சமூகத்தின் மனித உணர்வுகளை உரக்க பேசும் உன்னத திரைப்படம்.
கதை , காட்சி , திரைக்கதை ,சூழல் ,நேர்த்தி , என பலதிறப்பட்ட கோணங்களில் புதிய பார்வையை வெளிப்படுத்தி ரசிகர்களாலும் ,சினிமா ஆர்வலர்களாலும் கொண்டாடப்படும் ஆகச்சிறந்த திரைப்படமாக வெளிவந்து ,வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘விழித்திரு’ என்ற திரைப்படம். ஆக்ஷன் ,திரில்லர் உணர்வு என்ற பொருண்மையில் பொருத்தமான காட்சிகளைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறது விழித்திரு திரைப்பட குழு. அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் மீரா கதிரவன் ,அவர்களின் சமூகப்புரிதலையும் நாம் கண்டுணர்ந்தோம். அந்தவகையில் மீண்டும் பல்வேறு விடயங்களை வெளிப்படையாகவும் , சிலவிடங்களில் பூடகமாகவும் தன் சமூகப்பிரக்ஞையை வெளிப்படுத்தும் விதமாக விழித்திரு விழிப்புணர்வு பெறுகின்றது.
ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை மிக நேர்த்தியாக விஜய்மில்லடனின் ஒளிப்பதிவு நம்முள் பயணம் செய்கிறது. சத்யன் மகாலிங்கத்தின் இசை நம்மை அவ்விடத்தில் இருக்கின்ற உணர்வை தோற்றுவிக்கின்றது. இப்படத்திற்கு இசை பக்கபலமாக உள்ளது. பிரவினின் எடிட்டிங் அமர்க்களம். படத்தில் நடித்திருக்கின்ற அனைவருமே தன்னுடைய பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது ஆகச்சிறப்பு.
கதை இதுதான்…. கௌரவக் கொலையின் பின்னணி ,தகவல் தேடும் பத்திரிக்கையாளர் சரண் அரசியல் காரணமாக படத்தில் கொல்லப்படுகின்றார் . அக்கொலையால் யார் பாதிப்படைகின்றனர் ,மீள்கின்ற கதையுமாக இப்படம் நம் கண்முன்னே விரிகிறது. கிருஷ்ணா ஊருக்குச் செல்ல நினைக்கிறான் ,தன் தங்கைக்காக செல்போன் வாங்க கடைக்குச் சென்று வாங்கி பணம் செலுத்தும்போது தன் மணிபர்ஸ் திருடு போனதை நினைத்து வருந்துகிறார். பிறகு தன் நண்பனின் உதவியால் டிரிப் அடிக்க கார் டிரைவராக செல்கின்றார். சரண் இவரின் காரில் பயணம் செய்கிறார்.
சரண் சூழ்நிலையால் இறக்கும் தறுவாயில் முக்கிய ஆவணத்தோடு காரில் ஏறிக்கொள்கின்றார். கிருஷ்ணா பதைபதைத்துக் கொண்டே பயணத்தை தொடர்கிறார். வில்லன் குழுவினர் இவரைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். சரண் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன் அதிர்ந்துபோன கிருஷ்ணா ரேடியோ RJ வான அபிநயாவிடம் விவரங்களை சொல்கிறார். இப்படியாக ஒரு கதை நகர்கிறது. இரண்டாவதாக தம்பி ராமையா வீட்டிற்கு தனித்தனியாக திருட வந்தவர்கள் விதார்த் மற்றும் தன்ஷிகா .பிறகு மாட்டிக்கொண்ட தன்ஷிகாவை காப்பாற்றி நகைகளோடும் , பணத்தோடும் வெளியே வருகின்றனர். இவற்றை பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சினை ஆரம்பிக்கிறது…
மூன்றாவது கதையாக தன் நாய்க்குட்டியை காணவில்லை என்று போலிஸ் ஸ்டேஷனில் சொல்கின்ற சூழல் காட்சிப்படுத்தப்படுகின்றது. கண்பார்வை அற்ற தந்தையாக வெங்கட் பிரபு நடித்துள்ளார். சாராவிடம் வேறு குரலில் பேசி மகிழ்ச்சிப்படுத்துகின்றார். பப்பியைக் காணாமல் வருத்தம் அடைகின்றனர். இப்படியான மூன்றாவது கதையும் பயணிக்கிறது. நான்காவதாக ராகுல்என்ற பணக்கார பையன் அழகியான எரிக்கா பெர்னாண்டஸ் பார்த்து மயங்குகின்றான் . கரெக்ட் செய்ய நினைப்பவனுக்கு தான் சென்னை செல்வதாகவும் நீயும் என்னுடன் வரலாம் முடிந்தால் என்னை இம்பரஸ் பண்ணு என்று சொல்ல இருவரும் காரில் சென்னையை நோக்கி பயணிக்கின்றனர். காரில் வருகின்ற போது வேகமாக ஓட்டி பொருட்களை இடித்து விடுகிறான் ராகுல், உரியவர் கேட்க அதற்கு மொத்தமாக அதற்குரிய பணத்தை கொடுத்துச் செல்கின்றனர்.
ராகுலும் எரிக்காவும் பப்புக்குச் சென்று செல்பி போட்டோ , மது என குடித்து மகிழ்ந்து உலாவுகின்றனர். நாய்க்குட்டி தேடி போட்டோவை சுவரில் ஒட்டிச் செல்கின்றனர். போலிஸ் தன்ஷிகாவை இடித்துவிட்டு கேள்வி கேட்க வேகமாக வந்த விதார்த் தன்ஷிகாவின் கன்னத்தில் அறைந்து பையை வாங்கிக் கொள்கிறார். அபிநயா ( ரேடியோ RJ ) பக்கத்தில் உள்ள போலிஸ் ஸ்டேசனுக்குப் போய் விவரங்களை கூறு என்று சொல்ல அதன் படி நடக்கிறார் கிருஷ்ணா . ஆனால் நிலைமை தலைகீழாக மாறுகிறது.
கோயிலில் இருந்தபோது நகை ,பணத்தை எடுத்து கிளம்புதல் ..தன்ஷிகா ,தம்பி ராமையா பார்த்து விட்டு அடிக்கின்ற ரகளை அமர்க்களம். நகையெல்லாம் போட்டு பொண்டாட்டி என்கிறார் ராமையா. தன்ஷிகாவிடம் முத்தம் கேட்க கோபப்படும் இடத்தில் தன்ஷிகாவின் நடிப்பு அருமை. ராகுல் எரிக்காவின் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பி இருவரும் கிளம்புகின்றனர். பணம் இல்லை என்கிறான் ,,பணக்காரன் என்று சொல்லிய அவன் பிச்சைக்காரனிடம் ஒரு ரூபாய் பிச்சை வாங்குகின்றான் . இதன் மூலம் இயக்குனர் எதுவும் நிரந்தமில்லை என்பதை சொல்லி செல்கின்றார். நாய்க்குட்டி தேடி அலைகின்றனர். சாரா கெட்டவரிடம் மாட்டிக் கொள்கிறாள். ஒருவர் காப்பாற்ற நினைக்கிறார் ஆனால் அவரை ஏமாற்றி விட்டு அந்த பெண்ணை அழைத்துச் சென்று விடுகின்றான்.
தன் அப்பா போன் செய்ய சுதாரித்து கொண்ட சாரா அவரை ஏமாற்றி விட்டு தப்பித்து ஓடுகின்றாள். பிறகு ஐயனார் கோயிலில் பதுங்கி கொள்கிறாள். விதார்த்தை ஏமாற்ற திட்டம் தீட்டி செயல்படுகின்றாள் தன்ஷிகா. கிருஷ்ணா தப்பித்து வருகையில் அபிநயா ஆலோசனையில் சர்ச்சில் தங்கியிருக்கும்படி சொல்ல .அப்போது போலிஸ் வந்து தேடுகின்றனர். அபிநயாவின் உறவினர் டிராபிக் போலிஸ் வந்து கிருஷ்ணாவை காப்பாற்ற நினைக்கிறார். அதனாலேயே அவர் இறந்து விடுகின்ற சூழல் ஏற்படுகின்றது . எதிரியான போலீசார் பழியை கிருஷ்ணா மீது போடுகிறார்கள். சற்று சுதாரித்து தப்பி ஓடுகிறான் கிருஷ்ணா. அப்போது சாரா தங்கியுள்ள ஐயனார் கோயில் வந்தடைகின்றார்.
இருவரும் பேசிக்கொள்கின்றனர். அங்கேயே தங்கி இருக்கும்படி சொல்லி விட்டு சென்றுவிடுகிறார் கிருஷ்ணா. விதார்த் ,தன்ஷிகா வரும் வழியில் நாய்க்குட்டியை பார்த்து எடுத்துவருகின்றனர். விதார்த் ரொமான்ஸ் செய்கிறார். காட்சிகள் விறுவிறுப்பாக காட்டப்படுகின்றது. காட்சிகள் மாற்றி மாற்றி காட்டப்படுகின்றது. செய்யாத தப்பை ஒத்துக்கொள்ள வேண்டாம் என்று கிருஷ்ணாவின் தங்கை கூறுகின்றார்.” கொலை வாளினை எடுடா ‘என்ற பாடல் தகுந்த பாடலாக பொருத்தமாக உள்ளது. கிருஷ்ணாவை போலிஸ் துரத்த ஓடிக்கொண்டே இருக்கிறார். அற்புதமான நடிப்பை தந்துள்ளார் கிருஷ்ணா.
தன்ஷிகா ,விதார்த் வருகையில் சூட்டிங் நடைபெறுகிறது. TR பாடல் இடம்பெறுகின்றது ப்பப்ரக்கா பாடல் அருமையானது தான் ஆனால் இந்த இடத்தில் இது தேவையானதா என்று யோசிக்கத் தோணுகின்றது. வெங்கட் மற்றும் சாரா பஸ் நிலையத்தில் உட்கார்ந்திருக்க தன்ஷிகா வருவதும் நாய்க்குட்டியின் மணிச்சத்தம் கேட்டு ஓடு வருகின்றனர். காரில் பெட்ரோல் இல்லாததால் வந்துகொண்டிருக்கின்ற ராகுல் ,எரிக்கா, கார் தனியாக இருக்க அதில் ஏறி பயணம் செய்கின்றனர். வேகமாக ஓட்டிவருகையில் இடித்துவிடுகின்றனர். பிறகு மருத்துவமனை செல்கின்றனர்.
போலீஸ் ஹாரன் கேட்டு பயந்து ,கிருஷ்ணா தான் வந்த வண்டி நிற்க எதிரில் போலீஸ் நிற்க அனைவரும் ஒரே காரில் பயணம் செய்கின்றனர். இக்காட்சி பார்ப்பவரின் மனதை அவரவர் உணர்வு பந்தாடுகின்றது . அற்புதமான உணர்வை நாம் அடைகின்றோம். இக்காட்சியில் இயக்குனரின் திரைக்கதை …சிறப்பிடம் பெறுகிறது. இதுவரை தனித்தனியாக சொல்லப்பட்ட நான்கு பேரின் கதை இங்கிருந்து ஒரே கதையாக பயணிக்கிறது.
கிருஷ்ணாவின் சம்பவங்களைக் கேட்டு அனைவரும் உதவி செய்ய நினைக்கின்றனர். ஆனால் சூழ்நிலையால் அனைவரின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை பணயம் வைக்கிறான் கிருஷ்ணா. போனை விதார்த்திடம் கொடுத்துவிடுகிறான். அதைப்போன்றே சாராவின் பையில் முக்கியமான ஆவணமான ஐபேடை உள்ளே வைத்துவிடுகிறார். இறுதியில் துப்பாக்கியால் சுட்டுவிட இறந்து விடுகிறான் கிருஷ்ணா. ஆனால் முக்கியமான ஆதாரம் இருப்பது போலீசாருக்குத் தெரியாமலேயே போக அதன் மூலமாக தண்டனை பெறுகின்றனர்.
போலி என்கவுண்டர் தவறு என்று சொல்லப்படுகின்றது. இறுதியில் பிணவறைக்கு விதார்த் வருகின்றார். அங்கே பிணமாக இருக்கும் கிருஷ்ணாவைப் பார்த்து துடிதுடித்து அழுகின்றார். விதார்த்தின் நடிப்பு உண்மையில் மேன்மை பெற்று வருவதற்கு இக்காட்சி ஒன்றே போதுமானது. போன் வருகிறது கிருஷ்ணாவின் தங்கை அண்ணா வந்துட்டயா என்று விதார்த்திடம் கேட்க அவர் அழுகின்றார். அண்ணன் வந்துடுவேன் என்று சொல்ல திரைப்படம் முடிவடைகிறது.
ஒரு நல்ல இலக்கியத்தரமானதாக இப்படம் காட்சி தருகிறது. இயக்குநரின் சமூகப்பிரக்ஞையை இதனூடாகப் பார்க்க முடிகின்றது. யாரும் கணிக்க முடியாத திரைக்கதை , அருமையான காட்சிப்படுத்தல், அனைவரின் சிரத்தையான நடிப்பு , அட்டகாசமான இசை, சொல்நெறி, என பலவிதத்தில் தமிழில் உலகத்தரமான.திரைப்படம் என்று சொல்வதில் தயக்கமேதுமில்லை.இப்படம் சார்ந்து ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்…ஒரு புதிய அனுபவத்தை தருகின்ற இப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்து புதியன படைக்க வழி அமைப்போம். இதுபோன்ற ஆக்க முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது நம் கடமையும் கூட…..
மயிலம் இளமுருகு
CELL : 7010694695
10.11.2017.
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்
0 Response to "விழித்திரு திரைப்படம் விமர்சனம்"
Post a Comment