கட்டுரை...புதுக்கோட்டை – கோயில்களும் கல்வெட்டுகளும்

Trending

Breaking News
Loading...

கட்டுரை...புதுக்கோட்டை – கோயில்களும் கல்வெட்டுகளும்

கட்டுரை...புதுக்கோட்டை – கோயில்களும் கல்வெட்டுகளும்


04.11.2017

புதுக்கோட்டை – கோயில்களும் கல்வெட்டுகளும்

மயிலம் இளமுருகு

    தமிழ்,தமிழர்களின் வரலாற்றை ,செயல்பாடுகளை ,கலைத்திறனை வெளிக்காட்டுவதாக பல்வேறு தரவுகள் உள்ளன. அவற்றுள் முக்கிய இடத்தை வகிப்பதாக கோயில்களும் , கல்வெட்டுகளும் உள்ளன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோயில்களும் , கிடைத்த கல்வெட்டுகள் சிலவற்றை மட்டுமே பேசுவதாக இக்கட்டுரை அமைகின்றது. 

  பழங்காலந்தொட்டே சோழ,பாண்டிய,முத்தரையர்கள், தொண்டைமான்கள் போன்றோரால் ஆட்சி செலுத்திய பகுதியாக இந்நகரம் இருந்துள்ளது. இங்கு இரகுநாதராயத் தொண்டைமானால் அரண்மனை கட்டப்பட்டு இவ்விடத்திற்கு புதுக்கோட்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். விஜயரகுநாதத் தொண்டைமான் ( 1807- 1825 ) ,ரதுநாதத் தொண்டைமான் ( 1825- 1839 ) , இராமச்சந்திரத் தொண்டைமான் ( 1839- 1886 ) மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் போன்றோர் புதுக்கோட்டை மன்னராக இருந்துள்ளனர். 

  1912 ஆம்  வருடம் இந்நகரம் நகராட்சியாக மாறியது . 1948 இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய யூனியனுடன் இணைந்தது. 1974 இல் தஞ்சை , திருச்சி மாவட்டங்களில் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதுக்கோட்டை என்ற மாவட்டமாக தோற்றம் கொண்டது. 

  கோயில்கள் 

  திருக்கோகர்ணம் 

       புதுக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது. இங்கு கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. காமதேனுப் பசு தன் காதுகளில் நீர் கொண்டு வந்து சிவபெருமானுக்கு அபிடேகம் செய்ததால் இத்தலத்திற்கு கோகர்ணம் ( கோ- பசு ,கர்ணம் – காது ) என்ற பெயர் வந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் ஒரு பகுதியைக் குடைந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இலிங்க வடிவமாக கோகர்ணேஸ்வரர் காட்சி தருகிறார். இங்கு பல்வேறு சந்நிதிகள் , மண்டபங்கள் , கருவறைகள் என பலவுள்ளன. புதுக்கோட்டையில் சாந்த நாத சுவாமி , அரிய நாச்சியம்மன் ஆலயம் போன்றவையும் உள்ளன. 

   குடுமியான்மலை

      நகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் குடுமியான்மலை உள்ளது. இவ்விடத்தில் குடுமிநாதர் கோயில் உள்ளது. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபம் , அர்த்த மண்டபம் , சபா மண்டபம் போன்றன நாயக்கர் கால ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டன. 

   மேலைக் கோயில்.

      குடுமிநாதர் கோயிலின் மேற்கில் இக்கோயில் உள்ளது. கருவறையில் இலிங்க வடிவத்தில் இருக்கும் மலைக்குடைந்த நாதர் உள்ளார். தெற்கில் மலைபாபாறையின் அருகில் புகழ்பெற்ற இசைக்கல்வெட்டு உள்ளது. 

  மலையடிப்பட்டி , நார்த்த மலை 

       38 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்கு சிவனுக்கு கோயில் உள்ளது. 17 கி.மீ தூரத்தில் உள்ள நார்த்த மலையில் விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோயில் உள்ளது. மேலும் மேல்மலைக்குன்றின் அடிவாரத்தில் இரு குடைவரைக் கோயில்கள் உள்ளன . 

 கொடும்பாளூர்.

      நகரிலிருந்து 40 கி. மீ  தொலைவில் இவ்வூர் உள்ளது. இப்பகுதியினை இருக்குவேளிர் என்ற குறுநில மன்னர்கள் ஆண்டனர். மூவர் கோயிலும் இங்குள்ளது. கோயிலின் மூன்று விமானங்களும் ஒரே திருச்சுற்றில் கட்டப்பட்டுள்ளன. இவ்வூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் விராலிமலை உள்ளது. இங்கு சுப்பிரமணிய சுவாமி என்ற முருகன் கோயிலும் உள்ளது. 

   திருமயம்

      புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருமயம் உள்ளது. இங்குள்ள கோட்டை , சிவன், விஷ்ணு கோயில்கள் பிரபலமானவை. சத்திய கிரீஸ்வரர் கோயில் , சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் இங்கு உள்ளது. வேணுவனேஸ்வர் இறைவியாக உள்ளாள். பெருமாளின் சயனத் திருக்கோலம் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

  ஆவுடையார் கோயில்.

     நகரிலிருந்து 49 கி. மீ தூரத்தில் திருப்பெருந்துறை உள்ளது. சிவ வழிபாட்டுத் தலமாகவும் பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிற்பம் , புராணம் ,கோயில் ,கட்டடக்கலை என பல்வேறு விதத்தில் சிறப்பிடம் பெற்றதாக ஆவுடையார் கோயில் உள்ளது. 

   கல்வெட்டு.

      சித்தன்னவாசல் கல்வெட்டு.

   சிற்றன்ன வாயில் என்ற ஊர் புதுக்கோட்டையிலிருந்து 10 கல் தொலைவில் உள்ளது. இவ்வூரில் உள்ள மலைக்குகையில் இக்கல்வெட்டு இருப்பதால் இதனை சித்தன்னவாசல் கல்வெட்டு என்கின்றனர். எருமையூர் நாட்டைச் சேர்ந்த குமிழ் ஊரில் பிறந்த காவுடி ஈதேன் என்பவருக்கு சிறுபோவில் இளையர் என்பவர் செய்த இருக்கை என்பதாக கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 

    “ எருமி நாடு குமிழ்ஊர் பிறந்த

     காவுடி ஈதேன்கு சிறுபோவில் 

    இளயர் செய்த அதிட்அனம்ள”

 குலசேகர தேவர் கல்வெட்டு

       இக்கல்வெட்டு திருமயம் வட்டத்தில் மலையக் கோயில் என்னும் ஊரில் உள்ள குடபோகக் கோயிலின் வாசற்படிக்கு வலப்புறச் சுவரில் உள்ளது. இதன் காலம் 1192 – 93 . இக்கல்வெட்டில் குறிக்கப்படும் பாண்டியன் கோச்சடைய பன்மராகிய திருபுவனச் சக்கரவர்த்தி ஶ்ரீகுலசேகர தேவர் ஆவார். 

“ ஸ்வஸ்திஶ்ரீ பூவின் கிழத்தி மெய்வற்றி

  நப்ப மெதிநிலமாது நிநியிவபு நா

  வியத பொர் மடண்தை செயற்பு ( ய)த்தி “

  என வரும் இக்கல்வெட்டில் பூதல மடந்தை , பூவின் கிழத்தி , பூதல வனிதை என தொடங்குகின்றது. இவன் பாண்டிய நாடு முழுவதும் ஆட்சிபுரிந்தவன் என்றும் மதுரையில் இவ்வேந்தனது அரண்மனையில் புகழாபரணன் என்னும் கூடத்தில் இருந்த சிங்காதனத்தின் பெயர் மழவராயன் என்பதாகவும் கல்வெட்டு உணர்த்துகிறது. 

  சுந்தர பாண்டியன் கல்வெட்டு. 

        புதுக்கோட்டை மண்டலத்தில் திருமயம் வட்டத்தில் உள்ள கண்ணனூர் பாலசுப்பிரமணி சுவாமி கோயிலின் கருப்பகிருகத்தின் வடப்புறச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. தமிழும் கிரந்தமும் கலந்த எழுத்தாக இது உள்ளது.                              “   “ஸ்வஸ்தி ஶ்ரீ பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப நாமருவிய

      கலைமடந்தையுஞ் செயமடந்தையு ( ம் ) நல ( ஞ்சி ) றப்பக் கொளாந்த சினப்புலியுங் 

    கொடுஞ்சிலையுங் குலைந்தொளிப்ப வாளார்ந்த பொற்கிரி மேல் ( வரி ) க் கயல்கள்” 

   என வரும் இக்கல்வெட்டில் பாண்டிய மன்னனின் வீரம், படைத்திறம் , வெற்றி ,வீரசுந்தர பாண்டியர் என்ற செய்தி கி.பி. 1216 முதல் 1238 முடிய ஆட்சி செய்த விதம் போன்றவற்றை காண முடிகின்றது.  

   திருமயம் வட்டத்தில் நொய்வாசல் அகஸ்தீஸ்வரர் கோயில் கருப்ப இல்லின் தென்புறச் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது. இதிலும் வீரசுந்தர பாண்டிய தேவரே குறிப்பிடப்படுகிறார். காலம் கி.பி.1216 முதல் 1222 வரை . 

   வெண்ணெய் நல்லூர் என்ற ஊரில் காளையர்காலப் பெருந்தெருவில் வியாபாரியாய் இருப்பவர் கூத்தன் தில்லை நாயகன் , திருத்தியூர் முட்டத்தாரான வண்டாங்குடிக் கள்ளரிடமிருந்து வண்டாங்குடியையும் விலைக்குப் பெற்று அதற்கு ஈடாக அந்நிலத்திற்கு உரிய இறை,குடிமை ,அந்தராயம் ,நாடென்ற வரி, வாரமரக்கலம் கலநெல்லும் மற்றும் சில்வரிகளையும் திருவகத்தீஸ்வரமுடைய நாயனாருக்கு கொடுப்பதாய் சம்மதித்தான் என கூத்தன் தில்லை நாயகனிடமிருந்து கல்வாயில் நாடாள்வானான கண்டன் ஆளுடையான் கற்பூர விலையைப் பெற்று அதற்கு சம்மதம் தெரிவித்தான் என்ற செய்தியைக் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. 

       “ஸ்வஸ்தி ஶ்ரீ கொமாறபன்மரான திரிபுவனச

       க்கரவர்த்திகள் சொழநாடு கொண்டருளிய சிரிவிர சுந்தர

        பாண்டிய தெவற்கு யாண்டு ரு ஆவதின் எதிராமாண்

        டு இசப நாயிற்று யிருபத்திரண்டாந் தியதியும் தி “

எனத் தொடங்கி கல்வெட்டு நீண்டு செல்கிறது.

   இவ்வாறாக தொல்பழங்குடியினர் வாழ்ந்த இடமாகவும் ,இலக்கியம் ,கோயில் ,கட்டடக்கலை ,தமிழரின் கலை , பண்பாடு போன்றவற்றையும் தொன்மையைக் காட்டுவதாக புதுக்கோட்டை நகரம் திகழ்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. 

நன்றி
மேன்மை இதழ்..நவம்பர் 2017



0 Response to "கட்டுரை...புதுக்கோட்டை – கோயில்களும் கல்வெட்டுகளும்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel