சினிமாவின் இனிப்பு
_____________________
சினிமா என்பது குறித்து சிறுவயதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றியதுண்டு. திரைச்சீலையில் நடக்கின்ற அனைத்தையும் அப்படியே உண்மையென்று நினைத்திருக்கிறோம். சண்டை, அன்பு, காதல், சிரிப்பு என இப்படி நினைத்திருந்தோம். ஆனால் காலங்கள் செல்லச்செல்ல எண்ணங்களும் அது குறித்தான பல விஷயங்களும் மாறியது.
பணத்திற்கு, புகழிற்காக , தொழிலிற்கு , நடிப்பு , இயக்குவது என்பதினூடாக இதனை புரிந்து கொள்ள முடிகின்றது.சினிமா பொழுதுபோக்கு என்ற அம்சத்தில் மிகச்சிறந்த வடிவமாக இருப்பதை உணரலாம். நாடகம், தெருக்கூத்து, வீதி நாடகம் என்பதுடன் சினிமாவை நவீன நாடகமாக அதிக முதலீட்டில் எடுக்கப்பட்டதாகவே காண்கிறோம். அவ்வாறே மாற்றமும் அடைந்தன. ஆனால் தற்போது இந்தப் பொழுதுபோக்கு என்பதை பல இடம்பிடித்துக் கொண்டன. அவை youtube , Facebook, whatsapp , online games என பலவும் இதரவும் உள்ளன. இருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் சினிமாவின் தாக்கம் அபரிமிதமானது.
இதனை நாம் கதாநாயகன் , நாயகி அணிந்த ஆடை அவரைப்போன்ற ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என அறிந்து கொள்ளமுடிகின்றது. பெண்களுக்கான ஆடை புடவைக்கூட இந்தப்படத்தில் நடித்தப்புடவை , இந்த நடிகை அணிந்த புடவை , என புடவையின் பெயரே வைக்கின்ற சூழலை நாம் அறிகின்றோம்.
சின்னவயதில் சினிமாக் குறித்து சிலர் சொன்னவைகளை இன்று நினைக்கின்றபோது சிரிப்பு வருகிறது. அதாவது திரைச்சீலையின் பின் நடிகர் எல்லாம் வந்து நாம் படம் பார்க்கின்றபோது நடித்துவிட்டு போவார்கள். ஏன் இப்படி சொல்றீங்க என கேட்டபோது , அதான் நாம்தான் காசுகொடுத்து படம் பார்க்கிறோமே என்று சொன்னார்கள். கிராமத்தில் சேர்மீது , சிலநேரம் மண்குவித்து அதன்மேல் உட்கார்ந்து பார்த்த அனுபவங்கள் , கைத்தட்டல் , விசிலடித்தல் என நீண்ட நினைவுகள் அலாதியானவை . அதேபோல் ஒரு படத்தை பலமுறை பார்க்கின்றபோது ஒரு கவிதை போல பலவித உற்றுநோக்கல், என பார்க்கின்ற விதமும் தோன்றி மறையும். சினிமாப் பெட்டி வரும்போது அதனை விழாவாக கொண்டாடி மகிழ்ச்சி அடைந்த செயல்கள் மகிழ்ச்சியானது.
சிலநேரங்களில் ஹீரோ அந்த வில்லனிடம் இத்தனை அடி அடிப்பார் என்று பந்தயம் கட்டி வெற்றி பெற்றதெல்லாம்கூட நடந்திருக்கிறது. திரைப்படம் தொடங்குவதற்கு முன் சீக்கிரமாகச் சென்று திரைச்சீலைக்குப்பின் சென்று , இங்கு யாரும் எந்த நடிகரும் இல்லையே என்று கூட யோசித்ததுண்டு. சிவராத்திரி, ஏகாதசி நாள்களில் இரவு முழுக்க படம் காண்பிக்கப்படும். சிறப்புக்கட்டணம் உண்டு. தொடர்ச்சியாக திரைப்படங்கள் காட்டப்படும்.
கிராமங்களில் சிலநேரம் கரண்ட் தடைபட்டால் டிக்கெட் தரப்படும். நாளை வந்து மீண்டும் முதலிலிருந்து படம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது இருக்கின்ற மாதிரியான ஜெனரேட்டர் இருந்தாலும் வருகின்ற கூட்டத்திற்கும் , செலவிற்கும் வித்தியாசம் இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தமாட்டார்கள்.
சினிமா திரைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தது நினைவிலுள்ளது. மறுநாள் வகுப்பறையில் அந்தப் படத்தை மட்டுமே பேசி ஆசிரியரிடம் திட்டு வாங்கியதுமுண்டு. சினிமாவின் தாக்கமாக நாம் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ள நிலையினை வைத்தேத் தெரிந்து கொள்ளலாம். தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிடித்தமான கதாநாயகர்/ நாயகி பெயர் வைத்திருப்பதை நாம் காண்கிறோம். இப்படி பெயர்கள் , ஆடை, பயன்படுத்தும் பொருட்கள் ( Bag, Band ) வீடு, அலுவலகம் கடைகளுக்குப் பெயர்வைத்தல் என சினிமாவின் தாக்கத்தை தெள்ளத்தெளிவாக பார்க்க முடிகின்றது. சினிமாப் பாட்டுப்புத்தகங்களை வாங்கி மனப்பாடம் செய்து பாடியதெல்லாம் மிகச்சிறந்த தருணம் . பள்ளியில் இடைவேளை நேரத்தில் தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடி பாராட்டு வாங்குவது , ரசிப்பது என நீள்கின்றது சினிமாவின் தாக்கம் ..
#சினிமாவின்இனிப்புதொடரும்…..
மயிலம் இளமுருகு
mailamilamurugu@gmail.com
0 Response to "சினிமாவின் இனிப்பு"
Post a Comment