10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப்பேழை - திருவிளையாடற்புராணம்- பரஞ்சோதி முனிவர்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப்பேழை - திருவிளையாடற்புராணம்- பரஞ்சோதி முனிவர்

10  ஆம்  வகுப்பு - தமிழ் - இயல்  5 - கவிதைப்பேழை -  திருவிளையாடற்புராணம்- பரஞ்சோதி முனிவர்


நுழையும் முன்

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்வது தமிழ்கூறும் நல்லுலகம். அரசரும் புலவருக்குக் கவரி வீசுவர்; கண்ணுக்கு எட்டிய திசை வரை தெரியும் நிலங்களைப் புலவருக்குத் தானம் கொடுத்து மகிழ்வர்; இறைவனும் தமிழுக்குச் செவி சாய்ப்பான்; தமிழாய் நிற்பான்; புலவருக்காகத் தூது செல்வான்; தானே ஒரு  தமிழ்ப் புலவராய் இருப்பதில் பெருமை கொள்வான். இறைவன், புலவர் இடைக்காடருக்காகச் செய்த திருவிளையாடல் ஒன்று...

திருவிளையாடற்புராணம்

காண்டம் : திரு ஆலவாய்க் காண்டம்(3)   படலம் : இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் (56                       

 

படலச் சுருக்கம்

 

பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குசேலபாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான். கபிலரின் நண்பரான இடைக்காடன் என்னும் புலவர்; தாம் இயற்றிய நூலினை மன்னன் முன்பு பாட, பொறாமையால் மன்னன் புலவரை அவமதித்தான். மனம் வருந்திய இடைக்காடன் இறைவனிடம் முறையிட்டார். மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோயிலை விட்டு நீங்கி  வடதிருஆலவாயில் சென்று தங்கினார். இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக்காடனுக்குச் சிறப்பு செய்தார். இறைவனும் கோயிலினுள் மீண்டார்.

இடைக்காடன் மன்னனின் அவமதிப்பை இறைவனிடம் முறையிடுதல்

1.கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்

பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்

மொழிந்து அரசன் தனைக் காண்டும் எனத் தொடுத்த பனுவலொடு மூரித் தீம் தேன்

வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு தொடுத்து உரைப்பனுவல் வாசித்தான் ஆல்.             (2615)

 

சொல்லும் பொருளும்  கேள்வியினான் – நூல் வல்லான்; கேண்மையினான் – நட்பினன்

                       

2.சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்

நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்

பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச்

சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி.              (2617)

 

சொல்லும் பொருளும்       தார் - மாலை; முடி - தலை

 

3.என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவாய் நின்இடம் பிரியா இமையப் பாவை

தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தனக்கு யாது  என்னா                                                                                                   

முன்னை மொழிந்து இடைக்காடன் தணியாத முனிவு ஈர்ப்ப முந்திச் சென்றான்

அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப அருளின் மூர்த்தி.    (2619)

 

சொல்லும் பொருளும்        முனிவு - சினம்

 

இறைவன் கோயிலைவிட்டு நீங்குதல்

 

4.போனஇடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான்

ஞானமய மாகியதன் இலிங்கவுரு மறைத்துஉமையாம் நங்கை யோடும்

வானவர்தம் பிரானெழுந்து புறம்போய்த்தன் கோயிலின்நேர் வடபால் வையை

ஆனநதித் தென்பாலோர் ஆலயங்கண்டு அங்கு இனிதின் அமர்ந்தான் மன்னோ.

(2620)

சொல்லும் பொருளும்: அகத்து உவகை - மனமகிழ்ச்சி

 

இறைவன் கடம்பவனக் கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டுதல்

 

5.அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து

எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றாலோ

தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ

இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய் எந்தாய். (2629)

 

சொல்லும் பொருளும்: தமர் – உறவினர்

 

இறைவனின் பதில்

 

6.ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்

நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு

தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே

ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா.   (2637)

 

சொல்லும் பொருளும்: நீபவனம் – கடம்பவனம்;


மன்னன் தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு இறைவனிடம் வேண்டுதல்


7.பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரம யோகி

விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்

புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ

எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான்இறைஞ்சி னானே.   (2638)

 

சொல்லும் பொருளும்: மீனவன் – பாண்டிய மன்னன்

 

இறைவன் கடம்பவனம் சேர்தல்

 

9.புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.    (2644)

 

சொல்லும் பொருளும் : நுவன்ற – சொல்லிய; என்னா – அசைச் சொல்

 

பாடலின் பொருள்

1) குசேலபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் மிகுந்த கல்வியறிவு மிக்கவன் எனக் கற்றோர் கூறக்கேட்டுக் கலைகளை முழுவதும் உணர்ந்த கபிலனின்மேல் அன்புகொண்ட இடைக்காடன் என்னும் புலவன், மிகவும் இனிய தேன் ஒழுகும் வேப்பமாலை அணிந்த பாண்டியனின் அவை சென்று, தான் இயற்றிய நூலினைப் படித்தான்.

2) இடைக்காடன் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே, தன் அடியார்க்கு நல்நிதி போன்றவனே, திருஆலவாயுடைய இறைவனே, விளங்குகின்ற வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன், பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக்கேட்டு அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவி பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் அவமதித்தான்என்றான்.

3) இடைக்காடன் இறைவனிடம், “பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்என்று சினத்துடன் கூறிச் சென்றான். அவனது சொல் வேற்படைபோல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.

4) வெளியேறிய இடைக்காடனுக்கும் அவர்  நண்பனாகிய கபிலனுக்கும் மனமகிழ்ச்சி உண்டாகும் பொருட்டு ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் எழுந்து திருக்கோயிலைவிட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலை ஆக்கி அங்கு சென்று இருந்தார்.

5) “இறைவனே, என்னால், என்படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல்ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் வழியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியேன்” என்று வேண்டினான் பாண்டிய மன்னன்.

6) இறைவன் மன்னனிடம், “சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை விட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம். ஆயினும் இடைக்காடன் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை. இடைக்காடன்மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்என்றார்.

7) வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொற்கேட்டுப் பாண்டிய மன்னன், “உமையை ஒரு பாகத்திற்கொண்ட மேலான பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா? என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டிப் போற்றினான்.

9) பாண்டியன், “புண்ணிய வடிவான புலவர்களே, நான் இடைக்காடனுக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்என்று பணிந்து வணங்கினான். நுண்ணிய கேள்வியறிவுடைய புலவர்களும், “மன்னா, நீ கூறிய அமுதம்போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்ததுஎன்றனர்.

இலக்கணக் குறிப்பு

கேள்வியினான், கேண்மையினான் – வினையாலணையும் பெயர்கள்; பொழிந்த – பெயரெச்சம்; காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மைகள்; முந்தி – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

தாழ்ந்தான் – தாழ் + த் (ந்) + த் + ஆன்; தா – பகுதி; த் – சந்தி (ந் ஆனது விகாரம்); த் – இறந்தகால இடைநிலை; ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

தணிந்தது – தணி + த்(ந்) + த் + அ + து; தணி – பகுதி; த் – சந்தி(ந் ஆனது விகாரம்); த் – இறந்தகால இடைநிலை; அ – சாரியை; து – படர்க்கை வினைமுற்று விகுதி

நூல்வெளி


திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. இந்நூல் 64 படலங்களும், மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் உடையது; பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சிவபக்தி மிக்கவர். வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப்பேழை - திருவிளையாடற்புராணம்- பரஞ்சோதி முனிவர்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel