கொடி வீரன் திரைப்படம் விமர்சனம்

Trending

Breaking News
Loading...

கொடி வீரன் திரைப்படம் விமர்சனம்

கொடி வீரன் திரைப்படம் விமர்சனம்
கொடிவீரன் திரைப்படம் விமர்சனம்
தமிழ் சினிமாவில் பல நல்ல முன்முயற்சி படங்களும் கொடிவீரன் போன்ற பழைய மசாலா வகை படங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பழைய பாச மலர் , சின்னதம்பி , சேரன் பாண்டியன் மற்றும் சமீபத்தில் வெளிவந்த கருப்பன்  போன்ற மாதிரியான  படங்கள் அண்ணன் – தங்கை பாசம்  சார்ந்த திரைப்படங்கள் ஆகும். இவ்வகையிலான   படங்கள் தமிழில் அதிகமாகவே வெளிவந்து குறிப்பிட்ட படங்கள் வெற்றியும் , சில படங்கள் தோல்வியும் அடைந்துள்ளன. . அந்த வகையில் கொடி வீரன் படம் பழைய கதையைக் புதிய கள் மொந்தையாக கொடுக்க முயற்சி செய்துள்ளது.
  குட்டிப்புலி , கொம்பன் , மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடித்தும் தயாரித்தும் உள்ளார் சசிகுமார்.  வழக்கமான அண்ணன் தங்கை கதைதான்.  இப்படத்தில் மூன்று அண்ணன் மூன்று தங்கை என வித்தியாசப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. நல்ல அண்ணணின்  பாசம் வெற்றி பெற்றதா ?,  வில்லனான அண்ணணின் பாசம் வெற்றி பெற்றதா?  என்ற கோணத்தில் அவரவர் பார்வையில் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. சசிகுமாரின் தங்கையாக சனுஷா ( ரேணிகுண்டா படத்தில் நடித்தவர்  ) நடித்துள்ளார். ஹீரோவுக்கு அடுத்தபடியான முக்கியமான கதாபாத்திரமாக இக்கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சரியாகவே பயன்படுத்தி அசத்தியுள்ளார் சனுஷா. வில்லன் பசுபதியின் தங்கையாக பூர்ணா நடித்துள்ளார். இவருக்கு கொடுத்த பணியை சிறப்பாகவே செய்துள்ளார். அரத பழமையான இப்படத்திற்கு அவர் உண்மையிலே மொட்டை அடித்தது தான் வேடிக்கையாக உள்ளது. இவர் கண்களிலே மிரட்டலை தட்டிவிடுகின்றார். 
    மூன்றாவது அண்ணன் தங்கையாக விதார்த் மற்றும் மகிமா  நடித்துள்ளனர். விதார்த் தன்னுடைய இயல்பான நடிப்பால் மீண்டும் கவனம் பெறுகின்றார்.  இவருடைய தங்கையாக நடித்த மகிமா காதல்  காட்சி என வந்து செல்கின்றார். படத்தில் அழுத்தம் இல்லாத கதாபாத்திரம் இவருடையது. மேலும் பாலசரவணின் நகைச்சுவை சிலவிடங்களில் சிரிக்கவும் , படத்தில் இருந்து விலகிவிடவும் வைக்கிறது. இந்திரகுமார், இயக்குனர் விக்ரம் சுகுமாரன் போன்றோரும் நடிததுள்ளனர். இப்படத்திற்கு ஓரளவு ஆறுதலான இசையை ரகுநந்தன் கொடுத்துள்ளார். கதிரின் ஒளிப்பதிவு அசத்தலான அனுபவத்தை தருகிறது. வன்முறை , பழி என நீண்டு செல்லும் இப்படத்திற்கு சூப்பர் சூப்பராயன் அவரின்  கூட்டணியினரின் உழைப்பும் குறிப்பிடத்தக்கது. வெங்கட்ராஜன் அவர்களின் எடிட்டிங் வித்தியாசமாக உள்ளது. 
      
   கதை இதுதான்….தன் கணவனின் தகாத நடத்தையில் வெறுப்புற்ற நிறைமாத கர்ப்பிணிப்பெண் தூக்கு போட்டுக்கொண்டு இறக்கும் தறுவாயில் அவருக்கு குழந்தை பிறக்கிறது. அவர்தான் கொடிவீரன் என்று நாம் நினைப்போம் ஆனால் கொடிவீரனின் தங்கையாக காட்டப்படுகின்றார். அம்மா இறந்துவிடவே கொடிவீரன்  தந்தையும் , தாயுமாக தன் தங்கையை வளர்கின்றார். அண்ணன் மீது பாசம் கொண்டவராக சனுஷா அசத்தியுள்ளார். சசிகுமார் ஊரில் சாமியாடியாக நடித்துள்ளார். மக்கள் அனைவரும் இவரை மதிக்கின்றனர். சாமியாடி குறி சொல்லிக் கொண்டிருக்கும் போது அனைவருக்கும் நல்ல குறி சொல்கிறார். தன் தங்கைக்கு குறி சொல்லும்போது திருமணத்தில் கண்டம் இருப்பதாக சொல்கின்றார். அதை நினைத்து வருத்தப்பட்டு கோயிலுக்கு சென்று வேண்டுதல் செய்யும் இடத்தில் விதார்த்தின் தங்கையான மகிமாவின் சந்திப்பு அவருள் காதலைத் தோற்றுவிக்கின்றது. இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது. 
   தங்கைக்காகவும் தன் மாப்பிள்ளைக்காகவும் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார் பசுபதி. இவரும் இவருடைய மைத்துனரும் சேர்ந்து ஊரில் நாச வேலைகள் செய்கின்றனர். மைத்துனர் தன் நன்மைக்காக பட்டாசு கடையையே கொளுத்திவிடுகின்றார். இன்னொரு பக்கம் நேர்மையான கோட்டாட்சியராக)  (  RTO )  விதார்த் வலம் வருகின்றார். பசுபதியின் மைத்துனரைக் கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். இவருக்கு இவரின் நண்பர் அரசாங்க வக்கீல் உதவி செய்கின்றார். சிறையிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் வெளியே வருகிறார் பசுபதி. தன் மைத்துனருக்கு வந்த பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார்.
     
    உன் அண்ணன் காதலை ஏற்க வேண்டுமானால் நீ என் அண்ணனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மகிமா கொடிவீரனின் தங்கையான சனுஷாவிடம் சொல்கிறார். இதை ஒப்புக்கொண்ட சசிகுமார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கின்றார். நீதிமன்றத்தில் வழக்கு வேகமாக நகர வழக்கு தொடுத்த விதார்த்திற்கு எச்சரிக்கை விடுத்து செல்கிறார் பசுபதி.  இதைப்பார்த்த கொடிவீரன் பசுபதி மற்றும் அவருடைய கூட்டாளிகளை பசுபதியின் வீட்டிற்கே வரவழைத்து தன் மாப்பிள்ளையை எதுவும் செய்யக்கூடாது என கட்டையிடுகின்றார். வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் உன் மாப்பிள்ளையை சாகடித்து விடுவேன் என்று கொடிவீரனிடம் சவால் விடுகிறார் பசுபதி. 
    இப்படி நல்லவனின் அண்ணன் தங்கை பாசம் , கெட்டவனின் அண்ணன் தங்கை பாசம் என படம் நகர்கிறது. விதார்த் குடும்பத்தினர் திருமணம் முடிந்து ஒருநாள் திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு அனைவரும் செல்கின்றனர். அங்கே சசிகுமார் மீது மூவர் லைட் அடிக்கின்றனர். அப்போது போன் வரவே விதார்த் வெளியே செல்வதைப் பார்த்து பதறி பின்னாலே சென்று பாதுகாக்கிறார். பிறகு திரைப்படம் முடிந்து வீட்டிற்கு வண்டியில் திரும்புகையில் பசுபதியின் ஆட்கள் லாரி மற்றும் காரில் பின்தொடர்ந்து மிரட்டல் விடுக்கின்றனர். இக்காட்சி பரபரப்பாக காட்டப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு உன் மாப்பிள்ளைக்கு கால் வரும் நீ பதறிப்போவாய் என பயமுறுத்துகிறார் பசுபதி. அதைப்போலவே தூங்காமல் இருந்து மாப்பிள்ளையை  பின் தொடர்ந்து செல்கிறார்  கொடிவீரன் .. சிலை பிரச்சினை காட்டி அதில்  உன் மைத்துனரைப் போட்டத்தள்ள போகின்றார் என் ஆள் என்று போன் செய்து மிரட்டல் விடுகின்றார் பசுபதி. 
   கொடிவீரனின் தாய்மாமன் அப்போது  காப்பாற்றுகின்றார். உள்ளாட்சி தேர்தலுக்காக ரூ.4000 மற்றும் பிரியாணியும்  கொடுத்த செய்தியை மக்களிடம் கூறுகின்றார்.  அனைவரும் பணம் பெறுவதுமாவாகவும் பிரியாணி சாப்பிடுபவராக காட்டப்பட்டுள்ளது. இக்காட்சி நடைமுறையில் இருப்பதை  காட்டுவதாகவே  உள்ளது. அரசியல் சீர்கேடு, மக்களின் நிலையைக் இக்காட்சி காட்டுகிறது. விதார்த்தின் தம்பியை பிடித்து வைத்திருப்பதாக தகவல் வரவே விதார்த் அந்த இடத்திற்கு  விரைகிறார் , ஆனால் அங்கு பசுபதியின் மைத்துனர் விதார்த் மற்றும் சனுஷாவைக் கொல்ல கத்தியைத் தூக்குகின்றார் . அவர்கள் இருவரும்  காட்டிற்குள் வேகமாக ஓடுகின்றனர். விரட்டிச் சென்று விதார்த் மீது கத்தியை வைக்க அப்போது அங்கே வரும் கொடிவீரன் அவர்களிடம் சண்டை போடுகின்றார். குடிசையில் தங்கையையும் மாப்பிள்ளையும் தங்க வைத்துவிட்டு மீண்டு வந்து  சண்டை போடுகின்றார். அப்போது திடீரென பசுபதியின் மைத்துனர் பெட்ரோலை குடிசையில் ஊற்றி தீ வைக்கின்றார். பதறிக் கொண்டு உள்ளேச் சென்ற சசிகுமார் அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருக்க வெளியே அழைத்து வருகின்றார். அப்போது நடக்கும் சண்டையில் சசிகுமார் பசுபதியின் மைத்துனரை நெருப்பில் தள்ளிவிட அவர்  இறந்து விடுகின்றார். 
    சடங்கு நிகழ்வில் தாலியைக் கொடுக்காத தன் தங்கையிடம் தாலியைக்  கொடு என்கிறார் பசுபதி. அப்போது பூர்ணா தாலியைக் கழற்றி கொடுத்துவிட்டு  என் தாலியைக் கொடுத்து விட்டேன். கொடிவீரனின் தலையை கொய்து மகிமாவின் தாலியை எடுத்து வா என்கிறார். வீட்டிற்கே வந்து காரிய பத்திரிகை கொடுத்து அதிர்ச்சி அளித்து மிரட்டி செல்கிறார் பசுபதி. பின் சனுஷா மற்றும் மகிமா இருவரும் பூர்ணாவிடம் நல்லவிதமாக பேசுகின்றனர். ஆனால் பூர்ணா எதிர்க்கவே ,அப்போது சனுஷா நாளை காலை முடிந்தால் என் அண்ணனைத் தாண்டி என் கணவர் மீது கை வையுங்கள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு செல்கின்றார். மறுநாள் மீன்பிடித்திருவிழாவில் விதார்த் மீன்பிடித்துக் கொண்டிருக்க  பசுபதியின் ஆட்கள் உள்ளேச் சென்று விதார்த்தை கொல்ல முயற்சி செய்கின்றனர். . அப்போது கொடிவீரன்  நீருக்குள் இருந்து வெளியே வந்து வந்த அனைவரையும் தாக்கிவிட்டு பசுபதியிடம் சண்டை போடுகின்றார். இறுதியில் கத்தியை கழுத்தில் வைத்துவிட்டு கொல்லாமல் செல்கின்றார்.பசுபதி கொடிவீரனின்  பின்னால் சென்று  கொலை செய்ய கத்தியை தூக்கும்போது பூர்ணா  தடுத்து விடுகின்றார். முடிவில் கொடிவீரனும் மகிமாவும் திருமணம் செய்து கொள்கின்றனர் என்பதாக படம் முடிவடைகிறது. 
      இயக்குனர் முத்தையா தொடர்ந்து ஒரே இடத்தை,களத்தைப்  பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பது வருங்காலத்திற்கு நல்லதன்று. அதைப்போலவே தொடர்ந்து வன்முறைக் காட்சிகள் , ஆயுதம் என ஸ்டீரியோ டைப் வகையில் செல்வதையும் தவிர்த்தல் வேண்டும். இத்தனை வெட்டுக்குத்து ,ஆயுதம் பயன்படுத்துவதும் அவசியமானதா என்று யோசிக்க வேண்டும். பாடல்களில் அய்யோ அடி ஆத்தாடி  , களவாணி உன்னை எண்ணி என்பவை சரியான ரகம். மற்றபடி கொடிவீரன் பழைய வீரன் தான். மேலே செல்லும் தமிழ் சினிமாவை கீழே இறக்காத வகையில் திரைப்படங்கள் வரும்காலத்தில் வெளிவந்தால் நல்லது. ஆரோக்கியமான தமிழ் சினிமாவை  ஆவலுடன் எதிர்பார்ப்போம்……
மயிலம் இளமுருகு
09.12.2017
MOBILE- 9600270331
நன்றி
www.discoverycinemas.com

0 Response to "கொடி வீரன் திரைப்படம் விமர்சனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel