நவம்பர் மாத அயல் சினிமா இதழ் விமர்சனம்
நவம்பர் மாத அயல்சினிமா இதழ் பத்து கட்டுரைகளையும் இவை புதியவை என்ற பகுதியில் ஃபோன் ட்ரோன் பற்றிய தகவலையும் தாங்கி வெளிவந்துள்ளது. தலையங்கத்தில் ஆசிரியர் வேடியப்பன் அவர்கள் GST என்ற பெயரில் வந்துள்ள மறைமுக எதிரி குறித்த செய்திகளைத் தகுந்த சான்றுகளோடு வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். கலை படைப்பிற்கு உதவாத நிலையில் இலாபத்தில் மட்டுமே பங்கு கேட்பதை அருமையாக கதையாடல் செய்துள்ளார். இதற்கு அயல்சினிமாவின் கண்டனத்தோடு குறிப்பிட்டு , நகைச்சுவை உணர்வோடு சீரியஸான விஷயத்தைச் சொன்ன விதம் அருமையாக இடம்பெற்றுள்ளது.
தி. குலசேகரின் முதல் ஆசிரியர் தூய்சனும் முதல் மாணவி அல்டினாயும் என்ற கட்டுரை படிப்பவரோடு நெருக்கத்தை ஏற்படுத்தி சொல்ல வந்த செய்தியை பதிய வைப்பதாக இருக்கிறது. சிங்கிஸ் ஜத்மாத்தவ் எழுதிய முதல் ஆசிரியர் என்ற குறுநாவல் எப்படி படமாக எடுக்கப்பட்டது என்றும் தெளிவாக சொல்வதாக கட்டுரை விளங்குகிறது. குர்க்குரி மலைக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் அற்ற இடத்திற்கு பள்ளி ஆசிரியராக செல்லும் தூய்சனின் அர்ப்பணிப்புத் திறனை காட்டுவது அருமை. தன் மீது ஆசைப்படும் அல்டினாவைக் காப்பாற்றி நகரத்திற்கு அனுப்புகிறார். தூய்சன் சொன்னது போலவே அல்டினா கலெக்டராக தேர்வாகி தன் சொந்த கிராமத்திற்கே வந்து பள்ளிக் கட்டடித்தை திறந்து வைக்கிறார். தூய்சனை தேடுகின்றார் . இவ்வாறாக ஒட்டுமொத்த கதையையும் வாசகருக்கு அறிமுகம் செய்து வைப்பதாகவும் சினிமாவாக வெளிவந்த விதம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார். இக்கதையோடு தொடர்புடைய செய்திகளையும் குறிப்பிடும் விதத்தில் டோட்டோ சான் , தி ரோட் ஹோம் , வாகை சூடவா என்ற தமிழ்ப்படம் குறித்தும் கூறியது சிறப்பு.
ஆன்மாவின் தூதுவன் என்ற கட்டுரையில் ராஜராஜேஸ்வரி ஹான்ஸ் ஜிம்மரின் உரையாடலை அழகாக தமிழாக்கிய விதம் அருமை. The Lion King படத்திற்காக இசை அமைத்த விதம் ,அவருடைய படங்களில் அவருடைய பணி எப்படி இருக்கும் என்பதையும் , அதற்காக அவர் மேற்கொண்ட சிரத்தைகளையும் எடுத்துரைப்பதாக இப்பகுதி அமைந்துள்ளது. குடும்பம் , இசைப்பயணம் , மற்றவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் முறை , இயக்குனர் உடனான உறவு என பலதிறப்பட்ட செய்திகளைப் படிப்பவர்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.
சி. ஜெ.ராஜ்குமார் அவர்கள் இந்த இதழில் ஃபோன்ட்ரோன் என்ற படப்பிடிப்பு கருவியைப்பற்றி தெளிவாக எடுத்துக்கூறி வழிகாட்டிய முறை நன்று. கதை To திரைக்கதை என்ற தொடரில் பொறுப்பாசிரியர் ஜா.தீபா அவர்கள் சொமர்செட் மாம் அவரின் நாவலான The Painted Veli யை எத்தனை முறை திரைப்படமாக எடுகத்தனர் என்ற செய்தியைக் கூறியுள்ளார். மேலும் முதல் இரண்டு படங்கள் ஏன் தோற்றன என்றும் மூன்றாவது முறையாக 2006 இல் எடுக்கப்பட்ட திரைப்படம் எதற்காக வெற்றிபெற்றது என்ற புரிதலை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார். இதற்காக திரைக்கதை அமைத்த ரான் நிஸ்வநேர் குறித்தும் நாவலை அப்படியே எடுக்காமல் மாற்றிய செய்திகள் குறித்தும் வெற்றி பெற்றதற்கான காரணங்களை சொன்னவிதம் அருமை. அதோடு மட்டுமின்றி இப்படத்தின் கதையை தெளிவான நடையில் எடுத்துரைத்த முறை நன்று. வால்டர் , அவருடைய மனைவி கிட்டி மற்றும் சார்லி குறித்தும் அவருடைய மனைவி என்பதாக படத்தின் கதையை விவரித்துள்ளார். தன் எழுத்தில் நல்ல தமிழ் சொற்களையே பயன்படுத்தியுள்ளார். நாவல் மாறிய விதம் , ஒவ்வொரு காட்சியையும் விவரித்து பெண்ணியப்படமாக இது மாற்றம் கொண்ட செய்திகள் என பலவற்றை இக்கட்டுரையின் வழி தெரிந்து கொள்ள முடிகின்றது.
ஒரு துளி நட்சத்திரம் என்ற கட்டுரையில் சி.ஜெ.ராஜ்குமார் அவர்கள் கேமர் இமேஜ் திரைப்பட விழாவில் இடம்பெற்ற திரைப்படங்கள் மற்றும் தங்கத்தவளை விருது , வெள்ளித்தவளை விருது, வெண்கலத்தவளை விருது பெற்ற படங்களைக் குறிப்பட்டு அப்படத்தை தெளிவாக விளக்கியுள்ளார். தி செவந்த் சேம்பர் திரைப்படத்தில் எடித் ஸ்டீனின் நடிப்பு , இப்படத்தை ஒளிப்பதிவு செய்தவர் குறித்தும் , என திரைப்படம் சார்ந்த செய்திகளைத் தந்துள்ளார். தி ஃப்ளையிங் டச்மேன் என்ற திரைப்படம் குறித்தும் நூறு திரைப்படங்களில் ஒன்றாக இருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டமை நன்று. தி ஷஷாங் ரிடெம்ப்ஷன் என்ற படம் குறித்த செய்திகளை விரிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும் கூடுதல் செய்திகளையும் தந்துள்ளமை சிறப்பு.
அஜயன் பாலா எழுதியுள்ள டாக்மே – 95 என்ற சினிமா இயக்கம் குறித்தும் இரண்டு இளம் இயக்குநர்கள் தொடங்கிய பயணத்தை ஆரம்பம் முதல் கூறி இறுதியில் 2004 இல் இவ்வியக்கம் சொன்ன பத்து விதிகளை பின்பற்றி வெளிவந்த cosi caso என்ற 35 வது படத்தோடு இயக்கம் முடிவு பெற்றது வரை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ஹாலிவுட்க்கு எதிராக செயல்பட்ட இயக்குனர்கள் சந்தித்த பிரச்சினைகளையும், மற்றவர்களின் எண்ணங்களையும் மிக விரிவாகவே கூறியுள்ளார். குறிப்பாக மேலும் தேடல் செய்பவர்களுக்கான இணையதள சுட்டிகளையும் தந்துள்ளார். இலண்டன் திரைப்படம் விழா, இடியட்ஸ் , பெஸ்டன் திரைப்படங்கள் சார்ந்த செய்திகளையும் குறிப்பிட்டது நன்று.
ஒரு கட்டுக்கடங்காத பயணம் என்ற கட்டுரை டாம் லீசாக் அவர்கள் வேரா சைட்டிலோவா இயக்கிய Daisies என்ற திரைப்படம் குறித்து பல்வேறு நுணுக்கமான செய்திகளைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. செக் நாட்டில் இருந்த அரசியல் சூழல் , திரைப்பட சூழல் என்பதினூடாக மேற்சொன்ன திரைப்படம் உலக அளவில் கொண்டாடும் அளவிற்கு வந்த காரணங்களை கூறியுள்ள முறை சிறப்பாக உள்ளது. படத்தை அழகாக கூறி , குறியீட்டிற்கு இடையில் இப்படம் அமைந்துள்ள முறையையும் குறிப்பட்டுள்ளார்.
ரசிகப் பார்வையில் மு.வி.நந்தினி அவர்கள் பல்வேறு திரைப்படங்கள் தமிழில் எடுக்கப்பட்ட நிலையைக் குறிப்பிட்டு ,மேற்கத்திய சினிமாக்கள் எடுக்கும் முறை விதவிதமான ஜானரில் வெளிவரும் சூழலையும் தெளிவுபடுத்தியுள்ளார். Swiss Army Man என்ற படத்தைக் குறிப்பிட்டு கதையை விளக்கியும் சென்றுள்ளார். படத்தில் இரண்டு பேர்தான் ஆனால் வெற்றி பெற்றதற்கான சூட்சுமங்களை சூட்சுமாக கூறவும் செய்தமை நன்று. ஆங்கில படங்களில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்படுகின்றனர் தமிழ் படத்தில் எப்படி காட்டப்படுகின்றனர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். பொதுப்புத்தியில் பெண் சார்ந்த கருத்துகளை மறுதலிக்கும் முறையில் தன் கருத்தை வெளிபடுத்திய முறையும் ஔவையார் , கௌரி லங்கேஷ் வரைக்குமாக பல்வேறு செய்திகளை இக்கட்டுரையில் அறிந்து கொள்ள முடிகின்றது.
ரவுத்திரம் பழகியவர்கள் என்ற கட்டுரையில் ஓவியர் ஜீவா தமிழ் சினிமாக்களில் கோபக்கார நடிகர்களாக நடித்த பெரும்பாலானவர்களைக் குறிப்பிட்டு , அவர்கள் நடித்த திரைப்படங்களையும் தெரிவித்துள்ளார். ஹிந்தி படங்களில் நடித்த அமிதாப் , சுனில் தத் , திரைப்படங்கள் குறித்தும் கூறியுள்ளார். ஹிந்தி படங்களை தமிழில் எடுத்தனர் அதில் தோல்வி அடைந்த செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார். MGR , சிவாஜி , ரஜினி, சத்யராஜ் , விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் குறித்தும் குறிப்பிட்டவிதம் அழகு.
முத்திரை வசனங்கள் என்ற தொடரில் இயக்குனர் பிருந்தா சாரதி அவர்கள் இடம்சுட்டி பொருள் தருக என்ற முறையில் தொடங்கி கம்பராமாயணத்தில் ராமன் சொன்ன வசனத்தைக் குறிப்பிட்டு பேரிலக்கியங்களை படிக்க வேண்டிய அவசியத்தை வசனகர்த்தாக்கள் உணர வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாயகன் படத்தில் வரும் ‘ நீங்க நல்லவரா கெட்டவரா ‘ என்ற வசனத்தை குறிப்பிட்டு விளக்கியுள்ளார். மேலும் அண்ணாமலை, சண்டைக்கோழி , பருத்திவீரன், திருவிளையாடல் போன்ற படங்களில் குறிப்பிட்ட வசனங்களை எடுத்துரைத்துள்ளார். அதனோடு சில ஹிந்தி படங்களில் இடம்பெற்ற வசனங்களையும் தெரிவித்தமை சிறப்பு.
இந்த இதழில் இயக்குநர் வசந்தபாலன் அவர்கள் உலக சினிமாவில் தன்னை பாதித்த திரைப்படமான The Patience Stone குறித்து மிக விரிவாக தெளிவான நடையில் கூறியுள்ளார். 2008 இல் விருது பெற்ற நாவலை திரைப்படமாக எடுத்த செய்திகள் மற்றும் திரைப்படக்கதை என அழகான எழுத்து நடையில் கூறியுள்ள விதம் அருமை. பொறுமைக்கல் குறித்த செய்திகள், இப்படத்தில் நடித்த ஃராஹானி வெளிப்படுத்திய அசாத்திய நடிப்பை சிலாகித்து கூறியுள்ளமை இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. நோய்வாய்ப்பட்ட கணவன் , இரண்டு பெண் குழந்தைகளுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கை , மிக நீண்ட தனக்கு தானே பேசிக் கொள்ளும் உரையாடல் என பலவற்றை நம் கண்முன்னே கொண்டு வருகிறார் வசந்தபாலன். ரஹிமி இந்த நாவலை எப்படி எழுதினார் என்ற குறிப்புகளையும் தந்துள்ளமை சிறப்பாக உள்ளது. இப்படம் இயக்குநரிடத்து ஏற்படுத்திய எண்ணங்களை வாசகர்களும் உணரும் வகையில் அழகாக தெரிவித்தமைக்கு நன்றிகள்.
ஆக அயல்சினிமா முழுக்க முழுக்க சினிமாக்களை மட்டுமே பேசும் இதழாக, தான் வகுத்துக் கொண்ட பாதையில் சிறப்பாக தடம்பதித்து முன்னேறி செல்வதைக் காட்டுவதாகவே இவ்விதழ் இருக்கின்றது. மேலும் சிறக்க வாழ்த்துகள் .
மயிலம் இளமுருகு
03.12 2017
0 Response to "நவம்பர் மாத அயல் சினிமா இதழ் விமர்சனம்"
Post a Comment