10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3- கவிதைப்பேழை - மலைபடுகடாம் - பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3- கவிதைப்பேழை - மலைபடுகடாம் - பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்

10  ஆம்  வகுப்பு - தமிழ் - இயல்  3- கவிதைப்பேழை - மலைபடுகடாம் - பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்



பண்டைய தமிழர்கள்  பண்பில்
மட்டுமன்று கலையிலும் சிறந்து விளங்கினர். அன்று கலைஞர்களாகிய கூத்தர், பாணர், விறலியர் முதலானோர் ஊர்ஊராகச் சென்று கலைத்திறன் காட்டி வாழ்ந்தனர். அவர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர். அவ்வகையான விருந்தோம்பிய தன்மையைக் காட்சிப்படுத்துகிறது தினைச்சோற்று விருந்து.

 


தினைச்சோற்று விருந்து

அன்று அவண் அசைஇ, அற்சேர்ந்து அல்கி,

கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி,

 

அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்

மான விறல்வேள் வயிரியம் எனினே,

நும்இல் போல நில்லாது புக்கு,

 

கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் (158-169)

 

சொல்லும் பொருளும் :

 

அசைஇ – இளைப்பாறி,

அல்கி – தங்கி,

கடும்பு – சுற்றம்,

படுகர்பள்ளம்,

வயிரியம் –கூத்தர்,

வேவை – வெந்தது,

இறடி – தினை, பொம்மல் – சோறு,

 

பாடலின் பொருள் :

 

நன்னனைப் புகழ்ந்துப் பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரை

கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்:

அன்று பகலில் இளைப்பாறுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்; எரியும் கனலைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துகொள்ளுங்கள்; சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்; அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப் பாதையில்சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம், பகைவரைப் பொறாமல் போர் செய்தல், அதற்கான வலிய முயற்சி, மானம், வெற்றி ஆகியவற்றை உடைய நன்னனின் கூத்தர்கள்” என்று சொன்னால் போதும்.

 

உங்களுடைய வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் நுழையலாம். உறவினர் போலவே உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்துவந்த உங்களின் துன்பம்தீர இனிய மொழிகளைப் பேசுவர். அங்கு நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும்  தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

இலக்கணக் குறிப்பு:

 

அசைஇ, கெழீஇ- சொல்லிசை அளபெடைகள்,

பரூஉக், குரூஉக்கண் - செய்யுளிசை அளபெடைகள்

 

பகுபத உறுப்பிலக்கணம்

மலைந்து – மலை +த்(ந்) +த் +உ                                                          

மலை – பகுதி                                                                          

த் – சந்திந்’ ஆனது விகாரம்                                    \

த் – இறந்தகால இடைநிலை                                  

உ – வினையெச்ச விகுதி                                                                     


பொழிந்த – பொழி + த்(ந்) + த் + அ


பொழி – பகுதி

த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி


நூல்வெளி:

 

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ’மலைபடுகடாம்’. இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது; மலைக்கு யானையை உவமையாகக் கூறி, அதன் ஓசையை கடாம் எனச் சிறப்பித்தது இந்நூலுக்கான பெயர்க்காரணமாகக் கூறப்படுகிறது; 583 அடிகளைக் கொண்டது.


நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்து பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைப்படுகடாம்.


ஆற்றுப்படுத்தும் கூத்தன், எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுவது.


0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3- கவிதைப்பேழை - மலைபடுகடாம் - பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel