நடைபயிலும் இந்திரஜித்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல திரைப்படங்கள் வருகின்றதே என்று நினைத்திருக்கையில் மறுபடியும் வழமையான படமாக தற்போது வெளிவந்திருக்கின்றது இந்திரஜித் திரைப்படம். ,நம் மண்சார்ந்த திரைப்படங்கள் , ஆக்கநிலைத் திரைப்படங்கள் , என புதிய முயற்சிகள் புத்துணர்ச்சி பெற்றுள்ளச் சூழலில் இத்திரைப்படத்தின் நிலை சற்று கேள்விக்குரியதாகவே இருக்கிறது. நம்மவர்கள் மற்ற மொழிப்படங்களைப் பார்த்து அதனைப்போல எடுக்க சிலர் சிரத்தையோடு போராடுகின்றனர் . பின்பு வெற்றியும் பெறுகின்றனர். பல்வேறு செயல்பாடுகளின் மூலம் நல்ல திரைப்படமாக பரிணமித்திருப்பதை நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் இத்திரைப்படம் எத்தகைய நிலையில் உள்ளது என்பதைக் காண்போம்.
கௌதம் கார்த்திக் நடிப்பில் கலாபிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ளது இத்திரைப்படம். இதில் ஹீரோயினாக இருவர் சொனாரிகா பதோரியா மற்றும் அஷ்ரிதா ஷெட்டியும் நடித்துள்ளனர். இருவருமே கதையில் ஒட்டமுடியாத கதாபாத்திரங்களாகவே இருக்கின்றனர். . ராஜீவர் சிங், சுதன்சு பாண்டே, அமித் , பிரதாப் போத்தன், எம்.எஸ். பாஸ்கர் போன்றோரும் நடித்துள்ளனர். படத்தொகுப்பை V.T. விஜயனும் அவரது நண்பரும் செய்துள்ளனர். ஒளிப்பதிவை ராசாமதியும் , இசையை கே.பி. அவர்களும் அமைத்துள்ளார்.
அட்வன்ச்சர் , சாகச பயணம் , திரில்லர் என்ற வகையில் இத்திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். இண்டியனா ஜோன்ஸ் , மம்மி , போன்ற ஆங்கிலப் படங்கள் போன்று தன் படமும் பேசப்படும் என்ற ஆசையில் இயக்குனர் எடுத்துள்ளார். ஆனால் எடுக்கப்பட்டவிதம் , கேமராப் பயன்பாடு, கிராபிக்ஸ் காட்சிகளின் சொதப்பல் , தொடர்பற்ற காட்சிகள் , பொருத்தமற்ற திரைக்கதை போன்றவற்றால் சோபிக்கத் தவறிவிட்டது இத்திரைப்படம்.
கதை இதுதான்….. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்ணில் இருந்து ஒரு கல் பூமியில் விழுந்துள்ளது. அதனை சித்தர்கள் யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து வைத்துவிடுகின்றனர். பிறகு அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அந்தக் கல் அபூர்வமானது என்றும் காயம் ஏற்பட்டால் காயம் சரியாகிவிடும், நோயில்லாமல் வாழலாம் என்றும் கூறப்படுகிறது. 400 ஆண்டுகள் வரை உயிரோடு வாழ அக்கல் உதவியாக இருக்கும் என்பதனை அறிகின்றனர். அதனைப் பெறுவதற்காக தொல்பொருள் ஆய்வுப் பேராசிரியர் காட்டு விலங்கினங்கள் வாழும் காட்டிற்கு பயணம் செய்கின்றனர். அவருக்கு உதவியாளராக கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். வில்லனாக பேராசிரியரின் மாணவரும் அக்கல்லைத் தேடி வருகின்றார். வருகின்ற இவர் இந்தியத் தொல்லியல் துறையில் அதிகாரியாக விளங்குகின்றார்.
ஒரு மேப் மூலமாக அக்கல் அருணாச்சலப்பிரதேஷின் மலைப்பகுதியில் இருப்பதாக அறிகின்றனர். அவ்விடம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ள காட்டுப்பகுதியில் இருப்பதாக காட்டப்படுகின்றது. படத்தில் இடை இடையே எம்.எஸ்.பாஸ்கர் பொருத்தமற்ற காமெடி செய்கின்றார். படத்தில் ஒரு நாய் கூடவே செல்கிறது. எதையோ கண்டுபிடிக்கும் என்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாகச பயணத்தில் காதல் என்று துடிக்கின்றார் கார்த்திக். சேசிங் , சண்டைக்காட்சிகள் என படம் நகர்கிறது. காமிக்கலான ஹீரோவாக இவர் தெரிகின்றார். எல்லாவற்றையும் பார்த்து வியந்து வியந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் கார்த்திக்.
அபூர்வமான கல்லை எடுத்தார்களா ? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை விவரிப்பதாக படம் இருக்கிறது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இல்லாத திரைப்படமாக இப்படம் உள்ளது. ஒவ்வொரு காட்சியும் தொடர்பற்று தாவிச் செல்வதைப் பார்க்க முடிகின்றது. அழுத்தமில்லாத காட்சிகள் அதிகமாக உள்ளன. பெரும்பாலும் CG யை நம்பியே இத்திரைப்படக் குழுவினர் இருந்துள்ளனர். பிளாஸ்பேக் காட்சிகளில் கொஞ்சம் முயற்சி செய்துள்ளனர்.
எது எது கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெளிவாக கண்டறிய முடிகின்றது. அந்தளவுக்கு இவர்களின் வேலைப்பாடுகள் இருந்துள்ளன என்பது வியப்பளிக்கிறது. தெரிந்தேதான் செய்தார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. முதல் பாதிதான் அப்படி என்றால் இரண்டாவது பாதியும் கதைக்கருவை நகர்த்து விதத்திலும் , காட்சிகள் அமைத்தவிதத்திலும் கோட்டைவிட்டுள்ளனர். வெற்றி பெற்ற தயாரிப்பாளர் எஸ் தாணுவின் மகன் திரைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். சக்கரக்கட்டி திரைப்படம் பார்த்தே அனுபவப்பட்டவர்கள் இப்படத்தைப் பார்க்க பலப்பரிட்சை செய்ய தயங்குவர் என்பது வெளிப்படை.
கௌதம் கார்த்திக்குக்கு குறிப்பட்ட இடைவெளியில் வெளிவந்த 5 வது படமாக இப்படம் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் காலம் தாழ்ந்து வெளிவந்து சூடுபடுத்திக் கொண்டுள்ளது. படத்திற்கு பலமாக குறிப்பட்டுச் சொல்லவதற்கு யோசிக்க வைப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. ஆர்க்காலாஜிகல் படம் எப்படி பரிமணத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தட்டிவிடுவதாக இப்படம் உள்ளது. குறும்புக்கார கதாநாயகன், படத்தோடு ஒட்டாத கதாபாத்திரங்கள், லாஜிக் பிரச்சினை , விஷுவல் ஜம்ப் , கனித்துவிடுகின்ற காட்சிகள் , என பலவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
பேண்டஸி படமான இப்படத்தைப் பார்பவர்களுக்கு பல்வேறு கேள்விகள் இயல்பாகவே தோன்றும். கதாநாயகன் குண்டடிப்பட்டு உயிர் தப்பிப்பது, புல்லட் காட்சிகள் , சண்டைக்காட்சிகள் , பாகுபலி படத்தில் வரும் சாகச காட்சிகளை நினைவுபடுத்துவது என பட்டவர்த்தனமாக பரிதாபங்களைத் இப்படம் தேடிக் கொள்கிறது.
இத்திரைப்படமும் இயக்குனருக்கும் அவரைச் சார்ந்த நண்பர்களுக்கும் அனுபவமாகவும் , நல்ல புரிதலையும் உண்டாக்கிவிட்ட படமாகவே அமைந்துள்ளது. ஆசைகளுக்கு இணங்கி சாதுர்யமாய் நடைபயின்றால் மட்டுமே தூரம் கடக்க முடியும் . உரியவர்கள் புரிந்து நடைபயின்று வெற்றி பெற வாழ்த்துகிறோம் …
மயிலம் இளமுருகு
27.11.2017.
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்
0 Response to "இந்திரஜித் திரைப்படம் விமர்சனம்"
Post a Comment