சிக்சர் திரைப்படம் விமர்சனம்

Trending

Breaking News
Loading...

சிக்சர் திரைப்படம் விமர்சனம்

சிக்சர் திரைப்படம் விமர்சனம்


         நடிப்பு - வைபவ், பல்லாக் லால்வானி, ராதாரவி, சதீஷ், இளவரசு. இயக்கம் – சாச்சி, ஒளிப்பதிவு - பிஜி முத்தையா. எடிட்டர் - ஜோமின். இசை – ஜிப்ரான், வெளியான தேதி - 30 ஆகஸ்ட் 2019, நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்.



புதிய இயக்குனர்கள் சிலர் தங்களுடைய முதல் படமாக நகைச்சுவைப் படங்களை எடுத்து வருகின்றனர்.  அந்த விதத்தில் இப்படத்தின் இயக்குனர் சாச்சி தன் முதல் படத்தையே நகைச்சுவைப் படமாகக் கொடுத்து அசத்தி  இருக்கிறார்.

1991ஆம் ஆண்டில் பி. வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்து வெளிவந்த சின்னத்தம்பி திரைப்படத்தில் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக கவுண்டமணி நடித்திருந்தார். கவுண்டமணியின் தற்போதை புதிய வெர்ஷன் தான் ஹீரோ வைபவ். இவருக்கு (ஆதிக்கு) மாலைக்கண் நோய் உள்ளது. மாலை ஆறு மணிக்குள் டானென வீட்டுக்குள் வந்துவிடுவார். இந்தக் குறையின் காரணமாக கல்யாணம் வேண்டாம் என மறுப்பவருக்குக் பல்லாக் லால்வானியைப் (கிருத்திகா) பார்த்ததும் பிடித்துவிடுகிறது. தனக்கு இருக்கும் பார்வைப் பிரச்சினையைப் பற்றி அந்தப் பெண்ணிடம் மறைத்து அவரைக் காதலித்து திருமணம் செய்யும்வரை சென்று விடுகிறார். அந்தச் சமயத்தில் வில்லனால் ஒரு பிரச்சினை வருகிறது.  அதனைச் சமாளித்து உண்மையை மறைத்து எப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.



நகைச்சுவைப் படத்தில் வில்லன்களின் பாடுதான் திண்டாட்டம். ஆர்.என்.ஆர்.மனோகரும், ஏ.ஜே.வும் அப்படியான வில்லன்கள். செம பில்டப்களுடன் அறிமுகமாகும் வில்லன்கள், அதே வேகத்தில் காமெடியன்கள் மாறுகிறார்கள். அதே போல், கலக்கப் போவது யாரு ராமருக்கும் ஒரு வித்தியாசமான பில்டப். ஆனால் அவரும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

கதாநாயகியாக பல்லாக் லால்வானி. டிவி ரிப்போர்ட்டராக இருக்கிறார். ஆரம்பத்தில் அவர் நடிப்பிற்கும் முகபாவத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது. போகப் போக சமாளித்து  நடித்துள்ளார்.  நாயகனுடன் இரவில் இரண்டு, மூன்று வெளியில் சென்றும், அவரது குறையைக் கண்டுபிடிக்காதவராகவே இயக்குனர் அவரது கதாபாத்திரத்தை  உருவாக்கி இருப்பது வேதனைக்குரியது.  அவரது தந்தையாக சூட்கேஸ் பரந்தாமனாக ராதாரவி நடித்துள்ளார். வழக்கம் போல் சதீஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார்.



படத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர்களில் இருவர் முக்கியமானவர்கள். வைபவ்வின் அப்பா இளவரசு, அம்மா ஸ்ரீரஞ்சனி.  ஒரு நாள் மாலை  வைபவ் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது, வண்டி மக்கர் செய்ய, அப்படியே அதை கடற்கரையோரம்  ஓரங்கட்டிவிட்டு நண்பன் சதீஷுக்கு போன் செய்து தன்னைப் பிக்பக் செய்ய சொல்லிவிட்டு, கையில் சுண்டல், காதல் ஹேட்போன் என கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்குகிறார்.

அப்போது பார்த்து தொழிலதிபர் ஆர்.என்.ஆர்.மனோகருக்கு கல்லூரி மாணவிகளைச் மூளைசலவைச் செய்து அனுப்பும் விமலாராணியை எதிர்த்து சில இளைஞர்கள் பீச்சில் போராட்டம் நடத்துகிறார். அதுவும் கண்ணு தெரியாத ஹீரோவைச் சுற்றி அமர்ந்து கோஷம் போடுகிறர்கள். இதில் நடுவில் அமர்ந்திருக்கும் நாயகன் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பாட்டுக் கேட்டவாறு அமர்ந்திருக்கிறார். வைபவின் துணிச்சலைப் பார்த்த ஆர்பாட்டகாரர்கள் மீண்டும் ஒன்று திரள்கின்றனர். இதனால் ஆர்பாட்டம் வெற்றி பெறுகிறது. இதையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அனைவரும் வைபவைப் பாராட்டுகின்றனர்.  இதனைத் தனது தொலைக்காட்சிக்காக நேரலை கவரேஜ் செய்கிறார் ஹீரோயின் பல்லக் லல்வாணி.



இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவரது வழக்கமான  தனித்துவம் இப்படத்தில் இல்லை, பாடல்களும் கேட்கும்படியாக இல்லை. சிவகார்த்திகேயன் குரலில் ஒலிக்கும் 'எங்கவேன்னா கோச்சின்னு போ' பாடல் கூட ஓகேரகம்தான். இப்படத்தில் உள்ள பலக் காட்சிகள் இதுநாள்வரை நாம் பார்த்துவந்த அதே கிளிஷே. இடைவேளையிலும் பெரிய டிவிஸ்ட் காட்டப்படவில்லை. நல்ல கதைக்கருவைச்  சுமாராக எடுத்திருக்கிறார்கள். காமெடி செய்வதற்காக மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது, டாய்லெட்டுக்குள் சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு போய் நிற்பது என்பதெல்லாம் தேவைதானா என்று யோசிக்க வைக்கிறது.  சமூகத்தில் மாற்று பாலினத்தவர்கள் குறித்த பார்வை வெகுவாக மாறிவரும் சூழலில் மாற்று பாலின மக்களை தமிழ் சினிமாவில் சித்தரிக்கும் போக்கு இன்னும் மாறவில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது.



வைபவ் இந்தப் படத்திலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். ஹீரோ மட்டுமல்லாது மற்ற கேரக்டர்களும் நன்றாக நடித்துள்ளனர். முக்கியமாக இளவரசு, ராதாரவியைப் பல இடங்களில் நாம் மெய்மறந்து ரசிக்க முடிகிறது. ராதாரவியின் அந்தக் குடிகார காமெடி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. காமெடி கதை என்பதால் லாஜிக் இல்லை. சிரிக்க வைப்பது மட்டுமே இயக்குனர் சாச்சியின் குறிக்கோளாகவும் எண்ணமாகவும் இருந்துள்ளது. இருப்பினும் இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இப்படம் உண்மையில் சிக்சராக இருந்திருக்கும். அதனால் இப்படம் ப்போர் (4) தான் என்று சொல்லலாம். திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

மயிலம் இளமுருகு, ,
கைப்பேசி – 9600270331, 
 02.08.2019.









0 Response to "சிக்சர் திரைப்படம் விமர்சனம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel