11 தமிழ் ஆசிரியராற்றுப்படை ஆசிரியர் கையேடு PDF httpswww.tamilsangamam.in

Trending

Breaking News
Loading...

11 தமிழ் ஆசிரியராற்றுப்படை ஆசிரியர் கையேடு PDF httpswww.tamilsangamam.in

11 தமிழ் ஆசிரியராற்றுப்படை  ஆசிரியர் கையேடு PDF   httpswww.tamilsangamam.in




சீர்மிகு ஆசிரியர்களே!

 

அடிப்படைத் திறன்கள், வாழ்வியல் நெறிகள், உலகப்பார்வை. கொண்ட தரமான கல்வி ஆகியவற்றை நம் சமூகம் முழுமையும் பெற வேண்டுமன்பதே நமது கல்வித் திட்டத்தின் உயரிய நோக்கமாகும்.

 

இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள நமது புதிய மொழிப்பாடநூல், முற்போக்குக் கல்விக்கான அணுகுமுறையாகவும் புதிய விடியலுக்கான பாதையாகவும் திகழ்கிறது.

 

கல்வி என்னும் தமிழ்ச் சொல்லுக்கு உள்ளத்தினுள் ஆழ்ந்து செல்லுதல் என்ற பொருளும் உண்டு எனவே, கல்வியானது மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை மேம்படுத்தக்கூடியதாகவும் அவர்களின் வருங்கால வாழ்விற்கு வளம் சேர்ப்பதாகவும் அமைதல் வேண்டும்.

 

அத்தகைய ஆற்றல்களை மாணவர்கள் பெற ஆசிரியர்களின் சீரான வழிகாட்டுதல் அவசியமாகும். ஏனெனில், எந்தவொரு சமூகத்தில் ஆசிரியர்கள் தங்களுடைய பொறுப்பினை உணர்ந்து செயல்படுகிறார்களோ அந்த நாட்டிலேயே நல்லதொரு சமூகம் அமையும்.

 

மொழியைப் பொறுத்தமட்டில் பேசுவதற்கும் படிப்பதற்கும் எழுதுவதற்கும் கையாளுகின்ற ஆற்றல்களே 'மொழித்திறன்கள்' எனப்படும். இத்தகைய திறன்களில் வல்ல ஆசிரியப் பெருமக்களின் சீரிய வழிகாட்டுதலில் மாணவர்கள் மொழிதிறன்களைப் பெறுவதற்காக இந்த ஆசிரியர் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், கற்பித்தலில் சுருங்கச் சொல்லுதலும் விளங்க வைத்தலும் ஆசிரியரின் இன்றியமையாத திறன்களாகக் கருதப்படுகின்றன. இத்திறன்களை மேம்படுத்த ஆசிரியர்க்கு இக்கையேடு உதவும் எனக் கருதுகிறோம்.

 

" கற்பதும் உண்பது போலத்தான். முதல் கவளம்

ருசித்தால்தான் குழந்தை சாப்பிடும்" - தாகூர்

 

இதுபோல் மொழிப் பாடநூல் என்னும் அருஞ்சுவை உணவின் முதல் கவளமாக இவ்வேடு விளங்குகிறது.

 

நடமாடும் பாடநூலாக விளங்கும் ஆசிரிய பெருமக்களாகிய தங்களிடம் பாடநூல் என்னும் அழகிய படகு தரப்பட்டுள்ளது. அதன் துடுப்பாகும் இவ்வேட்டின் துணையுடன் மாணவர்களை அக்கறையாய் அக்கரையில் சேர்ப்பீர் என உறுதியாக நம்புகிறோம்.

 

வாழ்த்துகளுடன்,

ஆக்கியோர்.

 











அகமும் முகமுமான தாய்மொழி

 

மனம், மொழி, மெய்களால் தூய்மையுடையோர் சான்றோர். இம்மூன்றையும் தூய்மை செய்து மாணவர்களைச் சான்றோராக்கும் நிறுவனங்களாகப் பள்ளிகள் திகழ்கின்றன. மனிதரின் மனம் தூய்மைபெறுகின்றபோது பிற இரண்டும் தூய்மையாகின்றன. பிறந்தது முதற்கொண்டு சிறுவராக, இளைஞராக, முதியோராக மனிதர் தம் வாழ்நாள்களைக் கடக்கின்றபோது ஒவ்வொரு சூழலிலும் தெரிந்தோ தெரியாமலோ தாய்மொழி, உணர்வையூட்டி வளர்க்கிறது.

 

மாணவர்களுடைய மனங்களைத் தூய நெறியில் வளர்ப்பதற்குத் தாய்மொழியைத் தவிர வேறு சிறந்த கருவியில்லை என்பதை ஒவ்வொரு மொழியறிஞரும் உணர்ந்திருந்தனர். தம் அழியாக் காவியங்களைத் தம் தாய்மொழியிலேயே சிந்தித்துப் படைத்தனர். தமிழ்நாட்டில் திருவள்ளுவரும் வடநாட்டில் சாணக்கியரும் கிரேக்க நாட்டில் சாக்ரடீசும் ஜெர்மனியில் கான்ட்டும் இத்தாலியில் செனாக்காவும் சீன நாட்டில் கன்பூசியசும் ரஷ்யநாட்டில் டால்ஸ்டாயும் பாரசீகத்தில் உமர்கய்யாமும் தம் தாய்மொழியில் எழுதிப் புகழ்பெற்றனர். காந்தியடிகள் தனது வரலாற்றைத் தாய்மொழியில் படைத்தார். பாரதியும் பக்கிம் சந்திரரும் தம் தாய்மொழியிலேயே நாட்டுப்பற்றை ஊட்டும் பாடல்கள் எழுதினர். தாய்மொழி, ஒருவரின் உணர்வை உயர்த்தி அவர்களைத் தூய்மையாக்கவும் உதவுகின்றது.

 

மக்கள் தலைமுறை தலைமுறையாகத் தனியாகவும் குழுவாகவும் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் பழக்கங்களும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு அப்பண்பாட்டினைக் குழந்தைகளின் உள்ளங்களில் கொண்டு சேர்க்கும் ஒன்றாகத் தாய்மொழிக்கல்வி திகழ்கிறது.

 

தமிழ்மொழிப் பாடநூல் கட்டமைப்பும் கருத்தமைப்பும்

 

பொருண்மைகள்

 

மொழிப்பாடம் மொழியை மாணவர்க்குக் கற்பிக்கத் துணைபுரிகிறது; இலக்கிய வளர்ச்சியை அறிந்து, கொள்ளச் செய்துவருகிறது; இலக்கியத்தின் தொடர்ச்சியைத் தெரிந்துகொள்ளப் பயன்படுகிறது.

 

1 மொழி - என்னுயிர் என்பேன்,

2 இயற்கை, வேளாண்மை - சுற்றுச்சூழல்-மாமழை போற்றுதும்

3 பண்பாடு-பீடு பெறநில்

4 அறிவியல், தொழில்நுட்பம்- இனியொரு விதி செய்வோம்

5 கல்வி- கேடில் விழுச்செல்வம்

6 நாகரிகம், தொழில்,வணிகம்- நாளெலாம் வினை செய்

7 கலை, அழகியல், புதுமைகள்- பல்கலை நிறுவு

8 நாடு, சமூகம், அரசு, நிருவாகம் - வையத் தலைமை கொள்

9 அறம், தத்துவம், சிந்தனை - மெய்ப்பொருள் காண்பது அறிவு

10மனிதம், ஆளுமை யாரையும் மதித்து வாழ்

 

இன்றைய கற்பித்தல் முறை, ஆசிரியர் மைய முறையிலிருந்து மாணவர் மைய முறையாக மாறிவளர்கிறது. அறிவு வளர்ச்சி என்பதும் விரைவுப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில் அன்றாட வாழ்வியல் தேவைகளுக்கும் வாழ்வியல் முறைகளுக்கும் உதவக்கூடிய திறன்களை மாணவர் பெறும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

 

 

மனிதாபிமானம்மிக்க சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது. நம் தமிழகத்தில் பண்டைய நாளில் பல துறைகளில் நிலவிய வளர்ச்சிச் செழுமைகளை மாணவர் உணரும் வகையிலும் இன்று அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வேறுவகையான புதிய வளர்ச்சிகளையும் அறியும் வகையிலும் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இவ்வகையில், பொருண்மை அடிப்படையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பலமுறை கலந்துரையாடி இறுதியில் பத்துப் பொருண்மைகள் தேர்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் உரைநடை கவிதை, துணைப்பாடம், இலக்கணம் என்ற நான்கு பாடப்பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

இந்தப் பத்துப் பொருண்மைகளுக்கும் பாடநூலில் அழகிய தமிழ்த் தொடர்களில் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

 

தொன்மையும் தொழில் நுட்பமும் இணைந்த தமிழ்மொழி, தாய்மொழியாகக் கற்பிக்கப்படும்போது மொழி சார்ந்த பண்பாட்டுக் கூறுகளும் இணைந்தே மாணவரைச் சென்றடையும்.

 

அதற்கேற்பப் பாடப்பொருள்களும் மாணவர் களின் வயது, அறிவுநிலை, புரிதல் ஆர்வம் முதலானவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டுள்ளன.

பாடக்கருத்துகளை மாணவர் விருப்பமுடன் பயிலப் படக்காட்சிகள், கருத்துப்படங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள் போன்றவை பாடப்பொருளுடன் இணைத்து அளிக்கப் பட்டுள்ளன.

 

புதிய பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட ஒரு பொருண்மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப்பகுதிகள் பத்து இயல்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

 

வளர்ந்துவரும் இன்றைய இணையத் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்பவும் மொழிப் பயன் பாட்டிற்கு ஏற்பவும் மாணவர்களின் தேவை, புரிதல், ஆர்வம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும் உரைநடை, செய்யுள், துணைப்பாடப் பகுதிகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

 

இயலின் பொருண்மைக் களத்திற்கு ஏற்பப் பாடப்பகுதிக்குத் தொடர்புடைய பல்வேறு காட்சிகள் பல் வண்ணங்களில் ஒளிப்படங்களாகவும், ஓவியங்களாகவும் கருத்து விளக்கப்படங்களாகவும் அளிக்கப்பட்டுள்ளன.

 

இயல் அமைப்பு

 

உரைநடை உலகம் (உரைநடை)

 

மாணவர்களுக்கு அணுக்கமானதும் அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதுமான உரைநடைப்பகுதி, உரைநடை உலகம் என்னும் பெயரில் இயலில் முதலிடம் பெறுகிறது. வேறுபட்ட காலங்கள், கருத்துகள், ஆளுமைகள் பற்றிய உரைநடைப் பகுதிகள் கட்டுரை, கருத்தரங்கம், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, கலந்துரையாடல் ஆகிய வடிவங்களில் பொருண்மைக்கு ஏற்றவாறு மாணவர்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் வகையில் பாடப்பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

 

கவிதைப்பேழை (செய்யுள்)

 

செய்யுள் வடிவங்கள், கவிதைப் பேழை என்னும் பெயரில் எளிமையிலிருந்து கடினம் என்னும் முறையில் கால வரிசையைக் கருத்தில் கொண்டு புதுக்கவிதை வடிவம் முதலாக சங்கக் கவிதை ஈறாக வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. செய்யுள் பொருளை விளக்கும் எளிய கவி உரையும் பொருள் விளக்கமும் தனித்தனியாக அளிக்கப்பட்டுள்ளன. இத்துடன் சொல்லும் பொருளும், இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம் போன்றவையும் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன.

 

விரிவானம் (துணைப்பாடம்)

 

துணைப்பாடப் பகுதிகள், விரிவானம் என்னும் பெயரில் உரையாடல், பட்டிமன்றம், சிறுகதை என்னும் இலக்கியவடிவங்களில் பொருண்மைக்கு ஏற்பப் பாடப்பகுதிகளாக்கப்பட்டுள்ளன.

 

இனிக்கும் இலக்கணம்

 

இலக்கணப் பகுதிகளை எளிமையாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வாழ்க்கையோடு தொடர்புடைய எடுத்துக்காட்டுகளோடு இனிக்கும் இலக்கணம் என்னும் பெயரில் இயலின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

 

Download here

 



 


0 Response to "11 தமிழ் ஆசிரியராற்றுப்படை ஆசிரியர் கையேடு PDF httpswww.tamilsangamam.in"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel