தமிழில் ஆங்கிலப் பேய் படம் ‘ அவள்’
தமிழ் திரைப்படங்கள் பல்வேறு விதமான கதை அம்சங்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது . அந்தவகையில் தற்போது பேய் படங்கள் எடுப்பதும் வெளிவருவதுமாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக பேய் படங்கள் என்றால் காமெடி , வழக்கமான படக்காட்சிகள் , அதற்குரிய நடிகர்கள் என்று இல்லாமல் சற்று வித்தியாசமாக ஆங்கிலப் படத்தில் தமிழ் நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்குமோ அந்தவகையில் எடுக்கப்பட்டு தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது ‘ அவள் ‘ என்ற திரைப்படம்.
சித்தார்த் நடிப்புடன் சேர்த்து எழுத்து , தயாரிப்பு என்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். மிலிந்த்ராவ் மெனக்கெட்டு இயக்கியுள்ளார். வழக்கமான பேய்க்கதை ஆனால் சொல்கின்ற விதத்தில் சற்று வித்தியாசப்படுத்தியுள்ளார் இயக்குநர். பல ஆங்கிலப் படம் பார்த்த மாதிரி இப்படம் தோன்றவும் செய்கிறது. ஸ்ரேயாஷ் கிருஷ்ணா மிக அருமையாக ஒளிப்பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இவரின் ஒளிப்பதிவு அருமை. வீடு , மருத்துவமனை , மலை என பல்வேறு இடங்களில் இவரின் உழைப்பைப் பார்க்க முடிகின்றது. கிரீஷ் என்பவரின் இசை அட்டகாசமாக இருக்கிறது. ரசிகர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு மிக அருமையாக இசையமைத்துள்ளார்.
யாவரும் நலம் , டிமான்ட்டி காலனி என்ற திரைப்படங்களுக்கு அடுத்து வந்துள்ள ஒரு பேய் படமாக இப்படத்தை நாம் காண்கிறோம். கான்சூரிங் , ஓமன் , எக்ஸார்ஸிட் போன்ற ஆங்கிலப்படங்களின் பிம்பத்தையும் இதனுள் பார்க்க முடிகின்றது. கதை இதுதான் ஒரு ஆண் குழந்தை பிறப்பதற்கு பெண் குழந்தை இறந்துதான் ஆக வேண்டுமென்றால் அந்த ஆண் குழந்தையே வேண்டாம் என்பதுதான் . அதனை சுற்றி வளைத்து சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர்.
இமாலய மலைப்பகுதியில் சைலண்ட் வேலி என்ற இடத்தில் கதை நடக்கிறது.இப்படம் உண்மைச் சம்பவம் என்று திரையில் காட்டப்படுகின்றது. ஆரம்பத்திலே பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்டப்படுகின்றது. சீனப் பெண் தாயாருக்கும் மகளுக்குமான பாசம் விரிய ரத்தம் சொட்ட ‘அவள்’ என்று திரைப்படம் நகர்கிறது. அர்ஜீன் ரெட்டி படம் நினைவிற்கு வந்து போகிறது. இளம்தம்பதியான கிரிஷ் ( சித்தார்த்) லட்சுமி ( ஆண்ட்ரியா) இருவரின் நெருக்கத்தோடு படம் பயணிக்கத் தொடங்குகிறது. கிரிஷ் மூளை & நரம்பியல் மருத்துவராக பணியாற்றுகின்றார்.
இவர்களுடைய வீட்டிற்கு அருகில் அதுல் குல்கர்னி ,மனைவி , இரு பெண் குழந்தைகளுடன் குடிவருகின்றனர். பந்து விளையாடி கண்ணாடி உடைந்ததாக ஜெனி வந்து லட்சுமியிடம் கூறுகின்றார். ஜெனியின் அம்மா லட்சுமியிடம் பேசுகின்றார்.ஜெனியின் அம்மா இறந்த பிறகு தன்னை இரண்டாவது மனைவியாக அதுல் திருமணம் செய்தார் என்றும் கூறுகின்றார். ஜெனி தனியாக கிணற்றின் அருகில் நிற்பதை பார்க்கின்றார் கிரிஷ், பிறகு ஓடிச்சென்று கிணற்றில் விழுந்த ஜெனியைக் காப்பாற்றுகின்றார். ஏன் இப்படி ரிஸ்க் எடுத்த என்று கோபமாக லட்சுமி கேட்க எதுவும் பேசாமல் லிப்லாக் செய்கின்றார் கிரிஷ் .
பல காட்சிகள் மற்ற படங்களை நினைவுபடுத்துகின்றன. ஜெனிக்கு வலிப்பு வருதல் காப்பாற்றிய கிரிஷிற்கு நன்றி சொல்லும் விதமாக முத்தமிடுவது , டின்னரில் மற்றவருக்கு தெரியாமல் கிரிஷ் காலை சீண்டுவது அதனை சமாளிப்பது என நகர்கிறது. ஜெனி எட்டிப் பார்க்கின்றாள். ஒரு உருவத்தை பார்த்து பயப்படுகின்றனர். அதுல் குல்கர்னி செல்லும்போது பின்னால் உருவம் செல்வது என எல்லாப் படத்திலும் காட்டுவது போன்ற காட்சிகள் வருகின்றன. ஓசைக் கேட்டு ஆப் செய்துவிட்டு சென்றபோதும் திரும்பவும் அதே ஓசை வருகிறது. எனக்கும் கேட்டுச்சி என்று ஜெனி வந்து நிற்கிறாள். ஜெனி. குழந்தையை விட்டு நடந்து செல்கிறார் .குழந்தை தடுக்கிவிழ கிரிஷ் காப்பாற்றிவிட , தன் தந்தையுடன் வீட்டிற்கு வந்தவுடன் ஜெனி கீழே மயக்கம் போட்டு விழுகிறாள்.
மனோதத்துவ மருத்துவரான சுரேஷிடம் ஜெனியை அழைத்துச் செல்கின்றனர். சுரேஷ் விசாரிக்க ஜெனி தன்னுடைய மொபைலில் Home என call வருகிறது என்று தொடங்கி ,பல விஷயங்களைச் சொல்கிறார்.விஷயங்கள. வீட்டை விட்டு போய்விடுங்கள் என்ற செய்தியை மருத்துவரிடம் சொல்கிறார் ஜெனி. சுரேஷிடம் வந்து ஜெனி அதுல் , கிரிஷ் என வந்து பழைய நினைவுகளை மீட்டுக்கொணர முயற்சிகின்றனர். வயிற்றைப் பிடித்துக்கொண்டு ரத்தத்தோடு அழுகின்றாள் ஜெனி. இக்காட்சியில் அருமையாக பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார் ஜெனி. தன்னுடன் உள்ளவர்களிடம் ஜெனி சைனீஸ் மொழியில் பேசியதாக கூறுகின்றார். ஏதோ டப்பிங் படம் பார்க்கிற உணர்வு ஏற்படுகிறது. பாஸ்டர் ஜெனியைச் சந்திக்கின்றார். வயிற்றில் இருந்த ரத்தத்தை துடைத்தாயே யாருடையது என்று சுரேஷ் கேட்கிறார். உண்மையைச் சொல் என்கிறார்.
பாஸ்டரிடம் ஜெனியின் நடிப்பு அப்லஸ் அள்ளுகின்றது. தமிழ் சினிமாவில் பேய் ஓட்டுவதெல்லாம் ஏன் இப்படி மக்களை ஏமாற்றுகிறனர் , இருப்பினும் இக்காட்சிகள் அருமையாக காட்டப்பட்டுள்ளன. அந்தரத்தில் பறப்பது, தலைகீழாக தொங்குவது , இயல்பு நிலைக்கு வந்தபோது பாஸ்டர் கோமா நிலைக்கு சென்றதை அறிந்து கிரிஷ் உள்ளிட்டோர் வருந்துகின்றனர். வீடு மாற்றலாமென்று அதுல் குல்கர்னி சொல்ல நான் தான் நார்மலாகி விட்டேனே என்று இங்கேயே இருக்கலாம் என்று கூறுகின்றாள்.
வீட்டு வேலைக்காரி ஏதோ மாந்திரீகம் செய்ய அதுல் வந்து திட்டிச் செல்கின்றார். லட்சுமி கத்த கிரிஷ் சென்று பார்க்க மறுபடியும் லிப்லாக் காட்சி, முன் வந்த மாந்திரீகவாதியிடம் விசாரிக்கின்றனர். அமானுஷ்யத்தை வீட்டில் தேடுகின்றனர். சைனீஸ்காரர் உதவியுடன் ,சீனமொழியில் படம் வரைந்து எழுதுகின்றார் . இந்த வீட்டில் ஒரு பிரேதம் இருக்கு அதுதான் உங்களை துன்புறுத்துகின்றது என்கிறார். பாதி இரவில் கிரிஷ் வீட்டைப் பார்கின்றார். எல்லாம் தலைகீழாக இருக்கிறது. காரும் தலைகீழாக நிற்கிறது. இக்காட்சிகளின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.சத்தம் வருகிறதே என்று லட்சுமி ஏறி பார்கிறார். உருவம் நிற்பதை கண்டு பயந்து கீழே விழுகின்றார்.
கிரிஷிடம் நம் வீட்டில் ஏதோ இருக்கிறது என்று கூறுகிறார். பின் தன் மனைவியை மருத்துவமனை சென்று உடல்பரிசோதனை செய்கின்றனர் கிரிஷ். குழந்தை நார்மலாக இருப்பதாக மருத்துவர் சொன்ன பிறகே நிம்மதி அடைகின்றனர். கிரிஷ் மருத்துவம் பார்க்கிற இடத்தில் உருவம் உலாவ சற்று தடுமாறி தவறிழைக்க நோயாளி கதறுகின்றார். மாந்திரீகவாதியிடம் ஜெனி தனக்கு கிடைத்த பழைய சீப்பை கொடுக்க, பழைய தொடக்கத்தில் காட்டிய தாய் மற்றும் குழந்தை வந்து செல்கின்றனர். இப்போது பிளாஸ்பேக்கான செய்திகளை சுரேஷ் கிரிஷிடம் சொல்கிறார். 80 வருடங்களுக்கு முன் இவ்விடத்தில் ஒரு சைனீஸ் குடும்பம் வாழ்ந்ததாகவும் ,பின்னர் மூவரும் இறந்து கிடந்த காட்சிகள் என அனைத்தையும் சொல்கிறார். சிறுவயது முதல் பேசாமல் இருந்த பெண்ணைப் பார்த்து மீதிக்கதையையும் தெரிந்து கொள்கின்றனர்.
1935 ஆம் வருடம் சிறுவயதில் பக்கத்து வீட்டில் மலர்வனம் இருந்தது நான் அங்கு பூப்பறிக்க செல்வேன். சீனாக்கார தந்தை தனக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டுமானால் பெண் குழந்தையைச் சாகடிக்க வேண்டுமென்று நம்புகின்றார். அதனால் என்னை தூக்கிச் சென்று வெட்டச் சென்றார். அப்போது அங்கிருந்த அவருடைய மனைவி வந்து என்னைக் காப்பாற்றினார். சூரிய கிரகணத்தன்று தன்னுடைய பெண் குழந்தையின் கண்களை துணியால் கட்டி படுக்கவைத்து கத்தியால் வெட்டி சாகடித்தார். இதைப்பார்த்த தாய் பதறி அழுது , அருகில் இருந்த கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். பிறகு அந்த சீனாக்கார தந்தையும் மனைவி இறந்த துக்கத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை கொண்டார். இப்படியாக கதை நகர்கிறது.
மருத்துவமனையில் இருந்த லட்சுமியிடம் அந்த இரண்டு பேய்களான தாய் மற்றும் குழந்தை தொடர்ந்து துன்புறுத்த ,வீட்டிற்கு வருகின்றார். பிறகு கிரிஷ்தான் காரணம் என்று அறிந்து உள்ளே தள்ளி பூட்டிவிடுகின்றார். கிரிஷ் விகாரமாகி ஆண்ட்ரியாவை தாக்குகின்றார். சீனாக்கார தந்தை கிரிஷிடம் புகுந்து தாண்டவம் ஆடுகின்றார். இறுதியில் கிரணம் முடிய மேலே பறந்த கிரிஷ் கீழே விழுந்து இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இறுதியில் நான்கு வருடங்கள் கழித்து ஜெர்ம் கடற்கரையோரம் வசிக்கும் கிரிஷ் மற்றும் லட்சுமியைப் பார்க்க ஜெனி குடும்பத்தினர் வருகின்றனர்.
மகன் எங்கே என்று கேட்க கிரிஷ் தன் மகனை அழைக்கின்றார். அப்போது பழைய காட்சிகள் சித்தார்த் ஆண்ட்ரியாவிடம் செய்த லீலைகள் தோன்றுகின்றன. மகன் வில்லங்கமாக பார்ப்பதாக படம் முடிவடைகிறது. தொழில்நுட்ப ரீதியாக நன்றாக வந்துள்ளது இப்படம். கதை என்னவோ அரத பழைமையானது. முத்தக் காட்சிகளை ஏன் இவ்வளவு வைத்துள்ளார்கள் என்பது இயக்குநர் அவர்களுக்கே வெளிச்சம். ஆங்கிலப் படம் போன்று எடுத்ததால் இவையும் தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். தமிழ்ச்சூழலில் குடும்பத்துடன் பார்க்க தகுதியற்றதாகவே இப்படம் இருக்கின்ற காரணத்தாலேயே A சான்றுடன் வெளியிடப்பட்டுள்ளது. இசை , ஒலிக்கலவை, கலை, ஒளிப்பதிவு , ஜெனியாக நடித்த அனிசா, சித்தார்த்தின் இயல்பான நடிப்பு , ஆண்ட்ரியாவின் நெருக்கம் , எதிர்பார்க்காத சில திருப்பங்களையும் அமைத்து வெற்றிப்படமாக்கிய இயக்குநர் போன்றோருக்காக 18 வயதிற்கு மேற்பட்ட , திகில் பிடிக்கும் என்ற அனைவரும், நல்ல ஒலிக்கருவி பொருந்திய தியேட்டரில் பார்த்தால் ஒப்பற்ற அனுபவத்தைப் பெறலாம்….திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டுகளும்…..
மயிலம் இளமுருகு
05.11.2017
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்
0 Response to "அவள் திரைப்பட விமர்சனம்"
Post a Comment