மசாலா கலந்த மருந்தை
விற்கிறான்
இந்த வேலைக்காரன்….
இயக்குநர் மோகன் ராஜாவின் தனிஒருவன் படத்திற்கு பிறகான இப்படத்தில் புதிய கதை, களம் என விவரமான தகவல்களோடு வெளிவந்திருக்கும் திரைப்படமே வேலைக்காரன் என்ற படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனும் நாயகியாக நயன்தாராவும் நடித்துள்ளானர். வில்லன் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பால் அப்லஸ் அள்ளுகின்றார் பகத் பாசில். சிவகார்த்திகேயன் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெயருக்கேற்ப அறிவாக செயல்பட்டு தான் வாழும் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் இளைஞர்கள் கெட்டு சீர்அழிவதைப் பார்த்து அவர்களுக்கு ரேடியோ மற்றும் பிற வழிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றார். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இவர்கள் வாழ்ந்த இடம் கூலிக்காரன் குப்பம் என்று இருந்தது என்றும் காலப்போக்கில் கொலைகாரன் குப்பமாக மாறிய சூழலையும் விளக்குகின்றது படம் .
பிரகாஷ்ராஜ் காசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கும்பத்தில் வாழும் மக்களுக்கு தேவையானவற்றைக் கொடுத்து ஒரு அடிமை போன்று வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளார். இதைக்கண்ட அறிவு இளைஞர்களுக்கு பலவழிகளில் அறிவுரை தருகிறார். ரேடியோ மூலம் என்ன பிரச்சனை என்று விரிவாக எடுத்துரைக்கின்றார். கொலை நடக்கும் நிகழ்வை நேரடியாக ஒலிபரப்பு செய்கிறார். அங்கு நடக்கும் சண்டையில் தன் நண்பன் விஜய் வஸந்தின் கால் வெட்டப்படுகின்றது. சிலவிடங்களில் ரஜினி ஸ்டைலில் பேசுகின்றார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்நிலை சார்ந்து பேசுபவராக நயன்தாரா ( மிருளாயினி )அறிமுகம் ஆகின்றார். அறிவு செய்வது காசிக்கு தெரிய வர அறிவைவந்து எச்சரிக்கை விடுத்து செல்கின்றார்.
தன் அம்மாவான ரோகிணி, சிவாவின் அப்பாவான சார்லியிடம் சூழலைச் சொல்ல தன் நிலையைப் புரிந்து கொண்டு தனியார் கம்பெனியில் விற்பனை செய்பவராக வேலைக்குச் சேர்கின்றார். அங்கு பகத் பாசில் இவருக்கு பலவிதத்தில் உதவி செய்கின்றார். பெண்ணியம் சார்ந்து பேசிய நயன்தாரவை பலரும் கிண்டல் செய்கின்றனர். சிவகார்த்திகேயன் ரேடியாவில் இவரைப்பற்றி கிண்டலாக பேச, சிவகார்த்திகேயன் வீட்டில் இருந்த நயன்தாரா கேட்டு கோபம் கொள்கின்றார்..RJ பாலாஜி இவருடைய நண்பராக நடித்துள்ளார். வேலை கிடைத்த செய்தியைத் தன் அம்மாவிடம் சொல்ல வரும்போது ரோபோ சங்கர் குரலில் சிவகார்த்திகேயன் பேசி செய்யும் அலப்பறையில் தியேட்டரே குலுங்குகின்றது.
அலுவலகத்தில் ஸ்டெல்லா என்ற பெயரில் தம்பிராமையா நடித்துள்ளார். இவருடைய பெயர் குறித்தும் ஒரு காமெடி வருகிறது. சதிஷ் பொருட்களை விற்பவராகவும் சிவாவின் நண்பராகவும் நடித்துள்ளார். தன் சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டு பிறகு கணக்கு கேட்டு பம்புவது என நடிப்பது அருமை. உணவுப்பொருட்களை தயாரிக்கும் நிறுவன முதலாளிகள் பேசிக்கொள்ளும் நடைமுறை என படம் நகர்கிறது. காசி தன் பகுதி மக்களை ஏமாற்றி வரும் நிலையைச் சொல்லி அவருக்கு எதிராக செயல்பட ஆதரவு தருபவர்கள் , இரவு 12 மணிக்கு தன் வீட்டு விளக்கை போடுமாறு சொல்கிறார் சிவா. பிரகாஷ் ராஜ் விசாரிக்காமல் திடீரென வந்து சிவாவை மிரட்ட உங்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடத்தான் எல்லாரையும் விளக்கைப் போடச் சொல்லியிருக்கிறேன் என்று சமாளிக்க ,அதனை நம்பும் வேளையில் சரியாக12 மணிக்கு அனைவரும் விளக்கைப் போடுகின்றனர் அதனைப் பார்த்து பெருமை கொள்கிற பிரகாஷ்ராஜைப் பார்க்க பாவமாக இருக்கிறது. பகத்திடம் Motivation பெறுவற்காக சிவா வருகிறார். பிறகு விஜய்வஸந்தை பிரகாஷ் ராஜ் கொலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் சிவா. ஏற்கனவே பிராகாஷிடம் வெட்டு வாங்கியவர் வந்து பிரகாஷ் ராஜை கொலைசெய்ய முயலுகையில் அப்போது சிவாவிற்கும் பிரகாஷ் ராஜிற்கும் இடையில் நடக்கும் உரையாடல் முதலாளித்துவ அரசியலைப் புரிந்து கொண்டு உண்மையான எதிரி யார் என்று போராட்டம் நடத்த தயாராகின்றார் சிவா.
இப்படத்தில் நடுத்தர மக்களின் பணத்தை முதலாளிகள் எப்படி ஏமாற்றுகின்றனர் என்பது காட்டப்பட்டுள்ளது. சம்பளம் பெற்ற முதல் வாரத்தில் எப்படி பணம் செலவு செய்யப்படுகின்றது என்று காட்டுவது அருமை. ஒரு சூப்பர் மார்கெட் கடையில் வைத்துள்ள பொருட்களின் அமைப்பை வைத்து மக்களிடம் பொருட்களை வாங்க எண்ணத்தைத் தோற்றுவிக்கின்ற காரணங்களைப் பட்டியலிடுவது சிறப்பாக உள்ளது. ரோகிணியிடம் LED TV க்கு ஸ்டெப்லைசரை விற்கும் அப்துல்லாவிடம் சிவா பேசும் உரையாடல் பலவற்றை அம்பலப்படுத்துகின்றது. சிநேகா அறிமுகம் ஆகின்றார். அவருடைய மகள் சப்ரான் கம்பெனி தயாரித்த உணவுப்பொருட்களை சாப்பிட்டு கேன்சர் வந்து இறந்த செய்திகள் விரைவாக காட்டப்படுகின்றது. அந்த கம்பெனி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். அதற்கான ஆவணங்களைத் தேடும் போதே சிவாவின் நண்பர் விஜய் வஸந்த் கொலை செய்யப்பட்ட சூழ்ச்சியை அறிகின்றனர்.
பிறகு தானே சாட்சியாக மாற வேண்டி தன் குழந்தை சாப்பிட்ட அந்த உணவையே சினேகாவும் தொடர்ந்து சாப்பிடுகின்றார். சிவாவிற்கு உறுதுணையாக நயன்தாரா இருக்கிறார். குழப்பத்தில் சிவா இருக்கும்போது ரோகிணி வந்து விசுவாத்தை உடைச்சா முதலாளிகள் பயப்படுவர் என்று கூற ரசிகர்கள் அனைவரும் ஆர்பரிக்கின்றனர். தொழிலாளர்களை அழைத்து விளம்பர நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. அதில் சினேகாவின் கதை வீடியோவாக காட்டப்பட்டதைப் பார்த்து அனைவரும் கலங்குகின்றனர். பிறகு சிவா சொல்கின்ற செயலுக்கு கட்டுபட்டு இரண்டு நாள் அரசாங்க விதிப்படி உணவுப் பொருட்களைத் தயாரிக்கினறனர். அதைப்போன்றே மற்ற கம்பெனி முதலாளிகளிடம் பேசி சம்மதிக்க வைக்கின்றார். உடனிருந்து வில்லங்கமாக வேலை செய்கிறார் பகத் பாசில். முதலாளியின் மகனாக CEO வாகத்தான்உட்காருவேன் என்று தன் தந்தையிடம் கூறுகின்றார்.
பேக்டரிக்கு தீ வைத்து அனைத்து திட்டத்தையும் தகர்க்கின்றார் பாசில். உடனிருந்து சிவாவை தொழிலாளர்கள் மத்தியில் மாட்டிவிடுவது , CEO தேர்ந்தெடுக்க வைப்பது என கதை ஒரே இடத்தில் வேகமாக நகர்கிறது. சிவா மே ஒன்றாம் தேதி தான் சாதித்தை சொல்ல அழைக்கப்படுகின்றார். அங்கு வரும் சிவா நடந்தவற்றை கூறி வருந்துகிறார். பின் மெதுவாக தன்னுடைய தொழிலாள நண்பர் நால்வர் செய்த செயல்களைச் சுட்டிகாட்டி பகத் பாசிலுக்கு அதிர்ச்சி தருகிறார். ரேடியாவில் சில அரசியல் செய்திகளையும் படம் அம்பலப்படுத்துகின்றது. மருத்துவம், போரூர் பில்டிங், CCTV Camera , முதலாளிகளை தொழிலாளர்கள் முழுமையாக நம்புகிறோம். ஆனால் முதலாளிகள் தான் தொழிலாளர்களை நம்பாமல் கேமிரா மூலம் கண்காணிப்பு செய்கின்றனர் என்பது பலவற்றை கேள்வி கேட்கின்றார் இயக்குநர்.
படத்தின் இறுதியில் இன்றைக்கு இரவு 12 மணிக்கு அனைவரும் அவரவர் லைட்டை ஆன் செய்யுங்கள் என ரேடியாவில் பேசிவிட்டு வீடு திரும்புகின்றார் சிவகார்த்திகேயன். இரவு 12 மணிக்கு மேலே இருந்து லைட் எரிகின்றதா என்று பார்க்கின்றனர். ஆனால் சிவா தன் அப்பா , அம்மாவிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார். எதிர்பார்த்தது போலவே மாற்றம் வேண்டும் என்பவர்கள் விளக்கை ஏற்றுகின்றனர். அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். சிவப்பு கொடி அசைய ஆடலும் பாடலும் என துள்ளிக்குதிக்கின்றனர். இறுதியில் நயன்தாரா சிவாவை அணைத்துக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்துகின்றார். ஆக இங்கே எல்லாமே மார்கெட்டிங் என படம் சொல்கிறது. உலக உணவுப்பொருட்களை சப்ளை , விற்பனை செய்ய உயிரோடு நடத்துகின்ற , சந்தையைக் கேள்வி கேட்பதாக படம் நிறைவடைகிறது.
மொத்தத்தில் கருத்து சொல்ல வந்து மசாலைவைத் தடவி , லாஜிக் இல்லாமல் தடுமாறியதாகவே இப்படம் தெரிகிறது. ஆனால் ஒரு தடவை பார்க்கலாம். மற்றபடி சாதாரண படம்தான். சிவகார்த்திகேயன் இப்படத்தில் கதையோடு முழுக்க ஒன்றி பேசும் உரையாடல் ரசிக்கும்படியாக இருக்கிறது. இப்படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சதிஷ் , தம்பி ராமையா, காளி வெங்கட் , மன்சூர் அலிகான், ராமதாஸ், விஜய் வஸந்த் , வினோதினி , என பெரும் நடிகர் பட்டாளமே உள்ளது. அவரவர்களுக்கு கொடுத்த பணியைச் செய்துள்ளனர். ஆனால் படம் முழுக்க சிவகார்த்திகேயன் , பகத் பாசில் மட்டுமே நமக்கு தெரிகின்றனர். நயன்தாராவிற்கு கூட ஹீரோவைக் கொண்டாடும் கதாபாத்திரமே. அவருக்கான நடிப்பு போர்ஷன் குறைவே.
குப்பத்தை மிக அழகாக உருவாக்கி உள்ளார் கலை இயக்குனர் முத்துராஜ். ராம்ஜி அவர்களும் சிறப்பாகவே ஒளிப்பதிவு செய்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். இசையைப் பொருத்தவரை அனிருத் அமைத்த கருத்தவெல்லாம் கலீஜா தாண்டி பாடல் அருமை. மற்றபடி பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். எடிட்டிங் பணியில் விவேக் ஹர்ஷன் , ரூபன் கொடுக்கப்பட்டதை சிரத்தையோடு செய்துள்ளனர். இயக்குனர் ராஜா கதையை நன்றாக அமைத்துள்ளார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். திரைக்கதையும் , இடமும் , காட்சியமைப்பும் வித்தியாசமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஹீரோவிசம் துதிபாடிய நேரத்தில் உணவு அரசியலை இன்னமும் தோலுரித்திருக்கலாம்.மொத்தத்தில் மசலா கலந்த மருந்தை விற்கிறான் இந்த வேலைக்காரன்….
மயிலம் இளமுருகு
கைப்பேசி- 7010694695
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்
0 Response to "வேலைக்காரன் திரைப்பட விமர்சனம்"
Post a Comment