சமூகக் கருத்தைப் பேசும் வல்லவனுக்கு அருவம் பழிவாங்கும் ஆயூதமாகிறது

Trending

Breaking News
Loading...

சமூகக் கருத்தைப் பேசும் வல்லவனுக்கு அருவம் பழிவாங்கும் ஆயூதமாகிறது

சமூகக் கருத்தைப் பேசும் வல்லவனுக்கு அருவம் பழிவாங்கும்  ஆயூதமாகிறது

 
நடிப்பு - சித்தார்த், கேத்தரின் தெரேசா,  சதீஷ் , ஆடுகளம் நரேன் , மயில்சாமி,       மனோபாலா, பருத்திவீரன் சுஜாதா, இளங்கோ                             குமாரவேல், ஸ்டண்ட் சில்வா, மதுசூதனராவ், கபீர் சிங், நந்தகுமார்.
தயாரிப்பு       - டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்கம்         - சாய் ஷேகர்
ஒளிப்பதிவு    - ஏகாம்பரம் 
இசை                - தமன்
எடிட்டிங்         - ப்ரவீன் கே.எல்.

தமிழ் சினிமாவில் பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட படங்களை  நாம் பார்த்திருக்கிறோம்.  ஒரு வகைப்படங்கள் வெற்றிபெற்றுவிட்டால் அந்தவகைப்படங்களிலே அறிமுக இயக்குனர்களும் முயற்சித்து வருகின்றனர். சிலர் அதில் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் அத்தகைய படங்களைப் பார்க்கும் ரசிகர்களின் நிலைதான் வேதனைக்குரியது.   தமிழில், அழகான நாட்கள், கிரி, தேவதையைக் கண்டேன், காதல் சொல்ல வந்தேன், திருவிளையாடல் ஆரம்பம், பட்டத்து யானை போன்ற வெற்றி படங்களை இயக்கிய பூபதி பாண்டியனின் உதவி இயக்குநரான சாய் சேகர் தான் அருவம் என்ற இப்படத்தை இயக்கியுள்ளார்.

இயற்கையாக விளையும் பழங்கள்,காய்கறிகள், பால், மற்றும் உணவுப் பொருட்கள் என அனைத்தும் கலப்படம் கலந்தே இருக்கிறது. அவற்றைக் கண்டுபிடித்து தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரவும், அவற்றைத் தடுக்கவும்  நமது அரசாங்கத்திலேயே சிலத் துறைகள் உள்ளன.  ஆனால் அவர்கள் உண்மையிலேயே சரியாகத்தான் செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறி.

சிவப்பு மஞ்சள் பச்சை  என்ற படத்திற்குப்  பிறகு சித்தார்த் நடித்திருக்கும் ஒரு வித்தியாசமான பேய்க் கதையாக இப்படம் அமைகிறது. நாயகன் சித்தார்த் உணவுத் பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கிறார். உணவில் கலப்படம் செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார்.  டாப் பிராண்ட் எனச் சொல்லப்படும் பல உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியாக சித்தார்த் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.  அதே ஊரியில் அரசுப் பள்ளியில் ஆசிரியராக கேத்தரின் தெரேசா பணி புரிந்து வருகிறார். இவருக்கு நுகர்வு சக்தி கிடையாது. சமூக சேவையும் செய்து வருகிறார். ஒரு விபத்தில் அவரது  தாயை இழக்கிறார். கேத்ரின் தெரசாவை சித்தார்த் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

சித்தார்த் உணவு கலப்படத்தை வேறோடு அழிப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால் பல்வேறு தொழிலதிபர்கள் முதல் அரசியல் பெரும்புள்ளிகள் எனப் பலரது பகையைச் சம்பாதிக்கிறார்.  டீ, தண்ணீர், சாம்பார் சாதம், பிரெட் என்று எதில் எங்கு கலப்படம் நடந்தாலும் களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட கடைக்கு, நிறுவனத்துக்குச் சீல் வைக்கிறார். இதனால் டீக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவரில் இருந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் வரைக்கும் பல எதிரிகள் அவருக்கு தோன்றுகின்றனர்.

படத்தில் சித்தார்த் விறைப்பும் முறைப்புமாகவே வந்து போகிறார். அவரின் உடல்மொழி நிஜபோலீஸ் அதிகாரியைப் போன்று  இருக்கிறது. எந்தக் காட்சியிலும் அவரை ரிலாக்ஸாகப் பார்க்கவே முடியவில்லை. முதல் பாதி முழுக்க சில காட்சிகளில் மட்டும் சித்தார்த் வந்து போகிறார். அவர் இரண்டாம் பாதியில் அந்தக் குறையைப் போக்குகிறார். டீக்கடை ரெய்டு காட்சியில் மட்டும் சித்தார்த் தன் முத்திரையைப் பதிக்கிறார். நாம் அன்றாடம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கலப்படங்களைப் பட்டியலிட்டு அதனால் வரக்கூடிய கேன்சர், பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எனச் சித்தார்த் பட்டியலிடும் அந்த பத்து நிமிடக் காட்சி மட்டும் கருத்து சொல்லக்கூடிய காட்சியாக இருக்கிறது.
இப்படம் உணவில் கலப்படம் செய்வது மிகப்பெரிய தவறு என்ற கருத்தை சொல்லியிருக்கிறது. சிகரெட் பிடிப்பது கேடு என்று சொல்வதைப் போல, உணவில் கலப்படம் செய்வதைத் தடுக்காவிட்டால், நாளடையில் பிஸ்கெட் சாப்பிட்டால் கேடு, அரிசி சாப்பிட்டால் கேடு என்ற நிலைமைக்குச் சென்று விடுவோம் என்ற காட்சிகள் கவணத்திற்குரியது. இதற்கு சித்தார்த் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

முதலில் சித்தார்த்தைக் காதலிக்க மறுக்கும் கேத்தரின் தெரேசா பின் காதலிக்கிறார். காதலை மறுக்கும் போதும்,  காதலை ஏற்கும் போதும் தனது அருமையான நடிப்பில் ரசிகர்களைத் தன் பக்கம் இழுக்கிறார் என்றே சொல்ல முடிகிறது. ஜாலியான அப்பா என்பதாக ஆடுகள் நரேன் நடித்திருக்கிறர்.  அவர் பாசமிக்க அப்பாவாக நம்மை மிரள வைத்துள்ளார். சதீஷின் நகைச்சுவையில் எல்லா  இடத்திலும் சிரிக்க முடியவில்லை. ஸ்டண்ட் சில்வா, மதுசூதனராவ், கபீர் சிங், நந்தகுமார் ஆகியோர் வழக்கமான வில்லன்களாக வந்து நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வழக்கம்போல் அடித்து மிரட்டி, பிறகு ஹீரோவிடம் செமையாக அடிவாங்கி சாகிறார்கள்.

 ஹீரோயினைக் காதலிக்கும் ஹீரோ, தன் பிரச்சினை உணர்ந்து காதலிப்பதால் கல்யாணத்திற்குக் சம்மதிக்கிறார். அந்நேரம் வில்லன் ஹீரோவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டி கொல்கின்றனர்.  ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளியில் சிறுவிபத்தில் சிக்குகிறார் கேத்தரின். மருத்துவமனையில் இருக்கும் அவருக்கு நுகரும் சக்தி திடீரென வருகிறது. சித்தார்த்தின் ஆவி ஹீரோயின் உடம்புக்குள் செல்கிறது.   அதற்கடுத்து மத்திய அமைச்சர் ஒருவர், அவருடைய நண்பரும் கொல்லப்படுகிறார். அவர்களைக் கொன்றது கேத்தரின் என மத்திய அமைச்சரின் தம்பி கண்டுபிடித்து கேத்தரினைக் கொல்லத் துடிக்கிறார்.
ஆவி எப்படி வில்லனைப் பழி வாங்கியது என்றும்  அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை. சித்தார்த் தன்னுடைய காதலியான கேத்ரின் தெரசாவின் உடலுக்குள் புகுந்து இவர்களை எப்படி வேட்டையாடுகிறார்,  கலப்படம் இல்லாத உணவு  என்ற அவருடைய நோக்கம்  அவரது கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதை சொதப்பலான் காட்சிகளுடன் படக்கருத்தைப் புரிந்து கொள்கி றோம்.

புதுமையான கருத்து இருந்தும் படத்தின் திரைக்கதையில் நேர்த்தி இல்லாததால்  படம் எல்லாரையும் கவர தவறிவிடுகிறது. உணவில் கலப்படம்’ என்ற நல்ல ஒரு கருத்தை கையிலெடுத்த இயக்குனர் சாய் சேகர், அதை திரைக்கதையாகி இயக்கியிருப்பதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கபீர் சிங். மதுசூதனன், கந்தகுமார், சில்வா போன்றோர்கள். ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
இன்றைய உலகில் அசுரத்தனமாக பெருகி வரும் எண்ணெய், டீ தூள், பால், தினமும் உட்கொள்ளும் உணவில் இருக்கும் கலப்படங்கள் குறித்து அலசுகிறது அருவம் என்ற இத்திரைப்படம். இந்த கலப்படங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள், மற்றும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கேன்சர் போன்ற நோய் குறைபாடுகள் என சமூகத்துக்கு அவசியமான விஷயங்களை அதிரடியாக பேசியுள்ள இப்படம் அதை ஒரு ஹாரர் பார்முலாவுடன் கலந்து திரில் அனுபவமாக கொடுக்க முயற்சி செய்துள்ளது.

உருவமில்லாத அருவத்தை மையமாகக் கொண்டு பயமுறுத்தக்கூடிய  படம் ஒன்றைக் கொடுக்க இயக்குநர் சாய் சேகர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அது திகிலாக இல்லாமல் நல்ல மெசேஜும் சொல்லாமல் ஏனோதானோவென்று  சாதாரணமாக இருக்கிறது. காதல் கதையாக ஆரம்பித்து, சமூகக் கதையாக மாறி, பேய்க் கதையாக திரும்பி பழி வாங்கும் கதையாக முடிவுக்கு வந்து இரண்டாவது பாகத்திற்கும் ஆரம்பம் போட்டு முடிகிறது அருவம் படம். இரண்டு பாடல்கள் ஓகே ரகம். இன்னும் கவபம் செலுத்தி இருக்கலாம். சிலக் காட்சிகளுக்கான ஒளிப்பதிவு அருமை.

சொதப்பலான காட்சிகள், பொருந்தாத காமெடி காட்சிகள், போன்றன இப்படத்தின் குறைகளாக உள்ளன.  அபத்த நகைச்சுவை  பல்வேறுபட மாதிரிக் காட்சிகள், 'காஞ்சனா' போன்ற படங்களின் காட்சிகளை இப்படம் நமக்குக் காட்டுகிறது.  இப்படத்தை இன்னும் கொஞ்சம் யோசித்து  எடுத்திருந்தால் மக்களுக்கும் பிடித்திருக்கும். ஒருமுறை பார்க்கும் படமாக இப்படத்தை பரிந்துரை செய்யலாம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

மயிலம் இளமுருகு
கைப்பேசி – 9600270331
20.10.2019, காலை 11 மணி
               



4 Responses to "சமூகக் கருத்தைப் பேசும் வல்லவனுக்கு அருவம் பழிவாங்கும் ஆயூதமாகிறது"

  1. Ok sir., We are ready to go this film

    ReplyDelete
  2. One Time Watchable Movie sir....Enjoy...

    Thank you Sir....For Feedback

    ReplyDelete
  3. விரிவான அலசல். வாழ்த்துக்கள் நண்பரே.தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. நன்றி பாண்டியன் நண்பரே😊😊💐👍

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel