அருவி திரைப்படம் விமர்சனம்
2017 ஆம் ஆண்டின் ஆகச்சிறந்த படம் அருவி
அழகு ,கலை வெளிப்பாடு , பொழுதுபோக்கு என பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கூத்து ,நாடகம் , திரைப்படம் என்பன தோன்றின. இவை காலச்சூழலுக்கேற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளன. உலகத் திரைப்பட வரலாற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும் அளவிற்கு தமிழ் சினிமா தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. ஆனால் தொழில்நுட்பம் , ரியலிச கதை, இயக்கம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் தேவை தமிழ் சினிமாவிற்கு இருந்து கொண்டே வந்துள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் குறைவாக ஆகச்சிறந்த திரைப்படங்கள் சத்தமின்றி வெளியாகி மாற்று சினிமாவிற்கான தடத்தை உறுதி செய்கின்றன. அந்தவகையில் இந்த ஆண்டின் தரமணி , அறம், என்ற படத்திற்கு பிறகு வெளியாகி முதல்தரமாக பேச வைத்துள்ளது இந்த அருவி.
மூன்றாண்டுகளாக காத்திருந்து தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுக்கிறது இந்த அருவி. இத்திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் ஏற்கனவே கவனம் பெற்ற ஜோக்கர்,தீரன் படங்களைத் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட படங்களைத் தோள் கொடுத்து தாயாரிப்பதும் ரசிகர்கள் பார்த்து ஆதரவு அளிப்பதும் தேவையானதாகும் . இப்படத்தின் வெற்றி மேலும் நல்ல திரைப்படங்கள் வருவதற்கு தூண்டுகோலாக அமையும். இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்கள் மிகத்தெளிவாக பல்வேறு விடயங்களை இத்திரைப்படத்தின் ஊடாக பேசியுள்ளார். கதையும் ,திரைக்கதையும் , சிறப்பாக இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதை இயக்குனர் நிரூபித்து காட்டியுள்ளார்.
அருவியில் ஆழமாக நீராடி நன்றாக கரைசேர்ந்துள்ளார் கதாநாயகி அதிதி பாலன். இத்திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியர் , 40, 50 திரைப்படங்களில் நடித்தவர்கள் கூட அதிதி பாலனைப் போன்று இப்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்களா என்றால் ? சந்தேகமே. கதையை நன்றாக உள்வாங்கி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் அதிதி பாலன்.கதைத்தேர்விலும் கூட மற்றவருக்கு முன்மாதிரி என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழ் சினிமாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆண்பார்வையில் சொல்லப்பட்ட படமாக மிருகம் திரைப்படம் இருந்தது. ஆனால் இத்திரைப்படம் அன்பு, கோபம் , துன்பம், சமூக அக்கறை, இரக்கம், மனிதம் , அரசியல் , ஊடக விமர்சனம், திரைப்பட விமர்சனம் என பலவற்றை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
மிக அழகான திரைக்காட்சியை நம்முள் பயணிக்க வைத்த ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்டு அவர்களின் உழைப்பு அபாரமானது. இப்படத்திற்கு மற்றொரு பலமாக பிந்து மாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் அவர்களின் இசைப்பணி பாராட்டத்தக்கது. இவர்களின் இசை பலவிடங்களில் மான்டேஜாக கதையை நக்ர்த்திச் செல்கிறது .ஒரு புதுவித அனுபவத்தைத் தருகிறது. தாலாட்டு, காதல் , சோகம் , பயம் , கோபம் என அதற்குரிய அம்சத்தை உணர வைப்பதாக இவ்விசை நம்மைக் கட்டிப்போடுகின்றது. பலவற்றை பேசும் இப்படத்தை சிறப்பாக எடிட்டிங் செய்துள்ளார் ரோமான்ட் டெர்ரிக் கிராஸ்டா. படத்தில் நடித்த அனைவருமே தன் கதாப்பாத்திரத்தின் உணர்வை அறிந்து நடித்துள்ளனர். அருவியின் தோழியாக வரும் எமிலி ( அஞ்சலி வரதன் ) , லட்சுமி கோபால்சாமி, கவிதாபாரதி , போன்றோரின் நடிப்பு வியப்பளிக்கிறது. மேலும் சுபாஷ் வேடத்தில் வருபவரும் தன்னுடைய நடிப்பால் கவனம் பெறுகின்றார்.
படத்தின் கதை….. கதாநாயகியிடம் போலீசார் விசாரணை என்று படம் தொடங்குகிறது. அருவி யார் என்று அறிமுகம் செய்யப்படுகின்றார். அழகான குடும்பம் தனக்கு சுதந்திரம் அளிக்கும் அப்பா , பாசமான தம்பி , அம்மா என படம் பயணிக்கிறது. கல்வி , காதல் , குசும்பு என்று அருவி ஆசுவாசமாய் ஆனந்தம் அடைகிறார். இடையில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட அன்பான அப்பாவாலேயே வீட்டை விட்டு வெளியேற நேர்கிறது. பலவிடங்களில் தஞ்சம் அடைகிறார். பல அனுபவங்களைப் பெறுகிறார். திருநங்கை எமிலியுடன் தன் மீத வாழ்க்கையைத் தொடங்குகிறார். எமிலியின் பச்சை ஜட்டி காமெடியில் தியேட்டரே குலுங்குகிறது.இருவரும் டைலரிங் வேலைக்குச் சேர்கின்றார். தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக முதலாளி அருள்மணியிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு பெற்று , அதனை தன் தம்பியிடம் கொடுக்க, அதை வாங்காமல் அருவியை காயப்படுத்தி அனுப்பிவிடுகிறான் தம்பி.
தன் தோழி எமிலியோடு சேர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக நாளை கழிக்கிறார்.ஒரு நாள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எமிலி சென்று மூன்று பேர் ஏமாற்றி விட்டார்கள் என்று கூறுகிறார். அத்தொலைக்காட்சி நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்குபெற அனுமதி கேட்கிறார். முதலில் மறுப்பவர் , பின் சூழ்நிலையால் அனுமதி தருகின்றார். எமிலியிடம் . பீட்டர் ஆர்வமாக கேட்க என்னை யாரும் ஏமாற்றிட வில்லை என் தோழி அருவியைத்தான் ஏமாற்றி விட்டார்கள் என அதிர்ச்சி தருகிறார். பின் மறுநாள் சூட்டிங் என படம் நகர்கிறது. இக்காட்சி மீடியவை கேள்வி கேட்கிறது. விவசாயம், சாதி, தகாதத் தொடர்பு, அரசியல், கொலை , கொள்ளை ,பாலியல் வக்கிரம் என பலவற்றை விசாரணைக்குட்படுத்தி நகர்ந்த விதம் அருமை.
அழகான பெண்ணை ஏமாற்றிய மூன்று அரக்கர்கள் என்று தலைப்பிட்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். அருமையான பாடல்கள் நம் காதை ஈர்க்கின்றன. மீடியாக்களில் நடக்கும் பல்வேறு விஷயங்ககள் இங்கே வெட்டவெளிச்சமாகின்றன. இயக்குனர் என்றாலே டென்ஷனாகத்தான் இருப்பதாகக் காட்டப்படுகின்றது. அருவிக்கு சில அறிவுறுத்தலுக்குப் பின்னே பேச வைக்கின்றனர். நிகழ்ச்சி இயக்குநரின் கட்டுப்பாட்டிலேயே நகர்கிறது. நிக்ழ்ச்சியை நடத்துபவர் ஏமாற்றிய மூவரையும் அழைத்து கேள்வி கேட்கிறார்.இடையில் இயக்குநர் கூட அருவியிடம் ஜொள்ளு வடிகிறார். பிறகு தனக்கு எய்ட்ஸ்நோய் இருப்பதாக அருவி பேசுகின்றார். அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தொகுப்பாளர் இயக்குனரிடத்து எய்ட்ஸ் நோயாளிடக்கூட ஏன் நிகழ்ச்சி நடத்தச் சொல்றீங்க என்று கோபப்படுகின்றார். இடையில் அருவியை தவறாக பேச அருவி ஒரு சிறப்பான நீண்ட டயலாக் பேசுகின்றார். சமூகம் சொல்லித்தருவது போல வாழ்ந்தா நாம சந்தோஷமாக இருக்க முடியுமா ? என கேள்வி கேட்கிறார். இதில் வாழ்க்கையின் பல படிநிலைகளைச் சுருக்கி விளக்குகிறார். உலக அரசியலை இந்த உரையாடல் நிகழ்த்திச் செல்கிறது. அருவி பேசுவதை அனைவரும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இக்காட்சியில் படம் பார்க்கும் அதிசயித்து போயிருக்க , விசில் சத்தம் காதைக் கிழிக்கின்றது. மேலும் உலகத்தில் சந்தோஷமா இருக்கிறதுக்கு பதிலாக எய்ட்ஸ்நோய் வந்து செத்துப் போகலாம் என்பார்.
வித்தியாசமான நடிப்பு. ஒருகட்டத்தில் கோபப்படும் அருவி துப்பாக்கி முனையில் அங்கிருக்கும் இருபதுக்கும் மேற்பட்டவரை சிறைவைக்கிறார். செய்தி தெரிந்து போலீசார் தேடுதல் செய்கின்றனர். இங்கே நடக்கும் அனைத்து காட்சிகளும் நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. அருமையான நகைச்சுவை அரங்கேற்றமாகிறது. பிறகு போலீசாரிடமே சுபாஷை அனுப்பி பிரியாணி வாங்கி வரச் செய்கிறார் . .நாகலட்சுமி (தொலைக்காட்சி தொகுப்பாளர் ) பங்கேற்பாளராக மாறும் போது செக்கியூரிட்டி மற்றும் அருள் செய்யும் அலப்பறை அட்டகாசம். பாட்டில் சுற்றிவிட்டு அனைவரும் பங்கேற்கும் காட்சிகள் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிறகு கைதுசெய்து காவலில் வைத்து விசாரிக்கப்படும் சமயத்தில் எய்ட்ஸ் நோயாளி என்றும் , உடல் நலம் பாதிக்கப்பட்டச் சூழலில் அடையார் மருத்துவமனையில் எமிலியின் துணையோடு வாழ்க்கையின் பிற்பாதி நகர்கிறது.
நோயால் பாதிக்கப்பட்டவரை நம்கண்முன் நிறுத்துகின்றார் அருவி. தன் ஒட்டுமொத்த நடிப்பால் படம் பார்ப்பவரை கதையோடு மட்டுமே இருக்க வைக்கின்ற முறை அபராமானது. அருவி எமிலியிடம் தன்சூழலைச் சொல்கிறார் . என்னை இங்கிருந்து எங்கேயாவது கூட்டுகிட்டு போய்விடு எமிலி என்று சொல்லும் போது நம் மனம் ஏதோ செய்கிறது. பிறகு மலைப்பாங்கான பகுதிக்குச் சென்று பழையவற்றை நினைத்துப் பார்க்கின்றார். ஒரு வீடியோ எடுத்து அதை தன் அப்பா , தன்னால் பாதிக்கப்பட்டவருக்கு அனுப்புகிறார். அதில் அவர் பேசியுள்ள விஷயம் , நடிப்பு ,நோயின் தீவிரம் , தொடர்ச்சியான இருமல் , செத்துடுவன்னு போல இருக்கு. உங்களை எல்லாம் பார்க்கனும் போல இருக்கு என்று சொல்வார். பீட்டர் அனைவரிடம் பேசி மறுநாள் அருவியைப் பார்க்கச் செல்கின்றனர். அங்கே அருவி வலியோடு ஆனந்தம் அடைகின்றார். படம் நம்மிடம் பலவற்றை பேசி நிறைவடைகிறது.
இயக்குனர் தான் சொல்ல வேண்டிய செய்திகளை ,ஆங்காங்கே பொருத்தமான கதாபாத்திரங்களின் வழியே பேசியுள்ளார். இப்படத்தின் மூலம் ஓரளவு சமூகத்தில் திருநங்கையர் கதாபாத்திரம் குறித்த எண்ணங்கள் மாற்றம் பெறலாம். எமிலியாக நடித்தவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ஒரு தந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும் , சமூகத்தில் வறுமையைக் காரணம் வைத்து பாலியல் இம்சை தருவது கண்டிக்கத்தக்கது. தன் சுயநலத்திற்காக ( தொலைக்காட்சி )மக்களின் அந்தரங்கங்களை பொதுவெளிக்கு கொண்டுவந்து ஏமாற்றுகின்ற ஊடக கேவலம் தோலுரிக்கப்படவேண்டியதே. நோய் வந்தவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என, தன்னம்பிக்கை தருவது அவசியமாவதை இத்திரைப்படம் முன்னிறுத்துகிறது. உலக அரசியல் , சமூக அக்கறையும் முக்கியம் என பலவற்றை பேசும் இப்படம் அடுத்த பல ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் படமாக திகழும் என்பது வெளிப்படை. தமிழில் வெளிவருவதற்கு முன்பே சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற இப்படம் இங்கும் பல விருதுகளைப் பெறும் ……படத்தில் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் வாழ்த்துகள். ……அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம் சீக்கிரம் பார்த்திடுங்கள்….உங்கள் மனங்களில் அருவிச்சாரலை விசாரணையோடு விதைப்பாள் இந்த அருவி….
மயிலம் இளமுருகு
mailamilamurugu@gmail.com
Mobile – 7010694695
mailamilamurugu@gmail.com
Mobile – 7010694695
நன்றி
www.discoverycinemas.com
டிஸ்கவரி சினிமாஸ்
0 Response to "அருவி திரைப்படம் விமர்சனம்"
Post a Comment