அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், 22.8.2023 தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா


அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் , 22.8.2023 தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. இந்நிகழ்வின் வரவேற்புரையைப் பள்ளியின்
தலைமை ஆசிரியர் திரு சி. கருணாகரன் அவர்கள்
நிகழ்த்தினார். நிகழ்வுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர் தொடங்கி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரையும் தன்னுடைய வழக்கம்
போல் இயல்பான பேச்சால் வரவேற்புரையை நிகழ்த்தினார். கல்வியின் அவசியத்தை அழகுபட எடுத்துரைத்தார்.
இந்நிகழ்விற்குப் பள்ளியின் முதுகலை உதவித் தலைமை ஆசிரியர் திரு சி. சாலமன் அவர்களும்
பள்ளியின் கணித முதுகலை ஆசிரியர் திரு என். ஜானகிராமன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வைப் பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
திருமதி பி. சரளாதேவி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். சிறப்புரையை சிறப்பு
விருந்தினர் திரு. தமிழ்நெஞ்சன் அவர்கள் தன்னுடைய வழக்கமான பேச்சால் மாணவர்கள் அனைவரும் அமைதியோடு அவரது கருத்தைக் கேட்கும் படியாக பேச்சைத் துவங்கினார். சிறப்பு விருந்தினர் பேச்சில்
மொழியின் சிறப்பையும் மொழி தனக்கு என்ன செய்யும் என்ற பயனையும் நன்றாக விளக்கினார்.
நகைச்சுவையோடு மாணவரிடத்து பேசி மாணவர்களுக்குத் தேவையான கருத்தினை விரிவாகவே விளக்கிச்
சொன்னார். தன்னுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் தான் கற்ற அனுபவத்திலிருந்தும் ஒவ்வொன்றிற்கும்
ஒவ்வொரு எடுத்துக்காட்டைச் சொல்லியும் பேசியது நன்றாக அமைந்திருந்தது.
அப்துல்கலாம் குறித்தும் தன்னுடைய பேச்சின் வழியாக
மாணவர்களிடம் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை விதைத்தார். யாரும் உதவாதவர்கள் என்பது
இல்லை. அனைத்து மனிதர்களும் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும்படியாகவே இருக்கின்றார்கள்
என்பதைக் கூறினார். தனது ஆசிரியர் தன்னை நல்ல மாணவன் இல்லை என்று கூறினாலும் அதற்காகவே
நான் சிறப்பாக முன்னேறினேன் என்றார். உதவாத
மாணவன் என்று என்னைச் சொன்ன ஆசிரியர் முன்னால் நன்றாக வாழ்வில் முன்னேற வேண்டும் என்று
உறுதிமொழி எடுத்தேன். இன்று நான் 14 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். மேலும்
2000 பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு இருக்கின்றேன் என்றார்.
அனைத்து மாணவர்களும் ஆசிரியர் சொல்வதைக் கண்டிப்பாக
கேட்க வேண்டும் உதவாத மாணவன் என்ற நானே இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் நல்ல மாணவர்கள் என்று உங்கள் தலைமை
ஆசிரியர் என்னிடம் கூறினார். எனவே நீங்கள் என்னை விட சிறந்த மாணவனாக, சிறந்த
மனிதனாக உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசிரியர் சொல்வதைக் கேட்காதவன் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார்.
மண்பாண்டம் தயாரித்தலை எடுத்துக்காட்டாகச் சொல்லி குயவர்கள் மண்ணை எப்படி பானையாக உருவாக்குகின்றார்களோ
அதைப்போல நல்ல மாணவர்களாக ஆசிரியர்கள் உருவாக்குகின்றார்கள். எனவே ஆசிரியர் கூறுவதை நமக்காகவே நமது நன்மைக்காகவே அவர்கள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து
கொண்டு நடக்க வேண்டும் என்று கூறினார்.
பல கருத்துகளை நகைச்சுவையோடு கூறி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் சில இடங்களைக் குறிப்பிட்டு சொல்லி மனிதத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை உரிய சான்றுகளோடு விளக்கியது ஆசிரியர்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தியது. யார் யார் மெரினா கடற்கரைக்குச் சென்று உள்ளீர்கள் என்று கேட்டு மாணவரிடம் பதிலைப் பெற்று அதற்கான காரணத்தையும் விளக்கினார். அண்ணா சதுக்கம், கலைஞர் சதுக்கம், எம்ஜிஆர் சதுக்கம், அம்மா சதுக்கம் என்று இருக்கின்றது ஆனால் காமராஜர் சதுக்கம் அங்கு இல்லையே என்ற வினாவை எழுப்பி அதற்கான விடையையும் கூறினார். இந்தத் சாலையே காமராஜர் சாலை தான் இந்தச் சாலை வழியாகத்தான் நால்வரின் சதுக்கத்திற்குச் செல்ல வேண்டும் என்ற சிறப்பைக் கூறினார்.
பிறரைத் திட்டுவதற்கு பாரதியார் ஆங்கிலத்தைப் பயன்படுத்தினார் என்ற செய்தியையும் கூறி பாரதியார், பாரதிதாசன் போன்றோரின்
கல்விக் கருத்துகளையும் மாணவர்களிடையே பேசினார்.
இடையே சினிமா பாடல்களையும் பாடி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இவரது பேச்சு இயல்பானதாகவும்
அதேசமயம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாகவும் இருந்தது. பல்வேறு கருத்துகளை விதைப்பதாகவும் அமைந்திருந்தது. நிகழ்வில் பள்ளியின்
தலைமை ஆசிரியர் சிறப்பு விருந்தினருக்கு சால்வை போர்த்தி சிறப்பு பரிசையும் வழங்கினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. முதலில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள், இசைக்கருவிகளைக் கொண்டு இசையை மிகச் சிறப்பாக எழுப்பி மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் தமிழரின் பண்பாட்டின் சிறப்பையும் வெளிப்படுத்தினர். இதற்காக இம்மாணவர்கள் உடல், தாரை, எக்காளம், பிரம்மஞாலம் போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்தினார்கள். இசைக்கருவிக்கான விளக்கத்தைப் பள்ளியின் தமிழாசிரியர் தெய்வானை அவர்கள் கூறினார்.
அடுத்ததாக மாணவர்களின் நடனம் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நல்ல பாடலுக்கு சிறப்பாக நடனமாடினார்கள். அடுத்ததாக மாணவர்கள் பாடல்களைப் பாடினார்கள். மேலும் கீபோர்டு இசையையும் மாணவன் நிகழ்த்தினான். நாடக உரையாடலானது திருவிளையாடல் புராணத்தில் வருகின்ற தருமி பேசுகின்ற உரையாடலை ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மிகச் சிறப்பாக நடித்துக் காட்டினார்கள். நிகழ்வில் மேல்நிலைவகுப்பு மாணவர்கள் கவிதை மற்றும் தமிழிச் சொற்பொழிவையும் நிகழ்த்தினார்கள். இறுதியில் நன்றியுரையை உதவித் தலைமை ஆசிரியர் வெ. பாலமுருகன் அவர்கள் தன்னுடைய வழக்கமான முறையில் நிகழ்ச்சி நடந்ததை, இவ்வளவு நன்றாக நடைபெற காரணமாக இருந்த அனைவருக்கும் பள்ளியின் சார்பாகவும் தலைமை ஆசிரியரின் சார்பாகவும் தனது கருத்துகளை கூறி நன்றியை வெளிப்படுத்தினார். இந்நிகழ்விற்கு பல்வேறு வகையில் உதவி செய்தவர்களை நன்றி உரையில் வெ. பாலமுருகன் குறிப்பிட்டு பேசினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களான தியாகராஜன், அருள்மொழி, சுகானந்தம் , ஆனிபென்சன் , டில்லி ராணி உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் என அனைவருக்கும் தமிழாசிரியர்களின் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பபன்பெற்று சென்றார்கள். இறுதியில் தேசியகீதத்தை அனைவரும் பாட நிகழ்வு இனிதே சிறப்பாக நிறைவுற்றது.
0 Response to "அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், 22.8.2023 தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா "
Post a Comment