இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் பயந்து விவாதிக்கிற பொருண்மையாக பருவநிலை/ சூழலியல் என்பவை அமைந்துள்ளன. இயற்கையில் இருந்து மனிதன் என்றைக்கு விலக ஆரம்பித்தானோ அன்றே
ஒவ்வாத பல நிகழ்வுகளும் தோன்ற ஆரம்பித்தன. செயற்கையை நேசித்து வந்தவர்கள் இன்றைக்கு திரும்பவும் இயற்கையிடத்து நம்பிக்கை
வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வகை சார்ந்த ஆய்வுகள்
முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் பருவநிலை மாற்றம்
என்ற நூல் கவனம் பெறுகின்றது. இந்நூலை அறிவியல் எழுத்தாளரும்
தேசிய விருது பெற்றவருமான என்.ராமதுரை
அவர்கள் எழுதியுள்ளார். இருபது கட்டுரைகளை இந்நூல்
பெற்றுத் திகழ்கின்றது. மிக பரிச்சயமான மொழிநடையில், இயல்பாக தன் கருத்துகளை விளக்கிச் செல்கிறார் ஆசிரியர்.
‘பூமிக்கு ஜுரம்
கண்டுள்ளதா?’ என்ற கட்டுரையில் பூமிக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும்
அதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூமியில் வெப்பம் அதிகரித்துள்ளதை நினைத்து பல நாடுகள் வருந்துகின்றன. இதனைத் தடுக்காவிட்டால் தங்கள் நாடே கடலில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்
என கருதுகின்றன. குறிப்பாக மாலத்தீவு, கிரிபாட்டி, துவாலு போன்ற தீவுகள் பயந்து வருகின்றன. பூமியின் வெப்பத்தைத் தடுக்க பல்வேறு வகைகள் பின்பற்றப்படுகின்றன. மாணவர்கள், அரசுச் சார்பற்ற அமைப்புகள் ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்ளன. பூமி வெப்பம் அடையக் காரணம் ஆனால் அதே சமயம் இயற்கை நிலையில் மாற்றம் ஏற்படாதச்
சூழல்களும் சொல்லப்பட்டுள்ளன. பூமி சுடவில்லை, உருகவில்லை என பலத்திறப்பட்ட கருத்துகளை இந்நூல் முன்வைக்கின்றது. கரியமில வாயு வெப்பம் அடையக்காரணமென்றும், அதனை சரிசெய்ய தக்க ஆலோசனைகளையும் குறிப்பிட்டுள்ளது எண்ணத்தக்கது. புதைவடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தினால் அல்லது பெருமளவுக்கு குறைத்தாலோதான்
பூமியின் வெப்பத்தை தடுக்க முடியும்.
‘மிரட்டும் கடல் மூழ்கும் தீவுகள்’ என்ற கட்டுரை கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே
வருகின்ற காரணத்தினால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படுகின்றன, அந்நாடுகள் மேற்கொண்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. கிரிபாட்டி என்ற தீவில் பவளப்பாறைகளே மிகுதியாக உள்ளன. இங்கு உயரமான இடம் என்பது 6 மீட்டர் மட்டுமே. இந்நாடு 2012 இல் சுமார் 2 ஆயிரம் கி.மீ.தொலைவில்
உள்ள ஃபிஜு நாட்டில் 200 சதுர கி.மீ.நிலத்தை வாங்கிப் போட்டுள்ளது. மாலத்தீவும் ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நிலம் வாங்கிப் போட்டுள்ளது. நீயூடோக் பகுதி மக்கள் 350 பேர் வேறு இடங்களுக்கு
இடம்பெயர்வது பற்றி சிந்தித்து வருகின்றனர். இப்படி நேரிடும் போது உலகில் பருவநிலை மாற்றத்தால் இடம்பெயரும் முதல் அகதிகளாக இருப்பர்.
‘பூமிக்கு ஆயிரம் வெப்ப மானிகள்’ என்னும் பகுதியில் பூமியின் வெப்பநிலையை எவ்வாறு கண்டறிகின்றனர், தமிழக பத்திரிகைகள் ஏன் மே மாத வெப்பத்தை மட்டுமே பதிவு செய்கின்றனர், போன்ற செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. நாம் இருக்கின்ற பகுதியில்
வெயில் எந்த அளவு என்று தெரிந்துகொள்ள வசதிகள் உள்ளன. பூமியின் சராசரி வெப்ப நிலை எப்படி கண்டறியப்படுகின்ற என்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன.
‘வானிலை வேறு
பருவநிலை வேறு’ என்ற கட்டுரை வானிலை குறித்தும் பருவநிலைக் குறித்தும் விளக்குகின்றது. மே மாதம் நல்ல கோடைக்காலம் என்பது பருவநிலை, அனறைய தினம் வெயில் குறையுமா? என்று சொல்வது வானிலையாகும். வானிலை என்பது நாளுக்கு நாள் மாறும் தன்மையுடையது பருவநிலை என்பது குறிப்பிட்ட
காலம் தொடர்ந்து இருப்பதாகும். இலக்கணங்கள் இதனை சிறுபொழுது, பெரும்பொழுது என குறிப்பிடுகின்றன.
சிறுபொழுது ஒரு நாளிற்குரியது. பெரும்பொழுது ஆண்டிற்குரியது. இவை ஆறாறாக பிரித்து சொல்லப்பட்டுள்ளன.
பயிர்ச்சாகுபடி முறை, உணவுப்பழக்கம், உடை அணியும் முறை, கொண்டாட்டங்கள், பண்டிகைகள் என பலவும் பருவங்களைச் சார்ந்தமையாக உள்ளன. இதனைச் சார்ந்தே பழமொழிகளும் தோன்றின. அண்டார்டிகாவில் பகலாக உள்ள 6 மாதமும் கோடை என்று வர்ணிக்கப்படுகிறது. வசந்தகாலத்தின் வருகையை ஹோலி பண்டிகையாக வடநாட்டினர் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் இப்படி ஒரு பண்டிகை கிடையாது.
‘கோடையில் வாட்டிய
குளிர்’ என்னும் கட்டுரை டம்போரா என்ற எரிமலை வெடித்ததினால் ஏற்பட்ட விளைவுகளை படம்பிடித்து
காட்டுகிறது. அமெரிக்காவின் வெயில் காலமான ஜுன் மாதத்தில் யாரும் எதிர்பாராத
வகையில் துகள்பனி பொழியத் தொடங்கியது. சீனாவிலும், இந்தியாவிலும் பல்வேறு மாற்றங்கள் தோன்றின. விவசாயம் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். சீனாவில் விவசாயிகள் சிலர் தங்களது குழந்தைகளை விற்றனர் (பக்.25) இவ்வாறான சூழல்
மாற மூன்று ஆண்டுகள் ஆகியது. ஐரோப்பியாவின் சுவிட்சர்லாந்தில் 130 நாள்கள் தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு கனடாவுக்கு வடக்கே பனிப்பாறைகள் திடீரென உருக ஆரம்பித்தது. இதற்கெல்லாம் காரணமாக இந்தோனேசியாவின் டம்போரா எரிமலை இருந்தது. அந்த வட்டாரத்தில் 10 ஆயிரம் பேர் இறந்தனர். பட்டினி, வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால் மேலும் 70ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் எரிமலை வெடிப்பின்
காரணமாகத் தோன்றிய சுனாமியால் 4600 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன.
‘ஸ்வீடன் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட கவலை’ என்ற கட்டுரையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்ஹீனியஸ் அவர்கள்
கரியமில வாயுவின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வைத்திருந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். வெப்ப நிலை அதிகரிப்பு, சுமார் 12ஆயிரம் ஆண்டுகளுக்கு
ஸ்வீடன் நாடே இல்லையென்றும், நார்வே, இங்கிலாந்து, கனடா, லாட்வியா, லிதுவேனியா, டென்மார்க், ஜெர்மனி முதலான
நாடுகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் பனியுகம் விலகி இந்தப் பனிப்பாளங்கள் உருகி நிலங்கள் தோன்றின
என்ற செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. நாம்
காற்று மண்டலம் பற்றியும், கரியமில வாயு பற்றியும் விரிவாக அறிந்து கொண்டால்தான் மனித இனத்தை எதிர்நோக்கி
உள்ள புவிவெப்பமயமாதல் பிரச்சனையை அறிந்து கொள்ள முடியும்.
‘கரியமில வாயு நச்சு வாயுவா?’ என்ற இப்பகுதி
கரியமில வாயு குறித்து விளக்குகின்றது. நச்சு வாயு என்றும், கறுப்புநிறம் என்றும் கூறுவது
தவறு. நம் நுரையீரலில் கரியமில வாயு உள்ளது. மேலும் எதை எரித்தாலும் கரியமில வாயு தோன்றும். ஆக்ஸிஜன் எரியக்கூடியது அல்ல. ஆனால் எரிதலுக்கு ஆக்ஸிஜன்
தேவை. எரித்தலின் போது இரு ஆக்ஸிஜன் அணுக்களும் ஒரு கார்பன் அணுவும்
சேருவது தான் கரியமில வாயு. காற்று மண்டலத்தில் அதிகம் சேராதிருக்க தாவரங்களை வளர்த்தல்
வேண்டுமென ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
‘அதென்ன பசுமைக்குடில்’ என்ற கட்டுரையில் பசுமைக்குடில் குறித்தும்
கரியமில வாயுவின் நன்மை, தீமைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளன. நல்ல குளிர் காலத்தில் பனி உள்ளே நுழையாதபடி கண்ணாடிக் கூரையில் உள்வராதபடி பயிர்
வளர்க்கப்படுகின்றன இதைக் கண்ணாடிக்குடில் என்று அழைக்கின்றனர். காற்று மண்டத்தில் கடந்த 200 ஆண்டுகளில் கரியமில
வாயு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘நிலக்கரியின் ஆக்கிரமிப்பு’ என்னும் கட்டுரையில் நிலக்கரியின் முக்கியத்துவம், தேவை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். லண்டன் மாநகராட்சியின் செயல்பாடு, தெருக்களில் விளக்குகள் வைக்க ஆனணயிட்டு ஆள் நியமிக்கப்பட்டு பணி செய்தமை பதிவு
செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி, நீராவி என்ஜின், வான் அமைப்பு போன்ற செய்திகளையும் இப்பகுதி நமக்கு விளக்குகின்றது.
‘எண்ணெயால் வந்த வினை’ என்னும் கட்டுரையில் ஹைட்ரோகார்பன்கள் குறித்தும் அதன் தேவை, வரலாறு போன்றன எடுத்துக் கூறப்பட்டுள்ளன. கார்ல் பென்ஸ் உருவாக்கிய மூன்று சக்கரங்கள் கொண்ட கார், ஹென்றி ஃபோர்டு உருவாக்கிய T மாடல் கார் அதிகமான பயன்பாடு
காரணமாக, காற்று மண்டத்தில் கரியமில வாயு சேர்ந்துள்ளது, இது விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
‘கீலிங் கிழித்த கோடு’ என்னும் கட்டுரையில் கரியமில வாயுவின் அளவை கண்டறிய கீலிங் என்பவர் உருவாக்கிய
கணக்கு, அதன் ஆய்வு, விளைவு போன்றவற்றை அறியலாம். 1956 இல் கரியமில வாயு 315 PPM வாயுவாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு 26ம் தேதி முதல் 400 யைத் தாண்டியது. 1700 களில் 280 ஆகத்தான் இருந்தது
என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘டொராண்டோ முதல் கியோட்டோவரை’ என்னும் கட்டுரையில் கரியமில வாயு சேர்மானம் அதிகரிப்பால்
ஏற்பட்ட ஓசோன் படல ஓட்டை குறித்து விவாதிக்கப்பட்டமை, பிற செய்திகளையும் தருவதாக உள்ளது. ஏ.சி யூனிட்டுகள், குளிர்சாதன பொருட்களின் பயன்பாடு போன்றவற்றிலிருந்து தோன்றும் வாயுக்கள் ஓசோன்
மண்டலத்தை அழிப்பதாக இருந்த சூழலால் இதனைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மாண்டிரியல் ஒப்பந்தம் என்று அழைத்தனர். நிலத்தடி எரிபொருட்களை நிலக்கரி, பெட்ரோலிய எண்ணெய் ஆகியவைதான் கரியமில வாயு சேர்மானத்துக்கு மூல காரணம் என்று அதனை
குறைக்க மாநாடு தீர்மானம் ஏற்படுத்தியது. கியோட்டோ என்னும் நகரில் 1997 ஆம் ஆண்டு 11ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது போன்ற செய்திகளை இதன் வழி அறியலாம்.
‘அமெரிக்காவில்
எதிர்ப்பு இயக்கம்’ என்னும் கட்டுரையில் அமெரிக்காவின் தொழில்துறையினர் கரியமில வாயு வெளிப்பாடு
விடயத்தில் முரண்பட்டு நிற்கின்ற சூழலை அறிய முடிகின்றது.
கரியமில வாயு குறித்து விரிவாக ஆய்வு செய்தவர்கள் அமெரிக்க விஞ்ஞானிகளே. அமெரிக்காவை ஆண்ட ஆளும் அதிபர்களின் செயல்பாடுகளும்
கூறப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் கூறியவற்றை
ஆதிரித்தவர்களை இடதுசாரிகள் என்றழைத்தனர். இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளிப்பாடு 1.9 டன் மட்டுமே. ஆனால் சீனா 7.2 டன்னும், அமெரிக்கா 6.80 என்ற நிலையிலுள்ளது
குறிப்பிடத்தக்கது. தனிநபர் கரியமில
வாயு சேர்மானத்தை ஏற்படுத்துகின்ற நாடுகளில் முதலிடத்தில் சீனா உள்ளது.
‘இந்தியா எப்படிப் பாதிக்கப்படும்’ பருவமழை, வறட்சி, மழை குறித்தான செய்திகளை இப்பகுதி சரியாக விளக்குகிறது. தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரமாகக் கடலில் அவ்வப்போது தோன்றும் எல் நினோ என்ற
நிலைமை இந்தியாவின் தென்மேற்கு பருவமழையைப் பாதிக்கிறது. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 2500 க்கும் அதிகமானவர்கள்
வெயில் காரணத்தினால் இறந்துள்ளனர். வெயில் சாவுகள் குஜராத் ஆமதாபாத்தில்
நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இமயமலைச் சரிவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பெய்த மழை வெள்ளத்தினால் 5700 பேர் மாண்டனர். சென்னையில் 2015 டிசம்பரில் ஏற்பட்டிருந்த
மழை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் 2011 ஆம் ஆண்டில் லார்கா
பூகம்பம் குறித்தும், கடல்நீர் சுத்திகரிப்பு குறித்தும், வரும் காலத்தில் என்ன பிரச்சனை தோன்றும் என்பது குறித்தும் வரிசையாக விளக்கம் தந்துள்ளார்
ஆசிரியர். நிலக்கரி, பெட்ரோல், டீசல் அவற்றுக்கு மாற்றாக சூரிய ஒளி, காற்று ஆகியவற்றுக்கு மாறுவது பிரச்சனையின்
இன்னொரு பாதியாகும். குடிநீர்த் தேவையை முழுமையாக குவைத், கத்தார் ஆகிய இரு நாடுகளும் கடல்நீரை குடிநீராக்கியே பயன்படுத்துகின்றன.
‘சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்’ என்னும் கட்டுரையில் சூரிய ஒளியை எப்படி நாம்
மின்சாரமாகப் பயன்படுத்த வேண்டும், அதன் வரலாறு போன்றவை விளக்கப்பட்டுள்ளது. புவியின் சராசரி வெப்பத்தைத் தடுக்க நாம் சூரியன் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டிய
சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெல் லாப்ஸ் நிறுவனம் 1954 இல் உலகின் முதலாவது
சோலார் செல்லை உருவாக்கியது. செயற்கைக் கோளில் இடம்பெறும்
கருவிகள் இயங்குவதற்கு, தொடர்ந்து பூமிக்குத் தகவல்களை
அனுப்புவதற்கும் மின்சாரம் தேவை என்பதானச் செய்திகளும் தரப்பட்டுள்ளன.
மிக முன்னேறிய நாடுகளிலும் சரி, இப்போதுதான் சூரிய மின்சார
உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. ஜெர்மனியில் 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி சூரிய ஒளி மூலம் 37 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. இது அந்த நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 7 சதவீதமாகும்.
‘காற்றின் மூலம் மின்சாரம்’ என்னும் கட்டுரையின்
மூலம் பன்னெடுங்காலமாக காற்றின் சக்தி மூலம் பலவற்றை மனிதன் பெற்றுள்ளான் அதற்கு சான்றாக
பாய்மரக்கப்பல் குறிக்கப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் லண்டனில் முதல் மின்நிலையம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில்; அதாவது 1887 ஆம் ஆண்டில் உலகின் முதல் காற்று மின்நிலையம் ஸ்காட்லாந்தில்
நிறுவப்பட்டது. சிறிய நாடாக இருந்தால் ஒரு
நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் பெரும் பகுதியைக் காற்று மின்நிலையங்களின் மூலமே
பெற இயலும். இதில் ஐரோப்பாவில் உள்ள டென்மார்க் நாடு முதலிடம் வகிக்கிறது. ஆரம்பத்தில் காற்று மின்நிலையங்கள் கடலோரப் பகுதியிலும் மலைச்சரிவுகளிலும் நிறுவப்பட்டன. இப்போது கரையோரக் கடலிலும் இவை நிறுவப்படுகின்றன. முன்னேறிய நாடுகளில் மின்னுற்பத்தி வினியோகம்
தனியார் நிறுவனங்களின் கையில் உள்ளன. ஆனால் இந்தியாவில் இன்னமும் மாநில அரசுகளின் மின்வாரியத்திடம்தான் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
‘அணுசக்தி ஒரு தீர்வாக இருக்க முடியுமா?’ என்னும் கட்டுரை அணுசக்தி குறித்தும் அணுமின் நிலையங்கள் குறித்தும், சர்வதேச ஒப்பந்தம், அணுக்கழிவுப் பிரச்சனை, இந்தியாவில் அணுமின் நிலையங்கள், பல்வேறு மின்நிலையங்கள், அணு உலை சார்ந்த செய்திகள் என பல்வேறான செய்திகளைத் தெளிவாக்குகிறது.
‘பூமி மீது கைவைக்க விசித்திரத் திட்டங்கள்’ என்னும் கட்டுரை பனிப்பாளங்கள் உருகுதல், நீர் ஆவியாதல், கடல்நீர் மட்டம் அதிகரித்தல், தடுப்பு முறைகள் என பலவற்றைத்
தருவதாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் தென்துருவத்திலும், வடதுருவத்திலும் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாளங்கள் உருகிக் கடல்களில் நீர்மட்டம்
உயரலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் நிபுணர் மரணப்
பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் கடும் வெயில் என்பதால் நீர் ஆவியாகிக் கொண்டே இருக்கும். ஆகவே தொடர்ந்து கடல்நீர் வந்து கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பனிப்பாளங்கள் உருகாமல் இருக்க நிபுணர் டாக்டர் ஜேசன் பாக்ஸ் வழி கூறினார். பனிப்பாளங்கள் மீது மிகப்பெரிய பிளாஸ்டிக் விரிப்புகளைக் கொண்டு மூடுவததே அத்திட்டமாகும். மேலும் செயற்கை மரங்களைக் கொண்டு கரியமில வாயுவை அகற்றலாம் என்பது இன்னொரு யோசனையாகக்
கூறப்படுகிறது. இப்படியான செயற்கை மரம் இயற்கையான மரத்தோட 1000 மடங்கு அளவுக்குக் கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்ளுமாம்.
‘பாரிஸில் ஒரு புரட்சி’ என்னும் கட்டுரை
குறிப்பாக பாரிஸ் உடன்பாடு குறித்து விளக்குகின்றது. பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நோக்கிலான சர்வதேச ஒப்பந்தம் 12.12.2015 ஆம் தேதி கையெழுத்தானது. முன்னேறிய நாடுகளில் நிலக்கரி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்து சூரிய மின்சாரம், காற்று மின்சாரம் ஆகியவற்றிற்கு மாறுவது பெரிய பிரச்சனையாக இராது எனக் கூறப்பட்டுள்ளது. சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அமலுக்கு வராத சூழலில் பாரிஸ் உடன்பாடு, எதிர்பார்த்ததைவிட விரைவாகவே அமலுக்கு
வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
‘நாம் என்ன செய்ய முடியும்’ என்னும் கட்டுரை கரியமில வாயு, பூமி வெப்பத்தை தடுத்தல், மின்சார மாற்று ஏற்பாடுகள்
என பலவற்றிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதான முறையில் வெளிப்படுத்திச் சென்றுள்ளார்
ஆசிரியர். உலக நாடுகளின் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே பாதி பிரச்சனை முடிந்துவிடும். வீடுகளில் மின்விசிறிகள், தொலைக்காட்சிகள் என மின்சார்ந்தவற்றை குறைத்து கவனத்துடன் பயன்படுத்தினால் (வீணாக்காமல்) மின்சாரம் மிச்சப்படும். CFL, அல்லது LED பல்புகளை நாம் பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் வீடுகள், அலுவலகங்கள், ஆலைகள் ஆகியவற்றின் கூரைகளில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சோலார் பலகைகளைப்
பொருத்திச் சொந்தமாக ஓரளவுக்கு
மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள முடியும். மேலை நாடுகளில் இது வேகமாக பரவி வருகிறது. (பக் - 117)
மேலை நாடுகளில் கார் பகிர்வு என்ற முறை
பின்பற்றப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட தெருவிலிருந்து
அல்லது வட்டாரத்திலிருந்து குறிப்பிட்ட இடத்துக்குப் பணி நிமித்தமாகத் தினமும் காரில் செல்பவர்கள் கூட்டு
ஏற்பாடு ஒன்றைச் செய்து பின்பற்றுகின்றனர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க கரியமில வாயு சேர்மானத்தைக் குறைக்கப்
பெரிய அளவில் பங்காற்ற வேண்டியவர்கள் அரசுகளே, ஏனெனில் அரசுகளால்தான் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர இயலுமென
ஆசிரியர் முன்மொழிந்துள்ளார்.
காலத்திற்கேற்ற இப்படிப்பட்ட
அவசியமான நூலை எழுதிய என்.ராமதுரை அவர்களுக்கும் சிறப்பான
முறையில் புத்தகத்தை வெளியிட்ட க்ரியா பதிப்பகத்திற்கும் நன்றியும்… பாராட்டுகளும்..
மயிலம் இளமுருகு,
கைப்பேசி – 9600270331
பருவநிலை மாற்றம்
என். ராமதுரை
டிசம்பர் 2016,
க்ரியா பதிப்பகம்
பக்கம்- 119, ரூ.130
0 Response to "பருவநிலை மாற்றம் - நூல் மதிப்புரை"
Post a Comment