்மொழி தோன்றிய இடமான இன்றைய " இந்தியப் பெருங்கடலை " (குமரிக்கடலை)  தமிழ்ப்பெருங்கடல் " என்று பெயர் சூட்டி அழைப்போம்.

வங்க மொழி பேசுபவர்களுக்காக " வங்காள விரிகுடா என்று பெயர் சூட்டினார்கள். அரபிக் மொழி பேசுபவர்களுக்காக ' அரபிக் கடல் " என்று பெயர் சூட்டினார்கள். அதுபோல,  தமிழ் பிறந்த இடத்தில் உள்ள பெருங்கடலுக்கு "தமிழ்ப் பெருங்கடல் " என்று பெயர் சூட்ட வைப்போம். ஒரு மொழியின் பெயரால் உள்ள ஒரே பெருங்கடல்  "தமிழ்ப் பெருங்கடல் " என்ற பெருமையை நம் தமிழ் மொழிக்கு ஏற்படுத்திக் கொடுப்போம்.

இதுவே நம் தமிழினத்தின் தலையாயக் கடமை. 

தயிரை உடைய பானைக்கு "தயிர்ப்பானை"

என்று பெயர்!

தமிழினத்தை விழுங்கிய பெருங்கடலுக்கு

"தமிழ்ப் பெருங்கடல் " என்று பெயர்! 

தமிழா!

தலையைக் கொடுத்தேனும்

தமிழ்ப் பெருங்கடலைக் காப்போம்!

இல்லையேல்

நாளை

தமிழும் இருக்காது

தமிழினமும் இருக்காது!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

(அலைப்பேசி - 9965414583).

 


0 Response to "தமிழ் அறிவோம்! 200. தமிழ்ப் பெருங்கடல் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel