
எம் ஆர் விஜயபாஸ்கர்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது
ரெய்டு நடவடிக்கை பாய்ந்திருப்பது, அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `கடந்த
ஆட்சிக்காலத்தில் துறைரீதியாக நடந்த தவறுகளுக்கான ஆவணங்களை சேகரிக்கும் பணிகள்
துரிதமாக நடக்கின்றன' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். என்ன நடக்கிறது?
கரூர் மாவட்டத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை
அமைச்சரும் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான
இடங்களில் வியாழக்கிழமை காலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையை
மேற்கொண்டனர்.
இதில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என
50 இடங்களில் ரெய்டு நடந்தது. தொடர்ந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டிலும்
சோதனை நடைபெற்றது. அங்கு எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கு
அதேநேரம், கரூர் ஆண்டாங்குப்பத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை
வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யும் பணிகள் நடப்பதாகவும்
கூறப்படுகிறது. சுமார் 20 குழுக்களாகப் பிரிந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்
சோதனை மேற்கொண்டு வருவது விஜயபாஸ்கர் தரப்பினருக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் 8
நிறுவனங்களிடம் இருந்து மட்டும் ஜி.பி.எஸ் கருவிகளை வாங்குவதில் முறைகேடு
நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஜி.பி.எஸ் கருவிகளை
கொள்முதல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடையும் விதித்தது. இந்த
விவகாரத்தில் தி.மு.க தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், ரெய்டு
நடவடிக்கைகளை தி.மு.க அரசு துரிதப்படுத்தியுள்ளது.
களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா..?
இதனைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், `தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அளித்த
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமலும் வளர்ச்சிப் பணிகளில் கவனம்
செலுத்தாமலும் எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மட்டும் தி.மு.க
அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, அ.தி.மு.கவுக்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம்
ஏற்படுத்தும் வகையில் காவல்துறையை முடுக்கிவிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
தி.மு.க அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்
நிலுவையில் உள்ள நிலையில், அதனை திசைதிருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல்
காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுகளை புனையும் நடவடிக்கையில் தி.மு.க
அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது காவல்துறை
மூலம் அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் தி.மு.க
அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு
கட்சி உறுதுணையாக இருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை?
முன்னதாக, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் 220 டெண்டர்களில்
முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தி.மு.க சார்பில்
ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு
தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது
அ.தி.மு.க தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், `இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதா என்பது
குறித்து நடந்த ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில் முகாந்திரம் இல்லை எனக் கூறி
முதலமைச்சர், அமைச்சரவை, தலைமைச் செயலருக்கு
அனுப்பியுள்ளனர். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதால் இந்த வழக்கை முடித்து வைக்க
வேண்டும்' என்றார்.
ஆனால், மனுதாரர்களோ, `இதில் ஆரம்பகட்ட விசாரணை முடிந்தாலும்
வேலுமணிக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை. இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்' எனக் கேட்டுக்
கொண்டனர்.
அப்போது பேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், `கணக்கு தணிக்கை
அறிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால் வேலுமணிக்கு எதிரான
டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு பின்னர் முதல் தகவல் அறிக்கை
பதிவு செய்யப்படும்" என்றார். இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் வாரத்துக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிக்கலில் தி.நகர் சத்யா?
வேலுமணியைத் தொடர்ந்து தியாகராய நகர் தொகுதி முன்னாள்
எம்.எல்.ஏ சத்ய நாராயணன் மீது அரவிந்தாக்ஷன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், ` சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா
உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு 2016-17 ஆம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி
ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது.
2018-19 ஆம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசிகுளம் பகுதியில்
கட்டடம் கட்டாமல் 30 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு எழுதியுள்ளனர்.
2017-18ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சட்டத்துக்கும் அரசாணைக்கும்
புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொண்டார்' எனவும்
குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவையும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது.
ஒருபுறம் அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவில் இணைய
விரும்பும் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் ரெய்டு, விசாரணைகள் என
முடுக்கிவிடப்பட்டிருப்பதை அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சியோடு
கவனித்து வருகின்றனர்.
மாயமான ஆவணங்கள்?
அ.தி.மு.கவை முடக்குவதுதான் திட்டமா? என தி.மு.கவின்
முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். `` *தேர்தலின்போது, `ஊழல் செய்த
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என தி.மு.க தலைவர்
வாக்குறுதி அளித்திருந்தார்.*
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முன்னாள் அமைச்சர்கள்
மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சர் பேசும்போது, ` முறையான ஆதாரம்
இல்லாமல் எதையும் செய்ய வேண்டாம். முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான புகார்களின்
அடிப்படையிலோ தேவையற்ற மிரட்டல்கள் மூலமாகவோ எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
என்ன ஆதாரங்கள் இருக்கிறதோ, அதை முழுமையாக சேகரித்துவிட்டு நடவடிக்கையை தொடங்குங்கள்' என்றார்.
அதன் தொடர்ச்சியாக, துறைரீதியாக ஆவணங்களை
சேகரிக்கும் வேலைகள் தொடங்கின. குறிப்பாக, அ.தி.மு.க அரசின்
கடைசி 3 மாதங்களில் நிறைய ஆவணங்கள் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக சில ஆவணங்கள் கிடைத்ததால், அவர் வீட்டில்
இருந்து நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அடுத்ததாக, முன்னாள் அமைச்சர்கள்
எட்டு பேர் மீதான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அது யார் யார் என்பது அடுத்தகட்ட விசாரணை
விரிவுடையும்போது தெரியவரும். இதுதவிர, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின்
அடிப்படையிலும் சட்டரீதியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை
தொடங்குவதற்கும் தயாராகி வருகிறோம்" என்கின்றனர்.
அப்போது தந்தை.. இப்போது மகன்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற ரெய்டு குறித்து, அ.தி.மு.க மாநில
செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வனிடம் பிபிசி
தமிழுக்காக பேசினோம்.
``அ.தி.மு.கவை மிரட்டிப் பணியவைக்க தி.மு.க முயல்கிறது. தாயில்லா
பிள்ளையாக இருக்கும் அ.தி.மு.கவில் இரண்டு எளிய தொண்டர்கள் தலைவர்களாக இருந்து
கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இயக்கத்தை உடைத்துவிடலாம் என்ற நோக்கில்
அச்சுறுத்தலை தி.மு.க ஏவிவிடுகிறது. அதற்காக தாங்கள் வைத்திருக்கிற போலீஸாரை
வைத்து தடியடி பிரயோகம் நடத்துவதைப் போல லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிடுகின்றனர்.
இந்த சலசலப்புக்கெல்லாம் அ.தி.மு.க அஞ்சப் போவதில்லை" என்கிறார்.
வேலுமணி மீதான வழக்கிலும் சட்டப்படியே தானே தி.மு.க
செயல்படுகிறது?
என்றோம்.
``அவர்
சட்டப்படியாக அந்த வழக்கை சந்திப்பார். தன் மீதான நியாயத்தை அவர் நீதிமன்றத்தில்
எடுத்து வைப்பார். 1996 ஆம் ஆண்டு ஆளும்கட்சியாக இருந்த தி.மு.க, இதேபோல் ரெய்டு
நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது தந்தை இருந்தார். இப்போது மகன் இருக்கிறார்.
ஆனால், பழிவாங்கும்
நடவடிக்கையில் தந்தைக்கும் மகனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 2016 முதல் 21
வரையில் ஆட்சி செய்த நாங்கள், யார் மீதும் பழிபாவத்தை ஏவிவிட்டதில்லை. அப்போது, யார் மீதும்
வேண்டுமென்றே அவதூறுகளைப் பரப்பவில்லை.
இதுபோல் வேறு எந்த மாநிலத்திலும் நடப்பதில்லை. தமிழ்நாட்டில்
மட்டும்தான் இதுபோன்ற அச்சுறுத்தலை கருணாநிதி தொடங்கிவைத்தார். அதனை ஸ்டாலின்
அரங்கேற்றி வருகிறார். அனைத்துக் கட்சியையும் அழைத்து ஆலோசனை கேட்பது, மற்ற கட்சிகளை ஒடுக்க
நினைப்பது போன்றவை என்ன மாதிரியான அரசியல் என்பதை ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்.
பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணிக்கிறவர்கள்
அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். உப்பு தூவும்போது உடலில் காயம்
இருந்தால்தான் எரியும். இல்லையென்றால் உப்பு காணாமல் போய்விடும். அதைத்தான்
தி.மு.கவுக்கு சொல்ல விரும்புகிறோம்" என்கிறார்.
நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்
அ.தி.மு.கவை பழிவாங்க முயல்வதாகச் சொல்கிறார்களே?" என
தி.மு.கவின் சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`` அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். முகாந்திரம் இல்லாமல்
நாங்கள் எதையும் செய்யவில்லை. எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு நீதிமன்றத்தில்
இருப்பதால் அதைப் பற்றி நாங்கள் கருத்துகூற விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது
சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் சென்றுதானே தடை உத்தரவு வாங்கினார்கள்.
எனவே, சட்டரீதியான நடவடிக்கைகயை அவர்கள் சந்தித்துதான் ஆக
வேண்டும். என் மீதுகூட எஸ்.சி, எஸ்.டி பிரிவில் வழக்கு போட்டு கைது செய்தார்கள்.
அதில் முகாந்திரம் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. இவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தால் நீதிமன்றத்தில்
நிரூபித்துவிட்டு வெளியே வரட்டும். உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர்
குடித்துத்தான் ஆக வேண்டும்" என்கிறார்.
ஆ விஜயானந்த்
பிபிசி தமிழுக்காக
0 Response to " எம்.ஆர். விஜயபாஸ்கர்: அடுத்தடுத்த வழக்குகள், சிக்கலில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் - ரெய்டு நடவடிக்கையின் பின்னணி என்ன?"
Post a Comment