எழுத்தாளர்
-----------------
வாழ்க்கையின் இருள்வெளிச்ச
மலர்களை
வியாபார பின்ன முடிச்சின்றி
துணிச்சலோடும்
இறுமாப்போடும்
இறுகி பூவிதழோடு தளர்ந்து
நிழலையே நம்பாது
விட்டிலாய் சில முடித்து
மனதில் வாழும்
வேற்று கிரக வாசிகளென
விஞ்ஞானத்தால்
உண்மை பேசும் சித்தர்கள்
வெறுமையிலும் உச்சம் காணும்
எண்ணங்களோடு
பாராட்டிற்காய் படிக்கல் தேடும்
பட்டாம்பூச்சிகள்
கெடுதலின்றி
மழையின் அன்போடு
நெஞ்சம் நெருங்கும்
மல்லிகைகள்
தன்னம்பிக்கை மயிலிறகோடு
பதியன் செய்யும்
சொல்லேர் உழவர் நாங்கள்
ஆம்
வாழ்வியலோடு விளையாடும்
குழந்தைகளின் எச்ச சொச்சங்களைத்
விதைக்கும் எழுத்தாளர்கள் நாங்களே….
சாரல்
---------
சிரித்த பார்வையில்
என்னுடலெல்லாம்
பற்றி எரிகின்றது
சட்டையின் பொத்தானாய்
சில்மிச நினைவுக்குழியோடு
சுந்தர ராஜாக்களின்
தார்ச் சாலைகள்
மிதந்து சென்றபடி
மத்தியான பேருந்து
அமாவாசையின் மலரில்
பிணங்களின்
வாசனையை புரட்டியபடி
புன்னகைக்கிறேன்
புலர்காலை இருட்டில்
பொசுங்கிய காகிதத்தை
புரட்டிப் பார்க்கிறேன்
அதிலெல்லாம்
பூத்துப்போன
நகங்களின் சாரல்
குருதி
----------
சொத்தை கூடுகள்
செதும்பிக் கிடக்கும்
எண்ணங்கள்
உக்கிரத் தாண்டவங்கள்
உறைந்த படிவங்கள்
சன்னல் வயல்வெளியில்
சரிகைப் போராளியாய்
விரியும் காட்சிகள்
பாம்புகளின் நடனங்களினூடே
நாட்டியம் நவிலும்
அரங்கங்கள்
எகிரி குதிக்கும்
எகத்தாளங்கள்
ஏணியின் விருட்சத்தோடு
ஏப்பம்
ஏனிந்த சொப்பனங்கள்
விரதம் தீர்ந்த
நாளில் விருட்டென
முளைக்கிறது நாதங்கள்
சூம்பிக் கிடந்த
புண்ணியங்களோடு
விருட்சமென ஏறும்
ராக்கெட்டுகள்
காந்த புன்னைகையில்
கருவிழி மாயங்கள்
பழைய நாளிதழாய்
பறைசாற்றும் உன் விரல்கள்
சரித்திரத்தைப் புரட்டும்
உன் விழிகள்
பூகோளத்தை மிரட்டும்
உன் மொழிகள்
ஏனிந்த விசாரிப்புகள்
ஏங்கும் எண்ணங்கள்
எட்டிப் பார்க்கும் உன்
விரல் நுனிகளில்
வழியும் என் குருதி
ஹைக்கூ
1. டியூப்லைட்
கண்ணடித்தது
இருட்டைப் பார்த்து
2. நாய்க்குட்டி
ஓடுகின்றது
தொடரோட்டம்
3.
பூம்பூம் மாட்டைப் பார்த்து
தலையசைக்கிறது
தஞ்சாவூர் பொம்மை
4 .காலியானப் பாத்திரம்
பொருள் இல்லை
ஓட்டை
5. வாழையிலை
முழுதாய் பரிமாறப்படவில்லை
குப்பைத்தொட்டி
மயிலம் இளமுருகு
30.03.2019, 1 மணி
தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி
ReplyDeleteதமிழன்னைக்கு அணியாகட்டும்
தமிழர்க்குச் சாரலாகட்டும்
பிறமொழியோர்க்கு சாளரமாகட்டும்
என் போன்றோர்க்கு வாயிலாகட்டும்
மிக்க நன்றி ...தொடர்வோம்...
ReplyDelete