பாகமதி– திரைவிமர்சனம்

Trending

Breaking News
Loading...

பாகமதி– திரைவிமர்சனம்

 பாகமதி– திரைவிமர்சனம்
பேய்ப் படங்களின் டெம்ப்ளேட்டாகவே காட்சி தருகின்றாள் இந்த பாகமதி….

     தமிழ் சினிமாக்களில் மட்டுமின்றி உலக சினிமாக்களில் ஹாரர் ஜானர் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க வசூலை  ஈட்டியுள்ளன. அதன் தொடர்ச்சியாக இவ்வகையான திரைப்படங்கள் எடுப்பதில் இயக்குனர்கள் கவனம் செலுத்துகின்றனர். இத்தகைய திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டவைகளுக்குத் தீனி போடுவதாக உள்ளன. தற்போது பாகமதி என்ற திரைப்படம் தெலுங்கிலும் ,தமிழிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.  ஜி.அசோக் என்பவர் இத்திரைப்படத்தை நம்பிக்கையோடு இயக்கியுள்ளார். அனுஷ்கா இப்படத்தில் படத்தின் ஆளுமையாக நடித்துள்ளார். தனக்கு கொடுக்கின்ற  பணியைச் சிரத்தையோடு செய்துவரும்   இவர் அவரது ரசிகர்களிடையே பாராட்டைப்  தொடர்ந்து பெற்று வருகிறார். அதை இப்படத்திலும் காணமுடிகின்றது.


ஜெயராம் இப்படத்தில் அரசியல்வாதியாக தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். முக்கால்வாசி படம் வரைக்கும் நேர்மையான அரசியல்வாதி என்றே நம்புகிறோம். ஆனால் படத்தின் இறுதியில் வித்தியாசத்தைக் காண்கிறோம். ஆஷா சரத் CBI போலீஸாக நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே நடித்த பாபநாசம் திரைப்படம் நமக்கு நினைவிற்கு வருகிறது. போலிஸ் வேடத்திற்கு டெம்ப்ளேட்டாக மாறுகிறாரே என்று எண்ணத் தோன்றுகிறது. தன்னுடைய பணியைச் சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் மட்டுமின்றி முரளி சர்மா , தலைவாசல் விஜய், தேவதர்ஷினி, வித்யுலேகா போன்றோர்களும் நடித்துள்ளனர்.

       உன்னிமுகுந்தன் (சக்தி) அனுஷ்காவின் காதலனாக , மக்கள் நலன் காக்கும் வீரராக நடித்துள்ளார். இவரின் இயல்பான நடிப்பு அருமையாக உள்ளது. பல தமிழ்ப்படங்களின் சாயலைத் இத்திரைப்படத்தில் பார்க்கமுடிகிறது. பாகமதி உலாவுதாக சொல்லப்படும் பங்காளாவை அமைத்துள்ள செட் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. கலை இயக்குனர் ரவிந்தீராவின் உழைப்பு குறிப்படத்தக்கது. நிஜ பங்களா போன்றும், கதவு , கைப்பிடி, ஒட்டடை ,நாற்காலி  என பல பார்ப்பவரை ஈர்க்கிறது. அட்டகாசமன ஒளிப்பதிவை ஆர்.மதி குழுவினர் கொடுத்துள்ளனர். படம் முழுக்க இவரது சிறப்பைக் காணமுடிகின்றது. இருட்டில் அருமையான காட்சிகள் எடுத்து கொடுத்தமை அழுத்தமாக நம் மனதில் பதிகின்றன. மனதில் பதிகின்ற காட்சிகள் எடுத்த ஒளிப்பதிவாருக்கு வாழ்த்துகள். இசையை தமன் அவர்கள் கொடுத்துள்ளார். படத்தில் உள்ள  பி.ஜி.எம். நம்மை கவர்கிறது. வித்தியாசமான இசை திகில்  , காதல் என பலவற்றிற்கு பொருத்தமாக உள்ளன. பலதிறப்பட்ட காட்சிகள், உட்கதைகள் கொண்ட இத்திரைப்படத்திற்கு வெங்கடேஷ்வரராவ் அவர்கள் எடிட்டிங் செய்துள்ளார். இப்பணிக்காக இவர் சிறப்பாக செயல்புரிந்துள்ளதைக் படத்திலுள்ள காட்சிகளைக் கொண்டு அறிகின்றோம்.
கதை…..
      தமிழகத்தில் பலவிடங்களில் சாமி சிலைகள் காணாமல் போகின்றன. ஆனால் போலீசார் கண்டுபிடிக்க தாமதம் செய்கின்றனர். நீர்வளத்துறை அமைச்சர் ஈஸ்வர பிரசாத் தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டி தருகிறார். அப்போது நிருபர்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் தருகிறார். இன்னும்15 நாளில் திருடிய சாமி சிலைகள் மற்றும் திருடர்களைக் கண்டுபிடித்துவிடுவோம் என்கிறார். இதைப்பார்த்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் போடுகின்றனர். அதாவது ஈஸ்வர பிரசாத்திற்கு மக்கள் சப்போட் அதிகமாகிறது . இதனை எப்படியாவது தடுக்க வேண்டும். காணாமல் போன சாமிசிலைகளை அவரே திருடியதாக குற்றம்சாட்டி உள்ளே தள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டினர். அதற்காக CBI ஆக  ஆஷா சரத் நியமிக்கப்படுகின்றார்.
     இவர் பல்வேறு வகையான விதத்தில் ஈஸ்வர பிரசாத்தை சிக்க வைக்க தேடுதல் வேட்டை நடுத்துகின்றார். ரொம்ப கறாரான போலீஸ் அதிகாரியாக ஆஷா இருக்கிறார். ஈஸ்வர பிரசாத்தின் தனிச்செயலாளர் சஞ்சளா (அனுஷ்கா) முரளி சர்மாவின் தம்பி சக்தியை கொலை செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கிறார். இவரை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விசாரணை நடத்த திட்டமிடுகின்றனர். அதற்காக காட்டில் பாகமதி பங்களாவிற்கு மாற்றப்படுகின்றார். இப்பழைய பங்களாவில் பாகமதி என்ற  பேய் நடமாட்டம் இருப்பதாக பேசப்படுகிறது. காரில் அனுஷ்காவை அழைத்து செல்கின்றபோதே திகில் காட்சிகள் தொடங்கி விடுகின்றன.
    அங்கிருக்கும் போலீஸ் இது பேய் பங்களா என்று வந்தவர்களைப் பயமுறுத்துகிறார். அனுஷ்கா முரளி சர்மாவாகிய கமிஷனரிடம் என்னை இங்கே ஏன் கூப்பிட்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். உள்ளே பேய் இருப்பதாக போலீசார் பேச அதற்கு ஏன் வெளியே பேய் இல்லையா என்று கேட்கிறார். உள்ளே செல்லும் இவர் பல்வேறு ஓசைகள்,உருவத்தைப் பார்க்கின்றார். பழைய கதவைத் திறக்கிறார். அப்போது ஏற்கனவே தான் IAS ஆக இருந்த போது நடந்த காட்சிகள் தோன்றுகின்றன. மக்கள் தங்கள் இடத்தை நீராதார திட்டத்தைக் காரணம் காட்டி பிடிங்கி கொள்கிற நிலையில் போராட்டம் செய்கின்றனர். அப்போராட்டத்திற்கு உறுதுணையாக சக்தி ( உன்னி முகுந்தன்) இருக்கிறார். கலவரத்தில் அனுஷ்காவை காப்பாற்றுதல் , தொடர்ந்து நடைபெறும் சந்திப்புகள், மக்களுக்காக போராடும் பண்பு போன்றவற்றின் காரணமாக சக்தியை அனுஷ்கா காதலிக்கிறார்.
    எதிர்பாராத விதமாக சக்தியை கொலை செய்வதாக காட்டப்படுகின்றது. ஏன் எதற்காக அவர் இறந்தார் என்ற தகவல் படத்தின் இறுதிக்காட்சியில் காட்டப்படுகின்றது. வைஷ்ணவி ரெட்டி (ஆஷா சரத் ) சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஈஸ்வர பிரசாத் குறித்து பேசுகிறார். அவர் ஒரு ஊழல்வாதி என்றும், திருடர் என்றும் சொல்கிறார். இதைக்கேட்ட அனுஷ்கா கோபப்படுகின்றார். அமாவாசை அன்று சடங்கு செய்வதாக கூறி அங்கிருக்கும் போலீசாரை பயமுறுத்துகிறார் ஒருவர். மழை, மின்சாரம் இல்லாத இருளில் திகிலூட்டும் காட்சிகள் வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வையும் வியப்போடு பார்க்கிறார். புகைப்படம் இருக்கிற புத்தகத்தை எடுத்து திருப்பிப் பார்க்கிறார். பழைய கதைகளை நினைத்து பார்க்கிறார்.
    காவலாளிகளை உதவிக்கு அழைக்கிறார். ஆனால் அவர்களால் உதவ முடியவில்லை. உதவட்டுமா என்று கமிஷனரிடம் போலீசார் கேட்க அவர் உங்களை பயமுறுத்துகிறார். நீங்கள் மூடிகிட்டு படுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஆஷா சரத் மீண்டும் விசாரனை செய்கிறார். ஆனால் ஈஸ்வர பிரசாத் குறித்து நல்லவிதமாகவே பதில் தருகிறார். நீங்கள் சிறையில் இருக்கும் போது ஏன் உங்களுக்கு உதவி செய்ய அமைச்சர் வரவில்லை என்று கேள்வி கேட்கிறார். அனைத்து கேள்விகளுக்கும் சாதுர்யமாய் விடை தருகிறார். பங்களாவில் திரைப்படம் ஓடுவதாக காட்டப்படுகிறது. போலீசார் அனுஷ்காவை காப்பாற்றி வருகின்றனர். ஆனால் ஏதோவொன்று அனுஷ்காவை தூக்கிச் செல்கிறது.
     சரியாக திரைப்படத்தின் 1 மணிநேரம் 10 நிமிடம் கழித்து பாகமதி விஸ்வரூபம் எடுக்கிறார். இங்கே எல்லாரும் வந்து போக இது என்ன பரதேசி மடமா என்கிறார். இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருந்த போது திடீரென பாகமதி தோன்றும் போது வியந்தே போகின்றோம். இப்படியாக அனுஷ்கா நடந்து கொள்ள ,மருத்துவர் தலைவாசல் விஜய் அவர்கள்  அழைத்துவரப்பட்டு அனுஷ்காவைப் பரிசோதனை செய்கின்றனர். ஆனால் அவரால் சரியாக கணிக்க முடியாமல் வெளியேறுகிறார். சாமியாரை அழைத்து வந்து சோதித்து அறிகின்றனர்.
     அனுஷ்கா மற்றும் கமிஷனர் பேசுகின்றனர். உள்ளே பாகமதி இருக்கும் சூழல் காட்டப்படுகின்றது. அனுஷ்கா கையில் ஆணி அடித்துக் கொண்டு வலியால் துடிக்கின்றார். சஞ்சளாவின் சூழலால் மருத்துவ மனையில் சேர்த்து விட்டதாக ஜெயராமிடம் கமிஷனர் சொல்ல திடுக்கிட்டு உள்ளே சென்று அனுஷ்காவிடம் பேசுகிறார். அப்போது முன் நடந்த காட்சிகள் காட்டப்படுகின்றது. இதற்கிடையில் பாகமதி பங்களாவிற்குச் சென்று அனுஷ்கா சூசகமாக சொன்ன பதில்களை நினைவு கூர்ந்து பார்க்கின்றார். அதில்  ஈஸ்வர பிரசாத் குறித்த உண்மைகள் அடங்கியிருக்கிற செய்திகள் நினைவிற்கு வருகிறது. அப்போது ஈஸ்வர பிரசாத் மற்றும் அனுஷ்காவிற்கும் இடையில் விவாதம் நடக்கிறது. எப்படி இவ்வளவு கச்சிதமாக பாகமதியாக நடித்தாய் என்று அமைச்சர் கேட்க அதற்குரிய காட்சிகள் நம் முன் விரிகின்றன. அப்போதுதான் முன்பு நடந்த காட்சிகள் காட்டப்படுகின்றன. மக்களுக்காக சக்தியே தன் மீது அனுஷ்காவின் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டு இறந்தது நினைவிற்கு வருகிறது.
     300 கோடி பணம் அனுஷ்காவிற்கு தருவதாக அமைச்சர் சொல்கிறார். ஆனால் அனுஷ்கா திறமையாக செயல்பட்டு CBI ஆஷா சரத்திடம் உண்மையான விவரத்தைச் சொல்ல சிக்கலில் மாட்டுகின்றார் ஈஸ்வர பிரசாத். இறுதியில் அனுஷ்கா அமைச்சர்  தன்னை தாக்கவதாக கூற வந்த போலீசார் ஈஸ்வர பிரசாத்தை சுட்டுக் கொல்கின்றனர். இறுதியில் தன் தம்பியின் சாவிற்கு அனுஷ்கா காரணம் இல்லை என்று தெரிந்து கொள்கிறார் கமிஷனர். ஆஷா சரத் மற்றும் கமிஷனர்,அனுஷ்கா பேசிக்கொண்டு இருப்பதாக படம் முடிவடைகிறது.
     படத்தின் தொடக்கத்தில்  அரசியல்வாதி என்ற அடிப்படையில் பேச்சு தொடங்குகின்ற போது போகிற போக்கில் தமிழக அரசியலைக் கிண்டல் செய்கிறது இப்படம். தமிழகத்தின் முதலமைச்சர் குறித்த செய்திகள் தமாஷாக இருக்கிறது.  திகிலூட்டும் காட்சிகள், அனுஷ்காவின் நடிப்பு , ஒளிப்பதிவு , சிறந்த இசை , பங்களாவின் காட்சிப்பதிவு போன்ற காரணங்களுக்காக வேண்டுமென்றால் ஒரு தடவை பார்க்கலாம். மற்றபடி பேய்ப் படங்களின் டெம்ப்ளேட்டாகவே காட்சி தருகின்றாள் இந்த பாகமதி….

மயிலம் இளமுருகு
9600270331
 நன்றி
 www.discoverycinemas.com

0 Response to " பாகமதி– திரைவிமர்சனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel