ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் -திரைவிமர்சனம்

Trending

Breaking News
Loading...

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் -திரைவிமர்சனம்

ஒரு நல்ல  நாள் பார்த்து சொல்றேன் -திரைவிமர்சனம்

    வித்தியாசமான பதில் - ஒரு நல்ல  நாள் பார்த்து சொல்றேன்

       காமெடி, பேண்டஸி, பிளாக் ஹீயூமர் ஜானரில் வந்துள்ள படமே ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படமாகும். தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகச்சரியாக பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கின்ற விஜய் சேதுபதி வழக்கம் போல இப்படத்தில் ரசிகர்களுக்கு நல்ல தீணி போட்டுள்ளார். படத்தின் கருத்தை உள்வாங்கி கொண்டு தனது நேர்த்தியான நடிப்பை கொடுப்பது விஜய் சேதுபதியின் வழக்கம் அதை இப்படத்திலும் பார்க்க முடிகின்றது. தான் மட்டும் வளராமல் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் நடிப்பதற்கு வாய்ப்பு தருபவராகவும் திகழ்வது கூடுதல் சிறப்பு. தன்னுடன் பயணிக்கின்ற நண்பர்களை ஏமாற்றாமல் அவர்களைத் தட்டிகொடுப்பதையும் அவரது செயல்பாட்டால் அறிந்து கொள்ள முடிகின்றது.





         ஆந்திரா மாநிலம் கர்னூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமான எமசிங்கபுரம் என்ற கிராமத்தில் வாழ்பவர்கள் எமனை தன் வழிபடு கடவுளாக நினைத்து வணங்குகின்றனர். அதைப்போன்றே மக்களை துன்புறுத்தாமல் அவரது பொருட்களைத் திருடிக்கொண்டு வருவது அவர்களது தொழிலாகும். எமன் (விஜய் சேதுபதி) இன் தாய் எமராஜாவிடம் குறிகேட்டு திருடுவதற்கு அனுப்பப்படுகின்றனர். அப்படி எமன் மற்றும் இரு நண்பர்களுடன் திருடச் செல்கின்றனர். திருடுகின்றனர். திருடப்போன இடத்தில் சுவரில் உள்ள போட்டோவைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றார் எமன். பிறகு நண்பர்களுடன் சேர்ந்து சொளமியா ( நிஹாரிகா கோணிடெல்டா ) யை கடத்திக்கொண்டு தன்னுடைய கிராமமான எமசிங்கபுரம் செல்கின்றனர்.

      சொளமியாவை காதலிக்கும் ஹரீஷ் ( கௌதம் கார்த்திக்) எமசிங்கபுரம் சென்று காதலியைக் காப்பாற்ற நினைக்கிறார். தன் நண்பன் டேனியுடன் சென்று அங்கு அவர்கள்  செய்கிற அலப்பறை மற்றும் ஹீரோயினைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதை சொல்வதாகவே இப்படம் காட்சியளிக்கிறது.. விஜய் சேதுபதி ஏற்கனவே நடித்த சூதுகவ்வும்,இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களைப் போன்றே இப்படத்தையும்  தேர்வு செய்து அசத்தியுள்ளார்.


       அறிமுக இயக்குனர் ஆறுமுகக்குமார் தான் சொல்ல வந்த  பொருளைச் சொல்வதில் ஆணித்தரமாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லலாம். காமெடியில் கலக்கியுள்ளார். காட்டில் படப்பிடிப்பு நடத்தியது ,நகரத்தைக் காட்டியது ,கல்லூரி வாழ்க்கை ,மதுபானக்கடை என பல்வேறு இடங்களில் ஒளிப்பதிவாளர் ஶ்ரீசரவணின் உழைப்பைப் பார்க்க முடிகின்றது. காட்டில் கிராமத்தை உருவாக்கியது என கலை இயக்குனர் .கே.முத்து கவனம் பெறுகின்றார். இப்படத்திற்கான இசையை ஜஸ்டின் பிரபாகரன் அருமையாகத் தந்துள்ளார். பாடலிலே கதையும் சேர்த்தே நகர்கிறது. மென்மையான பாடல்கள் நம்மை கவர்கிறது. கோவிந்தராஜின் படத்தொகுப்பு கச்சிதம். டான் அசோக் அவர்களின் சண்டைப்பயிற்சி ,கல்யாண் அவர்களின் நடனம் என பலரது திறமையை இப்படத்தில் காணமுடிகின்றது.

   கதை இதுதான்

        படம் ஆரம்பத்தில் தன்னுடைய ஊர் எங்கிருக்கிறது என்று விஜய்சேதுபதி வாய்ஸ் ஓவரில் சொல்கிறார். பல அண்டங்கள் ,பல இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான அண்டங்கள் ,உலவுகின்றன. ஒரு அண்டத்திற்குள் வந்தால் காஸ்லிக் வெப் இருக்கிறது அதுனுள்ளும் கேலக்ஸி ,கூட்டத்துள் புகுந்தால் அனரோமேடா இருக்கிறது. அருகில் பால்வழி மண்டலம், பலகுடும்பங்களில் சூர்ய குடும்பம் என்ற ஒன்று  உள்ளது. அதிலிருந்து 15 கோடி கி.மீட்டர் தூரத்தில் பூமி என்ற கிரகம் உள்ளது. அது பலகண்டங்களாக உள்ளன. அதில்  ,ஆசியா கண்டத்தில் இந்தியா உள்ளது. இந்தியா   ,29 மாநிலம் கொண்டது. அதில் ஒன்று ஆந்திரா அதில் 13 மாவட்டங்களில் ஒன்றான கர்னூரில் உள்ள ஒரு கிராமமே எமசிங்கபுரம் என்ற கிராமமாகும்.

      படம் வித்தியாசமான முறையில் தொடங்கியது. நாம் நினைப்பதைவிட வித்தியாசமாகவே படமும்  நகர்கிறது.  15 வயதிற்கு மேல் உள்ளவர்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வருவர். விஜய்சேதுபதியின் அம்மா எமரோஜா எமராஜாவிடம் குறிகேட்டு எமனையும் அவருடன் இரு நண்பர்களையும் திருட அனுப்பி வைக்கப்படுகின்றனர். ரமேஷ் திலக் புருஷோத்தமன் ஆகவும் ,ராஜ்குமார் நரசிம்மன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அவர்கள் வழக்கப்படி தன் மனைவியிடம் உள்ள தாலியை வாங்கி தன் கழுத்தில் போட்டுக்கொள்கின்றனர். ஆனால் விஜய்சேதுபதி திருமணம் ஆகாதவர் எனவே ஒரு சிலையிலிருந்த தாலியை எடுத்து தன் கழுத்தில் போட்டுக்கொண்டு திருடச் செல்கின்றனர்.


       இவர்கள் பல இடங்களில் திருடுகின்றனர். அப்படி ஒரு இடத்திற்கு திருட வீட்டிற்குச் செல்கின்றனர். விஜய்சேதுபதி அவ்வீட்டில் உள்ள புகைப்படத்தைப் பார்த்து தன் மொபைலில் போட்டோ எடுத்துக் கொள்கின்றார். மேலும் அப்பெண்ணைத் தன் கிராமத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்ய விரும்புகிறார். கல்லூரியில் ஹீரோயின் சௌமியா (நிஹாரிகா) படிக்கிறார். அவளது தோழியிடம் பேசிய கௌதம் ( ஹரீஷ்) பின்பு சௌமியா வை காதலிக்கிறார். சௌமியாவைத் தூக்கிவர விஜய்சேதுபதி யின் நண்பர்கள் செல்கின்றனர். ஆனால் எமன் சொல்கிற அபயலட்சுமி என்ற பெயரில் யாரும் இல்லை என்று திரும்பி வருகின்றனர்.

        கௌதம் துடுக்குத்தனமான கல்லூரி இளைஞராக பட்டைய கிளப்பியுள்ளார். எல்லா பெண்களும் முட்டாள்தனம் கொண்டவர்கள் என்று சொல்ல சௌமியா அவரிடம் சண்டை போடுகின்றார். நீ ஆம்பளையே இல்லை என்று கிண்டல் செய்கிறார். ஜஸ்,பீர்,பப்,பொண்ணுங்க அவுட்டிங் கூப்பிட்டா வரணும் .ஆனால் நீ ஒரு லாங் டிரைவ் கூட வரமாட்ற என்று பேசிவிட்டு செல்கின்றார். தன் நண்பன் டேணியிடம் மதுபானக்கடையில் என்னை ஒரு பொண்ணு ஆம்பிளை இல்லைன்னு கலாய்ச்சுட்டாடா என்று கூறி புலம்புகிறார். அப்போது அங்கு வரும் எமன் மற்றும் நண்பர்களிடம் சண்டை நடக்கிறது. பேசிக்கொண்டு இருக்கும் போது எமனை கௌதம் அடித்துவிடுகின்றார்.  தாலிமீது கைவைத்த டேனியை அடிக்க கௌதம் தாலியைப் பார்க்கிறேன் என்று சொல்லி தாலியை அறுத்துகொண்டு ஓடுகின்றனர்.

        பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து ஒருகட்டத்தில் தாலியைத் தூக்கி போட்டு விடுகின்றார் கௌதம். பிறகு போதையில் இருக்கும் இருவரையும் போலீசார் ஸ்டேஷனிற்கு அழைத்துச் செல்கின்றனர். கௌதம் பேசும் பேச்சினால் போலீசாரிடம் செம அடி வாங்குகிறார் டேனி. ஜட்டியில் ஸ்பைடர் மேன் படம் இருப்பதைப் பார்த்த போலீசார் அவரை அதிகமாக அடிக்கின்றனர். வித்தியாசமான பலவிதமான கெட்டப்பில் விஜய்சேதுபதி கலக்குகிறார். பெண்ணைக் கடத்த பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். கௌதம் சௌமியா விடம் ஒன்று சொல்ல நினைக்கிறார். என்ன சொல்லு என்று சௌமியா கேட்க அதற்கு கௌதம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிறார்.

       கல்லூரியில் பாடல் பாடும் கௌதமை மாணவர்கள் தக்காளி மற்றும் செருப்பைக் கொண்டு அடிக்கின்றனர். ஆனால் அப்போதும் அவர் பாடலை நிறுத்தாமல் பாட சௌமியாவிற்கு கௌதமைப் பிடித்துப் போகிறது. புருஷோத்தும் நரசிம்மனும் விஜய்சேதுபதி யிடம்  நாம் கிராமத்தைவிட்டு வந்து இன்றோடு மூன்று பௌர்ணமி முடியப்போகிறது. இன்று எப்படியாவது சௌமியாவைக் கடத்திடணும் என்று பேசிக்கொள்கின்றனர். கௌதம் எமனிடம் சௌமியாவை கடத்த ஆலோசனை தருகிறார். அச்சீப்போ என்று கௌதமை சொல்கிறார் விஜய்சேதுபதி. தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் விஜய் சேதுபதி. படத்தில் லாஜிக் எல்லாம் இருக்காது. எமனிடம் நான் ஸ்டாப் என்று சொன்னவுடன் சௌமியா வை இறக்கிவிட்டு நீங்க போகனும் என்று சொல்ல ஆனால் விஜய்சேதுபதி நிறுத்தாமல் தன் கிராமத்திற்கு சௌமியாவை அழைத்துச் செல்கின்றார்.
        கௌதம்   போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் செய்ய போலீசார் அப்புகாரை  ஏற்காமல் சௌமியாவின் அம்மா வீட்டிற்கு போகச் சொல்கின்றனர். ஆனால் அவருடைய அம்மா என் பொண்ணு அவருடைய பாட்டி வீட்டில் பத்திரமாக இருக்கிறார் என்று சொல்கிறார். பிறகு அவரது தந்தை சொல்ல எமசிங்கபுரம் கிராமத்திற்கு இருவரும் செல்கின்றனர். எமசிங்கபுரத்தில் கௌதம் மற்றும் டேனி பட்டையக் கிளம்புகின்றனர். போலீசாரரே அவ்வூர் மக்களைப்பற்றி நன்றாக சொல்ல இருவரும்  அதிர்ச்சி அடைகின்றனர். திருடுவாங்க ஆனால் பொண்ண கடத்தி கொலை எல்லாம் செய்யத் தெரியாது என்று கூறுகின்றனர். காதல் என்றால் கண்ணாமூச்சி ஆட்டமா என்ற பாடலை தெலுங்கில் பேசி ரசிகர்களை கவர்கிறார் விஜய்சேதுபதி.

       போலீசார் தன்னை மிரட்டுவதாக மதுபானக்கடையில் கௌதம் பேசிக்கொள்கின்றனர். பிறகு ஊருக்கு போக பேருந்தில் பயணம் செய்ய பேருந்தில் ஏறுகின்றனர். ஆனால் கௌதமின்  தேவையில்லாத பேச்சால் டேனி கண்டக்டர் மற்றும் போலீசாரிடம் அதிகப்படியான அடிகளை வாங்குகிறார். டேனி வருகின்ற இடமெல்லாம் அடிவாங்கி படம்  பார்ப்பவரை சிரிக்க வைக்கிறார். பாடலில் நம் அரசியலை கேலியும் கிண்டல் செய்வதாக படம் நகர்கிறது. சௌமியாவின் அம்மா அப்பா வருவதைப்பார்த்து சௌமியா  நிம்மதி அடைகிறார். ஆனால் அவர்கள் நாளை உனக்கும் எமனுக்கும்  நிச்சயதார்த்தம் என்று அதிர்ச்சி தருகின்றனர். என்னப்பா என்று சௌமியா தன் அப்பாவிடம் கேட்க அதற்கு அவர் விவரங்களை  ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிறார். எமனைப்பாரத்து கௌதம் இவர்தான் சௌமியாவை கடத்தினார் என்று சொல்ல டேனி பயந்து போகின்றார். பணம் குறித்து சொல்லும்போதும் நாளைக்கு இது  செல்லாது என்று சொல்லிடப்போறாங்க என்று பணமதிப்பு இழப்பு விஷயத்தை சொல்கின்றனர் இயக்குனர். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களிடத்து நெருங்கி வருகிறார் விஜய்சேதுபதி.


       தன் அப்பாவைப் பார்த்து சௌமியா அருமையாக கேள்வி கேட்கிறார். அதற்கு பிறகு அவரது அப்பா முன்பு நடந்த அனைத்து நிகழ்வையும் சொல்கிறார். எமனின் அக்காவான உன் அம்மாவை நான் திருமணம் செய்தேன். பிறகு எமசிங்கபுரம் வந்து கிராமத்தைத் தெரிந்து கொண்டதால் என்னை உன்னுடைய பாட்டி கொலை செய்யச் சொன்னார். ஆனால் எமன் அப்போது மாமாவை உயிரோடு விட்டுவிடலாம் என்று தன் அம்மாவிடம் சொன்னார். அதற்கு அவர்.  அவருடைய பெண்ணை என் மகன் எமனுக்கு திருமணம் செய்து தரவேண்டும் என்று கேட்கிறார் . அதனை ஒப்புக்கொண்டே நான் இதுநாள் வரை உயிரோடு இருக்கிறேன். ஏம்பா சின்ன வயசில் எனக்குத் தெரியாமல் நீங்கள் போட்ட சத்தியத்திற்கு நான் எப்படி ஒத்துக்கொள்ள முடியும் என்கிறார்.

          விஜய்சேதுபதி யிடம் மாட்டிக்கொண்டு கௌதம் மற்றும் டேனி அல்லல்படுகின்றனர். கோதாவரி (காயத்ரி) இவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறார். அப்போது கௌதம் காட்டில் 5 கி.மீ.போவதற்கு ஷேர்ஆட்டோ இருக்கிறதா என்று கேட்கிறார். பதினான்கு வருட தவம் குறித்து நீண்ட வசனம் பேசி ரசிகர்களை குழிப்படுத்தியுள்ளார் விஜய்சேதுபதி. அப்போது ரமேஷ் திலக் கூலாக இதைத்தான் நீ அடிக்கடி பதினாலு வருட தவம்ன்னு சொன்னியா என்று கேடி  பார்ப்பவரை சிரிக்க வைக்கிறார்.  கௌதமை ப் பார்த்து நீங்களாக வரவில்லை நாங்கள் உங்களை வரவைத்தோம் என்கின்றனர்.

          எங்கள் வழக்கப்படி வெளியூரில் கொலைசெய்வது பழக்கம் இல்லை என்று சொல்கின்றனர். தப்பிப்பதற்காக விஜய்சேதுபதி யின் தாலியை அறுத்துகொண்டு ஓடுகிறார் கௌதம். பிறகு மாட்டிக் கொள்கிறார். எமராஜா கூட்டத்தில் ரமேஷ் திலக் ஆப்புவால் டேனியைக் குத்த அவர் கதறுகின்றார். அம்மா மேல சத்தியமா நாங்கள் பயந்து ஊருக்குப் போகத்தான் நினைச்சோம் ஆனால் ஒருவரால் வந்து இங்கு மாட்டிக்கொண்டோம் என்கிறார். கௌதமைப் பார்த்து ஏண்டா யோசிக்கிற அம்மா மேல சத்தியம் பண்ணுடா என்று சொல்கிறார். ஆனால் நமக்கு ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அரசியல்வாதிகள் சத்தியம் செய்ததுதான்,செய்வதுதான் நினைவிற்கு வருகிறது.

             பணத்தையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு தப்பிக்கும் சௌமியாவை பிடித்து விடுகிறார் விஜய்சேதுபதி. பொண்ணுங்க பசங்களோட மனதைத்தான் திருடனும் இப்படி பணத்தை இல்லை என்கிறார். அவளைப் பார்த்துக் கொள்ளும்படி காயத்ரி யைச் சொல்கிறார். ஆனால் அவர் சௌமியாவைத் தப்பிக்க உதவி செய்கிறார். இறுதியில் சௌமியாவின் தந்தையை எமன் சிலைமீது ஏறி செளமியா திருமணத்தை நிறுத்துங்கள் என்று தக்க திட்டம் தீட்டி செயல்படுத்துகிறார். இதை கவனித்த விஜய்சேதுபதி காயத்ரியைப் பார்த்து நீ என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று கேட்கிறார். காயத்ரி சம்மதிக்க சௌமியா ஆனந்தம் அடைகின்றார். இதுவரை தெலுங்கு பேசிய விஜய்சேதுபதி தமிழ் பேச ,சௌமியா தெலுங்கில் பேசி அசத்துகின்றார்.

            ஸ்டாப் என்று கௌதம் சொல்ல விஜய்சேதுபதி சூலுப்பயல என்கிறார். அடி வாங்கிக்கொண்டு உடைந்துபோன கண்ணாடியை மாட்டிக்கொண்டு சௌமியா விடம் எப்படி உன்னை காப்பாற்ற வந்தேன் என்று சொல்ல விஜய்சேதுபதி சிரிக்கிறார். ப்ரோ என்று சொல்ல பின்னும் காயத்திரியைப் பார்த்து ப்ரீ என்கிறார். ப்ரீ என்றால் அண்ணி என்று சொன்னேன் என்கிறார்.  விஜய்சேச என் பதினாலு வருட கனவு என்று காயத்திரியிடம் சொல்ல காயத்ரி மகிழ்ச்சியுடன் கல்யாணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்கிறார். தன் அம்மாவிடம் சம்மதம் கேட்க அவர் எமராஜாவிடம் கேட்கவேண்டும் என்கிறார். அதற்கு விஜய்சேதுபதி கிளைமாக்ஸ் வந்துடுச்சு எமோஷனல் குறைச்சிடும்மா என்கிறார். சௌமியா விஜய்சேதுபதி யிடம் ஏதோ காதில் சொல்ல கௌதமிடம் ஏம்மா ஏதோ ரொம்ப நாளா ஒன்னு சொல்லனும் சொன்னியே என்னப்பா அது என்று கேட்கிறார். அதற்கு கௌதம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிறார். இறுதியில் ஆடியன்ஸைப் பார்த்து இன்னோரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்று விஜய்சேதுபதி சொல்கிறார்.
அதாவது இப்படத்தின் இரண்டாவது பாகம் வரப்போகிறது என்பதுதான் அது.

            இப்படத்தில் கௌதமின் நண்பராக வரும் டேனிக்கு நன்றாக  நடிப்பதற்கான  வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்போன்றே ஹீரோயினுக்கும் நடிப்பதற்கான வாய்ப்பு தரப்பட்டுள்ளது.  படத்தில் நடித்த அனைவருமே தன்னுடைய பாத்திரம் அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். விஜய்சேதுபதி இப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அதைப்போலவே கௌதம் கார்த்திக் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கொடுக்கின்ற பணத்திற்கான மகிழ்ச்சியை இப்படம் தருகிறது. அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்து மகிழுங்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான படத்தைக் கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்

மயிலம் இளமுருகு
கைபேசி- 9600270331

0 Response to "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் -திரைவிமர்சனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel