நுழையும் முன்
கற்றவர் வழி அரசும் செல்லும் என்கிறது
சங்க இலக்கியம். தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்கிறது
திருக்குறள். கல்வியைப் போற்றுவதைப் புறநானூற்று காலத்திலிருந்து தற்காலம்வரை
தொடர்கின்றனர் தமிழர். பூக்களை நாடிச் சென்று தேன் பருகும் வண்டுகளைப் போல,
நூல்களை
நாடிச் சென்று அறிவு பெறவேண்டும். கல்வியின் இன்றியமையாமையைப் பாடுவது புலவர்
தொழில். அவ்வகையில் பாவலர் பாட்டும் அமைகிறது.
நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
-
கா.ப.செய்குதம்பிப் பாவலர்
பாடலின் பொருள்
அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, மதிக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.
நூல்வெளி
ஒரே
சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் ‘சதாவதானம்’
என்னும்
கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 – 1950),
கன்னியாகுமரி
மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்;
பதினைந்து வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்;
சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர். விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு அந்நிய
நாட்டுத் துணிகள் எரிப்புப் போராட்டத்தை நடத்தியவர். 1907 மார்ச் 10ஆம் நாளில்
சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில்
செய்து காட்டி ‘சதாவதானி’
என்று
பாராட்டப்பெற்றார். இவரைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும்
பள்ளியும் உள்ளன. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
திருக்கோட்டாற்றுப்
பதிற்றுப் பத்தந்தாதி, கோட்டாற்றுப்
பிள்ளைத் தமிழ், அழகப்பக் கோவை,
நாகைக்
கோவை எனப் பல நூல்கள் எழுதியுள்ளார்.
0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப்பேழை - நீதிவெண்பா - செய்குதம்பிப் பாவலர்"
Post a Comment