•யாதார்த்த சினிமாவினூடாக அரசு எந்திரங்களைக் கேள்வி கேட்கும் அற(ர)ம் – தரம்
மிக நெருக்கமான இயல்பு வாழ்க்கையை தமிழ் சினிமாவில் பார்ப்பது அரிதாகிக் கொண்டே போகும் சூழலில் இயக்குநர் கோபி நயினாரின் அறம் திரைப்படம் மிகுந்த கவனத்தைப் பெறுகின்றது. எளிய மக்களின் வாழ்க்கையை இவ்வளவு அறத்தோடு அரசை கேள்வி கேட்கின்ற முறை புதியதாதகவும் ,திரைக்கதையின் வழியாக மக்களின் மனங்களில் மனிதத்தை தட்டி எழுப்புகின்ற வேலையை இத்திரைப்படம் வெகு சாமர்த்தியமாக ஏற்படுத்துகின்றது. ஒரு செய்தித்தாளில் ஒரு செய்தியாக மட்டுமே நாம் பார்த்து வந்த சமூக அவலத்தை தன் திரைப்பட உத்தியின் மூலமாக எல்லோர் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்திய முறை பாராட்டுதற்குரியது.
இத்திரைப்படத்தில் நடித்தவர்களில் குறிப்பாக நால்வர் என் மனதில் அழுத்தமாக பதிந்துள்ளனர். அவர்கள் ஆட்சியராக ,நேர்மையாக தன் பதவியை செயல்பாட்டால் அலங்கரித்த நயன்தாரா. பார்வையிலும், நடிப்பிலும் என இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய குழந்தை. குழந்தையின் தந்தையாக நடித்த ராமச்சந்திர துரைராஜ் தன் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ள திறம் கவனிக்கதக்கது. குழந்தையின் தாயாக நடித்த சூனு லட்சுமி குழந்தையின் மனமறிந்து செயல்படுவதிலும் ,கணவன் இரவில்கூட பிதற்றும் கபடி கபடி என்ற போது , அப்போது நடித்தவிதத்திலும் , குழந்தை தன்ஷிகா காணாமல் போன போது தவிக்கின்ற துயரத்திலும் , உயிருடன் குழந்தை வந்த போது பெற்ற ஆனந்தத்திலும் தன்னுடைய நேர்த்தி மிகு நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு உறுதுணையாக விளங்கியுள்ளார்.
மாயா , டோரா என்று தனித்து ஹீரோயினாக நடித்த நயன்தாரா இப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்தது மிகப்பொருத்தமாக உள்ளது. அரசியலை கேள்விபடுத்தும் பல காட்சிகள் படத்தில் உள்ளன. குறிப்பாக அரசாங்கம்னா மக்களுக்கானது என்று விசாரனை அதிகாரியிடம் நயன்தாரா பேசுவதில் மக்களுக்கான அரசாங்கமாக இல்லாத சூழலை நிஜத்தோடு பொருந்திப் போக முடிவதை நாம் பார்க்க முடிகின்றது. ராக்கெட் லான்ஜ் செய்தால் ஒரு நாடு முன்னேறி விடுமா ? கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் இந்தியா ஒளிர்கிறது, புது இந்தியா பிறந்துள்ளது என்று கூறுகின்ற, அவலங்களை குறிப்பிட்டு சொல்லியிருப்பது சிந்திக்கத்தக்கது.. உண்மையான வீரரை இனம்காணாமல் அதிகாரம் , பணம் போன்றவற்றின் மூலமாக விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கின்ற சூழல் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற நிலையை குழந்தையின் தந்தை இரவில் கபடி கபடி என்று சொல்வதின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு படம் இப்படியும் எடுக்க முடியுமா ? என்று அனைவரையும் யோசிக்க வைக்கின்ற படமாக இப்படம் உள்ளது. நான் ஒரு ஜனநாயகவாதி என்று விசாரணை அதிகாரியிடம் மதிவதனி ( நயன்தாரா ) கூறுகிறார். தண்ணீருக்காக மக்கள் படுகின்ற துன்பத்தை இப்படம் தெளிவாக காட்டுகிறது. அருகில்தான் உப்பங்கழி ஆனால் குடிதண்ணீர் கிடைக்காமல் பவ தூரம் செல்கின்ற மக்கள் , அங்கே போலியோ சொட்டு மருந்து விட வருகின்ற நர்ஸிடம் தண்ணீர் கேட்க , மற்றொரு நபர் தண்ணீர் தாகத்தை எடுக்கிறமாதிரி சொட்டு மருந்து போடசொல்லுங்கள் என்று நகர்ந்து செல்கின்றார். தண்ணீர் இருக்கா என்று ராமச்சந்திரன் கேட்க கூல்டிரிங்ஸ் தான் இருக்கு என்று சொல்வதிலிருந்தே நீரின் தேவையை படம் எடுத்துரைக்கின்றது.
தன் நாடு ராக்கெட் விட்டால் பெருவிழாவாக கொண்டாடும் மக்களுக்கு தண்ணீரைக்கூட தராத அரசு என்று படம் கேள்வி கேட்கின்றது. தன் மகன் பள்ளிக்குச் செல்லாமல் நீரில் நீச்சல் அடிப்பதைப் பார்த்து கோபப்படுகின்றார் ராமச்சந்திரன். இந்த நாடு திறமையை மதிக்காத நாடுதானே என்று வேதனைப்படுகின்றார். தான் ஒரு கபடி வீரராக வரமுடியாதது குறித்து ரொம்ப வருத்தமடைந்திருப்பதை இரவில் அவர் பிதற்றும் கபடி , கபடி என்று சொல்கின்ற காட்சிகளில் இருந்தே யூகித்து கொள்கிறோம் . தண்ணீருக்காக போராடும் மக்களிடத்தில் நயன்தாரா அம்மாவட்ட ஆட்சியராக வந்து பேசுகின்றார். அப்போது ஒருவர் பேசும் பேச்சு அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு உறுதி அளித்துவிட்டு வருகின்றார் ஆட்சியர். வரும் வழியில் தண்ணீர் லாரி செல்வதைக் கண்டு விசாரிக்கிறார்.
விறகு வெட்டும் வேலையில் தாய் சூனுலட்சுமி மூழ்கியிருந்த சூழலில் குழந்தை தன்ஷிகா காணாமல் போய்விடுகின்றாள். பிறகு தேடிப்பார்த்த போது குழந்தை ஆழ்துளைக்கிணற்றில் விழந்தது கேட்டு துடிதுடிக்கின்றாள் சூணு. விஷயம் அறிந்து நயன்தாரா VAO ,RI , தாசில்தார் என்று அரசுப் பணியாளர்களை அனுப்பி நிலவரத்தை கவனிக்க சொல்கிறார். பிறகு அவ்விடத்திற்கு சென்று தன்னால் முடிந்த மட்டும் குழந்தையை காப்பாற்ற முயல்கின்றார். அப்போது அப்பகுதி எம்.எல்.ஏ வந்து மிரட்டி செல்கின்றார். காரணம் அந்த ஆழ்துளைக் கிணற்றை மூடாமால் விட்ட அப்பகுதி கவுன்சில் மாறனை கைது செய்யப்போகிறேன் என்று நயன்தாரா சொன்னதுதான் விளைவு. பிறகு தன் அதிகார எல்லைக்குட்பட்டு நயன்தாரா செய்யும் செயல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இடை இடையே நடக்கும் தொலைக்காட்சி விவாதம் சற்று படத்தை அண்ணியப்படுத்துகின்றது. தொழில்நுட்ப வசதியின் காரணமாக குழந்தையிடத்து ஆட்சியர் , பெற்றோர் என பேசுகின்றனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தையை கயிறு கட்டி தூக்க நினைக்கின்றனர். ஆனால் கயிறு அறுந்துவிடுகின்றது.அதனால் சிறுமி ஏற்கனவே இருந்த 36 அடி ஆழத்திலிருந்து தற்போது 90அடிக்கும் கீழ் சென்றுவிடுகின்றாள். கவுன்சிலர் கைது செய்யப்பட்டது கேட்டு எம்எல்ஏ வந்து ஆளுங்கட்சி என்று கொக்கரிக்க அப்போது கூலாக பாதிக்கப்பட்ட குழந்தையின் அப்பா கூட உங்க கட்சிதானே என்று கூறி அரசியல் கயவாளித்தனத்தை கிண்டலடிக்கின்ற காட்சி அருமை.
பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வந்து ஆழ்துளை கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டி குழந்தையை காப்பாற்ற எண்ணுகின்றனர். அப்போது விரிசல் ஏற்பட்டு முயற்சி கைவிடப்படுகின்றது. அப்போது நயன்தாரா குழந்தையைக் காப்பாற்ற இன்னொரு குழந்தையை உள்ளே அனுப்பி காப்பாற்ற நினைக்கிறார். அது தவறு என்று மற்றவர்கள் கூற தன் செயலில் நம்பிக்கையோடு இருப்பது எண்ணத்தக்கது. இறுதியில் சிறுமியின் அண்ணனை உள்ளே அனுப்பி குழந்தையைக் காப்பாற்றுகின்றார்.. இயல்பு வாழ்க்கையை தமிழ் சினிமா எடுக்கவில்லையே என்ற ஏக்கத்தை இப்படம் பூர்த்தி செய்துள்ளது. குழந்தை உயிரோடு வரும்போது அனைவரும் மகிழ்கின்றனர். ஆனால் நயன்தாரா அழுகின்றார். இக்காட்சியில் நயன்தாராவின் நடிப்பு தேர்ந்து வருவதை வெளிப்படுத்துவதாக உள்ளது
.
அரசின் இயலாமையை தோலூரித்துக் காட்டும் படமாக , அரசியல் பார்வையை அணுகுமுறையிலும் தன் பங்கை இப்படம் வெகு சாமர்த்தியமாக சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு காரணங்களால் இப்படம் உலகத்தரமான படம் என்று சொல்லலாம். யதார்த்தத்தை கேள்வி கேட்கும் வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. ஓம் பிரகாஷ் அவர்களின் ஒளிப்பதிவு காட்சியை துல்லியமாகவும், பதட்டத்தை நாம் அடையும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கின்ற முறை கவனிக்கத்தக்கது. ஜிப்ரானின் உயிரோட்டமான இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ரூபனின் எடிட்டிங் மிக அருமையான முறையில் உள்ளதும் இப்படத்தின் வெற்றிக்கான காரணமாக எடுத்துரைக்கலாம். மேலும் பீட்டர் ஹெய்யனின் உழைப்பும் அளப்பரியது.
எந்தவித மிகைப்படுத்தலுமின்றி மனித வாழ்க்கையை சிரத்தையோடு அணுகி அதனை திரையில் கொண்டுவந்து , மக்களுக்கு ஒரு தரமான படம் கொடுத்த இயக்குநர் கோபி நயினார் பாரட்டப்படவேண்டியவர். இப்படிப்பட்ட படத்தை தேர்ந்தெடுத்து அருமையாக நடித்த நயன்தாராவிற்கு வாழ்த்துகள். இப்படம் அவர் வாழ்நாளில் நடித்த படங்களிலே சிறந்த படமாக இருக்கும் என்பதில் வியப்பேதுமில்லை. அறம் திரைப்படக்குழுவினருக்கு வாழ்த்துகள்…அறம் திறமாக பல விருதுகளை வெல்லும்….
மயிலம் இளமுருகு
13.11.2017.
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்
0 Response to "அறம் திரைப்படம் விமர்சனம்"
Post a Comment