அண்ணாதுரை திரைவிமர்சனம் 

Trending

Breaking News
Loading...

அண்ணாதுரை திரைவிமர்சனம் 

அண்ணாதுரை திரைவிமர்சனம் 
அண்ணாதுரை திரைவிமர்சனம் 

         விஜய்ஆண்டனி படம் என்றாலே நமக்கு ஓரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை  அண்ணாதுரை  திரைப்படம் தவிடு பொடியாக்கிவிட்டது. இவர் ஏற்கனவே நடித்த நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான் போன்ற படங்களைப் பார்த்த நாம் இப்படத்தைக் குறித்து சொல்ல யோசிக்க வைக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் இரட்டை வேடம் கொண்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருவதைக் கண்டுள்ளோம். அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவருமே இவ்வேடத்தில் நடித்துள்ளனர் சிலர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.  அந்த நம்பிக்கையில் விஜய் ஆண்டனியின் இரட்டைவேட நடிப்பில் இரண்டாவது படமாக இப்படம் வெளி வந்து உள்ளது. சைத்தானில் நம்மைக்கவர்ந்த  விஜய்ஆண்டனி அண்ணாதுரையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்ய தவறிவிட்டார்.
    விஜய்ஆண்டனி இப்படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் இசைப்பணியையும், எடிட்டிங் பணியையும் சேர்த்து  செய்துள்ளார் இப்படத்தில் மூன்று கதாநாயகிகளாக டயானாசம்பிகா, மகிமா, ஜீவல்மேரி  போன்றோர்  நடித்துள்ளனர் . அப்பாவேடத்தில் நளினிகாந்த், சேர்மேன் கதாபாத்திரத்தில் உதய்ராஜ்குமாரும், வட்டிக்குப் பணம் கொடுக்கும் வில்லன் வேடத்தில் நடித்துள்ள சேரன்ராஜ் அவர்களும் , எம்.எல்.ஏவாக ராதாரவியும் ஹீரோயின் அப்பாவாக செந்தில்குமரனும், அண்ணாதுரையின் நண்பனாக காளிவெங்கட்டும் மற்றும் ரிந்துரவியும்  நடித்துள்ளனர் . ஹீரோவுக்கு  மட்டுமே முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் கதாநாயகிகளில் மகிமாவும் தந்தையாக நடித்துள்ள செந்தில் குமரனும், நளினிகாந்தும்  ஓரளவு கவனம் பெறுகின்றனர்.
    இப்படத்தில் குறிப்பிட்ட ஒரு கதை மட்டுமில்லாமல் பல்வேறு கதைகள் உள்ளன. இப்படிப்பட்ட கதையை விவரிக்கும் முறையில் சொதப்பியதாகவே திரைக்கதை அமைந்துள்ளது. பொதுவாக திரை அரங்கிற்குச் செல்லும் ரசிகர்கள்  மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதுண்டு. ஆனால் இப்படம் முழுக்க சோகத்தையே முன்வைப்பதாக உள்ளது. தமிழ் திரைப்படங்களில் ஏற்கனவே காட்டியுள்ள காட்சிகளை இப்படத்திலும் பார்க்க முடிகிறது. குறிப்பாக வெயில், வேல், கொடி போன்ற படங்களை நினைவு படுத்துவதாய் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கின்ற  போது பத்து வருடம் பின்னோக்கி சென்ற உணர்வு ஏற்படுகிறது.  
        கதை இதுதான் பஸ்டாண்டில் இரவில் ஒரு பெண் வீட்டிற்குச் செல்ல நின்றுகொண்டிருக்கிறாள். சேர் ஆட்டோ ஓட்டுபவன் அப்பெண்ணை ஏமாற்றி ஏற்றிச் சென்று சுடுகாட்டில் பலவந்தம் செய்ய முற்படுகையில், விபத்தில்  தன் கண்எதிரே காதலியை இழந்து தாடி வளர்த்துக்கொண்டும், குடித்துக்கொண்டும் சோகத்தில் இருக்கும் அண்ணாதுரை  அப்பெண்ணை அவ்வஞ்சகர்களிடமிருந்து காப்பாற்றுகின்றார் . பின்பு அந்த ஆட்டோவிலே  அப்பெண்ணை வீட்டில் கொண்டு விடுகிறார் . தனக்குத்  தேவையான ஒருபொருளை எடுக்க சுடுகாட்டிற்கு ஈஸ்வரி  செல்கின்றாள். அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அண்ணாதுரைக்கு  தேவையான உதவியைச் செய்கிறாள் . மேலும் அண்ணாதுரையிடம்  தான் விரும்புவதாகவும் சொல்ல அதற்கு அண்ணாதுரை நான் உனக்குப் பொருத்தமானவன் இல்லை. எனவே நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள் என்று கூறுகிறான். இப்படியாக கதை நகர்கிறது.   
    அண்ணாதுரையின் தம்பியான மற்றொரு விஜய்ஆண்டனியும் இவருக்கு ஜோடியான டயானாசம்பிகாவும் மணப்பொருத்த நிகழ்வில் சந்திக்கின்றனர் . அப்போது காட்டப்படுகின்ற காட்சிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பழைய காட்சிகளையே நினைவுபடுத்துகிறது. அண்ணாதுரையின் தாய் அவனுக்குத் திருமணம் செய்ய தன் தம்பியிடத்து மகளைக்கேட்க அவர்  மறுத்துவிடவே வருத்தப்பட்டு தன் மகனிடத்து கூறுகின்றார் . பள்ளியில் தம்பித்துரை உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். சேர்மேனிடத்து  அடியாளாக வேலைசெய்யும் சேரன்ராஜின் ரவுடித்தனம் காட்டப்படுகிறது. இருவரும் சேர்ந்து கொலைகள் செய்கின்றனர்.
   அண்ணாதுரை தன் நண்பனான காளிவெங்கட்டிற்காக பணம் கேட்டு சேரன்ராஜிடம் செல்கிறார். வெற்றுபத்திரத்தில் சாட்சி கையெழுத்திட்டு தன் நண்பனுக்கு உதவி செய்கிறார். அண்ணாதுரையின் அப்பாவிடத்து ஏற்பட்ட கோபத்தின் காரணமாக சாட்சிக்கையெழுத்தைத் தவறாக பயன்படுத்துகின்றார்  வில்லன். காளிவெங்கட் நேசிக்கும் பெண்ணான ஜீவல்மேரி அண்ணாதுரையை  விரும்புகின்றார். கொடுத்தப்பணத்தைக் கேட்டு காளிவெங்கட்டிடம் சேரன்ராஜ் பிடிவாதம் செய்கிறார். தன் நண்பனுக்காக ரூ. ஆறு லட்சத்தை  நாளை காலை பத்து மணிக்கு தருவதாக ஒப்புகொள்கின்றார் காலை பணம் தருகிறேன் என்று 
சொன்ன நண்பனின் மனைவி ஏமாற்றிவிட அண்ணாதுரை நண்பனைக் காப்பாற்றுவதற்காக  தன் தாடி, தலை முடியை மாற்றம் செய்துகொண்டு செல்கிறார். ஆனால் வில்லன் மதுவின் நாற்றத்தைக் கண்டு வந்திருப்பது அண்ணாதுரை  என்று கண்டறிந்து பணம் கேட்கின்றார். வரும் வழியில் தம்பியின் மாமனார் பணத்தைக்கொடுக்க வில்லனிடம் சென்று வாங்கிய கடனைச் செலுத்திவிடுகிறார். ஆனால் கையெழுத்திட்ட பத்திரத்தை வாங்கி வர மறந்துவிடுகிறார். இரவில் மதுபானக் கடையில் குடித்துவிட்டு போதையில் இருக்கும் போது கொலை நடந்து விடுகிறது. அதனால் அண்ணாதுரை கைதுசெய்யப்பட்டு ஏழு ஆண்டு காவல் தண்டனை பெறுகிறார். தண்டனை முடிந்து வெளியில் வரும் அண்ணாதுரை ரவுடியாக மாறியுள்ள தம்பித்துரையைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்.  
    அண்ணாதுரை தன் நண்பனின் வழியாக தன்குடும்பத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அறிகிறான். காலச்சூழலில் ரவுடியாக மாறியுள்ள தன் தம்பியை நினைத்து வருந்துகிறார்.  தம்பித்துரையும்  தன்னைக் காதலிக்கும் டயானாவிடத்து வேறு ஒருவரை திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார். லாஜிக்கைச் சொல்ல தவறிவிட்டது திரைக்கதை. தம்பித்துரை சேரன்ராஜை அடிக்கும் போது பேசுகின்ற பஞ்ச் டயலாக் சற்று ஆறுதலாக உள்ளது. தன்னைக் கொல்ல நினைத்த சேர்மேனிடம்  லாவகமாக பேசி அவரிடமே வேலை செய்கிறார் தம்பிதுரை. ஒருகட்டத்தில் எல்லை மீறி போக சேர்மேனைக்  கொல்லுகின்ளார் தம்பிதுரை. ஏம்.எல்;.ஏவான ராதாரவி தம்பிதுரையைக் கொல்ல திட்டம் தீட்டுகிறார் விசயம் தெரிந்த தம்பிதுரை ராதாரவியைக் கொல்கிறார் . இப்படத்தைப் பார்க்கின்ற ரசிகர்கள் யார் தம்பிதுரை,அண்ணாதுரை என்றே குழம்பிப்போகின்றனர் . அந்த அளவிற்கு தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசமில்லாமல் விஜய் ஆண்டனியின் இருகதாபாத்திரமும் இருக்கிறது.  
    காவல் ஆய்வாளரைக் கொலை செய்த ராதாரவியின் செயலால் தம்பித்துரைக்குச் சிக்கல் ஏற்படுகிறது. தன்னால் தன் குடும்பம் அடைகின்ற துன்பத்தைக் கருதி அண்ணானான அண்ணாதுரை, தானே தம்பிதுரை என்று போலீசாரிடம் பொய் சொல்கின்றார் . முதல் காட்சியில் ஈஸ்வரியாக வந்த மகிமாவாகிய போலீஸ் தம்பியாக நடிக்கின்ற அண்ணாதுரையின் கையிலுள்ள அடையாளத்தின் (எஸ்தர் ) மூலமாக அண்ணாதுரையைக்  காப்பாற்ற முயலுகின்றாள். ஆனால் தான் இறந்தால் மட்டு;மே தன்குடும்பத்தினர்  மகிழ்ச்சியாக வாழ்வர் என்று சொல்கிறார் . பிறகு 
தான் இறக்கப்படுவேன் என்று  தெரிந்தே  போலீசார் முன்னிலையில் கதவைத் திறந்துகொண்டு வெளியே வர குண்டுகள் பாய அண்ணாதுரை இறக்கின்றார். இறுதியில் தன் அணண்னின் அஸ்தியைக்  குடும்பத்தோடு நீரில் கரைப்பதோடு படம் முடிவடைகிறது. 
    விஜய் ஆண்டனி கதைதேர்வில்  கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதின் அவசியத்தை இப்படம் காட்டுகிறது. கூடுதல் பொறுப்புகளின்றி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். இசையைப் பொறுத்தவரை இஎம்யை மாதிரி என்ன வச்சி செய்யற என்ற பாடலும் , தங்கமா? வைரமா என்ற பாடலும் ரசிகர்களை  ஈர்ப்பதாக உள்ளது. இப்படத்திலுள்ள சண்டைக்காட்சிகள் சற்றுமிகைப்படுத்தப்பட்ட காட்சிகளாகவே தோற்றமளிக்கிறது. விஜய்ஆன்டனிக்கு  அடுத்தப்படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள் . 

மயிலம் இளமுருகு  
02.12.2017 
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்
                       

0 Response to "அண்ணாதுரை திரைவிமர்சனம் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel