"கொன்றால் பாவம் தின்றால் போகும் "
உயிர்களை கொன்று தின்னும் உள்ளம் படைத்தவர்கள்
எல்லாம், " கொன்றால் பாவம் தின்றால்
போகும் " என்ற ஒரு பழமொழியை வைத்துக் கொண்டு எண்ணற்ற உயிரினங்களைக் கொன்று
தின்கிறார்கள். இந்தப் பழமொழியின்
உண்மையான பொருள் என்னவென்று உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியவில்லை போலும்.
"உயிர்களைக் கொன்ற பாவம் அதை
தின்பவர்களுக்கே போய்ச்சேரும் " என்ற பழமொழியே சுருக்கி " கொன்றால்
பாவம் தின்றால் போகும் " என்றாகிவிட்டது. அவரவர் வசதிக்கேற்ப பழமொழிகளை
மாற்றிக் கொண்டனர்.
இறைச்சிக் கடைக்காரர்தானே உயிர்களைக் கொன்று விற்கிறார்.
நாங்கள் வாங்கிதானே உண்கிறோம் . அதனால் அந்தப் பாவம் எல்லாம் அந்தக்
கடைக்காரர்களுக்குத்தான் போய்ச்சேரும் என்று எண்ணுகிற அறிவிலிகளை நாம் என்ன
சொல்வது? உயிர்களைக் கொன்ற பாவம் எல்லாம் அதைத்
தின்பர்களுக்குத்தான்
போய்ச்சேரும். ஆம், சரியான முகவரியைக் கண்டுபிடித்து வந்து சேரும்.
" மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்?
"
என்று பாடுகிறார் பத்திரிகிரியார். பல உயிர்களைக்
கொன்று இந்த உலகில் வாழாமல், அவைகளை என்னுயிர் போல் நினைத்து என் தவத்தை முடிப்பது
எப்போது? என்று கேட்கும் பத்திரிகிரியாரைப் போல , எல்லா உயிர்களையும் தம்முயிராய்
நாம் எண்ணி வாழ்வது எக்காலம்?
" புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
" என்று புலியின் பெருமையைப் பேசுபவர்களே, பசியால் தன் உயிரே போனாலும் ஒரு
உயிரைக் கொன்று தின்னாதவனே உண்மையான மனிதன் என்று எப்போது மனிதனின் பெருமையைப்
பேசுவீர்கள்? புலிக்கு இருக்கும்
வைராக்கியம் கூட மனிதனுக்கு இல்லையெனில் மனிதனை ஏன் உயர்திணை என்கிறீர்கள்? அஃறிணை
என்றல்லவா அழைக்க வேண்டும்?
மனிதனுக்கு வயிறுதானே முக்கியம். வைராக்கியமா
முக்கியம்? அஃறிணை மீது அன்பு காட்டும் மனிதனே உண்மையான உயர்திணை. நம்மிடம் அடைக்கலம் தேடி வரும் உயிர்களை அஞ்சி ஓட
வைக்கலாமா? அவைகளின் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராய் மாற்றினால்தான் நாம் உயர்திணை
ஆவோம்.
கொசு கடித்தால் கூட அதை பொறுக்க முடியாமல் அதைக்
கொல்ல நினைக்கும் மனிதர்களே! ஒரு கொசுக்கடியைக் கூட தாங்க முடியாத நீங்கள் பல
உயிர்களை துன்புறுத்தி கொன்று உண்கிறீர்களே, அதன் வலியை என்றாவது உணர்ந்ததுண்டா?
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பார்கள். அப்படித்தான் ஊழ்வினை உருத்து வந்து
ஊட்டுகிறது. மதிகெட்ட மனித இனத்தை கொசுவடிவில்.
" தன் குருதியை பாலாக்கி
நமக்கு உணவாகக் கொடுக்கிறது பசு!
நம் குருதியைத்
தன் உணவாக எடுக்கிறது கொசு! "
பசுவுக்கு செய்த பாவத்தை எல்லாம் கொசுவிடம்
அனுபவிக்கிறோம்.
" கொலை செய்யாமல் இருப்பாயாக " என்று சொல்வதன் பொருள் என்ன?
மனிதர்களைக் கொல்லாமல் இருப்பாயாக என்பதல்ல. " எந்த உயிரையும் கொல்லாது
இருப்பாயாக " என்பதே பொருள். மனிதனைக் கொன்றாலும் கொலைதான். மானைக் கொன்றாலும்
கொலைதான். பசுவைக் கொன்றாலும் கொலைதான். கொசுவைக் கொன்றாலும் கொலைதான்.
ஏனெனில், இங்கு எல்லா உயிரும் சமம்தான்.
பல உயிர்களை அடித்து கொல்கிறான் மனிதன்!
அந்த மனிதனையே
கடித்துக் கொல்கிறது
கொசு!
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும் "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(அலைப்பேசி - 9965414583).
0 Response to "தமிழ் அறிவோம்! 202. கொன்றால் பாவம் தின்றால் போகும் ஆ.தி.பகலன் "
Post a Comment