இயற்றமிழ் மூவர்- ச. வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., கைலாசபதி,

Trending

Breaking News
Loading...

இயற்றமிழ் மூவர்- ச. வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., கைலாசபதி,

இயற்றமிழ் மூவர்- ச. வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., கைலாசபதி,


1.பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை


இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை ஆவார்.  இவர் 65 ஆண்டுகள் வாழ்ந்தார்.  அவற்றில் 45 ஆண்டுகள் தமிழியல் ஆய்வில் கழிந்தன.  இந்த 45 ஆண்டுகளும் அவருக்கும்  தமிழுக்கும் பெருமை சேர்க்கும் ஆண்டுகளாகும். தாம் விரும்பிய துறைகளில் ஆர்வத்துடனும் நேர்மையுடனும் உழைத்து புகழ்பெற்றவர். இவர் இலக்கிய ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, நூற்பதிப்பு,  அகராதித் தொகுப்பு, (இலக்கியம், மொழியியல், சுவடியியல் அகராதியியல்) என்ற நான்கு துறைகளிலும் உழைத்து புகழ் கொண்டவர்.  உலகு தழுவிய தமிழில் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தவர் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தவர் தமிழில் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தவர்.  
அவர் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எழுதிய கட்டுரைகள் சுமார் 250;  பதிப்பித்த நூல்கள் 40; தமிழ்ப் பேரகராதி 7 தொகுதிகள்; ஆங்கிலத்தில் ஒரு இலக்கிய வரலாற்று நூல்; சிறுகதைத் தொகுப்பு ஒன்று; நாவல் ஒன்று; சில கவிதைகள். தமிழ்க் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பின்னர் பல நூல்களாக வெளிவந்துள்ளன.
 இவர் பொருநை நதி ஓடும் நெல்லை மாவட்டத்தில் சிக்கரசய்யன் என்ற சிற்றூரில் சரவணப்பெருமாள், பாப்பா அம்மாள் தம்பதியருக்கு 12. 10. 1891 இல் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தார். அவருக்கு இரண்டு தம்பியர்; ஒரு தமக்கை; ஒரு தங்கை.  அவரது தந்தையின் வற்புறுத்தலில் வையாபுரிப்பிள்ளை வடமொழி, சித்தாந்த சாத்திரம், திருமுறை, சைவப்புராணங்கள் முதலியவற்றைப் படிக்கத் தொடங்கினார். 1912 இல் பி.ஏ. பட்டமும், 1914 இல் பிஎல், பட்டமும் பெற்றார்.  1912இல் இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
 சட்டப் படிப்பு முடிந்தபின் 1914 -22 வரை திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இக்காலகட்டத்தில் இவருக்குத் தமிழறிஞர் கே. என். சிவராச பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை முதலியோருடன் தொடர்பு ஏற்பட்டது. திருவனந்தபுரம் அரண்மனை நூலகத்தில் இருந்த கம்பராமாயண சுவடிகளைப் பரிசோதிக்கவும் படிக்கவும் தொடங்கினார்.
 1923 -26 வரை திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இக்காலகட்டத்தில் டி.கே. சிதம்பரநாத முதலியார், ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் முதலிய தமிழறிஞர்களோடு தொடர்பு ஏற்பட்டது.  1914-  26 வரை வழக்கறிஞர்களுடன் தமிழ் படிப்பிலும் ஆர்வம் காட்டிவந்த பேராசிரியர், வழக்கறிஞர் தொழிலுக்கு விடைகொடுத்துவிட்டு, முழுநேர தமிழ் தொண்டரான நிகழ்ச்சி 1926 நவம்பரில் நிகழ்ந்தது.  வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு தமிழ்த் தொண்டாற்ற வந்த வழக்கறிஞர் கூட்டத்தில் இவரும் ஒருவரானார்.
 சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ்ப் பேரகராதி ஆசிரியப் பொறுப்பு இவருக்கு தரப்பட்டது. 1913 இல் தொடங்கப்பட்ட அந்த அகராதி வேலை 1926 வரை தளர்நடை இட்டது.  இவர் பொறுப்பு ஏற்றதும் அது பீடுநடை போட்டது.
1926 முதல் 1950 வரை பேராசிரியர் சென்னையில் வசிக்கலானார். 1936 இல் அகராதிப் பணி முடிந்ததும் சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். 1946 வரை அந்த பதவியில் இருந்தார். ஜெர்மன்,  பிரெஞ்சு மொழியை முறைப்படி கற்றார். பலதுறை நூல்களையும் படித்து அறிவு விளக்கம் பெற்றார்.  பலநூல்களைப் பதிப்பித்தார். இந்த நூல்கள் அவரது அகராதி பணிக்கும் தமிழியல் ஆய்வு பணிக்கும் உறுதுணையாக இருந்தன.  அகராதிப் பதிப்பாசிரியராக இருந்த பத்தாண்டுகளில் 21 நூல்களைப் பதிப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழ் லெக்சிகன் வெளியிட்டதைப் பாராட்டி, சென்னை அரசாங்கம் இவருக்கு 1938இல் ராவ்சாகிப் பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது.  46 பணியிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் நேரத்தை ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் ஆய்வுரைகள் நிகழ்த்துவதிலும் கட்டுரைகளை நூல் வடிவில் வெளியீடுவதிலும், நூல்களைப் பதிப்பிப்பதிலும் செலவிட்டார்.
 பாரதிய வித்யா பவன் வெளியிட திட்டமிட்டிருந்த இந்திய வரலாற்றுத் தொகுதியில் தமிழ் - மொழி இலக்கிய வரலாற்றை எழுதும் பணியை வையாபுரிப்பிள்ளை ஏற்றுக்கொண்டு, அதை எழுதி வரலானார்.  இது பின்னர் (1956) வெளிவந்தது.  படிப்பு,  எழுத்து, பதிப்பு என வாழ்நாளைத் கழித்து பேராசிரியர் தமது வீட்டு நூலகத்தில் 5000 நூல்கள் வைத்திருந்தார்.  இவை அனைத்தும் கல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன. எந்த நூல் எந்த இடத்தில் உள்ளது; அதில் எந்தப் பக்கத்தில் என்ன குறிப்பு உள்ளது என்பதெல்லாம் அவருக்கு மனப்பாம். ஏதாவது யோசனை செய்த வண்ணம் ஏட்டுச் சுவடிகளுக்கும் புத்தகங்களுக்கும் நடுவேதான் அமர்ந்திருப்பார்.
2. தெ.பொ.மீ.

சென்னை மாகாணத்தில் அன்று சொல்லப்பட்ட செங்கல்பட்டு என வழங்கிய மாவட்டத்தில் பட்டினம் என்ற ஊர் . அதில் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தவர் பொன்னுசாமி கிராமணி என்பவர் ஆவார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் செல்வவளம் பொருந்திய ஜமீன்தார் நிலையில் விளங்கினார். இவருக்கு மூன்று ஆண்மக்களும் இரண்டு பெண்மக்களும் பிறந்தனர். அவர்களில் மூத்தவர் கிருஷ்ணசாமிப் பாவலர். இவருக்குப் பின் பிறந்தவர் வடிவாம்பாள் என்பவர் ஆவார். இவருக்குப் பின் பிறந்த தம்பிதான் மீனாட்சி சுந்தரம்.  இவர் 08.01.1901 இல் பிறந்தார். இப்பெயர் இவருக்கு சிறப்புடைய செய்கையாக அமைந்தது.  அவளுடைய தந்தையார் தான் கல்வி கற்ற ஆசிரியர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரின் நினைவாக தன் மகனுக்கு மீனாட்சிசுந்தரம் என்ற பெயரை வைத்துள்ளார். இப்புலவர் பெருமகன் பொன்னுசாமி கிராமணி இல்லத்திற்கு வந்து சென்ற நினைவாகவே இப் பெயரை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 கவிஞரின் பெயரைத் தாங்கிய தெ.பொ.மீ என அனைவராலும் அழைக்கப்பெற்று உரைநடை மகாவித்வானாக விளங்கினார்.  தந்தையாரைக் காணவரும் தமிழ்ப் புலவர்களைப் பார்த்து அவர்களிடத்துப்  பெரு மதிப்புக் கொண்டார் தெ.பொ.மீ. இளமை மனத்தில் பதிந்த விதை பிற்காலத்தில் பெரு மரமாய் வளர்ந்து. கேட்டதும் கேட்ட பொருளை மனத்தில் நிறுத்திக் கொள்ளும் ஒரு மனப்பாங்கும் இவரிடம் குடிகொண்டன.
ஆங்கிலமும் தமிழும் கற்றிருந்த தெ.பொ.மீ  18 மொழிகளைக் கற்று பன்மொழிப் புலவராகவும் பல்கலைச் செல்வராகவும் வளர வழி செய்தார். திருமணத்தின் பின்னும் கல்வியை விட்டுவிடவில்லை. சட்டக்கல்லூரி மாணவராகிய இவர் 1922 இல் பி.எல் பட்டம் பெற்றார். 1923 இல் எம்.ஏ. பட்டம் பெற்றதுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் னார். சிந்தாதிரிப்பேட்டையில் வேதாந்த சங்கம் நிறுவி தமிழ், தருக்கம், வேதாந்தம் ஆகிவற்றைக்  கற்பித்த மகாவித்துவான் கோ. வடிவேலு செட்டியாரின் தலைமாணாக்கராகிப்  பயின்றார்.  மறைந்துபோன  நூல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வைத்திருந்த ராமலிங்க தம்பிரானிடம் தணிகைப்புராணம் சேது புராணம் ஆகிய நூல்களைக் கற்றார்.
 1927 இல் சென்னையில் நடந்த காங்கிரஸ் மகாசபை நடந்தபோது தொண்டர் படைத்தலைவரானார். இவர் தம்  தமிழ்ப் புலமையையும் பல்துறை அறிவுத்திறனையும் கண்ட ராஜா சர். அண்ணாமலை செட்டியார் தம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவராக அமர்த்தினார்.  ஈராண்டுகளை (1944- 46)  அத்துறையின் கீழமைந்த பல திராவிட மொழிகள், உருது, இந்தி மொழித் துறைகள் என்பவற்றின் வளர்ச்சியையும் உயர்த்தப் பயன்படுத்தினார்.
  1962 இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புநிலைச் சொற்பொழிவு செய்யும் பேராசிரியராகச் சென்றதுடன் அங்கு ஒரு தமிழ்த்துறை தொடங்கவும் திட்டம் தீட்டித் தந்தார்; 1963 முதல் 65 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநராகத் திறம்படப் பணியாற்றித் தமிழகத்தில் மொழியியல் கல்வி பரவப் பெருந்துணை புரிந்தார். அதன் பின் மதுரையில் புதிதாக தொடங்கப்பட்ட மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். ம்மைத் தூற்றியவர்கள் மீதும் வெறுப்புக்காட்டாமல் பிறர் அறியாதவாறு பல வழிகளில் நன்மைகள் செய்தார். இறுதியில் புற்று நோய்க்கு ஆட்பட்டும், ஆன்மீக ஒழுக்கத்தால் நோய்க் கொடுமையை மறந்து, இறுதிவரை தமிழ் அறிவையும் ஆன்மீக இன்பத்தையும் மக்கள் நலனையும் கருதி வாழ்ந்தார். 27. 08. 1980 அன்று மதுரையில் தம் எண்பதாம் ஆண்டு முடிவில் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்தார். தெ. பொ.மீ  என்னும் மாபெரும் மனிதர்.
சட்டப்படிப்புப் படித்து வழக்கறிஞராகத் தமது வாழ்வைத் தொடங்கிய தெ. பொ.மீ  பின்னரே தமிழ் ஆய்வுலகில் காலடி வைத்தார்.  அவருடைய சட்டப் படிப்பின் தாக்கமும் நோக்கும் அவரது ஆய்வுகளில் விரிந்து கிடப்பதைக் காணலாம். அதுவே அவரது ஆய்வுகளுக்கு ஒருவித தர்க்க ஒழுங்கை வழங்கியது.
 குறிப்பிட்ட தமது கருத்தை அல்லது ஆய்வு முடிவை வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் வற்புறுத்தி மனதில் பதியவைப்பது தெ. பொ.மீ  யின் மற்றொரு குறிப்பிடத்தக்க அணுகுமுறையாகும். தமது ஆய்வு முடிவுகளை வலியுறுத்த வாழ்வியல் உண்மைகளைக் குறிப்பிட்டு விவாதிப்பது தெ. பொ.மீ  யின் ஆய்வுச் செல்நெறியில் காணப்படும் மிக முக்கிய தன்மையாகும். இவர் பேராசிரியராக இருந்து வகுப்பறைகளில்  பாடம் சொன்ன வேளைகளிலும் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவர் என்பர். அவருடைய அவ்வாறான பயிற்றும் முறைமையும் முயற்சியுமே அவரை அறிவுலகின் குருதேவராக உருவாக்கியது. மிகப்பெரிய மாணவர் பரம்பரையை உருவாகிப்ரவவும் தளமாக  அமைந்து. தெ. பொ.மீ தொடக்கநிலை கல்வி முதல், உயர்கல்வி வரை தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்திய கல்வியாளர் ஆவார். இவர் மொழியியல் அறிஞராகவும் அறியப்பட்டவர் ஆதலால் அவருடைய தாய்மொழிக் மொழி கல்வி பற்றிய கருத்துகள் கூடுதல் கவனம் பெறுகின்றன.
3.   கைலாசபதி

பழமைவாதப் பிடிப்புடைய யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத் தமிழ்க் குடும்பத்தில் கனகசபாபதி கைலாசபதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில்  05.04.1933 இல் பிறந்தார். இவரது தந்தை கோலாலம்பூரில் அலுவலராக இருந்தார். இவரது தொடக்கக் கல்வியும் அங்கேதான். புலப் பெயர்வு காரணமாக இலங்கை வந்த காரணத்தால் இவரது உயர்தரக்கல்வி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கொழும்பு ராயல் கல்லூரியிலும் தொடர்ந்தது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டப் படிப்பில் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றார்.  தமிழும் மேலைத்தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார். இந்த வரலாற்றுப் பாடம் இவரது ஆய்வில் வரலாற்றுப் பார்வை இடம்பெறுவதற்கு அடித்தளம் ஆயிற்று. பல்கலைக்கழக கல்வி முடிந்தபின் தினகரன் இதழில் உதவி ஆசிரியராக (1959- 1961) பணியாற்றினார்.  பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் (1961-62) பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில்  தமிழ் இந்து நாகரிகத்துறை தலைவராகவும் 1974 இல் செயல்பட்டார்.
 1974 இல்  இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ் வளாக தலைவராக இருந்து காலத்தில் அது யாழ் பல்கலைக்கழகம் ஆயிற்று. அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட கைலாசபதி அதன் துணைவேந்தராக மூன்று ஆண்டுகள் 1974 -77 செயல்பட்டார்.
 தினகரன் இதழ் அனுபவம் பிற்காலத்தில் பொதுவுடமை கட்சிசார்ந்த தொழிலாளி, தேசாபிமானி,  செம்பதாகை, ரெட் பார் முதலிய இதழ்கள் நல்ல வண்ணம் வெளிவர உதவியது. ஜனமகன், உதயன், அம்பலத்தான், அம்பலத்தாடி,பேதன்  என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் பல இவ்விதழ்களில் எழுதினார். இலங்கையில் பல சிற்றிதழ்கள் வளர்ச்சி பெற உதவினார். சொன்ன தவணைக்குக்  கட்டுரைகளைத் தந்து உதவும் பண்பாளராகவும் விளங்கினார்.  கைலாசபதியின் ஆய்வுகளும் அதற்கான தரவுகளும் விரிவானவை. சங்க இலக்கியம் தொடங்கி அவரது காலம் வரை வெளிவந்த பல வகை இலக்கிய படைப்புகள் தமிழக ஈழ தமிழறிஞர்களின் வாழ்வும் பணியும் தனித்தமிழ் இயக்கத்தின் வினையும் எதிர்வினையும் என தம் ஆய்வை விரிவு படுத்திக் கொண்டார்.  சங்க இலக்கியத்தை கிரேக்க, கெல்டிக், ஐரிஷ் இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமாகக் கூறினார்.  
பல்லவர் சோழர் கால இலக்கியங்களான அறநூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள்,  சிற்றிலக்கியங்கள், தத்துவ நூல்கள் அடிப்படையில் சமண, பௌத்த மதங்களுக்கும் வைணவ மதங்களுக்கும்  இடையே உள்ள முரண், வணிக வர்க்கத்தின் எழுச்சியை வேரும் வேரடி மண்ணுமாக களந்தெரிய களத்தில்  இறங்கிய நிலவுடைமை வர்க்கம், அதற்கு ஆதரவு தந்த அரசு,  அரசைக் கட்டிக்காக்க உதவிய தத்துவம்,  தமிழுணர்ச்சி ஆகியன ஆகியன பற்றி விரிவாக எழுதினார்.  வசன காவியம் எனக் கூறப்பட்ட நாவல்களின் சமூக அரசியல் பொருளாதார நிலைப்பாடுகளையும் விவரித்தார்.  



0 Response to "இயற்றமிழ் மூவர்- ச. வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ., கைலாசபதி, "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel