மனிதம்

Trending

Breaking News
Loading...

மனிதம்

மனிதம்
மயிலம் இளமுருகு விற்கு நேற்று (12.02.2018) நேர்ந்த சூழல் இதோ. 

      இளஞ்சிவப்பு சூரியனில் பார்வையைச் செலுத்திக் கொண்டே இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டு வந்தேன். புறவழிச்சாலையில் ஏறுவதற்கு வண்டியை திருப்பினேன். மேம்பால சாலையின் தொடக்கத்தில் ஒரு முதியவர் மூன்று நான்கு பைகளோடு உட்கார்ந்து கொண்டிருந்தார். 50 வயதைத் தாண்டிய முதிர்ச்சியில் அவர் இருந்தார். அவ்வழியே போகின்றவர்கள் அவரவர் வீட்டிற்குப் பயணித்து கொண்டிருந்தனர். சற்று தூரம் தள்ளி என் வண்டியை ஓரமாக நிறுத்தினேன். மனது ஒரு கணம் வலித்தது. நாம் வீட்டிற்கு செல்கிறோம். ஆனால் இவர் ஏன் இங்கே இருக்கிறார். விசாரிக்கலாம் என்று மனதில் தோன்ற அவரை நெருங்கினேன்.
        என்னைப் பார்த்து தலையாட்டி என்னப்பா என்றார். நானுமே தலையாட்டிக் கொண்டு அவரை நெருங்கினேன். சென்று உங்களைப் பார்த்தவுடன் பேசத் தோன்றியது என்றேன். அதற்கு நான் சொல்வதைக்கேட்டு இரண்டு கைகளைக்கூப்பி வணக்கம் சொன்னார். ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கீங்க என்றேன். ஏம்பா இப்படி கேக்கிற என்றார். இல்ல நீங்க உங்க வீட்டுக்கு போகலையா என்றேன். ஏன் நான் என் வீட்லதானே இருக்கேன் என்றார். எனக்கு அவருடைய சூழல் புரிந்தது.
        நீங்க எந்த ஊர் என்றேன். நானா திருச்சி என்றார். திருச்சியிலிருந்து இங்க வந்து என்ன பன்றீங்க என்றேன். என் மகள் ,மகன்களைப் பார்க்க வந்தேன் என்றார். சரி நீங்க அவுங்களைப் பார்த்திட்டீங்கதானே என்றேன். ஆமாம் பார்த்திட்டேன். சரி வீட்டுக்கு போகவேண்டியதுதானே என்ற சொல்ல ,நான் எங்க போவேன் என்றார். திருச்சிக்குப் போகவேண்டியதுதானே என்றேன். அங்க போய் என்ன செய்வேன்  தம்பி  என்னுடைய மனைவி இறந்துவிட்டாள் என்று குழந்தைகள் கூட வாழ்ந்திடலாம் என்றுதான் இங்கு வந்தேன் என்றார்.
     சரி குழந்தைகள் கூட இருக்க வேண்டியதுதானே என்று கூற ,அவர் அவுங்கள ஒன்னும் சொல்லாதப்பா அவுங்ககிட்ட நான் பேசியதில் ,பழகியதில் பட்ட அவமானங்கள் கொஞ்சநெஞ்சமல்ல என்றார். சரி வாங்க இங்கே உட்காரக்கூடாது. எவ்வளவு வண்டிங்க போவுது என்று அவருடைய கைகளைப்பிடித்து அழைத்தேன். அவர் என் கையை அழுத்தி விலக்கிக் கொண்டார். உங்கள் குழந்தைகள் போன் நம்பர் விலாசம் கொடுங்க என்றேன்.
   எதற்குப்பா நான் பட்டது பத்தாதா ?நீ வேற பேசி உன்னையும் கஷ்டப்படுத்திக்கப்போற என்றார். இல்ல நான் பேசிப்பார்க்கிறேன் என்றேன். உங்கள நல்லா பார்த்துக்கும்படி சொல்றேன் என்றேன். அதுலாம் ஒன்னும் வேணாம்பா . இங்க நான் காலையிலிருந்தே பார்த்துகிட்டு தான் இருக்கேன். எவ்வளவு பேர் போனாங்க. ஆனால் உனக்கு மட்டும் என்ன வந்தது. ஒழுங்கா போக வேண்டியதுதானே என்றார். என்னால் அப்படி போக முடியாமல் தான் உங்களிடம் பேச வந்தேன் என்றேன். உண்மையில் ஏதோ ஒன்று என்னைத் தள்ளியது.
மனம் கனத்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர் இப்படியெல்லாம் சூதானம் இல்லாமல் இருக்காதப்பா என்றார். சாப்பிட்டீங்களா என்றேன். இல்லை என்றார்.  சரி வாங்க என்னுடன் ஹோட்டல் போயிட்டு சாப்பிட்டுவிட்டு வரலாம் என்றேன். ஹோட்டல்லா நான் அங்கெல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லப்பா என்றார். சரிங்க இன்னிக்கு சாப்பிட்டு பழகிக்கலாம் என்று அழைத்தேன். வீட்டில் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. சீக்கிரம் வாங்க என்ன லேட்டாயிச்சு என்றும் பாப்பாவ ஸ்டேஸ்னரிக்கு கூப்பிட்டு போறீங்கன்னு சொன்னீங்களே அவ உங்களுக்காக காத்திட்டு இருக்கா என்று சொல்லி முடித்தார் என் இணையர்.
     ஐயா எனக்கு வேற டைம் ஆகுது. வாங்க என்று மீண்டும் அழைத்தேன். சரி நீ போப்பா வீட்டுக்கு என்றார். அவருக்கு உதவிசெய்யாமல் வருவதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. உடனே சட்டைப்பையில் இருந்து ஒரு இருநூறு ரூபாயை அவர் கையில் கொடுத்தேன். ஆனால் அவர் வேண்டாம் என்று திரும்ப என்னிடமே கொடுத்தார். நான் பிடிவாதமாக அவரது பாக்கெட்டில் வைத்து ஏதாவது வாங்கி சாப்பிடுங்கள் என்று என் வீடு நோக்கி பயணிக்க ஆயத்கமானேன்.
        ஒரு அரசு தன் எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் இப்படி ஒவ்வொரு இடங்களிலும் பல மனிதர்கள் பரிதவிக்கின்றனர். இதை கண்டும் காணாமல் தன் அதிகாரத்தை மட்டுமே  தக்க வைத்துக்கொள்ளவே முனைப்பு காட்டி வருவது வேதனைக்குட்பட்டது. அவரவர் தன்னையும் தன்னைச் சார்ந்திருப்பவரையும் கவனித்தல் வேண்டும்தான். ஆனால் ஒருசிலவற்றில் பொதுநலத்தோடு இருக்க வேண்டியதன் அவசியம் முக்கியமானதாகவேப்படுகின்றது.
   கொஞ்சம் நெஞ்சோரத்தில் ஈரம் உள்ளவர்கள் யோசனை செய்யுங்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசும் கைகோர்த்து இப்படி வீதிகளில் நடமாடும் தவிக்கும் மனிதர்களை அரவணைக்க வேண்டும். வளர்த்து ஆளாக்கிய தன் பெற்றோரை கவனிக்காமல் ஒருவர் வாழ்தல் என்பது கேவலமானது. கூடிய மட்டும் பெற்றோர்களை கவனித்து கொள்ளுங்கள் தோழர்களே. கொஞ்சம் மனிதத்தன்மையோடு நடந்து கொள்வோம் நண்பர்களே....
   இதை எழுதி முடிக்கையில் ஏற்கனவே பார்த்த மௌனகுரு திரைப்படம் நினைவிற்கு வருகிறது.
கண்ணீர்த்துளிகளோடு
மயிலம் இளமுருகு
13.02 2018

0 Response to "மனிதம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel